“இதைப் பற்றி எங்களுக்கு தெரியாது,” என்கிறார் பட்ஜெட் பற்றிய கேள்விகளை புறக்கணித்து.

“எங்களுக்கு என்ன தேவை என எப்போதேனும் அரசாங் எங்களிடம் கேட்டிருக்கிறதா?” என கேட்கிறார் அவரது மனைவி மண்டா. “அதை செய்யாமல் எப்படி அவர்கள் எங்களுக்காக முடிவு எடுக்க முடியும்? எங்களுக்கு 30 நாட்களுக்கு வேலை வேண்டும்.”

புனே மாவட்டத்தின் குருலி கிராமத்துக்கு வெளியே உள்ள அவர்களின் ஓரறை வீடு வழக்கத்துக்கு மாறாக பரபரப்பாக இருந்தது. “2004ம் ஆண்டில் ஜால்னாவிலிருந்து இங்கு நாங்கள் புலம்பெயர்ந்தோம். எப்போதும் நாங்கள் புலப்பெயர்வில் இருப்பதால், எங்கள் மக்கள் கிராமங்களுக்கு வெளியேதான் வசிப்பார்கள்,” என்கிறார் பாபாசாகேப்.

பிரிட்டிஷ் ஆட்சியால் குற்றப்பரம்பரை என முன்பு முத்திரை குத்தப்பட்டிருந்த அவரின் பில் பார்தி சமூக மக்கள், அக்களங்கம் நீக்கப்பட்டும் தொடர்ந்து பாரபட்சம் பார்க்கப்பட்டு வறுமையில் உழல வைக்கப்படுகின்றனர் என்கிற விஷயத்தை அவர் சொல்லிக் கொள்ளவில்லை. பட்டியல் பழங்குடியாக மகாராஷ்டிராவில் அச்சமூகம் அறிவிக்கப்பட்ட பிறகும் இதுவே நிலை. அவர்களின் புலப்பெயர்வுக்கு காரணமாக பெரும்பாலும் ஒடுக்குமுறைதான் இருக்கிறது.

புலப்பெயர்வுகள் பற்றி பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதை நிச்சயமாக அவர்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை. கேட்டிருந்தாலும் அவர்களுக்கு அது ஈர்ப்பை கொடுத்திருக்காது. “புலப்பெயர்வு அவசியமாக கிராமங்களில் இருக்கும் நிலையைப் போக்குவதற்கான சாத்தியங்களை உருவாக்குவதே லட்சியம்,” என 2025-26 பட்ஜெட் உரையில் அவர் பேசி இருக்கிறார்.

PHOTO • Jyoti

நான்கு பேர் கொண்ட இந்த பில் பார்தி குடும்பம் - பாபாசாகேப், 57 (வலது ஓரம்), மண்டா 55 (சிவப்பு மற்றும் நீலம்), அவர்களின் மகன் ஆகாஷ், 23 மற்றும் ஸ்வாதி, 22 - மாதத்தில் 15 நாட்களுக்கு மேல் வேலை பார்ப்பதில்லை. அவர்களின் புலப்பெயர்வு எப்போதும் ஒடுக்குமுறையின்பால்தான் நேர்ந்திருக்கிறது

அதிகார மையத்திலிருந்து 1,400 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பாபாசாகேப்பும் அவரது குடும்பமும் பில் பார்தி சமூகத்தை சேர்ந்தவர்கள். பெரிய வாய்ப்புகள் ஏதும் இன்றி வாழ்க்கை ஓட்டுகிறார்கள். இந்தியாவில் வேலை கிடைப்பதே பெரும் சவாலாக இருக்கும் நிலமற்ற 144 மில்லியன் மக்களில் அவர்களும் அடக்கம்.

“மாதத்துக்கு 15 நாட்கள் வேலை இருக்கும். மிச்ச நாட்கள் இருக்காது,” என்கிறார் பாபாசாகேப்பின் மகனான ஆகாஷ். ஆனால் இன்று வித்தியாசமான நாள். ஆகாஷ், 23, அவரின் மனைவி ஸ்வாதி, 22, மண்டா 55 மற்றும் பாபாசாகேப், 57 ஆகிய அனைவருக்கும் பக்கத்து கிராமத்தின் வெங்காய வயல் ஒன்றில் வேலை கிடைத்திருக்கிறது.

இங்கு வசிக்கும் 50 பழங்குடி குடும்பங்கள் குடிநீர், மின்சாரம், கழிவறை ஏதுமின்றி இருக்கிறார்கள். “இயற்கை கடன் கழிக்க, காட்டுக்குள் செல்ல வேண்டும். வசதியும் இல்லை, பாதுகாப்பும் இல்லை. பக்கத்து ஊரில் இருக்கும் பகாயத்தார்கள் தான் (தோட்டக்கலை விவசாயிகள்) எங்களின் வருமானத்துக்கான ஒரே வழி,” என்றபடி அனைவருக்கும் உணவு கட்டுகிறார் ஸ்வாதி.

“வெங்காயம் பறித்தி தினசரி 300 ரூபாய் வருமானம் ஈட்டுகிறோம். சம்பாதிப்பது என வந்துவிட்டால் ஒவ்வொரு நாளும் முக்கியம்,” என்கிறார் பாபாசாகேப். குடும்பத்தின் மொத்த வருடாந்திர வருமானம் 1.6 லட்சம் ரூபாயைக் கூட எட்டாது. வேலை கிடைப்பதை பொறுத்துதான் அந்த வருமானமும். 12 லட்ச ரூபாய் வரையான வருமானத்துக்கு வரி விலக்கு என்கிற அறிவிப்பால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை. “சில நேரங்களில் நாங்கள் ஆறு கிலோமீட்டர் நடப்போம். சில நேரங்களில் இன்னும் அதிக தூரம் நடப்போம். வேலை எங்கு கிடைக்கிறதோ அங்கு செல்வோம்,” என்கிறார் ஆகாஷ்.

தமிழில்: ராஜசங்கீதன்

Jyoti is a Senior Reporter at the People’s Archive of Rural India; she has previously worked with news channels like ‘Mi Marathi’ and ‘Maharashtra1’.

Other stories by Jyoti
Editor : Pratishtha Pandya

Pratishtha Pandya is a Senior Editor at PARI where she leads PARI's creative writing section. She is also a member of the PARIBhasha team and translates and edits stories in Gujarati. Pratishtha is a published poet working in Gujarati and English.

Other stories by Pratishtha Pandya
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan