புனே நகரில் உள்ள கோத்ருட் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள லட்சுமி நகர் காலனியில் வசிப்பவர் அபோலி காம்ப்ளே.  அவர் கூறுகையில், "நாங்கள் அனைவரும் வீட்டு வேலைகள் செய்வதன் மூலமே வயிற்றை நிரப்புகிறோம். ஆனால் இப்போது எந்த வேலையும் இல்லை; ஆகவே, எங்கிருந்து எங்களுக்கு பணம் கிடைக்கும்? . ரேஷன் பொருள்கள் எதுவும் இல்லை. உணவு கிடைக்கவில்லை என்றால், குழந்தைகள் எப்படி வாழ்வார்கள்? ” என்று கேட்கிறார்.

கோவிட் -19 ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு, மார்ச் 30 அன்று அவர் வசிக்கும் குப்பத்து காலனிக்கு நான் சென்றப்போது, அபோலியின் கோபமும் விரக்தியும் அவரது குரலில் தெளிவாகத் தெரிந்தன. “குறைந்தபட்சம் இதுபோன்ற சமயங்களில் எங்களுக்கு உணவு தானியங்கள் ரேஷன் கடையில் கிடைக்க வேண்டும், ” 23 வயதாகும் அவர் இப்படி கூறுகிறார். “பெண்கள் அனைவரும் வீட்டில் இருக்கிறார்கள். நாங்கள் வெளியே செல்ல காவல்துறை அனுமதிப்பதில்லை. நாங்கள் வெளியே சென்று வேலை செய்ய முடியாவிட்டால், எங்களுக்கான உணவு பொருள்களை நாங்கள் வாங்க முடியாது. எங்கள் குடும்பத்தை  எப்படி நடந்துவது என்பது குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். இவ்வளவு கடினமான நேரத்தில்கூட எங்களுக்கு உணவு தானியங்கள் கிடைக்கவில்லை என்றால், என்ன பயன்? எங்களுக்கு ரேஷன் கிடைக்கவில்லை என்றால், நாங்கள் தூக்கிட்டு கொள்ளவேண்டுமா? ” அபோலியின் குடும்பம் 1995ம் ஆண்டு சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள அகோலேகடி கிராமத்திலிருந்து புனே நகரத்திற்கு குடிபெயர்ந்தது. ஏப்ரல் 16ம் தேதி அபோலி திருமணம் செய்து கொள்ளவிருந்தார், ஆனால் அவரது திருமணம் இப்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏழு குடியிருப்புகளில் (தன்னார்வல அமைப்புகள் நடத்திய கணக்கெடுப்பின்படி) கிட்டதட்ட 850 பேர் வசிக்கும் அந்த காலனிக்கு நான் சென்றிருந்தபோது, அங்குள்ள பெண்கள் உணவு மற்றும் பணப் பற்றாக்குறைக்கு தீர்வு காண ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர் - அவர்களில் பலர் வீட்டுப் பணியாளர்கள் . லட்சுமி நகரிலுள்ள 190 குடும்பங்களில் பெரும்பாலானவை மகாராஷ்டிராவின் அகமதுநகர், பீட், சோலாப்பூர் மற்றும் லாத்தூர் மாவட்டங்களிலிருந்தும், பக்கத்து மாநிலமான கர்நாடகாவிலிருந்தும் குடியேறியவர்கள்.  அவர்களில் பலர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மாதாங் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவின் புத்தாண்டு நாளான குடி பத்வாவுக்கு முந்தைய இரவு, பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் ஊரடங்கு அறிவித்தபோது, அத்தியாவசிய பொருட்கள் அடுத்த நாள் கிடைக்குமா என்பது பற்றின தெளிவான அறிவிப்பு இல்லை.  திறந்திருக்கும் கடைகளிலிருந்து தங்களால் இயன்றதை வாங்க மக்கள் துடித்தனர் - ஆனால் அதற்குள்ளாகவே விலைகள் உயர்ந்துள்ளன.

