மேற்சொன்ன ஆடைகள் தயாராகும் இடம் மதுரை புதுமண்டபம். அது பழமையானது, புதுமை மிக்கதும் கூட. அது பண்டைய சிறப்புடையது. தற்காலத்திலும் தனித்து நிற்பதும் கூட. பெரும் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்பது மட்டுமல்லாமல், நவீனகாலத்திலும் அது மிகவும் தேவைப்படுகிறது. ஒரு குட்டி மதுரையையே புது மண்டபத்தில் கண்ணுறலாம். மதுரை என்கிற பண்டைய நகரத்தின் பண்பாட்டுச் சீர்மையினைக் கச்சிதமாகப் படம்பிடிக்கும் இம்மண்டபம் 384 ஆண்டுகாலப் பழமைமிக்கது. இந்த மண்டபத்தில் ஒரு விற்பனைக்கூடமும் இருக்கிறது. கண்ணைக்கூசும், மின்னுகிற ஆடைகளைப் படைக்கும் கலைஞர்கள், பாரம்பரியமான பாத்திரங்கள், சாமான்கள் விற்கும் கடைகள் என்று இந்த இடத்திற்குப் பல்வேறு முகங்கள்.
இங்குதான் தமிழகத்தின் மிக முக்கியமான இந்து பண்டிகைகளில் ஒன்றாகக் கருதப்படும் அழகர் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஆடைகள் தைத்துத் தருகிறார்கள். இத்தகைய ஆடைகளைத் தைத்து தரும் 150 கலைஞர்களில் மூன்றில் ஒருவர் இஸ்லாமியர் ஆவார். இந்த ஆடைகளைப் பக்தி பரவசத்தோடு உடுத்திக்கொள்பவர்கள் மதுரையின் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த இந்துக்களே ஆவர்.
ஒரு இந்து பண்டிகைக்கு இஸ்லாமியர்களாக இருந்து கொண்டு ஆடை தைப்பது குறித்து ஆச்சரியத்தோடு கேட்டால், சீற்றத்தோடு, “இது ஒண்ணும் வட இந்தியா கெடையாது" என்கிறார் அமீர் ஜான். “நாங்க தாயாப் பிள்ளையா தலை தலைமுறையா பழகுறோம். உறவு முறை சொல்லி உரிமை கொண்டாடுவோம். முஸ்லிம் ஆண்களை மாமான்னும், பெண்களை மாமின்னும் கூப்பிடுவாங்க. நாங்க அவங்கள மாப்ளன்னு சொல்வோம். அப்படியிருக்கும்போது வடக்க மாதிரியான அசம்பாவிதம் எல்லாம் இங்க எப்டி நடக்கும்?” என எதிர்க்கேள்வி கேட்கிறார்.
புது மண்டபத்தில் ஆடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மற்றொரு கலைஞரான முபாரக் அலி (42), “இதுல அதிசயப்பட என்ன இருக்கு. காலங்காலமா இதை நாங்க பண்ணிக்கிட்டு இருக்கோம்” என்கிறார்.
மதுரையின் மையத்தில் கொலு வீற்றிற்கும் மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரில் உள்ள ஏறத்தாழ நானூறு ஆண்டுப் பழமைமிக்க மண்டபத்தை ‘புது' மண்டபம் என்று அழைப்பது விநோதமாக இருக்கலாம். மதுரையின் மன்னராக இருந்த திருமலை நாயக்கர் 1635-ல் இந்த மண்டபத்தை வசந்த விழா நடத்தும் பொருட்டுக் கட்டினார்.
மதுரையைக் கைப்பற்றினால் பெரும்பாலான தமிழ் நிலத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்கிற செறிவான அரசியல் சூழலும், மதுரையின் சமய, பண்பாட்டு சிறப்பும் இயல்பாகவே இணைந்திருக்கின்றன. அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ் சத்தியனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளர் சு.வெங்கடேசனும் போட்டியிட்டார்கள். பெரும் சமயச்சிறப்புடைய மதுரை தொகுதியில் மூன்று முறை இடதுசாரிகள் வென்றுள்ளார்கள்.
ஏப்ரல் 22, ‘அழகர் திருவிழாவின்’ இறுதி நாளாகும். இதில் இந்தத் தையற்கலைஞர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளார்கள். ஏப்ரல் 18 தேர்தல் திருவிழாவின் இறுதி கட்டம். அன்று தான் தமிழகம் வாக்களித்து முடித்திருந்தது. அந்தத் தேர்தல் பரபரப்பின் சுவடு அடங்கிய மூன்றாவது நாளே இந்த விழா நிகழ்கிறது.
