லக்ஷ்மிபாய் கலே ஒவ்வொரு வருட விளைச்சலிலும் ஒரு பகுதியை இழக்கிறார். அதீத மழையினாலோ பஞ்சத்தினாலோ அல்ல. “எங்களின் பயிர்கள் அழிக்கப்பட்டன,” என்கிறார் 60 வயது லஷ்மிபாய். “நிலத்தில் விலங்குகள் மேய ஊர் பஞ்சாயத்து அனுமதிக்கிறது. நாங்கள் அடைந்த நஷ்டத்துக்கு கணக்கே இல்லை.”
நாசிக் மாவட்டத்தின் மொகதி கிராமத்தை சேர்ந்த லஷ்மிபாய் மற்றும் அவரின் கணவர் வாமன், ஊரின் பொது மேய்ச்சல் நிலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஐந்து ஏக்கர் நிலத்தில் முப்பது வருடங்களாக விவசாயம் பார்த்து வருகின்றனர். துவரை, கம்பு, நெல் முதலிய பயிர்களை அங்கு வளர்க்கிறார்கள். “ஊர்க்காரர்களின் கால்நடைகளை எங்கள் நிலத்தில் மேயவிடவில்லை எனில் எங்கள் மேல் வழக்கு போடப் போவதாக பஞ்சாயத்து உறுப்பினர்கள் சொல்கிறார்கள்,” என்கிறார் அவர்.
1992ம் ஆண்டிலிருந்து லஷ்மிபாயும் அவர் கிராமத்தை சேர்ந்த பிற விவசாயிகளும் நிலவுரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். “மூன்றாம் தலைமுறையாக இந்த நிலத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறேன், இன்னும் எங்களுக்கு இந்த நிலம் சொந்தமாகவில்லை,” என்கிறார் அவர். “2002ம் ஆண்டில் சத்தியாகிரகப் போராட்டமும் சிறை நிரப்பும் போராட்டமும் நடத்தினோம்.” அதிகமான பெண்களை உள்ளடக்கிய 1500 விவசாயிகள் நாசிக் மத்திய சிறையில் 17 நாட்களை அப்போது கழித்ததாக நினைவுகூர்கிறார்.
நிலவுரிமையின்றி லோகர் என்கிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த லஷ்மிபாய்க்கு பயிர் அழிவில் உதவ எவருமில்லை. “நிலம் எங்கள் பெயரில் இல்லாததால், கடனோ பயிர் காப்பீடோ எங்களுக்கு கிடைப்பதில்லை,” என்கிறார் அவர். நஷ்டங்களை விவசாயக் கூலியாக 16 மணி நேரமெல்லாம் வேலை பார்த்து ஈடு கட்டிக் கொள்கிறார்.
பழங்குடி விவசாயியும் விதவையுமான 55 வயது விஜாபாய் கங்குர்டேவும் இதே போன்ற சூழலில்தான் இருக்கிறார். மொகதியில் இருக்கும் நிலத்தை கொண்டு அவரால் வாழ்ந்துவிட முடியவில்லை. “என் இரண்டு ஏக்கர் நிலத்தில் எட்டு மணி நேரம் வேலை பார்த்துவிட்டு, அடுத்த எட்டு மணி நேரம் வேறோருவர் நிலத்தில் விவசாயக் கூலியாக வேலை பார்க்கிறேன்,” என்கிறார் விஜாபாய். அவரின் நாட்கள் இரண்டு எட்டு மணி நேர வேலைதினங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. காலை 7 மணிக்கே வேலையை துவங்கி விடுவார்.
“ஆனால் யாரிடமும் நான் கடன் வாங்கியதில்லை,” என்கிறார். “100 ரூபாய்க்கு பத்து ரூபாய் வட்டி கேட்கிறார்கள். அதுவும் மாதக்கடைசியிலேயே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.”லஷ்மிபாயும் கடன்காரர்களிடமிருந்து தூர விலகியே இருக்கிறார். “பக்கத்து ஊர்களில் விதவைகளை கடன்காரர்கள் அச்சுறுத்தியிருக்கிறார்கள்,” என்கிறார் அவர்.மொகதி கிராமத்து பெண்களுக்கு பணம் பெரும் சிரமமாக இருக்கிறது. அவர்களின் ஊதியமும் ஆண்களை விட குறைவே. ஆண்கள் எட்டு மணி நேர வேலைக்கு 250 ரூபாய் ஊதியம் வாங்குகின்றனர். பெண்கள் 150 ரூபாய் வாங்குகின்றனர். “இப்போதும் அதிகமாக உழைக்கும் பெண்கள் ஆண்களை விட குறைவான ஊதியத்தையே பெறுகின்றனர். இந்த (புதிய வேளாண்) சட்டங்கள் பெண் விவசாயிகளை அதிகம் பாதிக்கும் என்பது இந்த அரசுக்கு தெரியாதா?” எனக் கேட்கிறார் லஷ்மிபாய்.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்ப்பதற்காக, சம்யுக்த ஷேத்கரி கம்கர் மோர்ச்சா அமைப்பு தெற்கு மும்பையின் ஆசாத் மைதானத்தில் ஜனவரி 24-26 தேதிகளில் ஒருங்கிணைத்திருக்கும் போராட்டத்துக்கு லஷ்மிபாயும் விஜபாயும் வந்திருக்கிறார்கள்.
