இந்த தீபாவளிக்கு 10,000-லிருந்து 12,000 விளக்குகள் வரை தயாரித்திருப்பதாக ஸ்ரீகாகுளம் பரதேசம் சொல்கிறார். இந்த வாரம் கொண்டாடப்படும் தீபாவளிக்காக, ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே 92 வயது குயவர் வேலை செய்யத் தொடங்கி விட்டார். ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு தேநீர் அருந்திவிட்டு வேலையைத் தொடங்குவார். சில இடைவேளைகள் மட்டும் எடுத்துக் கொண்டு இரவு வரை தொடர்வார்.
சில வாரங்களுக்கு முன் அக்டோபர் மாதத் தொடக்கத்தில், சிறு பீடத்துடனான விளக்கு செய்ய முயற்சித்தார் பரதேசம். “இவை உருவாக்குவது சற்று கஷ்டமான வேலை. பீடத்தின் தடிமன் சரியாகக் கிடைக்க வேண்டும்,” என்கிறார் அவர். குவளை வடிவ விளக்கில் எண்ணெய் நிரப்பப்படுகையில், கவிழாமல் தடுக்க பீடம் உதவுகிறது. திரி அணையாமலும் பாதுகாக்கிறது. வழக்கமான விளக்கு செய்ய இரு நிமிடங்கள் போதும். பீடத்துடனான விளக்கு செய்ய ஐந்து நிமிடங்கள் அவருக்கு ஆகிறது. வாடிக்கையாளர்களை இழந்துவிடக் கூடாது என்பதால் வழக்கமான விளக்கின் விலை 3 ரூபாயிலிருந்து 1 ரூபாய் மட்டும் கூட்டி பீட விளக்கை விற்கிறார்.
கலையில் பரதேசம் கொண்டிருகும் உற்சாகமும் பற்றும் அவரது வாழ்க்கைச் சக்கரத்தை விசாகப்பட்டினத்தின் கும்மாரி வீதியில் (குயவர் தெரு) எண்பது ஆண்டுகள் தடையின்றி சுற்ற வைத்திருக்கிறது. லட்சக்கணக்கானோரின் வீடுகளில் தீபாவளிக்கு ஒளியூட்டும் விளக்குகளை இந்த காலத்தில் அவர் செய்திருக்கிறார். “உருவமற்ற களிமண் நம் கை, ஆற்றல் மற்றும் சக்கரம் ஆகியவற்றின் துணையுடன் ஒரு பொருளாக மாறுகிறது. அது கலை,” என்கிறார் 90 வயதுகளில் இருக்கும் அவர். குடும்பத்துடன் வாழும் அவர் அதிகமாக வெளியே செல்வதில்லை. கேட்கும்திறன் சற்று குறைவு அவருக்கு.
விசாகப்பட்டினத்தின் அக்கய்யாபாலெத்தில் பரபரப்பாக இயங்கும் சந்தைப் பகுதிக்கு அருகே இருக்கும் குறுகலான சந்துதான் கும்மாரி வீதி. அத்தெருவில் வசிக்கும் பெரும்பான்மையானோர் கும்மாராக்கள் ஆவர். சிலைகள் உள்ளிட்ட களிமண் பொருட்களை பாரம்பரியமாக செய்து வரும் சமூகம் அவர்கள். விசாகப்பட்டின மாவட்டத்தின் பத்மநாபன் மண்டலத்திலிருந்த போட்னுரு கிராமத்திலிருந்து வேலை தேடி பரதேசத்தின் தாத்தா இந்த நகரத்துக்கு இடம்பெயர்ந்தார். அவர் இளமைக்காலத்தை நினைவுகூருகிறார். இத்தெருவில் இருந்த 30 கும்மாரக் குடும்பங்கள் விளக்குகளையும் செடிகளுக்கான பானைகளையும் உண்டியல்களையும், மண் குடுவைகளையும் குவளைகளையும் சிலைகள் போன்ற பிற மண்பொருட்களையும் செய்தனர்.
