பூர்ணிமா மிஸ்டிரி, தனது மீன்பிடி வலையுடன், ராய் மங்கள் ஆற்றில் நடந்து செல்கிறார். அவரது இடுப்பைச்சுற்றி தண்ணீர் சுழன்று செல்கிறது. அரை மணி நேரத்திற்கும் மேலாக அவர் ஆற்றங்கரைக்கும் அருகில் நீந்திக்கொண்டிருக்கிறார். அவருக்கு பின்னால் உள்ள வலையை இழுத்துக்கொண்டு, புலி இறால் குஞ்சுகளை தேடிக்கொண்டிருக்கிறார்.

கரையில் அவர் வலையில் சேகரமாகியுள்ளவற்றை தனித்தனியாக பிரிக்கிறார். அவர் புலி இறால் குஞ்சுகள் அதன் ஓட்டிலிருந்தும், நரம்பிலிருந்தும் பிரித்து, மற்ற மீன்களையும் பிரித்தெடுக்கிறார். அவரது புடவை சூரிய ஒளியில் நன்றாக உலர துவங்கிவிட்டது. ஆனால், பூர்ணிமா மீண்டும் ஆற்றுக்குள் இறங்கி தன் வேலையைத் தொடர வேண்டும். “போதிய அளவு புலி இறால் குஞ்சுகளை நான் பிடிக்க வேண்டும். அப்போதுதான் என்னால் அவற்றை விற்க முடியும். அதற்கு மேலும் 2 முதல் 3 மணி நேரம் ஆகும்“ என்று அவர் கூறுகிறார்.

மண் கரையில் அமர்ந்துகொண்டு தான் பிடித்தவற்றை பிரித்தெடுத்து பூர்ணிமா, இந்த உப்பும், சகதியுமான நீரில் நீண்ட நேரங்கள் செலவிடுவது குறித்து பேசுகிறார். இந்த உப்பு மண்ணில் வேலை செய்வது தோல் தொற்றையும், அரிப்பையும் ஏற்படுத்துகிறது. “எங்கள் வேலை எவ்வளவு கடினமான ஒன்று என்று பாருங்கள்“ என்று அவர் கூறுகிறார். “சுந்தரவனத்தில் உள்ள மக்கள் இவ்வாறு உழைத்துதான் சாப்பிடுகின்றனர்.“

பூர்ணிமா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வேலையை தனது குடும்பத்திற்கு உதவுவதற்காக செய்தார். அவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவரது கணவருக்கு தண்ணீர் என்றால் அச்சம் என்பதால், அவரால் மீன்பிடிக்கச் செல்ல இயலாது. மீன்பிடித்தொழில்தான் இங்கு பிரதானமான தொழிலாக உள்ளது. எனவே அதற்கு செல்ல முடியாததால், பூர்ணிமாவின் கணவர் இங்கு காய்கறிகள் விளைவித்து அவற்றை வீட்டில் விற்று வருகிறார்.

காணொளி : பூர்ணிமா மிஸ்டிரி, ராய்மங்கள் ஆற்றில் நீந்தி புலி இறால் குஞ்சுகளை பிடிக்கச் செல்கிறார். போதியளவு பிடித்தால்தான் அவரால் அவற்றை விற்க முடியும்

அவருக்கு புலிகள் மற்றும் முதலைகள் குறித்த அச்சமுள்ளதா? ஏனெனில் அவையிரண்டும்தான் சுந்தரவனக் காடுகளில் அதிகளவில் சுற்றித் திரிபவை. “சில நேரங்களில் எனக்கு முதலைகள் குறித்த அச்சம் ஏற்படுவதுண்டு. அவை இங்கு கிராமங்களில் உள்ள மக்களை ஏற்கனவே தாக்கியுள்ளது“ என்று பூர்ணிமா கூறுகிறார். “புலிகள் இங்கு அதிகளவில் வராது, ஏனெனில் இங்குள்ள பாதுகாப்பு வலை அவற்றை தள்ளியே நிற்க வைக்கும்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

பூர்ணிமா ஜோகேஸ்கஞ்சில் வசிக்கிறார். அங்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். மேற்கு வங்க வட்டத்தில் உள்ள ஹிங்கல்கஞ்சில் உள்ள ராய்மங்கள் ஆற்றங்கரையில் வீடுகள் இங்கொன்றும், அங்கொன்றுமாக உள்ளன. ஜோகேஸ்கஞ்சில் உள்ள பெரும்பாலான பெண்கள் மற்றும் குழந்தைகள், சுந்தரவனத்தின் மற்றப் பகுதிகளில் உள்ளதைப்போல், புலி இறால் குஞ்சுகளை சேகரிப்பவர்களாக உள்ளார்கள். அவர்கள் மீன், நண்டு பிடிப்பது மற்றும் தேன், விறகுகள் போன்ற காடுகளில் கிடைக்கும் பொருட்களை விற்பதன் மூலம் தங்கள் வீடுகளின் வருமானத்தை கூடுதலாக்குகிறார்கள்.

