“இந்த வெள்ளை நிற சோயாவை பார்த்தீர்களா?”, என தன் கைகளில் வைத்திருந்ததை காண்பித்தார் அசோக் கட்கல். “வழக்கமாக ஒரு குவிண்டால் ரூ.3000 முதல் 3500 வரை விலை கிடைக்கும், ஆனால் கரும்புள்ளிகள் மற்றும் பூஞ்சை பாதிப்பால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. இம்முறை எந்த வருமானமுன் ஈட்ட முடியாது”, என்றார்.

நவம்பர் 11ம் தியது ரதகள்ளி கிராமத்தில் அமைந்துள்ள தனது வயலில் பாதிக்கப்பட்ட பயிர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார் கடகல். அவர் தனியாகவே அப்பணியை செய்து கொண்டிருந்தார். “எப்படி என்னால் ஒரு பணியாளருக்கு ஊதியம் வழ்ங்க முடியும்”, என தனது நெற்றியில் வழிந்தோடும் வியர்வையை துடைத்தவாறே வினவினார்,

கட்கல் பயிரிட்டிருந்த மூன்று ஏக்கர் நிலமும் அக்டோபர் மாதத்தில் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் நீரில் மூழ்கியிருந்தது. கடந்த மாதம் பெய்த மழையில் அவரது பயிரில் 90% அளவிற்க்கு அழுகியும் போனது. அவரது கிராமம் அமைந்துள்ள நாசிக் மாவட்டம் தின்டோரி தாலுகாவில் அக்டோபர் 1ம் தியதி முதல் 12ம் தியதி வரை 179.2 மிமி மழை பொழிந்தது. வழக்கமாக இக்காலத்தில் சராசரியாக 71 மிமி மழை மட்டுமே பெய்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறன.

பருவமழை துவங்கும் ஜூன் மாதத்தில் ரத்கள்ளியில் மழை குறைவாக இருந்த போதிலும், செப்டம்பர் மாத இறுதியில் அதிகரித்த மழை 51 வயதான அசோக்கிற்க்கு நல்ல விளைச்சலுக்கான நம்பிக்கையை விதைத்தது. ஆனால் எதிர்பாராமல் பெய்த அக்டோபர் மாத மழை அவரது நம்பிக்கையை சிதைத்துவிட்டது. அம்மாத இறுதியிலேயே பயிர் இழப்பை கிராம கணக்கீட்டாளருக்கு தெரிவித்த பின்பும் இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் எவரும் ஆய்வு செய்ய வருகை தரவில்லை.

The soybean crops on Ashok Gatkal’s three acres were submerged for close to two weeks in October
PHOTO • Jyoti
The soybean crops on Ashok Gatkal’s three acres were submerged for close to two weeks in October
PHOTO • Jyoti

அக்டோபர் மாத மழையில் இரண்டு வாரங்களாக நீரில் மூழ்கிப்போன அசோக்கின் மூன்று ஏக்கர் சோயா பயிர்

“அதிகாரிகளின் வருகைக்காக காத்திருந்தால் அடுத்த பயிர்காலத்தையும் இழக்க நேரிடும். அவர்கள் வந்து ஆய்வு செய்யும் வரை என்னால் காத்திருக்க இயலாது. இப்போதே நவம்பர் இரண்டாம் வாரம் கடந்து விடும் தருவாயில் உள்ளது. நிலத்தை கோதுமை பயிர் செய்ய தயார்ப் படுத்த வேண்டும். வயலை தற்போதைய நிலையிலேயே எத்தனை காலம் வைத்திருக்க முடியும்?”, என்றார்.

ஆண்டு தோறும் அக்டோபர் வரை சராசரியாக 15 முதல் 20 குவிண்டால் சோயாவும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 30 குவிண்டால் வரை கோதுமையும்  அறுவடை செய்து வருகிறார் அசோக். விதைகள், உரங்கள், கூலி, டிராக்டர் வாடகை செலவுகள் போக ரூ. 80,000 முதல் ரூ 120,000 வரை வருமானம் ஈட்ட முடிகிறது. 48 வயதான அவரது மனைவி விவசாயத்திற்க்கு உதவுகிறார். திருமணமான அவரது இரு மகன்கள் திண்டோரி தாலுகாவில் கட்டட வேலை செய்கின்றனர்.