விசாகப்பட்டினத்தின் குயவர்கள் வசிக்கும் ஒரே பகுதியாக கருதப்படும் இடத்தில் விளக்குகள் செய்யும் கடைசி கைவினைஞராக பரதேசம் இருக்கிறார். பிற குயவர் குடும்பங்கள் சிலைகள் மற்றும் பிற களிமண் பொருட்கள் செய்யத் தொடங்கினர். அல்லது முற்றிலுமாக கலையைக் கைவிட்டனர். பத்து வருடங்களுக்கு முன்வரை, அவரும் விழாக்களுக்கு சிலைகள் செய்து கொண்டிருந்தார். பிறகு மெல்ல அதை நிறுத்தினார். சிலை செய்வது உடலை வருத்தி செய்ய வேண்டிய வேலை. பல மணி நேரங்களாக தரையில் உட்கார்ந்து செய்வது கஷ்டமாக இருப்பதாக அவர் சொல்கிறார்.
விநாயக சதுர்த்தி முடிந்து தீபாவளிக்கான விளக்குகளை செய்ய பரதேசம் தற்போது காத்திருக்கிறார். “விளக்குகள் செய்வதில் எனக்கு என்ன மகிழ்ச்சி எனத் தெரியவில்லை. ஆனால் சந்தோஷமடைகிறேன். அநேகமாக மண்ணின் மணம் எனக்கு பிடித்திருக்கிறது என நினைக்கிறேன்,” என்கிறார் அவர், வீட்டருகே இருக்கும் தெருவிலுள்ள ஒரு கொட்டகையில் வேலை பார்த்தபடி. அறைக்குள் மண் கட்டிகள் கிடக்கின்றன. உடைந்த பானைகளும் சிலைகளும் இருக்கின்றன. தண்ணீர் டிரம்கள் இருக்கின்றன.
இளம் வயதில் இருக்கும்போது தீபாவளிக்கு வீடுகளில் ஏற்றும் வழக்கமான விளக்குகள் செய்வதை தந்தையிடமிருந்து கற்றுக் கொண்டார் பரதேசம். தொடர்ந்து அவர் வழக்கமான விளக்குகளையும்ஜ் அலங்கார விளக்குகளையும் செடிப் பானைகளையும் உண்டியல்களையும் விநாயகர் சதுர்த்திக்கான விநாயகர் சிலைகளையும் புஸ்வாண வெடிகளையும் செய்தார். இந்த வருடம் 1000 புஸ்வாணங்களை செய்ய ஆர்டர் அவருக்கு வந்திருக்கிறது. ஒவ்வொன்றுக்கு 3 ரூபாய் விலை வைத்து பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தீபாவளியை நெருங்கிக் கொண்டிருக்கும் மாதங்களில் கூட திறமையான பரதேசம் ஒரு நாளில் 500 விளக்குகள் அல்லது புஸ்வாணங்களை செய்ய முடியும். அவர் தயாரிக்கும் மூன்றில் ஒன்று முழுமையடைவதில்லை என்கிறார். மரக்கரி அடுப்பில் காய வைக்கும்போது உடைந்துவிடும். அல்லது சுத்தப்படுத்துகையில் உடையும். தற்போது கிடைக்கும் மண்ணின் தரத்தின் மேல் அவர் குற்றம் சுமத்துகிறார்.
தொடர் வேலைகள் இருக்கும் இக்காலத்தில் பரதேசத்தின் மகன் ஸ்ரீநிவாஸ் ராவும் மருமகள் சத்யாவதியும் உதவுகின்றனர். குடும்பமாக அவர்கள் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான விழாக்காலத்தில் சுமாராக 75, 000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகின்றனர். வருடத்தின் பிற நாட்களில் குயவர் தெருவுக்கு குறைவான ஆட்களே வருவார்கள். வியாபாரம் ஆகாமல் போகும் நாட்களும் உண்டு. பள்ளியில் பணிபுரியும் ஸ்ரீநிவாஸ் 10,000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். குடும்பம் இந்த வருமானத்தைச் சார்ந்து இருக்கிறது.
