ராணுவத்தில் சேரும் விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தபோது, சூரஜ் ஜாட்டி இன்னும் பதின்வயதுகளை எட்டியிருக்கவில்லை. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான அவரது தந்தை ஷங்கர், மகனின் விருப்பத்தை கேட்டு பெருமையும் சந்தோஷமும் கொண்டார்.

மகாராஷ்டிராவின் சங்க்லி மாவட்டத்திலுள்ள பாலஸ் நகரத்து பயிற்சி நிறுவனத்தின் பயிற்சி வகுப்புக்கிடையே பேசிய 19 வயது சூரஜ், “என்னை பொறுத்தவரை என் வீட்டுச் சூழலில் அதுதான் உகந்த விஷயமாக இருந்தது,” என்கிறார். “எனக்கு நினைவு தெரிந்தவரை, வேறு எதையும் நான் யோசித்ததில்லை.” மகனின் முடிவில் ஷங்கருக்கு சம்மதம்தான். ஒரு தந்தையாக அவரையும் தாண்டிய சம்மதம் அவருக்கு தேவைப்பட்டது.

பத்தாண்டுகள் கூட ஆகவில்லை. மகனின் விருப்பம் நிறைவேறுமா என உறுதியாக தெரியாத கட்டத்தை அடைந்திருந்தார் ஷங்கர். பெருமை கொண்டிருந்த தந்தை என்கிற இடத்திலிருந்து சந்தேகம் கொண்டவராக சில வருடங்களில் அவர் மாறியிருந்தார். சரியாக சொல்வதெனில் 2022ம் ஆண்டின் ஜூன் 14ம் தேதி.

அந்த நாளில்தான் ஓர் ஊடக சந்திப்பில் பாதுகாபு அமைச்சர் ராஜ்நாத் சிங், “அக்னிபாத் திட்டத்தின் கீழ், அக்னி வீரர்களாக ராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பு இந்திய இளைஞர்களுக்கு வழங்கப்படும்,” எனக் கூறினார்.

திட்டம் அறிமுகப்படுத்துவத்ற்கு முன், சராசரியாக 2015-2020 வருடங்களில் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இளையோரின் எண்ணிக்கை 61,000 ஆக இருந்தது. 2020ம் ஆண்டில் தொற்று வந்ததும் ஆட்சேர்ப்பு நின்றுபோனது.

அக்னிபாத் திட்டம் அக்னிவீரர்களாக 46,000 இளையோரை ராணுவத்தில் சேர்க்கும். 17.5 முதல் 21 வயதுக்குள்ளோர் இணையலாம். 4-5 வருடங்கள் வயது குறைக்கப்பட்டிருப்பதாக அரசு அறிவிக்கை தெரிவித்தது.

காலம் முழுக்க ராணுவத்தில் இருக்க முடியாது. இத்திட்டத்தின்படி நான்கு வருடம்தான் இருக்க முடியும். அந்த நான்கு வருட காலம் முடிகையில், 25 சதவிகித பேருக்குதான் ராணுவத்தில் நிரந்தர பணி கிடைக்கும்.

PHOTO • Parth M.N.
PHOTO • Parth M.N.

இடது: சங்க்லியின் பாலஸ் நகரத்திலுள்ள யாஷ் பயிற்சி நிறுவனத்தில் இளையோர், ராணுவத்தில் சேர பயிற்சி எடுக்கின்றனர். வாழ்க்கை முழுமைக்கான பணியாக இல்லாமல், அக்னிபாத் திட்டம் நான்கு ஆண்டு பணிக்கு மட்டும்தான் ஆள் சேர்க்கிறது. பணி முடியும்போது 25 சதவிகித பேருக்குதான் நிரந்தர பணி கிடைக்கும். வலது: முன்னாள் ராணுவ வீரரும் குந்தாலின் சைனிக் கூட்டமைப்பு தலைவருமான சிவாஜி சூர்யவன்ஷி (நீல நிறம்), ‘சிப்பாய் தயாராக நான்கு வருடங்கள் குறைவான காலம்,’ என்கிறார்