கள்ளழகர் சுருக்கமாக அழகர், அழகர் கோயிலின் மூலவர். இந்த அழகர் கோயில் மதுரைக்கு இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேலூர் பகுதியில் அமைந்திருக்கிறது. கர்ண பரம்பரை கதைகளின்படி தன்னுடைய தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண வைகையைக் கடந்து அழகர் ஆவலோடு வந்தார். ஆனால், தான் வருவதற்கு முன்பே தங்கையின் திருமணம் முடிந்ததை அறிந்து சற்றே சினம் கொப்பளிக்கத் திரும்பச் சென்றார்.
மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா ஏப்ரல் 8 துவங்கி பன்னிரண்டு நாட்கள் நீடித்தது. அழகர் திருவிழா ஏப்ரல் 14 துவங்கி, ஒன்பது நாட்கள் தொடர்ந்து ஏப்ரல் 22 முடிவுற்றது. கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நிகழும் இவ்விரு விழாக்களும் ஒருங்கே சித்திரைத் திருவிழா என அழைக்கப்படுகின்றன. முதல் விழா
மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டத்தொடு துவங்குகிறது.
புது மண்டபம் 333- அடி நீளமும், 25 அடி அகலமும் 125 தூண்களும் கொண்டது. இங்கே நாயக்கர் மன்னர்களின் சிற்பங்களும், தெய்வங்களின் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்திற்குள் இருக்கும் வணிக வளாகம் தமிழகத்திலேயே பழமையான விற்பனைக்கூடங்களில் ஒன்றாகும். இங்கே புத்தகங்கள், பாத்திரங்கள், துணிமணிகள், வளையல்கள், பொம்மைகள் என்று எராளமான பொருட்கள் கிடைக்கின்றன. “எனக்குத் தெரிஞ்சு, புது மண்டபத்துல இந்தக் கடைகள் எரநூறு வருஷமா இருக்குது. இருக்கிற கடையிலேயே பழமையான கடைன்னா அது சிக்கந்தர் இரும்பு பாத்திரக் கடை தான். குறைஞ்சது நூற்றியைம்பது வருஷமா அதே இடத்துலதான் இருக்கு” என்கிறார் புதுமண்டபம் வியாபாரிகள் மற்றும் தையல் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் முத்துப்பாண்டி. முத்துப்பாண்டியும் ஒரு தையற்கலைஞரே.
தமிழ் மாதமான சித்திரையில் இந்தத் தையற்கலைஞர்கள் மற்ற கடைக்காரர்களை விடப் பரபரப்பாக இருப்பார்கள். இந்தக் காலத்தில்தான், கோயில் திருவிழாவில் தங்களை அழகர் போல அலங்கரித்துக் கொள்ளும் பல நூறு பக்தர்களுக்கான ஆடைகளைத் தைத்து கொடுப்பார்கள். இந்து பக்தர்களுக்குப் பலவண்ண பட்டாடைகளைக் கச்சிதமாக வெட்டி, தைத்து தரும் பணியில் சுணக்கமின்றி ஈடுபடும் கலைஞர்களில் அமீர் ஜானும் ஒருவர். இஸ்லாமியர் தையற்கலைஞரான அவரின் குடும்பம் இத்தொழிலில் மூன்று தலைமுறைகளாக ஈடுபட்டுள்ளது. தங்களுடைய பாத்திரங்கள், பிரார்த்தனைகளுக்கு ஏற்ப பக்தர்கள் அணியப்போகும் ஆடைகளை எங்களுக்குப் பொறுமையாகக் காண்பித்துக்கொண்டே தன்னுடைய வேலையில் ஈடுபடுகிறார் அமீர் ஜான். அவரின் லாகவம் மிகுந்த கரங்கள் சிக்கலான நூல்வேலையைக் குழந்தை விளையாட்டைப் போலச் செய்து முடிக்கிறது. “இந்தக் கடை அறுபது வருஷமா இருக்குது. நான் என் அப்பா ஷேக் நவாப் ஜான்கிட்டதான் தொழில் கத்துகிட்டேன்” என்கிறார் அமீர் ஜான்.
தாங்கள் ஏற்கும் பாத்திரத்திற்கு ஏற்ப பக்தர்களுக்குச் சல்லடம் (காற்சட்டை), கச்சை (இடுப்பை சுற்றி அணியும் துணி), உருமா (கிரீடம்), சாட்டை தேவைப்படும். சிலருக்குத் தொப்பறை (துணியால் செய்யப்பட்ட நீர்க்குடுவையில் சிறிய ஓட்டை இருக்கும். அதன் வழியாக கள்ளழகர் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பார்கள், சிறு சிறு துண்டுத்துணிகளைக் கொண்டு செய்யப்பட்ட பந்தம் (தீப்பந்தம்) என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் தமிழ்த்துறை தலைவராகத் திகழ்ந்த பேராசிரியர் தொ.பரமசிவன் 1989-ல் எழுதிய அழகர் கோயில் நூலில் திருவிழாவின் போது நான்கு பாத்திரமேற்புகள் நிகழ்வதைக் கவனப்படுத்துகிறார். திரியெடுத்தாடுவோர் (தீ ஏந்தி நடனம் புரிவோர்), திரியின்றியாடுவோர் (தீயின்றி நடனம் புரிவோர்), சாட்டை அடித்தாடுவோர் (நடனம் ஆடும் போது சாட்டையால் அடித்துக் கொள்பவர்கள்), துருத்தி நீர் தெளிப்போர் (இறைவன், பக்தர்கள் மீது நீர் தெளிப்போர்).
