பட்ஜெட்டை பெரிதாக சையது குர்ஷித் கவனிக்கவில்லை. “செய்தி தொலைக்காட்சி பார்க்க கூட நான் விரும்புவதில்லை,” என்கிறார் 72 வயதாகும் அவர். “அதில் வருவதில் எத்தனை உண்மை, எத்தனை கட்டுக்கதை என்பது எவருக்கும் தெரியாது.”
வரிகளுக்கான வருமான வரம்புகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக யாரோ சொல்லி கேள்விப்பட்டிருக்கிறார். “ஆனால் எங்களின் பகுதியில் இருக்கும் எவருக்கும் அதனால் ஒரு பயனும் கிடையாது,” என்கிறார் அவர் சிரித்தபடி. “வேலை பார்த்துதான் பிழைக்க வேண்டியிருக்கிறது.”
மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்திலுள்ள கங்காகெட் டவுனில் 60 வருடங்களாக சையது தையற்காரராக இருக்கிறார். தந்தையிடம் இருந்து இக்கலையை கற்கும்போது அவருக்கு எட்டு வயதுதான். ஆனால் அவரின் வேலை, முன்பு கொடுத்தளவுக்கு வருமானத்தை இப்போது கொடுப்பதில்லை. “இளம் தலைமுறையினர் ரெடிமேட் துணிகளைத்தான் விரும்புகின்றனர்,” என விளக்குகிறார்.
![](/media/images/02a-IMG20250203145616-PMN-Workers_like_us_.max-1400x1120.jpg)
![](/media/images/02b-IMG20250203145628-PMN-Workers_like_us_.max-1400x1120.jpg)
4 மகன்கள் மற்றும் 2 மகள்களில் ஒரு மகன் மட்டும்தான் அவருடன் தையற்கடையில் இருக்கிறார். மற்ற மகன்கள் ஒப்பந்த வேலைகள் செய்கின்றனர். மகள்கள் மணம் முடித்து வீட்டை பார்த்துக் கொள்கின்றனர்
ஓரறை வீட்டில் பணிபுரியும் சையது, தன்னிடம் வேலை பார்க்கும் இருவருக்கான ஊதியம் போக, மாதத்துக்கு 20,000 ரூபாய் சம்பாதிக்கிறார். “நல்லவேளையாக என் தந்தை இந்தக் கடையை வாங்கி விட்டார். வாடகை கட்ட வேண்டியிருக்கவில்லை. இல்லையெனில் வருமானம் மொத்தமும் வாடகைக்கே சென்றிருக்கும்.” “அதிகம் படிக்கவில்லை என்பதால் என்னால் வாசிக்க முடியாது,” என்கிறார் அவர், நுட்பமாக தைத்துக் கொண்டிருக்கும் துணியில் இருந்து பார்வையை அகற்றாமல்.
குறைந்த வருமானம் கொண்டவர்களின்பால் பட்ஜெட் கவனம் செலுத்துவதாக அரசாங்கம் சொல்லி இருக்கிறது. “ஆனால் குறிப்பிட்ட ஒரு வர்க்கத்து மக்களுக்குதான் அது பயனளிக்கும்,” என்கிறார் சையது. “எங்களை போன்ற தொழிலாளர்களுக்கு எதுவும் கிடைக்காது.”
தமிழில்: ராஜசங்கீதன்