இந்த ஊரடங்குக்கு தயாராக தனக்கு ஏன் கால அவகாசம் அளிக்கப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ளமுடியாமல் தவிக்கிறார் முகமது கோகன். நகரின் நகராட்சி நிறுவனமான ப்ருகத் பெங்களூரு மகாநகர பாலிகேவின் தூய்மை பணியாளர் இப்படி கூறுகிறார் - ”இது ஒரு நீண்ட சிறைவாசம் எனத் தெரிந்திருந்தால், தான் உணவு வாங்க சிறிது பணத்தை ஒதுக்கி வைத்திருக்க முடியும் என்று!
முகமதுக்கு வீடு வெகு தொலைவில் உள்ளது - தெற்கு டெல்லியின் ஓரம் உள்ள ‘நகர்ப்புற’ கிராமமான ஜசோலாவில். பெங்களூரில், நகரின் வடக்கே உள்ள அம்ருத்தஹள்ளி பகுதியில் அவர் பணிபுரியும் குப்பை பகுதிக்கு அருகே வசிக்கிறார். ”ஊரடங்குப் பற்றி எங்களுக்கு முன்பே தெரிந்திருந்தால், நான் என்னிடம் கொஞ்சம் பணத்தைச் சேமித்து வைத்திருப்பேன். எனது ஒப்பந்தக்காரரை அணுகி எனது கஷ்டங்களை விளக்கிக் கூறி, அவரிடம் கொஞ்சம் பணம் கேட்டிருக்கலாம், ”என்று கூறுகிறார்.
இப்போது வருமானமும் இல்லாமல், உணவும் இல்லாமல், தன்னார்வ அமைப்புகளால் அளிக்கப்படும் உணவுப் பொட்டலங்களைத்தான் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் சாப்பிடுவதாக முகமது கூறுகிறார். "இது எங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய பிரச்சினையாகிவிட்டது, ஏனெனில் ஊரடங்கு திடீரென்று தொடங்கியது," என்று அவர் கூறுகிறார்.
நகரம் முழுவதும், தெற்கு பெங்களூரில், ஊரடங்கு உத்தரவு மிகக் குறைந்த காலத்தில் அறிவிக்கப்பட்டது என்று சுந்தர் ராமசாமி ஒப்புக்கொள்கிறார். "நாங்கள் இதற்குத் தயாராக இருந்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கான உணவை நாங்கள் சேமித்து வைத்திருக்க முடியும். உணவு இல்லாமல் நாங்கள் எப்படி வீட்டுக்குள் இருக்க முடியும்? ” என்று கேட்டிகிறார் சுந்தர். 40 வயதாகும் அவர், ஒரு வணிக ஓவியராக இருக்கிறார்.முகமது கோகனுக்கு வீடு வெகு தொலைவில் உள்ளது பெங்களூரில், அவர் பணிபுரியும் குப்பை பகுதியில் வசிக்கிறார்
பனஷங்கரி பகுதியில் உள்ள பத்மநாபநகரின் தலித் சங்கர்ஷா சமிதியின் தலைவராகவும் சுந்தர் உள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் பணிபுரியும் ஓர் ஆர்வலராக சுந்தர், இதற்கு முன்பு இதுபோன்ற ஒரு பிரச்சினையை தான் சந்தித்ததில்லை என்றும், சிலர் இப்போது ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிடுகிறார்கள் எனவும் கூறுகிறார்.
பனஷங்கரியின் யராப் நகர் காலனியில், சுமார் 300 குடும்பங்கள், கிட்டத்தட்ட தினக்கூலியில் சம்பாதிப்பவர்கள் என்று சுந்தர் கூறுகிறார். உணவைப் பெறுவதற்கு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவில்லை என்றும், காவல்துறையினர் அவர்களை அடிப்பார் என அஞ்சுவதாகவும் அவர் கூறுகிறார். ஆனால், அந்த பகுதியில் தன்னார்வ குழுக்களுடன் ஒருங்கிணைந்து உணவு பொட்டலங்களை வழங்கும் சுந்தர், அவர்களுக்கு வேறு வழியில் இல்லை”, என்று கூறுகிறார். "உணவு இல்லாதபோது, அவர்கள் என்ன செய்வார்கள்? வீதிகளுக்குத்தான் வருவார்கள், ”என்று அவர் கூறுகிறார்.
