பெரிய மரங்கள் உடைந்து கீழே விழுவதை பார்த்த எனக்கு, என் குழந்தையை இழந்த உணர்வு ஏற்பட்டது என கூறும் தோட்டக்காரரான மதன் பைதியாவிற்கு 40 வயதாகிறது. தன்னைச் சுற்றி ஏற்பட்டுள்ள பேரழிவைப் பார்த்து அவர் பதற்றமடைந்திருப்பது தெளிவாக தெரிகிறது. “என் வாழ்நாள் முழுதும் இந்த மரங்களோடும் செடிகளோடும்தான் வாழ்ந்து வருகிறேன். இவை வெறும் மரங்கள் மட்டுமல்ல, பல பறவைகளுக்கும் வண்ணத்துப்பூச்சிகளுக்கும் வீடாக இருந்தது. வெயில்காலத்தில் நமக்கு நிழலாகவும் மழைகாலத்தில் குடையாகவும் இருக்கிறது” என விளக்கம் தருகிறார். கொல்கத்தாவின் கிழக்கு பைபாஸ் அருகிலுள்ள ஷாகித் ஸ்மிருதி காலனியில் – இங்குதான் அவர் வசிக்கிறார் - இருக்கும் பைதியாவிற்குச் சொந்தமான நர்சரி கடுமையாக சேதமடைந்துள்ளது.
மே 20 அன்று அம்பல் புயல் காரணமாக நகரில் 5000 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாக கணக்கிட்டுள்ளது கொல்கத்தா மாநகராட்சி. மிக தீவிர சூறாவளிப் புயல் என வகைப்படுத்தப்பட்ட அம்பன், 140-150கிமீ வேக காற்றுடன் மேற்கு வங்காள கடற்கரைப் பகுதியில் கரையை கடந்தது. இந்த புயலால் 24 மணி நேரத்தில் 236மிமீ மழை பெய்துள்ளதாக அலிபோரில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கிராமப்புறங்களில் அம்பன் ஏற்படுத்திய சேதாரம், குறிப்பாக சுந்தரவனப் பகுதிகளில் கணக்கிட முடியாத அளவிற்கு உள்ளது. கொல்கத்தா உள்ளிட்ட வடக்கு மற்றும் தெற்கு 24 பராக்னாஸ் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள்ன. கொல்கத்தாவில் 19 பேர் உள்பட மாநிலம் முழுவ்டஹும் இதுவரை 80 பேர் வரை இறந்துள்ளனர்.
பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன, கோவிட்-19 ஊரடங்கு கட்டுப்பாடுகளோடு சேர்ந்து போக்குவரத்து வசதிகளும் சாலை இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால், இந்தப் பகுதிகளுக்குச் செல்வது முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கினால் ஏற்படும் சிக்கல்கள் அதைவிட அதிகமாக உள்ளது. வழக்கமாக இந்த பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக மேற்கு வங்காளத்திலிருந்தும் மற்ற மாநிலங்களிலிருந்தும் தங்கள் கிராமங்களுக்கு சென்றுவிட்டதால், மீட்பு நடவடிக்கைகள் கடினமாக மாறியுள்ளது.
அடுத்த நாள் காலை கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லூரி சாலையில் – இங்கு பல கல்லூரிகளும் கல்வி நிலையங்களும் இருப்பதால் இந்தப் பெயர் வந்துள்ளது - விழுந்து கிடக்கும் மரங்களுக்கு அருகிலேயே ஆயிரக்கணக்கான புத்தகங்களும் தாள்களும் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றன. போய் பாரா என்றும் அறியப்படும் இந்தப் பகுதியில்தான் 1.5கிமீ நீண்டுள்ள இந்தியாவின் பெரிய புத்தகச் சந்தை உள்ளது. வழக்கமாக, நெருக்கடி மிகுந்த இந்த புத்தககடைகளின் ஒருபுறம் சுவர்களால் அடைக்கப்பட்டிருக்கும். தற்போது சுவர்கள் தெளிவாக தெரிகின்றன, பல கடுமையாக சிதிலமடைந்துள்ளன. இந்த புயலால் 50-60 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் அழிந்துபோனதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.
பல சிறிய கடைகளும் தகர கொட்டகைகளும் தெருக்களில் சிதறி கிடக்கின்றன, எண்ணற்ற வீடுகள் சேதமடைந்துள்ளன,தொலைதொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன, வெள்ளக்காடாக இருக்கும் தெருக்களில் மின்சார கம்பங்கள் விழுந்து கிடக்கின்றன. இதனால் பலர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளனர். இன்னும், சில பகுதிகள் இருளில் இருப்பதால், மின்சாரம் வேண்டியும் தண்ணீர் விநியோகிக்கவும் குடியிருப்புவாசிகள் போராட்டம் செய்து வருகிறார்கள்.
நேற்று மாலைதான் மொபைல் தொடர்பு கிடைத்துள்ளது. போனை சார்ஜ் செய்ய முடியாவிட்டால் இதை வைத்து நாங்கள் என்ன செய்வது? அன்றைய நாள் மழைநீரை சேமித்து வைத்திருந்தோம். அந்த தண்ணீரைதான் இப்போது சூடாக்கி குடித்து கொண்டிருக்கிறோம். எங்கள் பகுதியில் உள்ள அனைத்து தண்ணீர் குழாய்களும் அசுத்தமாகிவிட்டன” எங்கிறார் சோமா தாஸ். 35 வயதாகும் இவர் தெற்கு கொல்கத்தாவின் நரேந்திரபூர் பகுதியைச் சேர்ந்தவர்.
கொத்தனராக இருக்கும் அவரது கனவர் சத்யஜித் மோண்டல், 38, கோவிட்-19 ஊரடங்கு காரணமாக வேலையின்றி இருக்கிறார். இதனால் வருமானத்திற்கு எந்த வழியும் இல்லாததால், தனது 14 வயது மகளுக்கும் பலகீனமான தாயாருக்கும் எப்படி உணவளிப்பேன் என வேதனையில் இருக்கிறார் சோமா. சமையலராக அவர் பணியாற்றும் நான்கு வீடுகளில், இரண்டு வீட்டில் மட்டுமே இந்த ஊரடங்கு சமயத்தில் சம்பளம் வழங்கியுள்ளனர்.
ஷாகித் ஸ்மிருதி காலனியில் கீழே விழுந்த மரங்களை கணக்கெடுத்துக் கொண்டிருந்த பைதியா கூறுகையில், “இது எங்கள் தவறுதான். நகரில் எங்குமே ,மணலே இல்லை. எல்லாம் கான்கிரீட். பின்பு எப்படி வேர்கள் உயிர் பிழைக்கும்?”
தமிழில்: வி. கோபி மாவடிராஜா