முன்னாள் ராணுவ வீரரும் சைனிக் கூட்டமைப்பின் தலைவருமான ஷிவாஜி சூர்யவன்ஷி, நாட்டு நலனுக்கு எதிராக இந்தத் திட்டம் இருப்பதாக கருதுகிறார். “ஒரு ராணுவ வீரர் தயாராக நான்கு வருடங்கள் என்பது குறைவான காலம்,” என்கிறார் அவர். “காஷ்மீர் அல்லது மோதல் நிறைந்த பகுதியில் அவர்கள் அனுப்பப்பட்டால், அவர்களின் அனுபவமின்மை, பயிற்சி பெற்ற சிப்பாய்களுக்கு ஆபத்தை உருவாக்கும். இந்த திட்டம் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும்,” என்கிறார்.

வேலையில் சேர்பவர்களுக்கும் இது அவமதிப்புதான் என்கிறார் சூர்யவன்ஷி. “அக்னிவீரர்கள் வேலை பார்க்கும்போது இறந்து விட்டால், தியாகிக்கான அந்தஸ்தும் அவர்களுக்குக் கிடைக்காது,” என்கிறார் அவர். “அது அவமானகரமான விஷயம். சட்டமன்ற உறுப்பினரோ நாடாளுமன்ற உறுப்பினரோ ஒரு மாதத்துக்கு பணியில் இருந்தாலும், முழுப் பணியில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் பலன்களை பெறுகிறார்கள். சிப்பாய்களுக்கு மட்டும் ஏன் பாரபட்சம்?”

திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, நாடு முழுக்க அத்திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. தேர்வு எழுதுபவர்களும் முன்னாள் ராணுவ வீரர்களும் ஒன்றுபோல அத்திட்டத்தை எதிர்த்தனர்.

2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற முடியாத பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, இத்திட்டத்துக்கு திருத்தங்கள் கொண்டு வர ஆலோசிப்பதாக சொல்லப்படுகிறது. ராணுவத்தில் அதிக ஆட்கள் சேரும் ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற இடங்களில் பாஜக கடும் இழப்பை சந்தித்தது. போலவே அதிகமாக ராணுவத்துக்கு ஆட்கள் சேர்க்கப்படும் மேற்கு மகாராஷ்டிரா பகுதியிலும் இத்திட்டத்தின் மீதான அவநம்பிக்கை வெகுவாக இருந்தது. எல்லா கிராமங்களிலும் ராணுவத்துக்கு ஒருவரையேனும் அனுப்பும் குடும்பங்கள் அதிகமாக இருக்கின்றன.

அத்தகையவொரு குடும்பத்தை சேர்ந்தவர்தான் ஜாட்டி. இளங்கலை படிப்பின் இறுதி ஆண்டில் இருக்கிறார். எனினும் அக்னிவீரராக வேண்டுமென பயிற்சி நிறுவனத்தில் அவர் சேர்ந்த பிறகு, கல்வி பாதிக்கப்பட்டது.

PHOTO • Parth M.N.
PHOTO • Parth M.N.

பயிற்சி நிறுவனத்தில் கடுமையான உடற்பயிற்சி கொடுக்கப்படும். ஓட்டம், புஷ் அப், தரையில் ஊர்வது, முதுகில் இன்னொரு நபரை சுமப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்

“காலையில் மூன்று மணி நேரங்களையும் மாலையில் மூன்று மணி நேரங்களையும் உடற்பயிற்சியில் செலவழிக்கிறேன்,” என்கிறார் அவர். “சோர்வு ஏற்படுவதால் என் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. தேர்வானால் தேர்வுகளுக்கு முன் நான் செல்ல வேண்டியிருக்கும்.”

அவரது பயிற்சியில் கடும் உடற்பயிற்சிகளும் அடக்கம். ஓட்டம், புஷ் அப், தரையில் ஊர்வது, இன்னொரு நபரை முதுகில் சுமப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். ஒவ்வொரு கட்டம் முடியும்போதும், அவரின் ஆடைகள் வியர்வையில் நனைந்து அழுக்காகி இருக்கும். பிறகு மீண்டும் சில மணி நேரங்களுக்கு அவர் உடற்பயிற்சியை தொடர வேண்டும்.