“கடந்த ஆண்டு ரக்ஷா பந்தனுக்கு பின் (ஆகஸ்ட் மாதம்) மழைக்காலம் முடிந்து விட்டது. பயிர் விளைச்சலுக்கு தேவையான அளவு தண்ணீர் இல்லாத சூழல் இருந்தது”, என கணிக்க முடியாத நிலையிலிருக்கும் பருவமழையை குறித்து கூறுகிறார். “நீர்வளத்துறைக்கு அணையிலிருந்து நீர் பெற ரூ. 6000/ செலுத்தினேன். ஆனாலும் இம்முறை இரண்டு குவிண்டாலுக்கு மேல் சோயா விளைச்சலோ, ரூ,20,000/ க்கு மேல் வருமானமோ கிடைக்க வாய்ப்பில்லை. இவ்வளவு பெரிய நஷ்டத்தை இப்போது தான் முதல் முறையாக சந்திக்கிறேன்”.

அசோக்கின் நிலத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர்களுக்கு அப்பால் தனது மூன்று ஏக்கர் நிலத்தில் நடவு செய்யப்பட்டிருந்த தக்காளி செடிகளுக்கு பூச்சிக் கொல்லி மருந்து தெளித்துக் கொண்டிருந்தார் துஷார் மாவெல். போரஸ்திவாடி கிராமத்தில் நவம்பர் துவக்கத்திலேயே மழை நீர் வழிந்தோடிவிட்டது.

On Tushar Mawal's tomato farm, the buds and flowers rotted, so there won't be any further crop growth this season
PHOTO • Jyoti
On Tushar Mawal's tomato farm, the buds and flowers rotted, so there won't be any further crop growth this season
PHOTO • Jyoti

துஷார் மாவெலின் தக்காளி செடிகளில் பூக்களும் மொட்டுகளும் அழுகிவிட்ட காரணத்தால் முழு வளர்ச்சி இம்முறை சாத்தியமில்லை

“அழுகிப் போன 20 கிலோ தக்காளியை ஏற்கனவே எறிந்தாகிவிட்டது”, என்றார் இந்த 28 வயது விவசாயி. “செடிகளில் இருந்த பூக்களும் அதிக மழையில் காரணமாக வாடிவிட்டன, இனி அவை மேலும் விளையாது. செடிகளை காப்பாற்றும் நோக்கில் தான் பூச்சிக் கொல்லி மருந்து தெளித்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் ஒரு டன் அளவுக்கு மேல் விளைச்சல் கிடைக்க வாய்ப்பில்லை. சந்தையில் விலையும் குறைவாகவே உள்ளது (கிலோவிற்க்கு ரூ.10 முதல் 11 வரை). இதுவரை ஏற்பட்டுள்ள செலவுகளை இந்த வருவாய் மூலம் ஈடுகட்ட முடியாது. பயிர் இழப்பை ஆய்வு செய்ய அதிகாரிகள் வருவார்கள் என காத்திருக்கிறேன்.”

துஷார் கடந்த ஆண்டு 36 டன் (36,000 கிலோ) தக்காளி அறுவடை செய்தும் கிலோ ரூ.3 என்ற மிகக் குறைந்த விலையால் பெரும் இழப்பை சந்தித்தார். விற்பனை மூலம் ரூ.1.8 லட்சம் கிடைத்ததில் வெறும் ரூ.20,000 முதல் 30,000 வரை மட்டுமே லாபம் கிடைத்தது. அங்கன்வாடி பணியாளரான அவரது 25 வயது மனைவி அஸ்வினி ரூ.2000/ மாத ஊதியம் பெறுகிறார். இந்த வருவாய் மூலம் தங்கள் 10 வயது மகளையும், துஷாரின் பெற்றோரையும் கவனித்துக் கொள்கின்றனர்.

அசோக், துஷார் போன்று நாசிக் மாவட்டம் முழுவதும் 1,926 கிராமங்களில் 317,379 விவசாயிகள் (திண்டோரி தாசில்தார் அலுவலக செய்தி) அறுவடை காலத்தில் பெய்த பெருமழையால் கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். அக்டோபர் 1 முதல் நவம்பர் 12 வரை சராசரி அளவான 80.1 மிமி மழைக்கு பதிலாக 183.1 மிமி மழையை கொங்கன், நாசிக் மாவட்டத்தை உள்ளடக்கிய  மத்திய மகாராட்டிரா பகுதிகள் பெற்றுள்ளன. இந்த அதிக மழை சோயா, நெல், நிலக்கடலை, தக்காளி மற்றும் சோளம் போன்ற பயிர்களின் விளைச்சல் அளவினையும் தரத்தினையும் பெருமளவு பாதித்துள்ளது.

