அட்டூழியங்களும் போர்களும் ரத்தமும் நிறைந்திருக்கும் நம் காலத்தில் உலக சமாதானத்தைக் குறித்து அடிக்கடி நாம் கேள்விகள் எழுப்பியிருக்கிறோம். ஆனால் போட்டி, பொறாமை, பேராசை, வெறுப்பு, வன்முறை, பகை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நாகரிகங்கள் எப்படி அதை கற்பனை செய்ய முடியும்? நாங்கள் வந்த இடங்களில் இத்தகையக் கலாசாரத்தை நான் கண்டதில்லை. பழங்குடிகளான எங்களுக்கு நாகரிகம் பற்றிய ஒரு தனித்துவமான புரிதல் இருக்கிறது. கல்வி அறிவு கொண்டோர் இரவு நேரங்களில் சத்தமின்றி போடும் குப்பைகளை கல்வியறிவில்லாதவர் காலையில் சுத்தப்படுத்துவதை நாகரிகமாக நாங்கள் கருதுவதில்லை. அதில் இணையவும் நாங்கள் ஒப்புக் கொள்வதில்லை. ஆற்றங்கரையில் நாங்கள் மலம் கழிப்பதில்லை. பழங்கள் பழுப்பதற்கு முன்னமே அவற்றை மரங்களிலிருந்து நாங்கள் பறிப்பதில்லை. ஹோலி பண்டிகை நெருங்குகையில் நாங்கள் நிலத்தில் கலப்பை போடுவதை நிறுத்தி விடுவோம். எங்கள் நிலத்தை நாங்கள் சுரண்டுவதில்லை. வருடம் முழுவதும் தொடர் உற்பத்தியை பூமி வழங்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. அதை சுவாசிக்க நாங்கள் விடுவோம். மீட்டுருவாக்கம் செய்து கொள்வதற்கான காலத்தை அதற்குக் கொடுப்போம். மனித வாழ்க்கைகளுக்கு மரியாதை கொடுப்பது போலவே இயற்கையையும் நாங்கள் மதித்து வாழ்கிறோம்.
அதனால்தான் காட்டிலிருந்து நாங்கள் திரும்பவில்லை
லக்ஷகிருகாவில்
எங்களின் முன்னோர்களை எரித்தீர்கள்
அவர்களின்
பெருவிரல்களை வெட்டினீர்கள்
சகோதரர்களை
எதிர்த்து அவர்கள் சண்டையிட்டுக் கொல்ல வைத்தீர்கள்
அவர்களில்
பலரைக் கொண்டு சொந்த வீடுகளை வெடிக்க வைத்தீர்கள்
இத்தகைய
ரத்தவெறி பிடித்த உங்களின் நாகரிகத்தாலும்
அதன் காட்டுமிராண்டித்தன
முகத்தாலும்தான்
நாங்கள்
காடுகளிலிருந்து திரும்ப வரவில்லை.
ஓர் இலை
எளிதாக உதிர்ந்து
மண்ணுடன்
கலந்து ஒன்றாவதே
எங்களைப்
பொறுத்தவரை மரணம்
கடவுளரை
நாங்கள் சொர்க்கத்தில் தேடுவதில்லை
அவர்களை
இயற்கையில் நாங்கள் உணர்கிறோம்
உயிரற்றவற்றைப்
பற்றி நாங்கள் எம் வாழ்க்கைகளில்
யோசிப்பதில்லை.
இயற்கையே எங்களின் சொர்க்கம்.
அதை எதிர்த்து
நடப்பது நரகம்.
சுதந்திரமே
எங்களின் மதம்,
இந்த வலையை,
சிறைவாசத்தை உங்களின் மதம் என அழைக்கிறீர்கள்
ரத்தவெறி
பிடித்த உங்களின் நாகரிகத்தாலும்
அதன் காட்டுமிராண்டித்தன
முகத்தாலும்தான் சார்
நாங்கள்
காடுகளிலிருந்து திரும்ப வரவில்லை.
நாங்கள்
இந்த பூமியின் ராணுவம் சார்
உயிர் வாழ்தல்
மட்டுமே எங்களின் வாழ்க்கை அல்ல
நீர், காடுகள்,
நிலம், மக்கள், விலங்குகள்
எல்லாவற்றாலும்தான்
நாங்கள் உயிர்த்திருக்கிறோம்
எங்களின்
முன்னோர்களை பீரங்கி வாயில் கட்டினீர்கள்
மரங்களில்
கட்டித் தொங்க விட்டுக் கீழே தீ வைத்தீர்கள்
அவர்களைக்
கொல்வதற்கான ராணுவத்தை அவர்களைக் கொண்டே கட்டினீர்கள்
எங்களின்
இயல்பான வலிமையைக் கொன்று
திருடர்கள்
என அழைத்தீர்கள்
கொள்ளைக்காரர்கள்,
பன்றிகள், போராளிகள் என்றெல்லாம் அழைத்தீர்கள்
உங்களின்
ரத்தமய நாகரிகத்தாலும் அதன் காட்டுமிராண்டு முகத்தாலும்தான் சாரே
நாங்கள்
காடுகளிலிருந்து திரும்ப வரவில்லை.
உங்களின்
உலகத்தை நீங்கள் சந்தையாக மாற்றி விட்டீர்கள்
கல்வியறிவு
பெற்ற நீங்கள் உங்கள் பார்வையை இழந்துவிட்டீர்கள் சார்.
உங்கள்
கல்வி உங்கள் ஆன்மாவை விற்றுக் கொண்டிருக்கிறது.
கலாசாரம்,
நாகரிகம் என்று சொல்லி
எங்கள்
அனைவரையும் சந்தையில் நிற்க வைக்கிறது.
முரட்டுத்தனத்தை
நீங்கள் குவித்து வைத்திருக்கிறீர்கள்.
ஒரு மனிதன்
சக மனிதனை வெறுக்கும்
இதைத்தான்
நீங்கள் புதிய உலகம் என்கிறீர்களா?
உங்கள்
துப்பாக்கிகளையும் ஏவுகணைகளையும் கொண்டு
உலக சமாதானத்தை
கொண்டு வர முடியுமென நினைக்கிறீர்களா?
உங்களின்
ரத்தவெறி பிடித்த நாகரிகத்தாலும்
அதன் காட்டுமிராண்டி
முகத்தாலும்தான் சார்
நாங்கள்
காட்டிலிருந்து திரும்ப வரவில்லை.
தமிழில்: ராஜசங்கீதன்