பிப்ரவரி 7 2021 அன்று 10:30 மணிக்கு தனது கணவர் அனஸ் ஷேக்கிற்கு தொலைபேசி தொடர்பு கிடைக்காத போது ரிஹானா அதிகம் யோசிக்கவில்லை. அவர்கள் 2 மணி நேரத்திற்கு முன்பாகத்தான் பேசியிருந்தார். "அன்று காலை அவரது பாட்டி இறந்து இருந்தார்", அந்தத் தகவலைச் சொல்வதற்காக காலை 9 மணிக்கு அவரை அழைத்திருந்தேன் என்று கூறினார் ரிஹானா.
"அவரால் இறுதிச்சடங்கிற்கு வர முடியவில்லை. அதனால் அடக்கம் செய்யும் நேரத்தில் என்னை வீடியோ கால் செய்ய சொல்லியிருந்தார்", என்று மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் இருக்கும் பகபான்பூர் கிராமத்தில் இருக்கும் தனது ஒரு அறை கொண்ட வீட்டின் முன்பு அமர்ந்திருக்கும் 33 வயதாகும் ரிஹானா கூறினார். அனஸ் 1700 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உத்தரகாண்டின் கார்வால் மலைகளில் இருந்தார். ரிஹானா அவரை இரண்டாவது முறை அழைத்தபோது அவருக்கு அழைப்பு போகவில்லை.
அன்று காலை ரிஹானாவின் இரண்டு தொலைபேசி அழைப்புகளுக்கு இடையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அந்தப் பேரழிவு ஏற்பட்டு இருந்தது. நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து அலக்நந்தா, தௌலி கங்கா மற்றும் ரிஷி கங்கா நதிகளில் வெள்ளத்தை தூண்டியிருந்தது. அந்தப் பெருவெள்ளம் ஆற்றங்கரையில் இருந்த வீடுகளை அடித்துச் சென்றது, அப்பகுதியில் உள்ள நீர் மின் நிலையங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களும் அதில் சிக்கிக்கொண்டனர்.
சிக்கிக்கொண்டவர்களில் ஒருவராக அனஸ் இருந்தார். ஆனால் ரிஹானாவுக்கு அது தெரியாது. அவர் மீண்டும் சில முறை தனது கணவரை அழைக்க முயற்சித்தார். அவர் கவலைப்பட ஆரம்பித்தார், பின்னர் அது பீதியானது. "நான் மீண்டும் மீண்டும் அவரை அழைத்தேன், வேறு என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை", என்று கூறி அவர் அழ ஆரம்பித்தார்.