இதே ஒழுங்குடன் இருந்து அக்னிவீராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜாட்டிக்கு மாத வருமானம் 21,000 கிடைக்கும். நான்காம் வருடத்தில் அதில் 28,000-மாக உயரும். அவருடன் தேர்ந்தெடுக்கப்படும் குழுவின் 25 சதவிகிதத்தில் அவர் இடம்பெறவில்லை எனில், வீடு திரும்ப வேண்டும். அக்னிபாத் திட்டத்தின் நான்கு வருடங்கள் முடித்து திரும்பும்போது 11.75 லட்சம் ரூபாய் மட்டும்தான் இருக்கும்.

வயது 23 ஆகியிருக்கும். கல்வியும் முழுமை பெற்றிருக்காது. வேலை கிடைப்பதிலும் சிரமம் இருக்கும்.

“அதனால்தான் என் தந்தையும் என்னை பற்றி கவலைப்படுகிறார்,” என்கிறார் ஜாட்டி. “அவர் என்னை காவல்துறை அதிகாரியாகும்படி சொல்கிறார்.”

இந்தத் திட்டம் தொடங்கும் 2022ம் ஆண்டில் 46,000 அக்னிவீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என இந்திய அரசாங்கம் கூறியிருந்தது. 2026ம் ஆண்டில் 20 வயதுகளில் இருக்கும் 34,500 இளையோர் வீடு திரும்புவார்கள். எந்த வாய்ப்பும் இல்லாமல் அவர்கள், மீண்டும் முதலில் இருந்து தங்களின் வாழ்க்கையை தொடங்க வேண்டும்.

2026ம் ஆண்டு வரை அதிகபட்சமாக 175000 ஆட்சேர்ப்பு நடக்கும். ஐந்தாம் வருடத்தில் 90,000-மாக்கி அதற்குப் இறகு 125,000-மாக அதிகரிக்க வேண்டும் என்பதே நோக்கம்.

PHOTO • Parth M.N.
PHOTO • Parth M.N.

இடது: அக்னிபாத் திட்டம் அறிவிக்கப்பட்டதும் நாடு முழுவதும் அத்திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. வலது: பாலஸ் பகுதியில் யாஷ் அகாடமி நடத்தும் பிரகாஷ் போரே, கிராமப்புற இந்தியாவில் வேலைவாய்ப்பை கடுமையாக இத்திட்டம் பாதிக்கும் என்கிறார். அதுவும் பட்டப்படிப்பு முடிக்கும் முன்பே பணிக்கு செல்ல வேண்டிய வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது

பெரும்பாலானோர், விவசாயம் பொய்த்து சிரமப்படும் விவசாயிகளுக்கு பிறந்தவர்கள். கடனாலும் குறைந்த பயிர் விலையாலும் கடன் கிடைக்காததாலும் காலநிலை மாற்ற பாதிப்பாலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்திருக்கின்றனர். இத்தகைய விவசாயக் குடும்பங்களை சார்ந்த குழந்தைகளுக்கு நிலையான வருமானம் உள்ள வேலைகள் மிகவும் முக்கியம்.

பாலஸ் பகுதியில் யாஷ் அகாடமி நடத்தும் பிரகாஷ் போரே, பட்டப்படிப்பு முடிக்கும் முன்பே பணிக்கு செல்லும் வகையில் அக்னிபாத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதால், கிராமங்களில் வேலையின்மையை அத்திட்டம் உருவாக்கும் என்கிறார். “வேலை சந்தையும் தற்போது சொல்லிக் கொள்ளும்படி இல்லை,” என்கிறார் அவர். “பட்டம் இல்லாதது இன்னும் நிலைமையை சிக்கலாக்கும். நான்கு வருடங்கள் முடித்து வீட்டுக்கு திரும்புகையில் அவர்கள் பாதுகாப்பு காவலராக கட்டடங்களுக்கோ ஏடிஎம்களுக்கோ வெளியில் நிற்கும் வேலைகள்தான் கிடைக்கும்.”