'அவங்களும் [இஸ்லாமிய தையற்கலைஞர்கள்] நாங்களும் வெவ்வேற இல்லை. ஒண்ணுக்குள்ள ஒண்ணா உறவுமுறை வெச்சுதான் கூப்பிட்டுப்போம். ஒருத்தருக்கு ஒண்ணுன்னா ஓடோடி வருவோம், உசுர கொடுத்து காப்பாத்துவோம்”
முதல் மூன்று பிரிவினர் சிவப்புச் சல்லடம் அணிந்து காணப்படுகிறார்கள். தீயேந்தி நடனமாடுவோரும் சிவப்புக் கிரீடம் தரிக்கிறார்கள். நீரை தெளிப்பவர்கள்/வாரியிறைப்பவர்கள் வீரர்களைப் போல வேடம் பூண்டு, உருமாவும், மாரடி மாலையும் அணிந்து வலம் வருகிறார்கள். இந்தச் சடங்குகளில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து சாதியினரும் பங்கேற்கின்றனர் என்று தொ.பரமசிவன் குறிப்பிடுகிறார். இந்தச் சடங்குகளில் தோற்றம் குறித்து இவர்களில் பலருக்கு தெரிந்திருக்கவில்லை. "பெரும்பாலான பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டுக் காலங்காலமாக இவற்றைச் செய்கிறார்கள் என்று தொ.பரமசிவன் கவனப்படுத்துகிறார். பெண்கள் அரிதாகவே இத்தகைய வேடங்களைத் தரிக்கிறார்கள் என்றாலும் பெண்கள் இத்தகைய வேடங்கள் தரிக்கக்கூடாது என்று தடை எதுவுமில்லை. மீனாட்சி திருவிழா பெரும்பாலும் நகர்ப்புற மதுரையைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுகையில், அழகர் விழா ஊரக மக்களால் பெருமளவில் கொண்டாடப்படுகிறது என்றும் தொ.பரமசிவன் பதிவு செய்கிறார்.
இந்தத் தையற்கலையில் பலர் இளம்வயதிலேயே ஈடுபடத் துவங்கி விடுகிறார்கள். இதற்கு மாறாக, 53 வயதாகும் அபு பக்கர் சித்திக் அழகரின் உலகத்திற்குள் 2007-ல் தான் அடியெடுத்து வைத்தார். “நான் இதுக்கு முன்னாடி இதே புது மண்டபத்தில ஃபேன்சி ஸ்டோர் நடத்திகிட்டு இருந்தேன். இந்தத் தொழில் சுண்டி இழுத்துச்சு. இந்தத் தையல் வேலையை மதுரைக்கு மட்டும் நாங்க செய்யலை. புது மண்டபத்தில இருக்கிற தையல் வேலை செய்யறவங்க தமிழ்நாடு முழுக்க எங்க நடக்கிற சடங்குக்கும் துணி தைச்சு கொடுக்கிறாங்க." என்கிறார்.
இந்தத் தையற்கலையில் பலர் இளம்வயதிலேயே ஈடுபடத் துவங்கி விடுகிறார்கள். இதற்கு மாறாக, 53 வயதாகும் அபு பக்கர் சித்திக் அழகரின் உலகத்திற்குள் 2007-ல் தான் அடியெடுத்து வைத்தார். “நான் இதுக்கு முன்னாடி இதே புது மண்டபத்தில ஃபேன்சி ஸ்டோர் நடத்திகிட்டு இருந்தேன். இந்தத் தொழில் சுண்டி இழுத்துச்சு. இந்தத் தையல் வேலையை மதுரைக்கு மட்டும் நாங்க செய்யலை. புது மண்டபத்தில இருக்கிற தையல் வேலை செய்யறவங்க தமிழ்நாடு முழுக்க எங்க நடக்கிற சடங்குக்கும் துணி தைச்சு கொடுக்கிறாங்க." என்கிறார்.