கடந்த தீபாவளியில் கோவிட் வியாபாரத்துக்கு தடை போட்டது. 3,000 - 4,000 விளக்குகள்தான் அவர்களால் விற்க முடிந்தது. புஸ்வாணம் விற்கவில்லை. “கையால் செய்யப்படும் எளிய விளக்குகளை இப்போது யாரும் விரும்புவதில்லை,” என்றார் அவர் தீபாவளிக்கு 1 வாரத்துக்கு முன்பு. அப்போதும் கூட விற்பனை கூடும் என அவர் நம்பிக் கொண்டிருந்தார். “இயந்திரங்களால் செய்யப்பட்ட அலங்கார விளக்குகளையே அவர்கள் (வாங்குபவர்கள்) விரும்புகின்றனர்,” என்கிறார் அவர் சிறு தொழிற்கூடங்களில் அச்சுகளைக் கொண்டு செய்யப்படும் விளக்குகளை குறிப்பிட்டு. கும்மாரி வீதியில் வசிக்கும் முன்னாள் குயவர் குடும்பங்கள் பல, ஒரு விளக்குக்கு 3-4 ரூபாய் ஆகும் இவற்றை வாங்கி, அலங்காரத்தைப் பொறுத்து 5லிருந்து 10 ரூபாய் வரை விற்கின்றன.
போட்டியிருந்தாலும், “எளிய மண்ணாலான விளக்குகள் செய்வது எனக்கு பிடிக்கும். ஏனெனில் என் பேத்திக்கு அவற்றைப் பிடிக்கும்,” என சொல்கையில் பரதேசம் பூரிப்பு கொள்கிறார்.
கும்மாரி வீதியில் இன்னும் இக்கலையில் ஈடுபடும் சில குடும்பங்கள் விநாயகர் சதுர்த்திக்கு சில மாதங்களுக்கு முன்பே ஒரு தரகரிடமிருந்து வருடந்தோறும் களிமண்ணை வாங்கி விடுகிறார்கள். அனைவரும் சேர்ந்து ஐந்து டன் எடைக்கு வாங்குகின்றனர். மண்ணுக்கு 15,000 ரூபாயும் ஆந்திராவின் விஜயநகர மாவட்டத்திலிருந்து கொண்டு வரும் போக்குவரத்துக்கு 10,000 ரூபாயும் செலவழிக்கின்றனர். சரியான பிசுபிசுப்பு கொண்ட களிமண், மண்பாண்டங்கள் மற்றும் சிலைகள் செய்ய மிகவும் முக்கியம்.
பரதேசத்தின் குடும்பம் கிட்டத்தட்ட 1000 கிலோ களிமண் வாங்குகிறது. தீபாவளிக்கு ஒரு வாரம் முன் வரை, அந்தக் மண்ணில் கொஞ்சம் அவரின் வீட்டுக்கு வெளியே பெரிய பைகளில் இருப்பதைக் காண முடியும். அடர் சிவப்பு நிற மண் காய்ந்திருக்கும். கட்டி கட்டியாக இருக்கும். அவர்கள் அதை சரியான அளவுக்கு கொண்டு வர மெதுவாக நீருடன் கலக்கத் தொடங்க வேண்டும். பிறகு அதைக் கலப்பதற்கு மிதிப்பார்கள். அது கடினமாக இருக்கும் என்கிறார் பரதேசம். சில நேரங்களில் சிறு கற்கள் அவருடைய பாதத்தை பதம் பார்ப்பதுமுண்டு.