பின்னர், உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கப் பெறும் என்றும், வறுமைக் கோட்டுக்கு (பிபிஎல்) கீழே உள்ள குடும்பங்களுக்கு கூடுதலாக பொது விநியோக முறையிலிருந்து (பி.டி.எஸ்) மூன்று மாதங்கள் இலவச ரேஷன் பொருள்கள்  அளிக்கப்படும் எனவும் அரசு அறிவித்தது.

லட்சுமி நகரில் உள்ள குடும்பங்கள் இலவச ரேஷன் பொருள்களை பெறுவார்கள் என்று நம்பவில்லை. இதற்குமுன்பும்   அவர்களுக்கு சரியாக கிடைத்ததில்லை

காண்க வீடியோ: உணவு இல்லாமல், மக்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா?

லட்சுமி நகரில் உள்ள பல குடும்பங்கள் தங்களுக்கு அரசு அறிவித்தப்படி இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று  நம்பவில்லை;ஏனெனில் இதற்கு முன்பும்கூட அவர்களுக்கு தொடர்ந்து ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை. "மஞ்சள் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்குகூட அவை கிடைக்கவில்லை" என்று பிபிஎல் குடும்பங்களுக்கு அரசு வழங்கிய ரேஷன் கார்டைக் குறிப்பிட்டு அங்குள்ள ஒரு பெண் கூறுகிறார்.

ரேஷன் கார்டு இருந்தபோதிலும், இவர்கள் பி.டி.எஸ் கடைகளிலிருந்து மானிய விலையில் உணவு தானியங்களைப் பெறுவதற்கு பல தடைகள் உள்ளன. “என்னிடம் ஓர் அட்டை இருக்கிறது. ஆனால் கடைக்காரர் என் பெயர் அதில் இல்லை என்று கூறுகிறார். எனக்கு இந்த நாள்வரை ரேஷன் பொருள்கள் கிடைத்ததில்லை”, கணவர் இறந்த பிறகு மும்பையில் இருந்து புனேவுக்கு குடிபெயர்ந்த சுனிதா ஷிண்டே கூறுகிறார்.

அவர்களில் ஒரு பெண் தனது ரேஷன் கார்டை எனக்குக் காட்டினார். அதில் மானிய விலையில் அரிசி மற்றும் கோதுமையைப் பெற தகுதியுடையவர் என்பதை நிரூபிக்க முத்திரையிடப்பட்டிருந்தது. “ஆனால் கடைக்காரர் எனது அட்டைக்கான ரேஷன் நிறுத்தப்பட்டதாக கூறுகிறார். இரண்டு வருடங்களாக எங்களுக்கு ரேஷன் கிடைக்கவில்லை, ”என்று அவர் கூறினார். வயதான பெண்மணியான மற்றொருவர் கூறுகையில், “எனக்கு ரேஷன் கிடைக்காது, ஏனென்றால் என்னுடைய விரல் ரேகை அவர்களிடம் உள்ள கருவியில் [ஆதார் பயோமெட்ரிக்ஸ்] பொருத்தவில்லை.”

ரேஷன், வேலை மற்றும் ஊதியம் இல்லாமல், லட்சுமி நகரின் பெண்களும், அவர்களின் குடும்பங்களும் கஷ்டப்படுகின்றனர். கைம்பெண்ணாக நந்தா ஷிண்டே கூறுகையில், “நான் இதற்கு முன்பு பணிபுரிந்தேன், ஆனால் இப்போது அது கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே உணவு பெறுவது பெரிய பிரச்சினையாகிவிட்டது. நான் அங்கு செல்லும் போது கடைக்காரர் எனது ரேஷன் கார்டை தூக்கி எறிந்து விடுகிறார். ” என்கிறார். ஒரு உணவகத்தில் பாத்திரங்களை கழுவும் நந்தா வாக்மரே பேசுகையில், “நான் இப்போது எதுவும் செய்யவில்லை. நான் எனது ரேஷன் கார்டுடன் கடைகளுக்குச் செல்கிறேன், ஆனால் அவர்கள் என்னை எங்காவது தொலைந்து போ என்கின்றார்கள் ” என்கிறார்.

