அந்த ஊருக்கு நான் போய் சேர்ந்தபோது, கூட்டம் கூடியிருந்தது. ரெண்டு கிராமங்களையும் ஒரு ரோடுதான் பிரிச்சிருந்தது. நிறைய போலீஸ் இருந்தாங்க. போலீஸ் வண்டிகளும் இருந்தது. சிவகாசியில இருக்கற கனிஷ்கா பட்டாசு ஃபேக்டரி விபத்துல 14 தொழிலாளர்கள் இறந்துட்டாங்கங்கற தகவல் மொத்த ஊரையும் உலுக்கியிருந்தது. ஆறு பேர் காந்தி நகர் கிராமத்தில் மட்டும் இறந்திருந்தாங்க.
இறந்தவங்களை நினைச்சு மக்கள் தெருக்கள்ல அழுதுக்கிட்டு இருந்தாங்க. சிலர் ஃபோன் வழியா, மத்த ஊர்களில் இருக்கும் சொந்தக்காரங்களுக்கு தகவல் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.
கொஞ்ச நேரம் கழிச்சு, கூட்டம் சுடுகாட்டுக்கு நடக்க, நானும் சேர்ந்து நடந்தேன். மொத்த ஊரும் திரண்டு, 2023, அக்டோபர் 17ம் தேதி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த சுடுகாட்டுக்கு சென்று கொண்டிருந்தது. இறந்த உடல்களை அப்புறப்படுத்திய தீயணைப்பு துறை வீரர் ஒருவர், போஸ்ட் மார்ட்டத்துக்காக உடல்களை எடுப்பதிலிருந்து கஷ்டத்தை சொன்னார்.
எட்டரைக்கு மேலதான் பாடி வந்தது. ஆறு ஆம்புலன்ஸும் ஒண்ணா வந்தது. மக்கள் எல்லாரும் ஓடினதால, அந்த இடம் ஒரு மாதிரி களேபரம் ஆயிடுச்சு. அதை பார்த்தப்போ எனக்கு போட்டோ எடுக்கணும்னு தோணல. அந்த இடம் பூராம் ஒரு மாதிரி இருட்டா, இருள் அடைஞ்சிருந்தது. சுடுகாட்டில ஒரே ஒரு லைட் மட்டும் எரிஞ்சிட்டு இருந்தது. அந்த விளக்கை சுத்தி நூத்துக்கணக்கான ஈசல் கூட்டம். அதைப் பார்க்கும்போது அந்த மக்கள் கூட்டமும் அதே மாதிரிதான் எனக்குத் தெரிஞ்சது.
ஆம்புலன்ஸிலிருந்து ஒவ்வொரு பாடியா இறக்குனாங்க. கொஞ்ச நேரத்தில் எல்லாரும் பின்வாங்குனாங்க. மூக்க மூட ஆரம்பிச்சுட்டாங்க. அந்த பாடிங்க, விபத்துல பாதி வெந்து இருந்ததால, இருந்து ஒரு மாதிரியான நாத்தம் வர ஆரம்பிச்சிடுச்சு. உடம்பெல்லாம் யாரோடதுன்னு யாருக்கும் தெரியல. ஆனா பேர் மட்டும் அதுல எழுதி இருந்தாங்க . அடுத்த கால் மணி நேரத்துலயே அங்க எல்லா வேலைகளும் முடிஞ்சு எல்லாரும் கலைஞ்சு போக ஆரம்பிச்சுட்டாங்க. அந்த இடமே ரொம்ப தனிமையாயிடுச்சு.






