களிமண் சரியான நிறத்தை அடைந்ததும், காய்ந்த மண் பூசப்பட்ட ஒரு கனமான மரச்சக்கரத்தை மூலையிலிருந்து தூக்கி வந்து பீடத்தில் வைப்பார் அவர். ஒரு காலி பெயிண்ட் டப்பாவில் ஒரு துணியைக் கொண்டு மூடுவார். சக்கரத்துக்கு முன் அமர அதுதான் அவருக்கு இருக்கை.
பரதேசம் கொண்டிருக்கும் சக்கரம், கும்மாரி வீதியிலிருக்கும் பிற குயவர்களின் சக்கரங்களைப் போல, மனிதர்களால் இயக்கப்படுவது ஆகும். மின்சாரத்தில் இயங்கும் சக்கரத்தைப் பற்றி அவர் கேட்டிருக்கிறார். ஆனால் அதை எப்படி இயக்குவது என்பது அவருக்கு தெரியாது. “ஒவ்வொரு பானைக்கும் விளக்குக்கும் வேகம் மாறும்,” எனச் சுட்டிக் காட்டுகிறார் அவர்.
ஈரமான களிமண்ணை சக்கரத்துக்கு நடுவே போட்டுவிட்டு, அவரின் கைகள் மெதுவாகவும் உறுதியாகவும் மண்ணுக்குள் நுழைந்து மெல்ல விளக்குக்கான வடிவத்தை உருவாக்கின. கிட்டத்தட்ட ஒரு மீட்டர் அகல சக்கரம் சுற்றத் தொடங்கியதும் களிமண்ணின் ஈர மணம் காற்றை நிரப்பியது. சக்கரம் தொடர்ந்து சுற்ற, அவர் ஒரு சிறு தடி கொண்டு அவ்வப்போது திருப்பி விடுகிறார். “எனக்கு வயதாகி விட்டது. இதே வேகத்தை எப்போதும் நான் கொண்டிருக்க முடியாது,” என்கிறார் பரதேசம். விளக்கு தனக்கான வடிவத்தைப் பெறத் தொடங்கி உறுதியடையத் தொடங்கியதும், ஒரு நூலைக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் சக்கரத்திலிருந்து விளக்கை அவர் அறுத்து எடுக்கிறார்.
சக்கரத்திலிருந்து விளக்குகளும் புஸ்வாணங்களும் வர வர ஒரு செவ்வக வடிவ மரப்பலகையில் அவற்றை பாதுகாப்பாக அடுக்கி வைக்கிறார் அவர். 3-4 நாட்களுக்கு அவை நிழலில் காய வேண்டும். பிறகு அவை சூளையில் வைத்து இரண்டு நாட்களுக்கு வேக வைக்கப்படும். சூளை 2-3 வாரங்களுக்கு ஒருமுறை ஜூலை முதல் அக்டோபர் காலவெளியில் (விநாயகர் சதுர்த்தி, தசரா மற்றும் தீபாவளி விழாக்களுக்கு) கொளுத்தப்படும். வருடத்தின் பிற காலத்தில் மாதமொரு முறை அது கொளுத்தப்படுவதே அரிது.
கிழக்கிந்திய கடலோரப் பகுதியில் தாமதமாக வந்த பருவ மழை கூட, தீபாவளிக்கான அவரது காத்திருப்பை குறைக்கவோ நிறுத்தவோ இல்லை. மழை பெய்தால் வீட்டுக்குப் பின் இருக்கும் ஒரு தடுப்பறைக்கு சென்று வேலையைத் தொடர்வார். அவரைச் சுற்றி சில கோழிக்குஞ்சுகள் விளையாடுகின்றன. சக்கரம் சுற்றும் வேகத்தில் சில களிமண் துண்டுகள் விழுகின்றன. கைவிடப்பட்ட வீட்டுப் பொருட்கள் சில அங்குக் கிடக்கின்றன.