Left: Laxmi Nagar colony in Kothurd. Right: A ration shop in the area, where subsidised food grains are purchased
PHOTO • Jitendra Maid
Left: Laxmi Nagar colony in Kothurd. Right: A ration shop in the area, where subsidised food grains are purchased
PHOTO • Jitendra Maid

இடது: கோத்துர்டில் உள்ள லட்சுமி நகர் காலனி. வலது: இப்பகுதியில் ஒரு ரேஷன் கடை, அங்கு மானிய விலையில் உணவு தானியங்கள் வாங்கப்படுகின்றன.

ஒரு குடும்பத்துக்கு ரேஷன் கார்டுகூட இல்லாதபோது - காலனியில் இதுபோன்ற 12 குடும்பங்கள் இருக்கின்றன - அவர்கள் உணவு தேடுவது இன்னும் கடினமாகிவிடுகிறது. அவர்களுக்கு ரேஷன்களை வாங்குவதற்கான வழி இல்லை - அரசாங்கத்தின் நிவாரண நிதியின்கீழ் கொடுக்கப்பட்டும் இலவச உணவு தானியங்கள்கூட வழங்கப்படுவதில்லை. “எல்லோருக்கும் உணவு தானியங்கள் கிடைக்கும் என்று மோடி அறிவித்தார். ஆனால் எங்களிடம் ரேஷன் கார்டு இல்லை, பிறகு நாங்கள்  அதை எப்படி பெறுவோம்? ”என்று கேட்கிறார் ராதா காம்ப்ளே.

பி.டி.எஸ் கடைகளிலிருந்து உணவுப்பொருட்களை வாங்கக்கூடியவர்களுக்கு, அவர்கள் வாங்கக்கூடிய அளவு பெரும்பாலும் போதுமானதாக இல்லை. "நாங்கள் நான்கு பேர் கொண்ட குடும்பம். எங்களுக்கு ஐந்து கிலோ கோதுமையும், நான்கு கிலோ அரிசியும் கிடைக்கின்றன. இது எங்களுக்கு போதாது. ஒவ்வொரு மாதமும் 10 கிலோ கோதுமையும் 10 கிலோ அரிசியும் பெற வேண்டும். ரேஷன் போதாது என்பதால், நாங்கள் சந்தையில் இருந்து அதிக விலைக்கு வாங்குகிறோம், ”என்றார் லட்சுமி பண்டரே.

அருகிலுள்ள சாஸ்திரி நகரில் இருக்கும் ஒரு நியாய விலை கடை உரிமையாளர் யோகேஷ் படோலே என்னிடம் பேசுகையில், “நான்  இப்போது  ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு நபருக்கு மூன்று கிலோ கோதுமையும் இரண்டு கிலோ அரிசியும் அளிக்கிறேன் , . மூன்று மாதங்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்ட உணவு தானியங்களை நாங்கள் இதுவரை பெறவில்லை. ” என்கிறார்.  உள்ளூர் மாநகராட்சியிடமிருந்து வந்த ஒரு குறுஞ்செய்தி, ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் வார்டில் உணவு தானியங்களை விநியோகிப்பதாக உறுதியளித்தது. ஆனால்,லட்சுமி நகரின் வசிப்பவர்களுக்கு  அவ்வளவு உறுதியாக சொல்லவில்லை. அந்த குறுஞ்செய்தியைக் காட்டிவாறே, ஒருவர் ஆச்சரியமாக கூறுகிறார் -  “அதுவரை மக்கள் எப்படி வாழ முடியும்? அப்போது வரை அவர்களின் அலைப்பேசியில் பேசுவதற்கு அதில் காசாவது இருக்குமா?”.

அவர்களின் வீடுகள் சிறியவை, நெரிசலானவை.. சில வீடுகளில் சமையலறை கூட இல்லை

காண்க வீடியோ:  3 மாதங்களாக சம்பளமில்லை, நாங்கள் எதை சாப்பிடுவது?