போரஸ்திவாடி கிராமத்தின் அருகில் 52 வயதான சரளா போரஸ்தே மழை நீர் தேங்கியதால் பாதிக்கப்பட்டுள்ள திராட்சை தோட்டத்தை காண்பித்தார். செப்டம்பர் மாதத்தில் தனது மூன்று ஏக்கர் நிலத்தில் திராட்சை மொட்டுகளை சீர் செய்துள்ளார். திராட்சை செடிகள் வளர 110 முதல் 120 நாட்கள் தேவைப்படும். ஆனால் அக்டோபரில் பெய்த கனமழையால் பூஞ்சை காளானால் பாதிப்பு ஏற்பட்டு பூ உருவாதல் பாதித்துவிட்டது. “அக்டோபர் மாதம் தான் பூக்கள் உருவாக உகந்த காலம். வழக்கமாக இம்மாதத்தில் திராட்சை குலைகள் உருவாகி விடும். மூன்று லட்சம் செலவு செய்து இப்போது எந்த பலனுமில்லாமல் போய்விட்டது. பெரும் நஷ்டம் உருவாகிவிட்டது”, என்றார்.

This is a complete loss', says Sarala Boraste at her grape orchard.
PHOTO • Jyoti
What will I earn from these rotten groundnuts', ask Rohini Boraste
PHOTO • Jyoti

இடது: ‘மிகப்பேரும் நஷ்டம் உருவாகிவிட்டது’, தனது திராட்சை தோட்டத்தில் சரளா போரஸ்தே. வலது: ‘இந்த அழுகிப் போன நிலக்கடலையிலிருந்து எனக்கு எந்த வருமானமும் கிடைக்கப் போவதில்லை’, என் கிறார் ரோகிணி போராஸ்தே

காலம் தவறி பெய்த மழையால் 60 லட்சம் விவசாயிகள் பயிர் செய்த 70 லட்சம் ஹெக்டெர் நிலப்பரப்பிலான பயிர்கள் சேதமடைந்ததாக நிதி அமைச்சர் சுதீர் முங்கண்டிவர் நவம்பர் 6ம் தியதி அறிவித்தார். மேலும் 19 லட்சம் ஹெக்டெர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பருத்தியும், 11 லட்சம் ஹெக்டெர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த சோயாவும் முழுமையாக சேதமடைந்ததாகவும் தெரிவித்தார்.

நவம்பர் 3ம் தியதி அப்போதைய முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் ரூ.10,000 கோடி நிவாரணம் அறிவித்ததுடன், காப்பீட்டு நிறுவங்கள் உடனடி நிவாரணம் வழங்குவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் பா.ஜ.க- சிவ சேனா கூட்டணி ஆட்சி அமைக்க தவறியதும், நவம்பர் 12 முதல் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமைந்ததும் இந்த அறிவிப்பு அமுலாவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விவசாயிகளுக்கு சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

“இங்கு எந்த மீட்பரும் இல்லாத சூழலில் இந்த உத்தரவாதங்களால் எந்த பலனும் இல்லை”, என்கிறார் துஷார். “அவர்களது திட்டங்களை அமுல்படுத்தும் முன் கள நிலவரத்தை அறிந்து கொள்வது அவசியம். விவசாயிகள் அதிகமான காப்பீட்டு சந்தாவை செலுத்திவிட்டு நீண்ட நாட்கள் காத்திருப்பிற்க்கு பின் மிகக் குறைவான இழப்பீட்டு தொகையை பெறும் நிலையே தற்போது நிலவுகிறது. அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு எந்த இழப்பீடும் கிடைப்பதில்லை, பின்னர் ஏன் அதிக சந்தா செலுத்த வேண்டும்?” என்றும் வினவுகிறார்.

மிக அருகில் 35 வயதான ரோகிணி போரஸ்தே தனது விளை நிலத்திலிருந்து பயன்படுத்த முடிந்த நிலக்கடலைகளை பிரித்துக் கொண்டிருந்தார். “அவர்கள் (பி.ஜெ.பி- சிவ சேனா) தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இடையில் அகப்பட்டுக்கொண்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளிகளின் நிலை என்ன?. விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் (அரசு) கவலைபடுவதாக தெரியவில்லை”.

ரோகிணியின் இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை செடிகள் அக்டோபரில் பெய்த மழையில் மூழ்கிக் கிடந்தன. “விடாமல் பெய்த மழையால் அழுகிப் போன கடலையால் வருமானம் எதுவும் கிடைக்கப் போவதில்லை. அவர்களிடம் ((பி.ஜெ.பி- சிவ சேனா)) தான் கேட்க வேண்டும்”, என்றார் ஆதங்கத்துடன். அதிகாரிகளின் வருகைக்காக ரோகிணியும் இரண்டு வாரங்கள் காத்திருந்து ஏமாற்றமடைந்து கோதுமை சாகுபடிக்கான பணிகளை தற்போது துவக்கியுள்ளார்.

On Sarala Boraste's farm, labourers taking a break from spraying pesticides on infected grape plants.
PHOTO • Jyoti
Sunil and Uma Wasale are landless farm labourers, whose work has nearly dried up this year
PHOTO • Jyoti

இடது: சரளா போரஸ்தேவின் பாதிக்கப்பட்ட திராட்சைத் தோட்டத்தில் பூச்சி மருந்து தெளித்டு விட்டு ஓய்வெடுக்கும் தொழிலாளர்கள். வலது: நிலமற்ற விவசாய தொழிலாளர்களான சுனில், உமா வாஸ்லே ஆகியோருக்கு இந்த ஆண்டில் வேலை என்பது அரிதாகிப் போனது

திண்டோரி தாலுகா அலுவலகத்திலிருந்து நவம்பர் 9ம் தியதி வரை 90% கணக்கெடுப்பு பணிகள் பூர்த்தியாகிவிட்டதாக தகவல் தெரிவித்தனர். அவர்களது கணக்கெடுப்பின் படி நாசிக் மாவட்டத்தில் 285,469 ஹெக்டரில் 33 சதவிகித மானாவாரி பயிர்கள் சேதமடைந்து விட்டதாக தெரிவிக்கின்றனர். மாவட்டம் முழுமையும் கணக்கெடுப்பு முடிந்த பின்னர் மட்டுமே ஒவ்வொரு விவசாயிகளுக்கு கிடைக்கும் இழப்பீட்டு தொகை எவ்வளவு என்பது தெரிய வரும்.

மழையின் பாதிப்பினால் கிராமம் கிராமாக சென்று அறுவடை வேலை செய்யும் விவசாய தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுர்கானா தாலுகா, முரும்தாரி கிராமத்திலிருந்து தனது மனைவி உமா மற்றும் ஒன்பது வயது மகனுடன் நவம்பர் 1ம் தியதி திண்டோரி வந்து சேர்ந்திருக்கிறார். வழக்கமாக வருடம் தோறும் அக்டோபர் முதல் வாரத்தில் இடம்பெயர துவங்குகிறார். தக்காளி, நிலக்கடலை, சோயா பறிக்கும் வேலைகளை செய்து வருகிறார். இவ்வருட மழையால் தனது பயணத்தை காலம் தாழ்த்திய பின்னரும், அவர் திண்டோரி வந்தடைந்த போதும் கூட பயிர்கள் நீரில் முழ்கியே கிடந்தன. “தண்ணீர் வழிந்தோடும் வரை காத்திருந்து, நவம்பர் 7ம் தியதி தான் நாளொன்றுக்கு ஒருவருக்கு ரூ.200/ ஊதியத்தில் ஒரு திராட்சை தோட்டத்தில் பூச்சி மருந்து தெளிக்கும் வேலை கிடைத்தது”.

“எங்களுக்கு சொந்தமாக நிலம் இல்லாததால் வேலைக்காக தொடர்ந்து இடம் பெயர்ந்து வருகிறோம். அறுவடை மற்றும் பயிரிடும் காலத்தில் ஓரளவு வருமானம் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு எங்களுக்கு வழக்கமாக வேலை தரும் நில உடமையாளர்களால் வேலை தர இயலவில்லை” என்றார் உமா.

நான்காம் வகுப்பில் படிக்கும் மகன் கபில் கல்வியாண்டின் இடையில் இவர்களோடு வந்திருக்கிறான். “எங்கள் மகனை கவனித்துக் கொள்ள எவரும் இல்லை. அவனது கல்வியும் பாதிப்படைகிறது”, என்றார் சுனில். “எதிர்பாராமல் மழை பொழிவது போல் எங்களது மகனின் எதிர்காலத்திற்க்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் எங்கள் பிரச்சனைகள் குறித்து மும்மையிலிருக்கும் அரசியல்வாதிகளுக்கு எந்த கவலையும் இல்லை.”

தமிழில்: ஆ நீலாம்பரன்

Jyoti

ज्योति, पीपल्स आर्काइव ऑफ़ रूरल इंडिया की एक रिपोर्टर हैं; वह पहले ‘मी मराठी’ और ‘महाराष्ट्र1’ जैसे न्यूज़ चैनलों के साथ काम कर चुकी हैं.

की अन्य स्टोरी Jyoti
Translator : Neelambaran A

Neelambaran A is a post graduate in Engineering and had taught in Engineering colleges of Tamil Nadu for thirteen years. Now works for NewsClick as a Journalist and is interested in politics, labour and rural agrarian issues.

की अन्य स्टोरी Neelambaran A