யராப் நகரில் உள்ள குடும்பங்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று கூறுகிறார் சுந்தர். "நாங்கள் வீதிகளுக்கு செல்லாவிட்டால், மக்கள் எங்களுக்கு உதவ, அல்லது உணவு கொடுக்க வருவதை, நாங்கள் எப்படி அறிந்துக்கொள்வோம்? சமூக இடைவெளியுடன் இதை செய்வது கடினம். உணவைப் பெறுவதற்கு நாங்கள் அங்கு இருக்க வேண்டும், இல்லையென்றால் தனக்கு கிடைக்காமல் போகுமோ என்று மக்கள் கவலைக்கொள்வார்கள். "
ஊரடங்குப் பற்றி முன்கூட்டிய தகவல்கள் தெரிந்திருந்தால், சந்தன் பிரஜாபதியும் மஞ்சய் பிரஜாபதியும் உத்தரபிரதேசத்தில் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தங்கள் வீட்டுக்கு சென்றிருப்பார்கள். அவர்கள் இருவரும் வடக்கு பெங்களூரில் தச்சர்களாக வேலை செய்கின்றனர். சேவைகள் நிறுத்தப்படுவதற்கு முன்னர், அவர்கள் வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும். மூன்று வருடங்களுக்கு முன்பு பெங்களூருக்கு குடிபெயர்ந்த மஞ்சய் கூறுகையில், "குறைந்தபட்சம் நாங்கள் எங்கள் விளைநிலங்களில் வேலை செய்து உணவு உண்டிருப்போம்.”
சந்தன் மற்றும் மஞ்சய் இருவரும் ஊரடங்கு விதிகளை பின்பற்றுகின்றனர். ஆனால் அவர்கள் உணவு குறித்து கவலைப்படுகிறார்கள். "நாங்கள் சேமித்த பணமும் இப்போது தீர்ந்துவிட்டது. எங்கள் ஒப்பந்தக்காரர் எங்கள் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதில்லை, ஆகவே, அவர் எங்களுக்கு உதவ மாட்டார் என்று தெரியும், ”என்று மஞ்சய் கூறுகிறார்.
சந்தன் மற்றும் மஞ்சயின் ரேஷன் கார்டுகள் மஹ்ராஜ்கஞ்சில் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. எனவே பெங்களூரில் மானிய விலையில் உணவு தானியங்களை வாங்க அதனை பயன்படுத்த இயலாது. இன்னும் என்ன நடக்கும் என்ற அச்சத்தில், “இந்த ஊரடங்கு மேலும் நீடிக்கக்கூடும் என்று நாங்கள் கேள்விப்படுக்கிறோம். நாங்கள் கவலைப்படுகிறோம். நாங்கள் எப்படி இப்படியே பிழைப்பது?”, என்கிறார் சந்தன்.
யராப் நகரில், ஒரு உள்ளூர் அமைப்பு ஏற்பாடு செய்த நியாய விலை பொருள்களின் மூட்டையை பெறுவதில் ரேஷன் கார்டுகள் இல்லாத குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று சுந்தர் கூறுகிறார்.
நாங்கள் பிரிந்து செல்லும்போது, சுந்தர் மேலும் கூறுகிறார்: “இங்கு வரும் பெரும்பாலான மக்கள் எங்களுக்கு உணவு கொடுக்கும் போது புகைப்படம் எடுக்கின்றனர். அதைச் செய்யாததற்கு நன்றி. ”
நேர்காணல்களுக்கு உதவிய துப்பரவு தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பாகப் பணியாற்றும் ஹசிரு தலா என்ற அமைப்பிற்கு நிருபர் நன்றி தெரிவிக்க விரும்புகிறார்.
தமிழில்: ஷோபனா ரூபகுமார்