லட்சுமி நகரை ஒட்டியுள்ள லோக்மண்யா காலனியில், 810 குடும்பங்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் ரேஷன் கார்டு வைத்திருந்தாலும் தங்களுக்கு ரேஷன் கிடைக்காது என்று அவர்கள் கூறுகின்றனர். காலனியில் உள்ள 3,000 மக்களில் பெரும்பாலோர் துப்புரவுத் தொழிலாளர்கள், குப்பைச் சேகரிப்பாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் போன்ற பணிகள் செய்து சம்பாதிப்பவர்கள்.

அவர்களின் வீடுகள் சிறியவை, நெரிசலானவை. அங்கு உணவு தானியங்களை சேமிக்க இடமில்லை. அவர்களில் சிலரின் வீடுகளில்சமையலறைகூட இல்லை, எனவே அவர்கள் உணவகங்கள், சிற்றுண்டி கடைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள மற்ற குடும்பங்கள் அளிக்கும் மீந்துவிட்ட உணவுகளைத்தான் நம்பி இருக்கின்றனர். தினமும் வேலைக்கு செல்பவர்கள் திரும்பி வரும்போது, வீடுகளுக்கு வெளியே திறந்தவெளியில் அமர்ந்திருப்பார்கள். பாதுகாப்பு முக கவசங்கள் அவர்கள் வாங்க முடியாத ஒரு ஆடம்பரப் பொருள்களாகும்.  புனே மாநகராட்சியில் (பி.எம்.சி) பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சிலருக்கு, அரசு சாரா நிறுவனம் முக கவசங்களை வழங்கியது. அவர்கள் அதனை துவைத்து, மீண்டும் பயன்படுத்துக்கின்றனர்.

நகரின் வார்ஜே, திலக் சாலை மற்றும் ஹடப்சர் பகுதிகளில் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட பி.எம்.சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று வைஜிநாத் கெயிக்வாட் கூறுகிறார். அவர் மாநகராட்சியில் மேற்பார்வையாளரும் )  மகாபாலிகா கம்கர் ஒன்றியத்தின் உறுப்பினரும் ஆவார். அவர்கள் பணம் பெறுவதற்கான வாய்ப்புகள் இப்போது இருண்டு கிடக்கிறது என்று கூறுகிறார்.

பி.எம்.சியின் சுகாதாரம் மற்றும் துப்பரவுத் துறையில் பணியாற்றும்  ஒரு ஒப்பந்த ஊழியர்  (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) அவரது குடும்பத்தின் சமையலறையில் உள்ள காலியான உணவு பாத்திரங்களை எனக்குக் காட்டினார் (வீடியோவைப் பார்க்கவும்). "நாங்கள் எங்கள் சேமிப்புகளை எல்லாம் செலவழித்துவிட்டோம். மாநகராட்சி எங்களுக்கு செலுத்தப்படாத நிலுவையிலுள்ள பணத்தை வழங்காவிட்டால் நாங்கள் இனி பிழைக்கமுடியாது" என்று அவர் கூறினார். "நாங்கள் வீட்டில் சும்மா உட்கார வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, பட்டினியால் இறக்கப்போகிறோம்."

தமிழில்: ஷோபனா ரூபகுமார்

Jitendra Maid

जितेंद्र मैड एक स्वतंत्र पत्रकार हैं और वाचिक परंपराओं पर शोध करते रहे हैं. उन्होंने कुछ साल पहले पुणे के सेंटर फ़ॉर कोऑपरेटिव रिसर्च इन सोशल साइंसेज़ में गी पॉइटवां और हेमा राइरकर के साथ रिसर्च कोऑर्डिनेटर के तौर पर काम किया था.

की अन्य स्टोरी Jitendra Maid
Translator : Shobana Rupakumar

Shobana Rupakumar is a Chennai based journalist and she has worked on women and environmental issues.

की अन्य स्टोरी Shobana Rupakumar