இவர்களில் 59 வயதாகும் ஷேக் தாவூத் இத்தொழிலுக்குள் 13 வயதிலேயே அடியெடுத்து வைத்துவிட்டார். "நான் சிவராத்திரி, கந்தசாமி கோயில் திருவிழாவுக்கும் துணி தைக்கிறேன்." என்கிறார்.
ஒரு அழகர் ஆடை செட் வாங்குபவரின் தேவைக்கு ஏற்ப 750 முதல் 1,500 வரை செலவாகும். அழகர் கோயிலின் காவல் தெய்வமான கருப்பசாமிக்குக் காணிக்கையாகத் தருவதற்கு அரிவாள்கள் வாங்கிச் செல்வோரும் உண்டு. ஒரு தையற்கலைஞர் சராசரியாக இரண்டு ஆடைகள் ஒரு நாளில் தைப்பார். மிஞ்சிப்போனால் மூன்று ஆடைகள். பண்டிகை காலத்தில் என்றைக்கும் வருமானம் ஐநூறு -அறுநூறு ரூபாய்க்கு குறைவாகப் போவதில்லை. தயாரிக்கிற ஆடைகளுக்கு ஏற்ப வருமானம் வேறுபடும். மேற்சொன்ன வருமானம் உதவியாளர்களுக்கு உரிய பங்கை வழங்கிய பிறகு கிடைக்கிற லாபமாகும்.
சில வாடிக்கையாளர்கள் தையல்காரர் இஸ்லாமியர் என்று தெரிந்தால், “கூடக் காசு கொடுக்கிறதோட, உன் கடையில வாங்குறது அதிர்ஷ்டம்டா தம்பின்னு சொல்வாங்க” என்று சிலிர்க்கிறார் சித்திக்.
புதுமண்டபம் வியாபாரிகள் மற்றும் தையல் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் முத்துப்பாண்டி 150 தையற்கலைஞர்களில் அறுபது இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்று கணக்கிடுகிறார். “அவங்களுக்குக் கேடு செய்யவெல்லாம் நினைச்சுகூடப் பாக்க முடியாது. அவங்களும் எங்களில ஒருத்தர் தான். தாயா, பிள்ளையா பழகிக்கிற நாங்கலாம் உறவுமுறை வெச்சுதான் கூப்பிட்டுப்போம். ஒருத்தருக்கு ஒன்னுன்னா ஓடோடி வந்துடுவோம். அனுசரணையா இருக்கிறோம். நாட்டில் மத்த இடம்லாம் எப்படின்னு தெரியாது. இங்க கைகோர்த்து தான் நிக்கிறோம்” என்கிறார்.
இங்கே உள்ள தையற்கலைஞர்கள் தங்களுடைய தொழில் என்றைக்கும் சோடை போனதில்லை என்று ஒப்புக்கொள்கிறார்கள். மீனாட்சி அம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்ட பிப்ரவரி 2018 காலத்தில் ஆறு மாத காலத்திற்குப் புது மண்டபம் மூடப்பட்டிருந்த காலம் மட்டும் விதிவிலக்கு. அதற்குப் பிறகு மண்டபம் திறக்கப்பட்டாலும், அதிகாரிகள் நெரிசல்மிகுந்த இந்த இடத்தை விட்டு கடைகளை இடம் மாற்றிவிட்டு, புது மண்டபத்தைப் புனரமைப்புச் செய்து, பாரம்பரிய சின்னமாகப் பாதுகாக்கத் திட்டமிட்டுள்ளார்கள். “புது மண்டபத்தின் வரலாற்று முக்கியத்துவம் எங்களுக்கும் புரிந்திருக்கிறது. அதனைக் காக்கவே நாங்களும் விரும்புகிறோம். அதிகாரிகள் இங்கே இருந்து இரண்டு கட்டிடங்கள் தள்ளியுள்ள குன்னத்தூர் சத்திரத்தில் இடம் தருவதாக வாக்குத் தந்திருக்கிறார்கள். அது தயாரானதும் நாங்கள் இடம் மாறிவிடுவோம்.” என்கிறார் சித்திக். இந்த இடப்பெயர்வு தங்களின் வியாபாரத்தைப் பாதிக்காது என்றும் நம்புகிறார்கள்.
“நஷ்டமே ஆகாத ஒரே தொழில் இது மட்டும்தான். முழி பிதுக்கிற நெரிசல் கூடிக்கிட்டே போற காலத்தில, சித்திரை திருவிழா மாதிரியான நேரங்களில் தான் மக்கள் மூச்சுவிட முடியுது. எல்லாரும் ஒண்ணு சேர்ந்து, சந்தோஷமா இருக்காங்க. அதனாலதான், எங்களுக்கு எந்த இழப்பும் ஏற்படுறதில்லை” என்று முடிக்கிறார் சித்திக்.
தமிழில்: பூ.கொ.சரவணன்