கிராமப்புற இந்தியாவின் மக்கள் பெட்டகமான PARI-ல் ஒன்றிரண்டு விஷயங்களை நமக்கு கற்பிக்கக் கூடிய அன்றாட இந்தியர்கள் பற்றிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளும் ஆவணங்களும் புகைப்படங்களும் படங்களும் இருக்கின்றன.
திரிபுராவைச் சேர்ந்த ரதன் பிஸ்வாஸ் அவர்களில் ஒருவர். 200 ரூபாய் லாபமீட்ட 200 கிலோ எடையுள்ள ஐந்து மூங்கில் கம்புகளை 17 கிலோமீட்டருக்கு தூக்கிச் செல்லும் வகையில் சைக்கிளை மறுவடிவமைத்துள்ளார். இயற்பியல், புதுமை, பூகோளவியல் பற்றி சில விஷயங்களை அவர் நமக்குக் கற்றுக் கொடுப்பார். பிறகு குஜராத்தைச் சேர்ந்த மேய்ப்பரான கராபாய் ஆல் மற்றும் கேரள விவசாயியான ஆகஸ்டின் வடகில் ஆகியோர் இருக்கின்றனர். காலநிலை மாற்றத்தால் பாதிப்படைந்த இருவரும் சூழலியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி சில விஷயங்களை நமக்குக் கற்றுக் கொடுக்க முடியும். ஆனால் அவர்களின் வாழ்க்கைகள் பாடத்திட்டத்தில் இடம்பெறவில்லை.
கடந்த இரு வருடங்களாக PARI கல்வி பள்ளிகளுடனும் கல்லூரிகளுடனும் ஒருங்கிணைந்து இத்தகைய வாழ்க்கைக் கதைகளை வகுப்பறைக்கு கொண்டு வர வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் கற்பதற்கு இங்கு அதிகம் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். நாட்டைப் பற்றி கற்கவும் சுற்றியிருக்கும் யதார்த்த சூழல்கள் பற்றிய விவாதங்களுக்கும் இளையோர் ஆர்வத்தோடு இருக்கின்றனர். அவர்களுடன் சேர்ந்து இந்திய கிராமப்புறத்தின் அற்புதமான பன்மைத்துவத்தையும் நுட்பங்களையும் வெளிக்கொணர இருக்கிறோம்.
காலநிலை மாற்றத்தால் காட்டெருமைகள் விவசாய நிலங்களை நோக்கி படையெடுப்பதைப் பற்றியும் ஒடிசாவின் நியாம்கிரி மலைப் பழங்குடிச் சமூகங்களின் இடப்பெயர்வு குறித்து புரட்சிகர பாடகரின் பாடல் பற்றியும் லடாக்கின் சங்க்பா சமூகப் பெண்கள் பற்றியும் PARI-ல் வெளியாகி இருக்கும் முக்கியமான கட்டுரைகள் போன்றவற்றை சொல்ல விழைகிறோம்.“என் நாட்டின் இந்த விஷயங்கள் பற்றி அறியாமல் இருந்ததைப் பற்றி சங்கடப்படுகிறேன். கிராமம் என்றால் விவசாயம் மட்டுமல்ல என்பது புரிகிறது,” என ஒரு மாணவர் எங்களிடம் சொன்னார். கிராமப்புற இந்தியர்களின் வாழ்க்கைகள் மற்றும் சூழல்கள் பற்றிய இந்த எதிர்கொள்ளலும் கற்றலும்தான் PARI கல்வியின் சாரம்.
பாடப்புத்தகங்களில் பெரிதாக இருக்காத உங்களின் நாட்டைப் பற்றி தெரிந்து கொள்வது ஒரு தொடக்கம்தான். PARI கல்வி உங்களின் நிறுவனத்துக்கு வரும்போது, 80 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற இந்தியர்களின் உலகத்தைப் பற்றி வெகுஜன ஊடகத்தில் நீங்கள் கேட்கவோ பார்க்கவோ இல்லை என்பதை புரிந்து கொள்வீர்கள். அவர்களின் வாழ்க்கைகளைப் பற்றிய, உழைப்பு, நுண்கலை, பண்பாடுகள், மொழிகள் பற்றிய எதுவும் நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். நிலத்தையும் சுற்றுப்புறத்தையும் காக்க பெண்கள் முன்னெடுத்தப் போராட்டங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்காது. ஒரு மாணவர், “நாம் தினசரி நுகரும் செய்திகளை கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டேன். இந்தியாவின் பெரும் நிலப்பரப்பில் இருப்பவர்களுக்கு மத்தியில் என்ன நடக்கிறது என்பதை பற்றி நமக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை,” என ட்வீட் செய்திருந்தார்.
