" குழந்தைகள் வலுவாக கழுதைப்பால்", என்று ஒரு குரல் கூறியது, நான் ஆச்சரியப்பட்டுத் திரும்பினேன்.
அங்கு அமைதியாக நின்று கொண்டு தலையசைத்துக் கொண்டிருக்கும் கஜோலுடன், சுக்தேவும் நின்று கொண்டிருந்தார். சத்தமே காட்டாமல் அவரது அருகில் நடந்து சென்றது.
நான் ஆச்சரியப்பட்டேன், ஆனால் அந்த தெருவில் இருந்தவர்கள் யாரும் கஜோல் கழுத்தில் கயிறு கட்டி குச்சியுடன் அவர் வழி நடத்திச் செல்வதை பார்த்ததாகத் தெரியவில்லை.
சில நேரங்களில் எட்டு வயது கஜோலுக்கு, பதிலாக எட்டு வயதாகும் ராணியும், வீடு வீடாக நடந்து செல்லும் போது சுக்தேவ் கழுதைப்பாலில் நற்பண்புகளை விவரிக்கிறார். அன்று, ராணி மலாடின் கிழக்கில் இருக்கும் அப்பபாடா சேரியில் இருக்கும் வீட்டிலிருந்தது. கஜோலுடன் நிற்பது அவளது 5 மாத கழுதைக்குட்டி. சிதைந்த வலது பின்னங்காலுடன் பிறந்த இரண்டு வயது லாங்டியும் வீட்டில் இருந்தது.
அவர்களுடன் சுக்தேவின் கூட்டு குடும்பத்திற்கு சொந்தமான மேலும் 6 பெண் கழுதைகள் உள்ளன - அவரது மருமகன் ராம்தாஸ் முடாவை வைத்திருக்கிறார், அதே நேரத்தில் அவரது மூத்த சகோதரர் வாமனிடம் ஐந்து கழுதைகள் உள்ளன, அவற்றுக்குப் பெயர்கள் இல்லை.
சுக்தேவிற்கு திரைப்படங்கள் என்றால் கொள்ளை பிரியம் என்று அவரது மனைவி ஜெயஸ்ரீ கூறுகிறார், அதனால் அவர்களது கழுதைகளுக்கு பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன, கடந்த காலத்தில் மாதுரி தீக்ஷித் என்ற பெயர் கொண்ட கழுதையும் இருந்தது.
புறநகர் வடக்கு மும்பையில் உள்ள அப்பபாடாவில் உள்ள ஒரு மலையடிவாரத்தில் மனிதர்களும் கழுதைகளும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். நெருக்கமான குடிசைகளில் அம்மக்கள் வாழ்கின்றனர், அதிலிருக்கும் கம்பத்தில் கயிற்றில் கழுதைகள் கட்டப்பட்டுள்ளன. அக்கம்பக்கத்தினர் இதனைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அதே பாதையில் வசித்து வரும் சாஹில் நாங்கள் இங்கு வருவதற்கு முன்பே அவர்கள் இங்கு தான் வசித்தனர்", என்று கூறுகிறார்.
இந்த கழுதைக் குட்டியின் தந்தையான ராஜா முரட்டுத்தனமாக மாறி, சுற்றியிருக்கும் மக்களைத் தாக்கத் துவங்கியது என்று அவர்கள் கூறுகின்றனர். "அவன் அதிகமாக குறும்பு செய்வான், பெண் கழுதைகள் அவனது பின்னால் ஓடும், தெருக்களில் நடந்து செல்லும் மக்களை முட்டித் தள்ளுவான் - ஆனால் ஒருவரையும் அவன் காயப்படுத்தியது கிடையாது", என்று ராஜாவின் உரிமையாளரான ராமதாஸ் கூறுகிறார். அதனால் அவனை நான்கு மாதங்களுக்கு முன்பு அவர்களது கிராமத்தில் விற்றிருக்கின்றார்.
ஜாதவ் குடும்ப உறுப்பினர்கள் சில நேரங்களில் மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள ஜெஜூரி தாலுகாவில் ஆண்டுதோறும் நடைபெறும் கண்டோபா கோவில் கண்காட்சியில் கழுதைகளை வாங்கவோ, விற்கவோ செய்கின்றனர், அங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் விலங்கு வர்த்தகம் செய்ய வருகின்றனர். அங்கு பலவீனமான விலங்குகளுக்கு 5,000 ரூபாயிலிருந்து, அதிகமான சுமைகளை சுமக்க கூடிய உறுதியான கழுதைகள் 25,000 ரூபாய் வரை விலை பெறும்.
நான் சுக்தேவிடம் அவரது கிராமத்தை பற்றி கேட்டேன். அவர் பெருமையுடன் என்னிடம் நீங்கள் சாய்ரத் (2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு மராத்தி திரைப்படம்) பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார். அந்த திரைப்படம் முழுவதுமே எங்களது கிராமத்தில் எடுக்கப்பட்டது. நான் அந்த கிராமத்தில் இருந்து தான் வருகிறேன்", என்று கூறினார். மொத்த குடும்பமுமே தங்களது கிராமத்தை அப்படித்தான் விவரிக்கிறது, அங்கு தான் அந்த வெற்றிப் படம் படமாக்கப்பட்டது - சோலாப்பூர் மாவட்டத்தில் இருக்கும் கர்மலா கிராமத்தில்.
அவர்கள் வாதர் சமூகத்தைச் (மகாராஷ்டிரா மாநிலத்தில் இச்சமூகம் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது) சேர்ந்தவர்கள். சுக்தேவின் தந்தையும் அவரது தாத்தாவும் கழுதைகளை வைத்திருந்தனர். "கிராமத்தில் (மற்றும் அருகில் உள்ள கிராமங்களிலும்) குளங்கள், வீடுகள், சிறிய அணைகள் கட்ட நாங்கள் உதவுவோம், எங்களது கழுதைகள் சுமைகளை சுமந்தன", என்று 52 வயதாகும் சுக்தேவ் கூறுகிறார். "நாங்கள் சம்பாதித்ததை வைத்து உணவு உண்டு வாழ்ந்து வந்தோம்", என்று கூறுகிறார் 38 வயதாகும் ஜெயஸ்ரீ.
வேலைகள் கிடைத்தன, ஆனால் காலம் கடுமையாக இருந்தது. "வறட்சியான காலங்களும் இருந்தன. எங்களிடம் ரொட்டி இருந்தால் அதனுடன் சாப்பிடுவதற்கு குழம்பு இல்லை. நாங்கள் தாகத்தோடு இருந்தோம் ஆனால் எங்களிடம் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை", என்று சுக்தேவ் கூறுகிறார். தவிர அவர்களது குடும்பமும் வளர்ந்து கொண்டே வந்தது, அவர்களுக்கு சொந்தமாக நிலம் எதுவும் இல்லை மேலும் காலப்போக்கில் வேலை கிடைப்பதும் கடினமாகிவிட்டது. மும்பையில் இருந்த அவர்களது உறவினர்களிடமிருந்து கழுதைகள் தானாகவே சுற்றித்திரிந்து உணவு உண்பதாக கேள்விப்பட்டிருந்தனர். மேலும் நகரத்தில் வேலை மற்றும் ஊதியம் அதிகமாக இருப்பதையும் அவர்கள் கேள்விப்பட்டு இருக்கின்றனர்.
1984 ஆம் ஆண்டு ஜாதவின் கூட்டுக்குடும்பக் குழு - சுக்தேவின் பெற்றோர்கள், அவர்களது ஆறு சகோதரர்கள், பல குழந்தைகள் மற்றும் பிற சமூக உறுப்பினர்கள் ஆகியோர் மும்பைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுடன் 100 கழுதைகள் இருந்தன.
அவர்கள் அனைவரும் நடந்தே இங்கு வந்தனர். ஒரு சிலர் மட்டுமே சில நேரங்களில் வாகனங்களைப் பயன்படுத்தினர், ஏனெனில் அனைத்து கழுதைகளையும் வாகனங்களில் கொண்டு வருவது என்பது இயலாத காரியம் என்று சுக்தேவ் கூறுகிறார். கர்மலாவில் இருந்து மும்பைக்கு இடையே இருக்கும் தூரமான சுமார் 325 கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடக்க 11 - 12 நாட்கள் ஆனது என்று அவர் நினைவு கூர்கிறார். "எப்போதெல்லாம் தாபாக்களை பார்த்தோமோ, அப்போதெல்லாம் நாங்கள் உணவு உண்டோம்", என்று கூறுகிறார்.
மும்பையில் பெரிய திறந்தவெளி இடத்தைத் தேடி அவர்கள் மலாடிலிருக்கும் அப்பப்படாவிற்கு வந்து சேர்ந்தனர். போரிவாலியில் உள்ள தேசிய பூங்காவின் விரிவாக்கமாக இந்தப்பகுதி இருந்ததால் அடர்ந்த காடுகளைக் கொண்டிருந்தது. "எங்களது கழுதைகள் (காட்டில்) எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும், எதை வேண்டுமானாலும் சாப்பிடும்", என்று கூறுகிறார் சுக்தேவ். நாங்கள் முதலில் இங்கு வந்து குடியேறினோம், அதனால் தான் இப்பகுதியில் இப்போது மக்களைக் காண முடிகிறது.
1980கள் வரை மும்பையில் கட்டிடங்களின் பெருக்கம் துவங்கவில்லை, ஆனால் ஜாதவின் குடும்பத்திற்கு கட்டுமான இடங்களிலும், ரயில்வேயிலும், செங்கல் மற்றும் மணல் அள்ளுவது மற்றும் பிற சுமைகளை தூக்குவது ஆகிய வேலைகள் கிடைத்தன. தாகூர் கிராமம், ஹனுமன் நகர், மகாவீர் நகர் ஆகியவற்றை உருவாக்கியது யார்? என்று சுக்தேவ் புறநகர் காலணிகளை பட்டியலிடுகிறார். "நாங்கள் தான் எங்களது கழுதைகளை கொண்டு அவற்றை உருவாக்கினோம்", என்று கூறுகிறார்.
"எங்களது மக்கள் 10 - 15 கழுதைகளுடன் சேர்ந்து பணியாற்றுவர்", என்று ஜெயஸ்ரீ நினைவு கூர்ந்தார். நாங்கள் ஒரு நாளுக்கான சம்பளத்தை மொத்தமாகப் பெறுவோம், அதை எங்களிடையே பகிர்ந்து கொள்வோம் - சில நேரங்களில் அது 50 ரூபாயாகவும் இருக்கும் சில நேரங்களில் 100 ரூபாயாகவும் இருக்கும்", என்று கூறுகிறார்.
ஆனால் 2009 - 2010ஆம் ஆண்டின் வாக்கில் விலங்குகள் உரிமை குழுக்கள், கழுதைகள் அதிகமான சுமைகளை சுமக்கின்றன என்று கூறி எங்களை எதிர்க்கத் துவங்கின. "இந்த அமைப்பினைச் (அரசு சாரா நிறுவனங்கள்) சேர்ந்த மக்கள் எங்களிடம் விலங்குகளுக்கு எதிராக எந்த வன்முறையும் இருக்கக்கூடாது என்று கூறுகின்றனர்", என்று 40-களின் மத்தியில் இருக்கும் ராமதாஸ் கோபமாக கூறுகிறார். "நான் இந்த வேலையை எனது தாத்தா காலம், அப்பா காலம் முதல் செய்து வருகிறேன். அவர்கள் எங்களது வயிற்றில் மட்டும் அடிக்கவில்லை கழுதைகளின் வயிற்றிலும் தான். மனிதர்களும் தான் சுமையை சுமக்கின்றனர் அது ஒருவருக்கும் பிரச்சினையாக தெரியவில்லையா?" என்று கேட்கிறார்.
இது தவிர காலப்போக்கில் கனரக இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் கட்டுமான தளங்களில் கழுதைகளை பயன்படுத்துவது வெகுவாக குறைந்துவிட்டது, என்று ஜெயஸ்ரீ கூறுகிறார். "எங்களது கழுதைகள் கடந்தகாலத்தில் செய்ததைப் போலவே இயந்திரங்கள் இப்போது சுமைகளை மேலே தூக்கிச் செல்கின்றன", என்று கூறுகிறார். இப்பொழுதும் சில நேரங்களில் மலைப்பாங்கான கட்டுமான தளங்களில் ராமதாஸுக்கு வேலை கிடைக்கத்தான் செய்கிறது. "லாரிகள் செல்லாத இடங்களில் சுமைகளை சுமக்க கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றது", என்று அவர் கூறுகிறார். ஆனால் அது அரிதாகிவிட்டது.
எந்த வேலையும் இன்றி ஜாதவ் குடும்ப உறுப்பினர்கள் சிலர் கர்மலாவிற்கே திரும்பிவிட்டனர் அல்லது வாழ்வாதாரத்தை தேடி புனேவிற்கு புலம் பெயர்ந்துள்ளனர். மும்பையிலேயே தங்கிவிட்ட சில குடும்ப உறுப்பினர்கள் தினக்கூலிக்கு வேலை தேடி நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். "வேறு என்ன வேலையைச் செய்வது? நாங்கள் அங்கு சென்று கிடைக்கிற வேலையை செய்கிறோம். ஒரு நாள் வேலை கிடைக்கும் அடுத்த இரண்டு நாட்களுக்கு வேலை கிடைக்காது", என்று கூறுகிறார் ராமதாஸ். விலங்குகளை சுற்றியே வளர்ந்தவன் என்பதால் எனது முடாவையும், ஒரு பெண் கழுதையை மட்டும் "எனது மகிழ்ச்சிக்காக" என்னுடன் வைத்திருக்கிறேன் என்று கூறுகிறார்.
சில நேரங்களில் சுக்தேவின் மூத்த சகோதரர் வாமனின் மகனான 21 வயதாகும் ஆனந்த், பவர் என்று பெயரிடப்பட்ட பெண் கழுதையை கோரேகவுனில் இருக்கும் பிலிம் சிட்டிக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அது திரைப்படத்திற்கு அல்லது தொலைக்காட்சித் தொடரில் வரும் காட்சிகளில் பயன்படுத்தப்படுகிறது, மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் இத்தகைய வேலை மிகவும் அரிதாகவே கிடைக்கிறது - மேலும் இதற்கு பவரைப் போன்ற விலங்குதான் தேவைப்படுகிறது.
எனவே கட்டுமான தள பணிகள் இல்லாமல் போன பிறகு ஜெயஸ்ரீக்கும் சுக்தேவிற்கும் ஒரு சி ல வாய்ப்புகளே மீதம் இருந்தன, அவர்கள் வீடு வீடாக சென்று பால் விற்கத் துவங்கினர். சுக்தேவின் குடும்பம் சில நேரத்தில் அவர்களது கிராமத்திலேயே கழுதைப் பாலை விற்றிருக்கின்றது. பொதுவாக நோய்வாய்ப்பட்டு இருப்பவரின் குடும்பத்திலிருந்து ஒருவர் பால் கேட்டு வருவார், ஏனெனில் இது அதிக சத்தான பால் என்று நம்பப்படுகிறது.
அவர்கள் காலை 7 மணி அளவில் துவங்குகின்றனர் மேலும் மாலை 4 மணி அளவில் வீட்டுக்கு திரும்புகின்றனர், மேலும் பல்வேறு சேரி காலணிகள் மற்றும் சாவடிகளுக்கு சென்று மற்றும் செல்லும் பாதை எல்லாம் வாடிக்கையாளர்களை அவர்கள் தேடுகின்றனர். சில நேரங்களில் அவர்கள் கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விரார் வரை கூட நடப்பார்கள். "எனது லட்சுமி (கழுதையை செல்வத்தின் அதிபதியான தெய்வம் என்று குறிப்பிடுகிறார்) என்னை எங்கு அழைத்துச் செல்கிறதோ அங்கெல்லாம் நான் செல்வேன்", என்று கூறுகிறார் சுக்தேவ்.
தேவைப்படும் இடத்திலேயே பால் கறக்கப்படுகிறது. பாலை உடனடியாகவும் சிறிய அளவிலும் தான் உட்கொள்ள வேண்டும். இதற்கென்றே சுக்தேவ் மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோர் ஒரு கரண்டியை தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர். "இது ஒரு மருந்து, உங்களது இருமல், காய்ச்சல், உடல் வெப்பம் ஆகியவற்றை நீக்கி குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. மருத்துவர்கள் எல்லாம் இப்போது வந்தவர்கள், அந்தக் காலத்திலெல்லாம் இந்த பால் தான் வழங்கப்பட்டது", என்று கூறுகிறார் ஜெயஸ்ரீ. இப்பாலில் தாய்ப்பாலுக்கு நிகரான சத்துக்கள் இருக்கின்றது என்று அவர் உறுதியாக நம்புகிறார். "இதனை பருகிப் பாருங்கள் அது உங்களை எவ்வளவு வலிமையாக்குகிறது என்பதை பாருங்கள் என்று கூறுகிறார் ஜெயஸ்ரீ.
கடந்த காலத்தில் தங்களது கிராமத்தில் ஜாதவ் குடும்பத்தினர் ஒரு கரண்டி பாலை இரண்டு ரூபாய்க்கு விற்றிருக்கின்றனர். இப்போதைய விலை பத்து மில்லி லிட்டர் பால் 50 ரூபாய். வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப விலையை அவர் மாற்றி அமைக்கிறார் என்று குறிப்பிடுகிறார் சுக்தேவ். ஒரு பிளாஸ்டிக் தாளில் மூடிய குடிசையினை சுட்டிக்காட்டி இதற்கு 30 ரூபாய், கல் வீட்டில் இருப்பவர்களுக்கு ஐம்பது - அறுபது ரூபாய், மற்றும் பெரிய கட்டிடங்களில் இருப்பவர்களுக்கு நூறு ரூபாய் என்று விற்கப்படுகிறது. சிலர், ஒரு சிறிய கோப்பை அளவு பாலைக் கூட கேட்கின்றனர், அதன் விலை 500 ரூபாய், என்று கூறுகிறார். ஆனால் அவ்வாறு நடப்பதெல்லாம் மிகவும் அரிது.
அவர்களுக்குப் போதுமான வாடிக்கையாளர்கள் கிடைக்கின்றனரா? என்ற கேள்விக்கு அவர்களது இருபது வயது மகன் சூரஜ், "இல்லை, கழுதைப் பாலை பற்றி மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும், என்று கூறுகிறார். கிராம மக்களுக்கும் அல்லது வயதானவர்களுக்கு மட்டுமே அதன் மதிப்பு தெரியும். இளையவர்களுக்கு இதைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை", என்று கூறுகிறார்.
சில நேரங்களில் மக்கள் சுக்தேவின் தொலைபேசி எண் மற்றும் முகவரியை கேட்டு குறித்துக் கொள்கின்றனர், ஏனெனில் தேவைப்படும்போது அவர்களை வந்து பாலைப் பெற்றுக் கொள்வதற்காக. அந்தேரி, கார், நலசோபாரா ஆகிய இடங்களிலிருந்து மக்கள் எங்களைத் (அப்பபாடாவில் இருக்கும் வீட்டிற்கு) தேடி வருகின்றனர் என்கிறார் ஜெயஸ்ரீ.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் குழந்தை பிறந்த வீட்டில் இருந்தோ அல்லது உடல்நிலை சரியில்லாதவர்கள் வீட்டில் இருந்து தான் வருவர். "நீங்கள் இதை 3 நாட்களுக்கு தொடர்ந்து குடித்தால், உங்களது பலவீனம் அனைத்தும் போய்விடும். ஐந்தாறு நாட்களில் நீங்கள் நன்றாகிவிடுவீர்கள்", என்று ஜெயஸ்ரீ கூறுகிறார். குளிர்காலத்தில், குளிர் மற்றும் காய்ச்சலில் இருந்து விடுபட வேண்டி அதிகமான வாடிக்கையாளர்களை இவர்கள் பெறுகின்றனர்.
