தசரா பண்டிகை நாளில் மாணவர்கள் .
இது தசரா பண்டிகைத் தருணம் , பள்ளியின் ப்ரதான அறையில் மாணவர்கள் காலை வேளையில் இறை வழிபாட்டுக்கும் பிரார்த்தனைக்கும் கூடியுள்ளனர்.
கட்டைக்கூத்து குருகுலம் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு பள்ளி அரங்கமாகும் . இங்கு வழக்கமான 12 ம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வியைத் தவிர , மாணவர்களுக்கு கட்டைக்கூத்து என அழைக்கப்படும் இந்தக் கலை கிராமப்புற கலைஅரங்கத்தில் மாநில அளவில் பயிற்சி அளிக்கப்படுகிறது . இங்குள்ள பெரும்பாலான மாணவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் சமுதாயத்தில் அடிப்படை உரிமைகள் பெறப்படாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த பள்ளி காலை 7.30 மணி முதல் மாலை 5 மணிவரை வழக்கமான கல்விப் பாடங்களோடு கட்டைக்கூத்து பயிற்சி மற்றும் இசைப் பாடங்கள் என அடுத்தடுத்து கற்பிக்கப் படுகின்றன. பசுமையான சூழலில் அமைந்துள்ள இந்த பள்ளி சென்னையிலிருந்து சுமார் 85 கிலோ மீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் டவுனிலிருந்து 35 நிமிட ஆட்டோ பயணம் செய்யும் தொலைவில் புஞ்சரசந்தாங்கல் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.
இதர பள்ளிகளைப் போல் இங்கும் காலையில் வகுப்பறைப் பாடங்களும் மாலையில் விளையாட்டுப் பயிற்சியும் நடத்தப படுகின்றது.
ஒரு சனிக்கிழமை மாலையில் கோ கோ விளையாட்டு
இந்தப் பள்ளியில் உள்ள வித்தியாசமான நிகழ்வு என்பது இங்குள்ள மாணவர்களைக் கட்டைக்கூத்து கலைஞர்களாக உருவாக்குவது தான். இவர்கள் பாட்டு , இசைக்கருவியில் தேர்ச்சி ,நாட்டியம் , நடிப்பு இவைகளைப் பயின்று மேடையில் நிகழ்த்த கற்றுக் கொள்கிறார்கள் . மேலும் இவர்கள் ஒப்பனைக் கலையையும் கற்று ராமாயணம் மஹாபாரதம் போன்ற இதிகாசக் கதைகளில் உள்ள பல கதா பாத்திரங்களுக்கு ஒப்பனை செய்யவும் தேர்ச்சி பெறுகிறார்கள் .
P .சசிகுமார் முகவீணை இசைக்கிறார்
பாரம்பரியமாக ஆண் கலைஞர்கள் மட்டுமே பங்கு கொண்ட இந்த கட்டைக்கூத்தில் பங்கு கொள்ள பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு இருபாலரும் ஆண் பெண் என எல்லா கதா பாத்திரங்களையும் ஏற்று நடிக்கின்றனர். பெண்கள் அடங்கிய ஒரு குழு முகபாவம் தொடர்பான கலை பயிற்சியில் பங்கு கொள்ளும்போது இந்தப் பள்ளியின் ஆசிரியர்களும்மா ணவர்களும் மஹாபாரதத்தில் ஒரு பகுதியை நடிக்கும் காட்சியைக் காண்கிறார்கள் . K . சிவரஞ்சனி எனும் 9 வது வகுப்பில் படிக்கும் மாணவி, திரௌபதிக்குப் பரிந்து கௌரவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த கௌரவர்களில் இளையவனான விகர்ணனின் பாத்திரத்தை ஏற்று நடித்தார். இந்த அனுபவம் எப்படி இருந்தது எனக் கேட்டபோது " இது பார்வையாளர்கள் முன்னிலையில் எனது முதல் நிகழ்ச்சி
என்பதால் சிறிது பயமாக இருந்தது " என்கிறார் சிவரஞ்சனி .
கௌரவர்களில் இளையவன் விகர்ணன் வேடத்தில் திரௌபதிக்கு பரிந்து குரல் கொடுக்கும் K சிவரஞ்சனி.
முதன்மை ஆசிரியரும் இப்பள்ளியின் நிறுவனருமான திரு ராஜகோபால் தசரா நாளில் பிரார்த்தனை வழிபாட்டுக்குப்பின் சிறிய உரை நிகழ்த்துகிறார். மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் உரையைக் கேட்கின்றனர்.
தசரா நாளில் நிகழ்த்திய உரையை கவனத்துடன் கேட்கும் மாணவன்.