கற்றலுக்கான பயணம் அனுபவத்தில் வேரூன்றியிருக்கிறது என நாங்கள் நம்புகிறோம். எனவே சொல்வதை நாங்கள் நிறுத்தப் போவதில்லை. மாணவர்களை களத்திலிருந்து செய்தி சேகரிக்க சொல்கிறோம். அவர்கள் ஆராயும் வாழ்க்கைகளில் சம்பந்தப்பட்ட மக்களுடன் உரையாட வேண்டுமெனக் கூறுகிறோம். பிறரின் நிலையை அறிந்துணரும் தன்மையும் கூர்திறனும் கொள்ள அறிவுறுத்துகிறோம். “கூடுதலாக ஒரு 5,000 ரூபாய் சம்பாதிக்க ஒரு மனிதன் எப்படி ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்க முடிகிறது என்பதை என்னுடைய (PARI) பணி எனக்குக் காட்டியது. அது என்னை நெகிழ வைத்து உத்வேகமூட்டியது,” என்கிறார் ஒரு மாணவர். பொருளாதாரப் பணி சார்ந்த அவரின் கட்டுரை தற்போது PARI -ல் இருக்கிறது.
கிராமத்திலிருக்கும் ஒரு மாணவர் எங்களின் கட்டுரைகளை பார்க்கையில், அவரின் சுற்றுப்புறத்தையும் அவரது பெற்றோரின் தொழில்களையும் அவர்களின் சொந்த வாழ்க்கைகளையும் அவர் பார்க்கும் விதம் மாறுகிறது. அவர்களின் சொந்த அனுபவங்களை ஆவணப்படுத்த எங்களுடன் இணைவதில் ஆர்வம் காட்டுகின்றனர். சட்டீஸ்கரின் தம்தாரி கிராமத்தின் மாணவர் ஒருவர், “எங்களின் கிராமங்களில் நடக்கும் விஷயத்தை குறித்து எவரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என நினைத்தோம். எங்களின் கதைகளை இப்போது நாங்கள் எழுத விரும்புகிறோம்,” என்றார்.
இந்த நாட்டின் மாணவர்கள் அவர்களின் சொந்த பாடப்புத்தகங்களை எழுதவும் அவர்களின் கல்வியில் அவர்கள் பங்குபெறவும் PARI கல்வி வாய்ப்பளிக்கிறது. அப்படி செய்வதன் வழியாக அவர்களை பின்பற்றும் பல மாணவத் தலைமுறைகளுக்கு அவர்கள் கற்பிக்கவும் செய்கின்றனர்.
கிராமப்புற இந்தியாவைப் பற்றிய மாணவர்களின் அசலான படைப்புகளை நாங்கள் வரவேற்கிறோம். அவற்றின் சிறந்ததை PARI கல்வி யில் பிரசுரிக்கிறோம். இளையோரின் கண்கள் வழியாக கிராமப்புற இந்தியாவைக் கற்று ஆவணப்படுத்தும் பணியில் நீங்களும் இணையலாம்.
ஒரு பெரும் பயணத்தின் ஆரம்பக் கட்ட அடிகளைத்தான் PARI கல்வி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். ஒவ்வொரு கிராமப்புற பள்ளியிலும், குறிப்பாக ஏழ்மை நிறைந்த பகுதிகளிலிருக்கும் பள்ளிகளில், இருப்பதே எங்களின் தேவை, எங்களின் இலக்கு, எங்களின் கட்டளை. சொந்த மொழிகளில் PARI-யிலிருந்து கற்கவும் PARI-க்கு பங்களிப்பு செய்யவும் விரும்பும் மாணவர்களுக்கென PARI 10 மொழிகளில் பதிப்பிக்கப்படுகிறது. கொஞ்ச காலத்தில் மொழிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை இலக்காக கொண்டுள்ளோம்.
கிராமப்புற மாணவர்களுக்கும் நகர்ப்புற மாணவர்களுக்கும் இடையே, புறக்கணிக்கப்பட்ட மாணவர்களுக்கும் சமூகச்சலுகை பெற்ற மாணவர்களுக்கும் இடையே ஒரு இணைப்பை உருவாக்குவதும் எங்களின் கடமையாக இருப்பதை புரிந்திருக்கிறோம். அதிகமாக சமூகச் சலுகை பெற்றிருக்கும் மாணவர்கள், பிறருக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள பிளவை புரிந்து, அனுபவித்து, அந்த ஏற்றத்தாழ்வுகளைக் களைய வைப்பதும் எங்களுக்கான பணி என அறிந்திருக்கிறோம். அந்த இடைவெளிகளை குறிப்பிட்டுக் காட்டும் கட்டுரைகளை த்தான் PARI படைத்துக் கொண்டிருக்கிறது.
இணையவழிக் கல்வியால் அதிகரித்துக் கொண்டிருக்கும் டிஜிட்டல் பிளவில் புறக்கணிக்கப்படும் வசதியற்ற மாணவர்களுக்கு உதவ முனையும் இலவச மென்பொருள் இயக்கக் குழுக்களுடனும் இணைந்து நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். மேற்குறிப்பிட்ட பணிகள் மற்றும் உங்களுடன் நாங்கள் தொடங்க விரும்பும் பயணங்களின் மொத்தமும்தான் PARI கல்வி.
ப்ரித்தி டேவிட்
PARI கல்வி ஆசிரியர்
தமிழில் : ராஜசங்கீதன்