மாநில அரசின் 2009ம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி , சுந்தரவனத்தில் வசிக்கும் 44 லட்சம் பேரில் 2 லட்சம் பேர் வறுமையில் உள்ளதாகவும், அவர்கள் தங்களின் வருமானத்திற்காக புலி இறால் குஞ்சுகளை சேகரிப்பவர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறது.

ஹேம்நகரைச் சேர்ந்த ஷோமா மொண்டல் இந்த வேலைகள் பெரும்பாலும் பெண்களால் செய்யப்படுவதாக கூறுகிறார். “ஆண்கள் பெரியளவில் நண்டு பிடிக்கும் வேலைக்குச் செல்கிறார்கள். அது அவர்களுக்கு நல்ல வருமானத்தைக் கொடுக்கிறது. (அதற்காக அவர்கள் படகுகளை வாடகைக்கு பெறுகிறார்கள்). புலி இறால் குஞ்சுகளை சேகரிப்பது பெண்களின் வேலை. இன்னும் மோசமான பொருளாதார நிலையை கொண்ட குடும்பங்களில் குழந்தைகளும் இதில் ஈடுபடுகிறாரகள். அவர்களுக்கு இதன்மூலம் கிடைக்கும் வருமானம் மிகக் குறைவாக இருந்தபோதும், வேறு வழியும் இல்லாததால், இதை அவர்கள் செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குறைந்தபட்சம் ஒரு பெண் இந்த வேலையை செய்கிறார். நாங்கள் விவசாயம் செய்ய முடியாது. ஏனெனில் தண்ணீர் மற்றும் மண் இரண்டுமே மழைக்காலத்தை தவிர மற்ற காலங்களில் ஆண்டில் பெரும்பாலான நாட்களில் உப்பாகவே இருக்கும். மழைக்காலத்தில் நாங்கள் அரிசி பயிரிடுகிறோம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

Left: The people who collect tiger prawn seedlings spend close to five hours in the water to get a sufficient catch. Right: A woman drags her net into the river at low tide, which is the best time to gather the seedlings
PHOTO • Urvashi Sarkar

இடது : புலி இறால் குஞ்சுகளை சேகரிக்கும் மக்கள் குறைந்தபட்சம் 5 மணி நேரம் வரை தண்ணீரில் இருந்தால் மட்டுமே போதியளவு இறால் குஞ்சுகளை பிடிக்க முடியும். வலது : அலைகள் குறைவாக உள்ள ஆற்றில் ஒரு பெண் வலையை போடுவதற்காக இழுத்துச்செல்கிறார். அப்போதுதான் தேவையான அளவு இறால் குஞ்சுகளை சேகரிக்க முடியும்

குறைவான அலை ஏற்படும்போதே ஷோமா, ஆற்றுக்கு தினமும் புலி இறால் குஞ்சுகளை தேடிச் செல்கிறார். குறைவான அலைகள் இருப்பதே அவருக்கு அவற்றை பிடிப்பதற்கான சரியான தருணம். ஆனால் அது ஒரு நாளில் வெவ்வேறு நேரத்தில் ஏற்படும். எனவே ஷோமா சில நேரங்களில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் செல்கிறார். “கடும் இருட்டான நேரத்தில் முதலையோ அல்லது மற்ற காட்டு மிருகங்களோ இருப்பது நமக்கு சரியாக தெரியாது. பகல் நேரத்தில் அவை இருப்பது நமது கண்களுக்கு புலப்படும். அவற்றிடம் இருந்து தப்பியோடுவதற்காகவது அது உதவும்“ என்று அவர் கூறுகிறார்.

பருவத்திற்கு ஏற்ப புலி இறால் குஞ்சுகளை சேகரிக்கும் பூர்ணிமா போன்றவர்களின் வருமானம் மாறுபடும். “குளிர் காலத்தில் பருவத்தின் உச்சத்தில் 1000 புலி இறால் குஞ்சுகளுக்கு ரூ.300 கிடைக்கும்“ என்று அவர் கூறுகிறார். “மற்ற நேரங்களில் அவற்றின் விலை ரூ.100க்கு இறங்கிவிடும். இன்னும் குறைந்து ரூ.60க்கு கூட சென்றுவிடும்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஒரு சிறந்த நாளில், 2 ஆயிரம் புலி இறால் குஞ்சுகள் வரை அகப்படும். ஆனால், ஆண்டில் சில நாட்களே அது கிடைக்கும். மற்ற நேரங்களில், ஷோமாவிற்கு 200 முதல் 500 வரை கிடைக்கும். “இதிலிருந்து கிடைக்கும் வருமானம் ஹேம்நகர் சந்தைக்கு செல்வதற்கு போதியதாக இருக்கும். அங்கு சென்று தேவையான அரிசி மற்றும் பருப்பு போன்றவற்றை வாங்கிக்கொள்ளலாம். அதற்கு மேல் ஒன்றும் வாங்க முடியாது“ என்று அவர் கூறுகிறார்.