மதிய விருந்து உணவுக்குப் பின் மஹாபாரதத்தில் திரௌபதிக் குறவஞ்சி பகுதியை நடிப்பதற்காக முதலில் கலைஞர்கள் தங்களது முகத்துக்கு வண்ணம் பூச ஆயத்தமானார்கள் . மாணவர்களில் தேர்ச்சி பெற்ற ஒப்பனைக் கலைஞர்கள் நடிகர்களுக்கு ஒப்பனை செய்து தயார் செய்கின்றனர். ஒரு மணிக்குமேல் நடக்கும் இந்த ஒப்பனை நிகழ்ச்சி , இதில் ஈடுபடும் 12 முதல் 14 வயது வரை மாணவர்களின் பொறுமையையும் ஈடுபாட்டையும் எடுத்துக் காட்டுகிறது. முதலில் இவர்கள் அடிப்படை வண்ணமாக பெண்களுக்கு பச்சை நிறமும் பையன்களுக்கு இளம்சிவப்பு நிறமும் பூசுகின்றனர். அதன் பின்னர் கண்கள் , புருவம், உதடு, மீசை, நெற்றி , கன்னம் மற்றும் தாடை என ஒப்பனை தொடர்கிறது.
நடிகர் முகத்தில் வண்ணம் பூசப்படுகிறது.
ஸ்ரீமதி பாரதி முகத்துக்கு வண்ணம் பூசுகிறார்.
இளம் மாணவர்களில் சிலர் இதனைத் தீவிரமாக கவனித்து ஒப்பனையில் உள்ள சிக்கலான கலை மற்றும் தொழில் நுணுக்கங்களைக் கற்க முயல்கின்றனர்.
ஒரு இளம் மாணவர் வண்ணம் பூசும் கலையை உன்னிப்பாக கவனிக்கிறார்.
தனது முகம் மற்றும் தலை அலங்காரம் முடிந்தவுடன் ஆடைகள் அணிய கூடத்தை விட்டு செல்கிறார்.
முகம் மற்றும் தலை அலங்காரம் முடிவுற்றது.
கௌரவர்களில் இரண்டாவதான துச்சாதனின் ஆடை அணிகலன்கள் அவரது தீவிரமான நடிப்பைப் போலவே வண்ணமயமாக இருந்தது.
துச்சாதனனின் வண்ண உடையும் அனல் பறக்கும் நடிப்பும்.
துச்சாதனனாக N கார்த்தி
நாடோடி நங்கை குறத்தி மாறுவேடம் புனைந்து திரௌபதியாக A பாரதி
கட்டைக்கூத்து கிராமங்களில் இரவு முழுதும் நாடகமாக அரங்கேறுகிறது. எந்த ஒரு நாடகமும் நகைச்சுவை இல்லாமல் முழுமை அடைவதில்லை. கோமாளிகளாக நடிக்கும் இந்த நகைச்சுவை நடிகர்கள் முக்கிய பங்கேற்று கதையின் விறு விறுப்பான பகுதியை நகைச்சுவை கலந்து அளிப்பார்கள். நையாண்டியுடன் இணைந்த தமது நடிப்பால் சமுதாயத்தின் நலிந்த இடத்திலிருந்து சக்தி வாய்ந்த அதிகார வர்க்கத்தை சாடும் வசனங்களை அரங்கேற்றுவார்கள். கிராமத்தில் உள்ள பார்வையாளர்களின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை இந்த இதிகாசங்களோடு கலந்து வழங்கி அவர்களையும் நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக ஆக்கிவிடுவார்கள். இரவு முழுதும் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை வழங்கும் கோமாளிகள் கதையின் இறுக்கமான சூழலுக்கு ஆறுதலாக நகைச்சுவைக் காட்சிகளை வழங்குவர்.
கோமாளியாக A வேலன் . முதன்மை ஆசிரியர் திரு ராஜகோபால் பின்னால் அமர்ந்துள்ளார் .
நகைச்சுவை நடிகர் M இன்பரசனது வலிக்கும் கரங்களுக்கு மருந்திடுகிறார் குறத்தி வேடத்தில் உள்ள திரௌபதி.
கோமாளியின் நகைச்சுவை நடிப்பு அங்குள்ள இசை கலைஞர்களையும் சிரிப்பில் ஆழ்த்துகிறது.
ஹார்மோனியம் இசைக்கும் R பாலாஜி மற்றும் P சசிகுமார் உளமார சிரித்து மகிழ்கின்றனர். எல்லோரும் ஒன்றிணைந்து பாடுவது கட்டைக்கூத்தின் மற்றோரு அங்கமாகும். ஹார்மோனியம் , முகவீணை மற்றும் மிருதங்கம் பின்னணியில் எல்லா மாணவர்களும் சேர்ந்து பாடுவார்கள்.
பாரதியும் சிவரஞ்சனியும் முழுமையாக இணைந்து பாடுகின்றனர்.