நாசிக் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களிலிருந்து 15000 விவசாயிகள் ஜீப், ட்ரக் முதலிய பல்வேறு வாகனங்களில் ஜனவரி 23ம் தேதி கிளம்பி அடுத்த நாள் மும்பையை வந்தடைந்திருக்கின்றனர்.விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 , விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று வேளாண் சட்டங்கள் ஆகும்.2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன.
மூன்று சட்டங்களும் தங்களின் வாழ்வாதாரங்களை அழிக்கவும் பெருவணிக நிறுவனங்கள் விவசாயம் மற்றும் விவசாயிகள் மீது பெரும் அதிகாரம் கொள்ளவும் வாய்ப்பு வழங்குவதாக விவசாயிகள் நினைக்கின்றனர். விவசாயிக்கு முக்கிய ஆதாரங்களாக இருக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண்பொருள் சந்தைப்படுத்தும் குழு, அரசு கொள்முதல் ஆகிய விஷயங்களை ஆகியவற்றை இந்த சட்டங்கள் மட்டுப்படுத்துகின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.
தனியாரிலிருந்து கொள்முதல் செய்யும்போது வேளாண்பொருட்களை குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவாக வாங்குவது விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் சேர்த்து பாதிக்கும் என்கிறார் லஷ்மிபாய். “விவசாயிக்கு நல்ல விலை கிடைத்தால்தான், அந்த வருமானம் கொண்டு தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பார்கள்.” மேலும், “இந்த சட்டங்களால் தனியார் நிறுவனங்கள் அதிகமாகி விடும். விலை பேசக் கூட எங்களால் முடியாது,” என்கிறார் அவர்.
ஆசாத் மைதான போராட்ட களத்திலிருக்கும் கொர்ஹாத்தே கிராமத்தின் 38 வயது சுவர்ணா கங்குர்டே இச்சட்டங்களால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என ஒப்புக் கொண்டார். “70-80% விவசாயத்தை பெண்கள்தான் பார்க்கின்றனர்,” என்கிறார் கோலி மகாதேவ் பழங்குடி சமூகத்தை சேர்ந்த சுவர்ணா. “பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தை பாருங்கள். ஒரு பணமும் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு போடப்படாது.” யோஜனா திட்டத்தின்படி விளிம்புநிலை விவசாயி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்குக்கும் 6000 ரூபாய் வருடந்தோறும் வருமான உதவியாக போடப்படுகிறது.
சுவர்ணாவை பொறுத்தவரை கொர்ஹாதே கிராமத்திலுள்ள 64 பழங்குடி குடும்பங்களில் 55 குடும்பங்களுக்கு 7/12 ஆவணம் வன உரிமை சட்டப்படி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த ஆவணங்களில் புறம்போக்கு நிலம் என குறிக்கப்பட்டிருக்கிறது. “மூன்று தலைமுறையாக இந்த நிலத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதை எப்படி அவர்கள் புறம்போக்கு நிலம் என சொல்லமுடியும்?” எனக் கேட்கிறார் அவர்.
தக்காளி, நிலக்கடலை, கறிவேப்பிலை, கீரை முதலியவற்றை ஐந்து ஏக்கர் நிலத்தில் விளைவிக்கிறார் சுவர்ணா. இரண்டு ஏக்கர்தான் அவருக்கு சொந்தமாக இருக்கிறது எனினும் மிச்ச்த்துக்கும் அவர்தான் உரிமையாளர். “எங்களை முட்டாள்களாக்கிவிட்டார்கள்,” என்கிறார் அவர்.