பரதேசத்தின் மனைவி பைடிதள்ளிக்கு உடல்நலம் சரியில்லை. படுக்கைக்கு அருகேயே இருக்கிறார். இருவருக்கும் நான்கு குழந்தைகள் - இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள். நால்வரில் ஒருவர் இளம்வயதிலேயே இறந்துவிட்டார்.
“விளக்குகள் செய்ய நான் மட்டும் மிஞ்சியிருப்பது வருத்தமளிக்கிறது. என் மகனாவது இக்கலையை தொடர்வான் என நம்பியிருந்தேன்,” என்கிறார் பரதேசம். “சக்கரம் சுற்றுவது எப்படியென என் மகனுக்குக் கற்றுக் கொடுத்தேன். ஆனால் விநாயகர் சிலை மற்றும் விளக்குகள் செய்து வரும் பணம் போதவில்லை. எனவே அவன் ஒரு தனியார் பள்ளியில் பியூனாக வேலை பார்க்கிறான்.” பரதேசம் செய்யும் விளக்குகளின் ஒரு டஜன், 20 ரூபாய்க்கு விலை போகும். ஆனால் யாரேனும் பேரம் பேசினால், அவர் விலையை 10 ரூபாய்க்கு குறைத்து விடுவார். கொஞ்ச நஞ்ச லாபமும் இல்லாமல் போகும்.
“வழக்கமான விளக்குகள் செய்வதிலுள்ள உழைப்பை யாரும் புரிந்து கொள்வதில்லை,” என்கிறார் உப்பாரா கவுரி ஷங்கர். கும்மாரி வீதியில் வசிக்கும் அந்த 65 வயதுக்காரர், பரதேசத்தின் வீட்டிலிருந்து சில வீடுகள் தள்ளி வாழ்கிறார். மொத்த வாழ்க்கைக்கும் அவர்கள் அண்டை வீட்டுக்காரர்களாக இருக்கின்றனர். கவுரி ஷங்கரால் சக்கரத்தை சுற்றவோ தரையில் உட்காரவோ முடியவில்லை. “என்னுடைய முதுகு வலிக்கிறது. எழுந்திருக்க முடிவதில்லை,” என்கிறார் அவர்.
சில வருடங்கள் முன் வரை, குடும்பத்தினர் கையால் விளக்கு செய்ததாக சொல்கிறார் கவுரி ஷங்கர். தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கி விடுவார்களாம். கையால் செய்யப்படுபவைக்கு மலிவாக விலை கொடுக்கப்படுவதால் நிறுத்திவிட்டதாக அவர் சொல்கிறார். அந்த வருமானத்தைக் கொண்டு களிமண் செலவை கூட மீட்க முடியவில்லை.. எனவே இந்த வருடத்தில் இயந்திரத்தால் செய்யப்பட்ட 25,000 விளக்குகளை கவுரி ஷங்கரின் குடும்பம் வாங்கியிருக்கிறது. அவற்றை விற்று லாபமீட்டும் நம்பிக்கையில் அவர்கள் இருக்கின்றனர்.
ஆனால் நண்பர் பரதேசத்துக்கு களிமண்ணை காலால் பிசையும் உதவியை அவர் செய்கிறார். “விளக்குகள் செய்ய இதுதான் முதல் வேலை. இந்த (மிதிக்கிற) வேலைதான், மண்பாண்டச் சக்கரம் சுற்ற அவர் கொண்டிருக்கும் விருப்பத்துக்கான என் பங்களிப்பு,” என்கிறார் அவர். “பரதேசத்துக்கு வயதாகி விட்டது. ஒவ்வொரு வருடமும், அவர் விளக்குகள் செய்யும் கடைசி வருடம் போலவே தோன்றும்,” என்கிறார்.
இக்கட்டுரை ரங் தே மானியத்தின் ஆதரவில் எழுதப்பட்டது.
தமிழில் : ராஜசங்கீதன்