யாரும் அவர்களை மணம் முடிக்கவும் விரும்ப மாட்டார்கள் என்கிறார் அவர். “மணமகளின் குடும்பம், மணமகனுக்கு நிரந்தர வேலை இருக்கிறதா அல்லது ‘நான்கு வருட ராணுவ வீரரா’ என தெளிவாக கேட்கிறார்கள். ஆயுதங்கள் பயன்படுத்தும் பயிற்சி பெற்ற இளையோர் செய்வதற்கு வேலை இன்றி விரக்தியுடன் இருந்தால் எப்படி இருக்குமென யோசித்துப் பாருங்கள். பயங்கரமான நிலையாக இருக்கும்.”

17 வருட ராணுவ அனுபவம் கொண்ட மேஜர் ஹிம்மத் ஒவ்ஹால், 2009ம் ஆண்டிலிருந்து சங்க்லியில் அகாடமி நடத்தி வருகிறார். இத்திட்டம் ராணுவத்தில் இளையோர் சேரும் விருப்பத்தை குறைத்திருப்பதாக அவர் சொல்கிறார். “2009ம் ஆண்டு தொட்டு எங்களின் அகாடமியில் வருடந்தோறும் 1,500-2000 பேர் சேருவார்கள்,” என்கிறார் அவர். “ஆனால் அக்னிவீர் திட்டத்துக்கு பிறகு அது 100 ஆக குறைந்து விட்டது. இது பெரும் சரிவு.”

இத்தகைய சூழலிலும் ராணுவத்தில் சேருபவர்கள் 25 சதவிகிதம் பேரில் ஒருவராக இடம்பெற்றிட முடியுமென நம்புகிறார்கள். அவர்களில் ஜாட்டி ஒருவர். அவரைப் போலவே இருக்கும் ரியா பெல்தாருக்கு உணர்வுப்பூர்வமான காரணமும் இருக்கிறது.

சங்க்லியின் சிறு டவுனான மிராஜிலுள்ள வறிய விவசாயிகளுக்கு மகளாக பிறந்தவர் பெல்தார். குழந்தைப் பருவத்திலிருந்தே தாய்மாமாவுக்கு நெருக்கமாக இருந்த அவர், மாமாவுக்கு பெருமை பெற்றுத் தர விரும்புகிறார். “ராணுவத்தில் சேர வேண்டுமென அவர் விரும்பினார்,” என்கிறார் அவர். “ஆனால் அவரின் கனவு நனவாகவில்லை. என் வழியாக அவரின் கனவு மெய்ப்பட வேண்டுமென விரும்புகிறேன்.”

PHOTO • Parth M.N.
PHOTO • Parth M.N.

ராணுவத்தில் சேர விரும்புவதற்காக இளம்பெண்களை கிண்டல் செய்கின்றனர். ‘நான் திரும்பி வந்து, பெண்களுக்கென ஓர் அகாடமி தொடங்க விரும்புகிறேன்,' என்கிறார் ரியா பெல்தார். சங்க்ல்யின் சிறு டவுன் மிராஜை சேர்ந்த வறிய விவசாயிகளின் மகளான அவர் அகாடமியில் பயிற்சி பெறுகிறார்

ஒவ்ஹாலிடம் பயிற்சி பெறும் அவர், பெண்ணாக ராணுவத்தில் இணையும் விருப்பம் கொண்டதற்காக வரும் கேலிப் பேச்சுகளை புறக்கணிக்கித்திருக்கிறார். அவரை கிண்டல் பேசியிருக்கிறார்கள். “பெற்றோர் எனக்கு ஆதரவாக இருந்ததால், அவர்களை நான் பொருட்படுத்தவில்லை,” என்கிறார் பெல்தார்.