Tiger prawn seedlings are tiny, almost like strands of hair. Their price is fixed per 1,000 seedlings
PHOTO • Urvashi Sarkar

புலி இறால் குஞ்சுகள் சிறியளவிலானவை, முடியிழையளவிற்குதான் இருக்கும். 1000 குஞ்சுகள் வீதமாக அவற்றின் விலை நிர்ணயிக்கப்படும்

குளிர்காலங்களான டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை ஷோமா தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திற்கு வந்துவிடுகிறார். அங்கு தங்கி துணி நிறுவனங்களில் வேலை செய்கிறார். அவர் தலையணை உறை மற்றும் திரைச்சீலைகள் தைக்கிறார். குளிர் காலங்களில் அவர்களுக்கு அதிகளவில் புலி இறால் குஞ்சுகக்கு கிடைத்தாலும், அந்த நடுங்கும் குளிரில் தண்ணீரில் இறங்கி வேலை செய்வதற்கு பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. ஷோமாவின் கணவர் ஈரோட்டில் அந்த தொழிற்சாலையில் முழு நேரம் வேலை செய்கிறார். ஷோமா ரூ.200 முதல் ரூ.500 வரை தினமும் பெறுகிறார். அவரது கணவர் அதைவிட சிறிது கூடுதலாக சம்பாதிக்கிறார். அவர்களின் 5 வயது பெண் குழந்தை அவர்களின் கிராமத்தில் அவரது பாட்டியுடன் வசிக்கிறார்.

இறால் குஞ்சுகளை அவர்கள் சேகரிக்கும் முறை குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் வனத்துறையினருக்கு சில பிரச்னைகள் உள்ளது. அவர்களின் வலையில் இறால் குஞ்சுகள் மட்டுமின்றி பல்வேறு மீனினங்களும், மற்ற உயிரினங்களும் அகப்பட்டுக்கொள்ளும். ஆனால், இந்த பெண்கள் எப்போதும் மற்ற மீன்களை தவிர்த்துவிடுகிறார்கள். இதனால் அந்த மீன்கள் குறைந்துவிடும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்து. வலையை இழுத்துச்செல்வது மண் அரிப்பை உருவாக்கும் என்றும், ஆறுகள் நிரம்பி வழிவதைத் தடுக்கும் கரைகளை பலமிழக்கவைக்கும் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.

பூர்ணிமா மற்ற மீன்களை தூக்கியெறிந்து விடமாட்டார். அவரது வீட்டிற்கு அருகில் குளம் உள்ளது, அதில் அவற்றை வளர்ப்பார். “குளம் இல்லாதவர்கள் மற்ற மீன்களை தூக்கியெறிந்துவிடவேண்டும்“ என்று ராய்மங்கள் ஆற்றங்கரையில் புலி இறால் குஞ்சுகளை பிரித்தெடுக்கும் வேலை செய்துகொண்டே நம்மிடம் கூறுகிறார்.

பெண்கள்தான் அவற்றைப்பிடித்து, பிரித்தெடுத்துக் கொடுத்தாலும், புலி இறால் குஞ்சு வணிகச் சங்கிலியில், அவர்களுக்கு சிறிதளவே வருமானம் கிடைக்கிறது. குஞ்சுகளை பிடித்த பின்னர் லாபகரமான வணிகத்தை ஆண்கள் கையில் எடுத்துக்கொள்கிறார்கள்.

பெண்களிடம் இருந்து அவர்கள் சேகரித்த புலி இறால் குஞ்சுகளை சேகரிப்பதற்காக ஒரு இடைத்தரகர் கிராமங்களுக்கு வருகிறார். அவற்றை வளர்ப்பதற்காக விற்பனை செய்கிறார்கள். தெற்கு 24 பார்கனாஸ் மாவட்டத்தில் ஜிபன்தலா, கேனிங், சர்பெரியா மற்றும் பல்வேறு இடங்களில் பெரியளவிலான செயற்கை உப்புநீர் மீன் வளர்ப்பு பண்ணைகள் உள்ளன. அங்கு அவை மூன்று மாதங்களாவது குறைந்தபட்சம் வளர்க்கப்பட்டு, ஒரு நல்ல எடையை எட்டியவுடன், கேனிங், பராசாட் மற்றும் தமாக்காளி சந்தைகளில் அவை விற்கப்படும். ஏற்றுமதிக்கும் தண்ணீர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் குஞ்சுகளை மோட்டர் பைக்கில் எடுத்துச்செல்லும் ஆண்கள் மூலம் அனுப்பப்படும்.