அவரவர் பெயர்களில் நிலவுரிமை கொடுக்கப்படாமல் கொர்ஹாதே பழங்குடி விவசாயிகளுக்கு 7/12 ஆவணம் வழங்கப்பட்டிருக்கிறது. “புறம்போக்கு நிலம் என்கிற குறிப்பால் எங்களால் பயிர்க்கடன் பெற முடியாது. கிணறு தோண்ட முடியாது. அதனால் மழை நீரையும் எங்களால் சேமிக்க முடியவில்லை. ஒரு குளம் கூட எங்களால் தோண்ட முடியாது,” என்கிறார் சுவர்ணா.
கொர்ஹாதேவிலிருந்து 50 விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்குபெற மும்பைக்கு வந்திருக்கின்றனர். அவர்களில் 35 பேர் பெண்கள்.
போராடும் விவசாயிகள் ஜனவரி 25 அன்று மகாராஷ்ட்ராவின் ஆளுநர் வசிக்கும் ராஜ் பவனுக்கு செல்ல தீர்மானித்திருக்கிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல், நிலவுரிமை மற்றும் 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு தொழிலாளர் விதிகள் ரத்து ஆகிய கோரிக்கைகள் பட்டியலை சமர்ப்பிக்கவும் செல்லவிருக்கின்றனர்.ராஜ் பவனுக்கு செல்லும் ஊர்வலம் தொடங்குவதற்கு முன் அகமது நகரை சேர்ந்த 45 வயது பில் பழங்குடி விவசாயி மஞ்சள் நிற படிவங்கள் சிலவற்றை தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தார். மைதானத்துக்கு போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்த அகில இந்திய விவசாயிகள் சங்கம் வடிவமைத்த அப்படிவங்களில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளின் பட்டியல் இருந்தது. அப்பட்டியலில் ‘நான் விவசாயம் பார்க்கும் நிலத்துக்கான 7/12 ஆவணம் எனக்கு வழங்கப்படவில்லை’; ‘நிலத்தின் ஒரு பகுதி மட்டும்தான் எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது’; ‘நிலவுரிமை வழங்குவதற்கு பதிலாக அதிகாரிகள் நிலத்தை காலி செய்ய சொல்கின்றனர்’, முதலிய பிரச்சினைகள் இடம்பெற்றிருந்தன.
ஒவ்வொரு விவசாயியும் சந்திக்கும் பிரச்சினைகளை அப்பட்டியலில் தேர்ந்தெடுக்க வேண்டும். நிரப்பப்பட்ட படிவங்கள் கோரிக்கைகளோடு ஆளுநரிடம் கொடுக்கப்படவிருக்கின்றன. ஷிந்தோடி கிராமத்தை சேர்ந்த எல்லா பெண் விவசாயிகளும் சரியாக படிவத்தை நிரப்பிவிட்டனரா என்பதை மதுரா பாய் சரி பார்த்துக் கொண்டிருந்தார். எழுதி வைத்திருந்த விவசாயிகளின் பெயர்களை கொண்டு ஒவ்வொருவரும் அவரவர் தகவலை சரியாக எழுதியிருக்கின்றனரா என்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரின் கிராமத்தில் 7.5 ஏக்கர் நிலத்தில் மதுராபாய் விவசாயம் பார்க்கிறார். தனியார் வணிகர்களுடனான அவருடைய சமீபத்திய அனுபவம் புதிய சட்டங்களை எதிர்த்து அவரை போராட வைத்திருக்கிறது. 2020-2021ம் ஆண்டில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு குவிண்டால் கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலை 1925 ரூபாய்க்கு பதிலாக வணிகர்கள் வெறும் 900 ரூபாயை அவருக்கு கொடுத்திருக்கின்றனர். “அதே கோதுமையை எங்களுக்கு சந்தையில் அவர்கள் மும்மடங்கு விலையில் விற்கின்றனர். நாங்கள்தான் அதை விளைவிக்கிறோம். எங்களையே அதிக விலையை கொடுக்க சொல்கிறார்கள்,” என்கிறார் மதுராபாய்.
ஜனவரி 25ம் தேதி ராஜ்பவன் நோக்கி நடக்கவிருந்த ஊர்வலம், மும்பை காவல்துறை அனுமதி தர மறுத்ததால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆளுநரை சந்திக்க முடியவில்லை என்கிற கோபத்தில் மதுராபாய் சொல்கிறார், “நாங்கள் போராடுவதை நிறுத்தப் போவதில்லை. இந்த ஆளுநருக்கும் பிரதமருக்கும் சேர்த்து நாங்கள்தான் அனைவருக்குமான பயிரை விளைவிக்கிறோம்,” என.
தமிழில்: ராஜசங்கீதன்