“வருடா வருடம் அனைவரும் ஆர்ப்பரிக்கும் பட்ஜெட் எங்கள் வாழ்க்கையை சிறிதளவேனும் மாற்றுமா?” என்று இரண்டு குழந்தைகளின் தாயான கே. நாகம்மா கேட்கிறார். அவரது கணவர் 2007-ல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது இறந்தவர். அதனால அவர் தற்போது சஃபாய் கரம்சாரி அந்தோலனில் இணைந்து, ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறார். அவரது மூத்த மகள் ஷைலா ஒரு செவிலியராகவும், இளைய மகள் ஆனந்தி தற்காலிக அரசாங்க வேலையிலும் உள்ளார்.
“‘பட்ஜெட்’ என்ற சொல் எங்களைப் பொறுத்த வரை, ஒரு ஆடம்பரமான சொல். நாங்கள் சம்பாதிக்கும் பணத்தை வைத்து, வீட்டு பட்ஜெட்டையே நிர்வகிக்க முடியவில்லை. அரசாங்கத்தின் திட்டங்களிலிருந்தும் எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. அப்படியிருக்க பட்ஜெட்டால் எங்களுக்கு என்ன பயன்? என் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க, இது எனக்கு உதவுமா?”
நாகம்மாவின் பெற்றோர், அவர் பிறப்பதற்கு முன்பே சென்னைக்கு குடிபெயர்ந்தவர்கள். அதனால் அவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 1995 ஆம் ஆண்டு, அவரது தந்தை, சொந்த ஊரான நகுலபுரத்தில் வசித்து வந்த அவரது முறைமாமனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். ஆந்திரப் பிரதேசம், பிரகாசம் மாவட்டத்தின் பாமுரு அருகே உள்ள ஒரு கிராமத்தில், அவரது கணவர் கண்ணன், கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்த மடிகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். "2004 ஆம் ஆண்டு, இரண்டு குழந்தைகளைப் பெற்றதும், மகள்களின் கல்விக்காக சென்னைக்கு வர முடிவு செய்தோம்," என்று நாகம்மா நினைவு கூர்கிறார். வந்த மூன்று ஆண்டுகளுக்குள், கண்ணன் இறந்துவிட்டார் .
![](/media/images/02a-WA-01-KM-Will_the_budget_help_marry_of.max-1400x1120.jpg)
![](/media/images/02b-WA-04-KM-Will_the_budget_help_marry_of.max-1400x1120.jpg)
மகள்கள் ஷைலா மற்றும் ஆனந்தியுடன், கே. நாகம்மா
சென்னையின் கிண்டி அருகே உள்ள புனித தாமஸ் மலையின் குறுகிய பாதைகளில் உள்ள ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்த நாகம்மாவின் வாழ்க்கையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் கடைசியாக சந்தித்ததிலிருந்து பெரிய மாற்றம் எதுவும் இல்லை. "தங்கம் ஒரு சவரனுக்கு 20-30,000 ரூபாய் இருந்தபோதாவது, ஒன்று அல்லது இரண்டு சவரன் வாங்க கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்க முடியும் என்று நம்பினேன். [சவரன் என்பது தோராயமாக 8 கிராம்]. ஆனால் இப்போது, ஒரு சவரனின் விலை 60-70,000 ரூபாயாகிவிட்ட நிலையில், என் மகள்களின் திருமணத்தை எப்படி நடத்துவது? திருமணங்களில் தங்கத்தை தடை செய்தால் தான் என்னால் சமாளிக்க முடியும்.”
ஒரு நிமிடம் சிந்தித்து விட்டு: “தங்கத்தை விடுங்கள் - சாப்பாட்டின் நிலைமை என்ன? எரிவாயு சிலிண்டர்கள், அரிசி, அவசரகாலத்தில் மலிவான பால் பாக்கெட் கூட வாங்க முடிவதில்லை. ஒரு வருடத்துக்கு முன்பு நான் 1,000 ரூபாய்க்கு வாங்கிய அதே அளவு அரிசி, இப்போது 2,000 ரூபாய். ஆனால் வருமானம் உயரவில்லை.”
கையால் துப்புரவு செய்யும் தொழிலாளர்களின் போராட்டங்களை நினைவு கூருகையில் அவரின் விரக்தி இன்னும் ஆழமாகிறது. எனவே அவர்களுக்கு உதவ, அவர் முழுநேர ஆர்வலராக மாறியிருக்கிறார். “அவர்களுக்கு எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை,” என்கிறார். “SRMS*, NAMASTE என்று மாறியுள்ளது, அதனால் பயன் என்ன? SRMS-ன் கீழ் இருக்கும்போதாவது, குழுக்களை உருவாக்கி, கண்ணியத்துடன் வாழ, கடன்களைப் பெற முடிந்தது. ஆனால் NAMASTE-வின் கீழ், அவர்கள் எங்களுக்கு இயந்திரங்களைத் தான் தருகிறார்கள். அதுவும் என் கணவர் செய்து இறந்த அதே வேலையைச் செய்யும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். ஒரு இயந்திரம் எங்களுக்கான கண்ணியத்தைத் தருமா, நீங்களே சொல்லுங்கள்?”
SRMS: கையால் துப்புரவு செய்பவர்களின் மறுவாழ்வுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், 2007, 2023-ல் NAMASTE அல்லது இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சூழலுக்கான தேசிய நடவடிக்கை என பெயர் மாற்றப்பட்டது. ஆனால் நாகம்மா சுட்டிக்காட்டுவது போல், இது கையால் துப்புரவு செய்பவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்குப் பதிலாக, கட்டாயப்படுத்துகிறது.
தமிழில் : அஹமத் ஷ்யாம்