After cultivation in brackish water enclosures in South 24 Parganas district, the seedlings grow in size
PHOTO • Urvashi Sarkar

தெற்கு 24 பார்கானாஸ் மாவட்டத்தில் உப்புநீர் பண்ணைகளில் வளர்க்கப்படும்போது அவை நல்ல அளவை எட்டியிருக்கும்

நன்றாக வளர்ந்த புலி இறால்களுக்கு மொத்த விலை சந்தையில் நல்ல விலை கிடைக்கும். கேனிங் மீன் சந்தையில் மொத்த வியாபாரம் செய்யும் வியாபாரியான தருண் மொண்டல்,  தனது பிரதான வருமானமே புலி இறால் விற்பனையிலிருந்துதான் கிடைப்பதாகச் சொல்கிறார். “இது ஒரு நல்ல வியாபாரம். நாங்கள் அவற்றை கிலோ ரூ.380 முதல் ரூ.880 வரை பண்ணைகளில் இருந்து வாங்குவோம். அவற்றை ரூ.400 முதல் ரூ.900 வரை (அளவைப்பொறுத்து ஒரு கிலோ) விற்போம். எங்களுக்குக் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை லாபம் கிடைக்கும். எங்களுக்கு பெரும்பாலும் சுந்தரவனத்தின் பாசந்தி மற்றும் கோசாபா வட்டங்களில் இருந்துதான் இறால்கள் கிடைக்கும். நாங்கள் அவற்றை பெரிய நிறுவனங்களில் வேலை செய்யும் ஏஜென்டுகளுக்கு விற்போம். அவர்கள் அவற்றை ஏற்றுமதி செய்வார்கள்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 2015-16ம் ஆண்டுகளில் 4.68 பில்லியன் டாலராக இருந்தது. அதில் 70 சதவீதம் இறால்கள் உள்ளது. பெரும்பாலும் அவை ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. புலி இறால்கள், கருப்புப் புலி இறால்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இறால் ஏற்றுமதியில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேற்குவங்கம் இந்தியாவில் பெருமளவில் இறால்கள் உற்பத்தி செய்யும் மாநிலமாகவும் , கடல் உணவு ஏற்றுமதியாளராகவும் உள்ளது.

குஞ்சுகளை சேகரிக்கும் ஷோமா மற்றும் பூர்ணிமா போன்றவர்களுக்கு இதில் சிறிதளவு பணம் மட்டுமே கிடைக்கிறது. அவர்களால் அதிகளவு விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை. அவற்றை இடைத்தரகர்களே செய்கிறார்கள் மற்றும் இந்தத் தொழில் ஆண்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. “குஞசுகளுக்கான விலையுடன் கூடுதலாக ஆண்டு இருப்பாக ஒருவருக்கு இடைத்தரகர்கள் ரூ.200 முதல் ரூ.500 வரை கொடுக்கிறார்கள். அவற்றை நாம் திரும்பி தரவேண்டியதில்லை“ ஷோமா கூறுகிறார். “இந்த இருப்புத் தொகை குறிப்பிட்ட நபர்களிடம் மட்டுமே இறால் குஞ்சுகளை ஒப்படைக்க நிர்பந்திக்கிறது. வேறு நபரிடம் கொடுக்க முடியாது. பெண்கள் எங்களால் குழுவாக சேர்ந்து பேரத்தில் ஈடுபட முடிவதில்லை“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஆனால், ஷோமா மற்றும் பூர்ணிமா போன்றத் தொழிலாளர்களின் உழைப்பில்தான் புலி இறாலின் மொத்த விலை மற்றும் ஏற்றுமதி சந்தைகள் இயங்குகின்றன மற்றும் சுவையான உணவுகளை உயர்தர தட்டுகளுக்கு இந்தியா மற்றும் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கின்றன.

தமிழில்: பிரியதர்சினி. R.

Urvashi Sarkar

उर्वशी सरकार, स्वतंत्र पत्रकार हैं और साल 2016 की पारी फ़ेलो हैं.

की अन्य स्टोरी उर्वशी सरकार
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

की अन्य स्टोरी Priyadarshini R.