19 வயதாகும் அவர், அக்னிபாத் தனக்கு ஏற்ற திட்டம் அல்ல என்கிறார். “இரவு பகலாக பயிற்சி பெற்று, கேலிப் பேச்சுகளையும் கேட்டு, படிப்பையும் கைவிட்டு, சீருடை அணிய வேண்டியிருக்கிறது,” என்னும் அவர், “ஆனால் நான்கு வருடங்களில் அதை பறித்து விட்டால், எப்படி எதிர்காலம் இருக்கும்? இது நியாயமல்ல,” என்கிறார்.

எனினும் நான்கு வருட பணிக்கு பிறகு செய்யவென பெல்தார் சில திட்டங்களை வைத்திருக்கிறார். “திரும்பி வந்து பெண்களுக்கென ஒரு அகாடமி ஆரம்பிக்க வேண்டும். எங்களின் நிலத்தில் கரும்புகள் விளைவிப்பேன்,” என்கிறார் அவர். “நான்கு வருடங்கள் கழித்து நிரந்தர வேலை எனக்கு கிடைக்கவில்லை என்றாலும், ராணுவத்தில் பணிபுரிந்தேன் என சொல்லிக் கொள்ள முடியும். என் தாய்மாமாவின் கனவை நிறைவேற்றியதாக இருக்கும்.”

கொல்ஹாப்பூரை சேர்ந்த 19 வயது ஓம் விபுதேவும் பெல்தாரின் அகாடமியில்தான் படிக்கிறார். அவர் இன்னும் நடைமுறை சாத்திய அணுகுமுறை கொண்டிருக்கிறார். அக்னிபாத் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அவர், நாட்டுக்கு சேவை செய்யும் நம்பிக்கையுடன் ஒவ்ஹாலின் அகாடமியில் சேர்ந்து விட்டார். ஆனால் இரண்டு வருடங்கள் கழித்து, அவர் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டார். “இப்போது நான் காவல் அதிகாரியாக விரும்புகிறேன்,” என்கிறார் அவர். ”58 வயது வரை அதில் பணி பாதுகாப்பு இருக்கும். காவல்துறையில் பணிபுரிவதும் தேசநலன் தான். ராணுவ வீரராக வேண்டுமென்பதுதான் என் விருப்பமாக இருந்தது. ஆனால் அக்னிபாத் திட்டம் என் மனதை மாற்றி விட்டது.”

நான்கு வருடங்களுக்கு பிறகு ஊர் திரும்ப வேண்டும் என்கிற எண்ணமே பதட்டத்தை தந்ததாக சொல்கிறார் விபுதே. “அதற்குப் பிறகு நான் என்ன செய்ய முடியும்?” எனக் கேட்கிறார் அவர். “யார் எனக்கு நல்ல வேலை தருவார்? எதிர்காலம் பற்றி நடைமுறை சாத்தியத்துடன் சிந்திக்க வேண்டும்.”

அக்னிபாத் திட்டத்தால் ஏற்பட்ட பெரும் பாதகமென முன்னாள் ராணுவ வீரரான சூர்யவன்ஷி, ராணுவத்தில் சேர விரும்புவோரிடம் தேசிய உணர்வை அத்திட்டம் குறைத்து விட்டதை குறிப்பிடுகிறார். “மோசமான அறிக்கைகளை நான் கேள்விப்படுகிறேன்,” என்கிறார் அவர். “25 சதவிகிதத்தில் இடம்பெற முடியாது என்பதை குழந்தைகள் உணர்ந்து விட்டால், முயற்சி செய்வதை நிறுத்தி விடுவார்கள். உத்தரவுகளுக்கு கீழ்படியவும் மாட்டார்கள். அதற்கு அவர்களை நான் குறை சொல்லப் போவதில்லை. நான்கு வருடங்களில் உங்களை தூக்கி எறியப் போகும் வேலைக்காக ஏன் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்த வேண்டும், ஏன் உயிரைக் கொடுக்க வேண்டும்? சிப்பாய்களை ஒப்பந்த தொழிலாளர்களாக்கி இருக்கிறது இத்திட்டம்.”

தமிழில் : ராஜசங்கீதன்

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Editor : Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan