“என்னை பலமுறை யானைகள் துரத்தியுள்ளன. ஆனால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை,” என்கிறார் மகிழ்ச்சியுடன் ரவிக்குமார் நேதம்.
கோண்டு பழங்குடியைச் சேர்ந்த 25 வயதாகும் அவர் அர்சிகன்ஹார் வனத்தொடரின் காட்டுப் பாதையில் நடந்து செல்கிறார். சத்திஸ்கரில் உள்ள உதந்தி சீதாநதி புலிகள் காப்பகத்தில் யானை கண்காணிப்பாளரான அவர் யானைகளின் கழிவுகள், கால்தடங்களைக் கொண்டு எவ்வாறு கண்காணிப்பது என்பதை அறிந்துள்ளார்.
“நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் இந்த காட்டில் தான். இதுபற்றி அறிய நான் பள்ளிக்கு செல்ல வேண்டிய தேவையில்லை,” என்கிறார் தம்தாரி மாவட்டம் தேனாஹி கிராமத்தைச் சேர்ந்த ரவி. 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவர் வனத்துறையின் தீயணைப்பு வீரராக நான்கு ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்து, இப்போது கண்காணிப்பாளராக உள்ளார்.
கண்காணிப்பாளர்கள் எங்களை வனத்திற்குள் அழைத்துச் சென்றபோது பூச்சிகளின் ரீங்காரமும், குங்கிலியம் (ஷோரியா ரோபஸ்டா), தேக்கு (டெக்டோனா கிரான்டிஸ்) மரங்களில் காற்றின் சலசலப்பு ஒலியும் கேட்கிறது. அவ்வப்போது பறவைகளின் கூக்குரலும், கிளைகள் முறியும் சத்தமும் கேட்கிறது. தென்படும் தடயங்களுடன் ஒலிகளுக்கும் யானை கண்காணிப்பாளர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
இந்த வனத்திற்கு யானைகள் அண்மையில்தான் வந்தன. மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒடிசாவிலிருந்து அவை வந்தன. வனத்துறை அதிகாரிகளால் அறியப்பட்ட சிகாசர் யானைக் கூட்டம் தலா 20 யானைகள் என இரண்டு குழுக்களாக பிரிந்துள்ளன. ஒன்று காரியாபந்த்திற்கு சென்றுவிட்டது. மற்றொரு குழு இங்கு உள்ளூர் மக்களால் கண்டறியப்பட்டதாக கூறுகிறார் தியோதத் தரம். 55 வயதாகும் தியோதத், வனத்துறையில் காவலாளியாக சேர்ந்து, தற்போது வனச்சரகராக பணியாற்றி வருகிறார். 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தில் வனத்தைப் பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்துள்ளார்.
“இங்கு தண்ணீர் நிறைய உள்ளது, வனத்தில் குலங்கள், இப்பிராந்தியத்தில் சில அணைகளும் உள்ளன,” எனும் தியோதத், யானைகள் இந்த வனத்தை ஏன் விரும்புகின்றன என்பதை விளக்குகிறார். உதாரணத்திற்கு யானைகளின் விருப்ப உணவான, இந்த வனத்தில் அதிகம் காணப்படும் இலுப்பை பழத்தை கூறலாம். இங்கு மனிதர்களின் தலையீடும் இல்லை. “வனம் மிகவும் அடர்ந்துள்ளதால் சுரங்கப் பணிகளும் நடப்பதில்லை. இதுபோன்ற காரணிகள் யானைகளுக்கு உகந்த சூழலை இங்கு தருகின்றன,” என்கிறார் தியோதத்.
யானை கண்காணிப்பாளர்கள் ஷிஃப்ட் அடிப்படையில் இரவுப் பகலாக அனைத்து பருவங்களிலும் வேலை செய்கின்றனர். நடந்து சென்று யானைகளை கண்காணிக்கின்றனர். கிராமங்களுக்கு சென்று அவற்றின் நடமாட்டத்தை பரிசோதிக்கின்றனர். அவர்கள் கண்டறிந்தவற்றை யானை கண்காணிப்பு செயலியில் தெரிவிக்கின்றனர்.
“FMIS (வன மேலாண்மை தகவல் அமைப்பு), மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் வனவிலங்கு பிரிவு ஆகியவை கூட்டாக இந்த செயலியை உருவாக்கியுள்ளன. யானைகள் உலவும் பகுதியை சுற்றியுள்ள 10 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களை இத்தகவல் உஷார் நிலையில் வைக்க உதவுகிறது,” என்கிறார் உதந்தி சீதாநதி புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் வருண் குமார் ஜெயின்.
யானை கண்காணிப்பு குழுவிற்கு எனக் குறிப்பிட்ட பணி நேரம் கிடையாது. ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.1500 தரப்படுகிறது. காயங்கள் ஏற்பட்டால் காப்பீடும் கிடையாது. “இப்பகுதியில் நான் காவலாளியாக இருக்கும் வரை இரவில் யானைகள் வந்தால், நாங்களும் அங்கு செல்ல வேண்டும்,” என்கிறார் கோண்டு பழங்குடியினத்தைச் சேர்ந்த 40 வயது வனப் பாதுகாவலர் நாராயண் சிங் துருவ்.
“யானைகள் மதியம் 12-3 மணி வரை உறங்குகின்றன,” எனும் அவர், “பிறகு “முதன்மை யானை” பிளிறும் போது, யானைக் கூட்டம் மீண்டும் நடக்க தொடங்கும். மனிதர்கள் யாரையாவது பார்த்துவிட்டால், அவை தங்கள் கூட்டத்தை உஷார்படுத்துகின்றன,” என்கிறார். இந்த சத்தம், யானை கண்காணிப்பாளர்களுக்கும், அவை எவ்வளவு தொலைவில் உள்ளன என்பதை கண்டறிய உதவுகிறது. “யானைகள் குறித்து நான் எதுவும் படித்தது கிடையாது. யானைகள் குறித்து நான் கற்றவை யாவும் கண்காணிப்பாளராக நான் பெற்ற அனுபவம் தான்,” என்கிறார் துருவ்.
“ஒரு நாளில் 25-30 கிலோமீட்டர் யானைகள் நடந்தால், நமக்கு அது தண்டனைதான்,” என்கிறார் நாதுராம். மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர் வனத்திற்குள் உள்ள கிராமத்தில் இரண்டு அறைகள் கொண்ட கச்சா வீட்டில் வசிக்கிறார். அவர் வனத்துறையில் தீயணைப்பு வீரராக பணியாற்றிவிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன் யானை கண்காணிப்பாளராக மாறினார்.
*****
இரவில் கண்காணிப்பாளர்கள் உஷார்படுத்தும் போது கிராமமக்கள் இரவு தூக்கத்தையும் உதறி தள்ளிவிட்டு வயல்களுக்குள் யானைகள் புகுந்துவிட்டதா என காணச் செல்கின்றனர். பாதுகாப்பான தூரத்தில் நின்றபடி இளைஞர்களும், சிறுபிள்ளைகளும் ஃபிளாஷ் வெளிச்சத்தில் யானைகளை காண்கின்றனர்.
உணவு தேடி நெல் வயல்களில் இரவில் புகும் யானைகளை விரட்டுவதற்காக கிராம மக்கள் இரவு முழுவதும் தீமூட்டி வைக்கின்றனர். வனத்திற்குள் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் இரவு முழுவதும் தீமூட்டி அமர்ந்தபடி யானைக் கூட்டம் பயிர்களை நாசம் செய்யும் போது கையறு நிலையில் வேடிக்கை பார்க்கின்றனர்.
“முதன்முதலில் யானைகள் வந்தபோது வனத்துறையினர் மகிழ்ச்சியுடன் நிறைய பழங்கள், கரும்பு, முட்டைகோஸ், வாழைப்பழங்கள் போன்ற உணவுகளை கொடுத்தனர்,” என்கிறார் தேனாஹி கிராமவாசியான நோஹர் லால் நாக். நோஹர் போன்ற கிராமவாசிகளுக்கு யானைகளின் வருகை இன்பம் அளிக்கவில்லை. தங்கள் பயிர்களின் நிலை குறித்த கவலையே உள்ளது.
தேனாஹி கிராமத்திற்கு பாரி குழு அடுத்தநாள் காலை சென்றபோது, யானைகள் ஏற்படுத்திய சேதங்களையும், அடையாளங்களையும் காண முடிந்தது. புதிய கதிர்களை யானைக்கூட்டம் சேதப்படுத்தியிருந்தன. அவை மரக் கிளைகளில் தங்கள் முதுகை உரசி சேறாக்கி வைத்திருந்தன.
வனத்துறை ஒவ்வொரு ஏக்கர் நிலத்திற்கும் ரூ.22,249 இழப்பீடு வழங்க வேண்டும் என்று உதாந்தி சீதாநதி புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் வருண் குமார் ஜெயின் தெரிவித்தார். ஆனால் அதிகாரத்துவ "செயல்முறை" காரணமாக பணம் சரியாக வழங்கப்படாது என்று இங்கு வசிப்பவர்கள் நம்புகின்றனர். “நாங்கள் இப்போது என்ன செய்வது?” என அவர்கள் கேட்கின்றனர், “என்ன செய்ய வேண்டுமோ அதை வனத்துறை அதிகாரிகள் தான் செய்ய வேண்டும். இங்கு யானைகள் வருவதை நாங்கள் விரும்பவில்லை", என்கின்றனர்.
தமிழில்: சவிதா