சில நேரங்களில் பெற்றோர்கள் ஒரு சடங்கை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றனர் - அதன் பெயர் நாசர் நிக்கல்னா. ஒரு கரண்டி பாலை குழந்தைக்குக் கொடுத்த பிறகு சுக்தேவ் அல்லது ஜெயஸ்ரீ குழந்தையின் நெற்றியினை கழுதையின் முதுகு, கால் மற்றும் வாலில் தொடும்படி செய்கின்றனர். பின்னர் குழந்தை அதிகமாக அழவில்லை என்றால் அதனை கழுதைக்கு மேலும் கீழும் கொடுத்து வாங்குகின்றனர். அதன் பின்னர் சில நொடிகளில் குழந்தையை தூக்கி போட்டு தலைகீழாக பிடிக்கின்றனர். இது குழந்தையை தீய சக்தியிடமிருந்து காப்பாற்றும் என்று நம்புகின்றனர்.
சுக்தேவ் மற்றும் ஜெயஸ்ரீயின் ஒரு நாளுக்கான மொத்த வருவாய் 500 முதல் 1,500 ரூபாய் ஆகும் - ஆனால் அவர்கள் வாரத்தில் 3 அல்லது 4 முறை மட்டுமே இவ்வாறு புறப்படுகின்றனர், மற்ற நாட்களில் அவர்களும் கழுதைகளும் ஓய்வெடுக்கின்றனர்.
சமீபத்தில் குட்டி போட்ட கழுதையினையே அவர்களது வேலை முழுமையாக சார்ந்திருக்கிறது. ஒரு கழுதைக்குட்டி சாதாரணமாக 9 மாதங்களுக்கு தனது தாயிடம் பாலருந்தும் அதன் பிறகு பெண் கழுதைகள் பால் சுரப்பதை நிறுத்தி விடும் என்று ஜெயஸ்ரீ என்னிடம் கூறினார். கஜோல் பால் தருவதை நிறுத்தும் போது அதன் குட்டியுடன் அதனை விற்று விடுவர் மேலும் ஜெயஸ்ரீ மற்றும் சுக்தேவ் புதியதாக குட்டி போட்ட கழுதை ஒன்றினை வாங்குவார். தானே மாவட்டத்தில் தங்களுக்கு தெரிந்த விற்பனையாளர்களிடம் இருந்து ஒரு ஜோடியை வாங்க அவர்கள் சில நேரங்களில் முகவர்களிடம் முன்கூட்டியே தெரிவித்து காத்திருக்க வேண்டியிருக்கிறது.
கழுதைகளுக்கு நன்றாக உணவளிக்க வேண்டும். "அவை எல்லாவற்றையும் உண்ணும்", என்று ஜெயஸ்ரீ கூறுகிறார். அவை காட்டில் (தேசிய பூங்காவின் அருகில் உள்ள) உள்ள காட்டுப்பகுதியில் சுற்றித்திரியும். அவை வெள்ளரிக்காய், அரிசி, பருப்பு ஆகியவற்றை உண்ணும். அவர்களுக்கு பிடித்தமான உணவு சோளம் மற்றும் கோதுமை. அவை எங்களின் வழக்கமான வாடிக்கையாளர்களிடமிருந்து மீந்து போன சப்பாத்திக்களையும் பெறுகின்றன. மூன்று பெண் கழுதைகளுக்கு உணவளிக்க மாதம் 700 -1,200 ரூபாய் வரை செலவு செய்கிறோம் என்று ஜெயஸ்ரீ கூறுகிறார்.
நெரிசலான மும்பை நகரத்தில் விலங்குகளை கவனித்துக் கொள்வது என்பது எளிதான காரியமல்ல. அவற்றுக்கு திறந்தவெளி தேவை. ஜாதவ் குடும்பத்தினர் அவற்றை சுற்றித்திரிய அனுப்பும்போது வழக்கமாக அவை மாலை தான் வீடு திரும்பும். ஆனால் சில நேரங்களில் பல நாட்கள் ஆகிய பின்னரும் திரும்பாத நிலையும் உண்டு. "பின்னர் நாங்கள் கழுதையை தேடி, மக்களிடம் விசாரித்து மீண்டும் அதைக் கொண்டு வருவோம்", என்று சுக்தேவ் கூறுகிறார்.
கழுதை திரும்பும் போது, அது எங்களிடம் ஏதாவது சொல்ல விரும்பினால் அதன் முகத்திலேயே அது தெரிந்துவிடும் என்று சூரஜ் கூறுகிறார். "அது எங்களை முட்டித் தள்ளும் அல்லது வாலால் அடிக்கும். அது காலை காயப்படுத்தி இருந்தால் கால்களை ஆட்டி எங்களிடம் காண்பிக்கும்".
விலங்குகள் திரும்பவே திரும்பாத நேரமும் உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு சில கழுதைகள் இப்படி சென்றிருக்கின்றன, எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலை அதிகரித்த போது, தொடர்ந்து வளர்ந்து வரும் இந்த நெரிசலான நகரத்தில் எங்களது கூட்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள், விலங்குகளை விற்று விட்டனர் அல்லது கர்மலாவிற்கே திருப்பி அனுப்பிவிட்டனர்.
சூரஜ் கழுதைகளை மிகவும் நேசிக்கிறார். அவரது 22 வயதாகும் சகோதரர் ஆகாஷும், இவரும் உயர்நிலைப் பள்ளியில் இருந்து இடை நின்றவர்கள், மேலும் தினக்கூலியாக அவர்கள் கிடைக்கின்ற வேலைகளை செய்து வருகின்றனர். அவருக்குப் பிடித்தமான குட்டக்கியை நினைவு கூர்கிறார், "சிறு வயது முதல் 15 வயது வரை அவளே எனது தோழி, என்று சூரஜ் கூறுகிறார். வேறு எந்தக் கழுதையின் மீதும் நான் உட்கார்ந்து இல்லை. நான் அவளுடன் மணிக்கணக்கில் காட்டில் நேரம் செலவழித்து இருக்கிறேன் மேலும் எனது எல்லா ரகசியங்களையும் அவளிடம் தெரிவித்திருக்கிறேன்", என்று கூறுகிறார். மலாடில் நெடுஞ்சாலையில் நடந்த ஒரு சாலை விபத்தில் குட்டக்கி இறந்த போது, சூரஜ் மணிக்கணக்கில் அழுதிருக்கிறார்.
சராசரியாக இந்திய கழுதைகளின் ஆயுள் 15 முதல் 20 வருடங்கள், அவை இறக்கும் போது தேசிய பூங்காவின் மரங்களுக்கு மத்தியில் அவை புதைக்கப்படுகின்றன என்று கூறுகிறார்.
ஜாதவ் குடும்பத்தினர் தங்கள் பகுதியில் உள்ள சேரி மறுமலர்ச்சி ஆணையத்தின் வீட்டில் மறுகுடியமர்வு செய்வதற்குத் தகுதியானவர்கள். அவர்களிடம் அங்கு வசிப்பதற்கு தேவையான ஆவணங்கள் இருக்கிறது. அது நடக்கும் போது, கழுதைகளையும் அவர்களுடன் வைத்திருப்பதற்கு கொஞ்சம் இடம் கிடைக்கும் என்று நம்புகிறார் சூரஜ். அல்லது சில கழுதைகள் எங்களுடன் இருக்கும் மற்றவை கிராமத்திற்கே சென்றுவிடும் என்று கூறுகிறார் அவர். "அடக்கடவுளே, இல்லை. அவை இல்லாமல் நான் எங்கும் செல்லமாட்டேன்", என்று கூச்சலிடுகிறார் சுக்தேவ்.
தமிழில்: சோனியா போஸ்