பசி தான் ஜலால் அலியை மூங்கில் மீன்பிடிப் பொறிகளை உருவாக்கக் கற்றுக் கொள்ளத் தூண்டியது.

தினசரி கூலி வேலை செய்து பிழைக்க முயன்ற இளைஞன் ஜலால் அலி. அந்த வேலையும் மழைக்காலங்களில் குறைந்து விடும்: “மழைக்காலம் வந்துவிட்டால், ஒரு சில நாட்களுக்கு நெல் நாற்றுகளை நடுவதைத் தவிர வேறு எந்த வேலையும் இருக்காது,” என்று அவர் கூறுகிறார்.

ஆனால் பருவமழை, அவர் வசிக்கும் தர்ராங் மாவட்டத்தில் உள்ள மௌசிதா-பலபாரியின் கால்வாய்கள் மற்றும் சதுப்பு நிலங்களில், மீன்களை அதிகப்படுத்தி விடும். அதனால் மூங்கில் மீன்பிடி பொறிகளுக்கு தேவை அதிகரித்தது. "எனது குடும்பத்திற்கு உணவளிப்பதற்காக, நான் மூங்கில் மீன்பிடி பொறிகளை எப்படி தயாரிப்பது என்பதை கற்றுக்கொண்டேன். பசிக்கும்போதுதான் ​​வயிற்றுக்கு உணவளிக்க எளிதான வழி என்னவென்று யோசிப்போம்” என்று சிரிக்கிறார், இந்த 60 வயது முதியவர்.

இன்று ஜலால், செப்பா, போஸ்னா மற்றும் பைர் ஆகிய மூங்கில் பழங்கால மீன்பிடி பொறிகளை செய்யும் தலைசிறந்த கைவினைஞராக உள்ளார். இதன் மூலம் நீர்நிலைகளில் இருந்து பலவகை மீன்களைப் பிடிக்க முடியும். அஸ்ஸாமில் உள்ள மௌசிதா-பலபாரி சதுப்பு நிலங்களை ஒட்டிய பப்-படோகாட் கிராமத்தில் உள்ள இந்த வீட்டில் இவர் இதனை உருவாக்குகிறார்.

“இருபது வருடங்களூக்கு முன்பு வரை, எனது கிராமத்திலும், அருகிலுள்ள கிராமங்களிலும், கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் மீன் பிடிக்க [மூங்கில்] பொறியைப் பயன்படுத்தினர்,” என்கிறார் ஜலால். அப்போது மூங்கில் பொறிகள் அல்லது கையால் செய்யப்பட்ட ஷிவ் ஜால் பயன்படுத்தப்படும். அவர் உள்நாட்டில் டோங்கி ஜால் அல்லது ஜெட்கா ஜால் என்றும் அழைக்கப்படும் வலைகளை குறிப்பிடுகிறார் - அது, மூங்கில் கம்பிகள் அல்லது சரங்களுடன், நான்கு மூலைகளில்  இணைக்கப்பட்ட ஒரு சதுர வடிவ வலை.

உள்ளூர் மூங்கில் மீன்பிடி பொறிகள் அவற்றின் வடிவத்திற்கேற்ப பெயரிடப்படுகின்றன: " செப்பா என்பது நீள்வட்ட வடிவத்துடன் ஒரு டிரம் போன்றது. பைரியும் நீள்வட்ட வடிவம் தான், ஆனால் அது உயரமாகவும் அகலமாகவும் இருக்கும். டார்கி ஒரு செவ்வகப் பெட்டி போன்றது,” என்று விளக்குகிறார் ஜலால். டுயர், டையார் மற்றும் போயிஷ்னோ பொறிகள், ஓடும் நீரில் அமைக்கப்படுபவை, பெரும்பாலும் நீர் தேங்கிய நெல், மற்றும் சணல் வயல்களில், சிறு கால்வாய்கள்,  சதுப்பு நிலங்கள் அல்லது நதிகள் சங்கமிக்கும் இடங்களில் அமைக்கப்படுபவை.

PHOTO • Mahibul Hoque
PHOTO • Mahibul Hoque

இடது: அஸ்ஸாமில் உள்ள மௌசிதா-பலபாரி சதுப்பு நிலங்களை ஒட்டிய பப்-படோகாட் கிராமத்தில் உள்ள தனது வீட்டின் முற்றத்தில் உள்ள மீன்பிடி பொறிகளை ஜலால் ஆய்வு செய்கிறார். நீள்வட்ட வடிவில் நிற்கும் பொறி செப்பா என்று அழைக்கப்படுகிறது. வலது: அவரது கைகளில் உள்ள பொறி பைர் என்று அழைக்கப்படுகிறது. வலது: மீன் பொறிக்குள் நுழைவதற்கான சிக்கலான முடிச்சுகள் கொண்ட நுழைவாயிலை ஜலால் காட்டுகிறார். பாரம்பரிய மூங்கில் மீன்பிடி பொறிகளில் நுழைவாயில் பாரா அல்லது ஃபாரா என்று அழைக்கப்படுகிறது

கிழக்கில் சாடியா முதல், மேற்கில் துப்ரி வரையிலான, அஸ்ஸாமின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு, ஆறுகள், கால்வாய்கள், ஆறுகளுடன் ஈரநிலங்களை இணைக்கும் சிற்றோடைகள், வெள்ளப்பெருக்கு ஏரிகள் மற்றும் எண்ணற்ற இயற்கை குளங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நீர்நிலைகள் உள்ளூர் சமூகங்களின் மீன்பிடி வாழ்வாதாரத்தை ஆதரிக்கின்றன. அசாமில் மீன்பிடித் தொழில் 3.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களை ஈடுபடுத்துகிறது என்று மீன்பிடி புள்ளியியல் 2022 கையேடு கூறுகிறது.

வணிக மீன்பிடி சாதனங்களான மொசூரி ஜால் (சிறிய வலை) மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட ட்ராக் வலைகள், விலை உயர்ந்தவை மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தானவை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர், ஏனெனில் அவை சிறிய மீன்களையும் பிடித்து விடுவதோடு, நீரில் பிளாஸ்டிக் கழிவுகளையும் சேர்க்கின்றன. ஆனால் உள்நாட்டில் கிடைக்கும் மூங்கில், கரும்பு மற்றும் சணல் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பழங்கால மீன்பிடி பொறிகள் நிலையானவை மற்றும் உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவை ஆகும். அவை குறிப்பிட்ட அளவு கொண்ட மீன்களை மட்டும் பிடித்துவிடுவதால், வேறெதுவும் வீணாகாது.

வணிக வலைகள் மூலம் தேவைக்கு அதிகமான மீன்கள் பிடிக்கப்படுகிறது மற்றும் முட்டையிடும் சுற்றுச்சூழல் அமைப்பும் அழிக்கப்படுகிறது என்று பெயர் குறிப்பிட விரும்பாத, ICAR-மத்திய உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர் கூறுகிறார்.

வெள்ளத்தின் போது வண்டல் படிவதால், இயற்கையான சதுப்பு நிலங்கள் மற்றும் ஈரநிலங்களின் அளவும் குறைகிறது. அவற்றில் இப்போது நீர் குறைவாக உள்ளதோடு, உள்நாட்டு மீன்பிடிப்பும் குறைவாக உள்ளது என்கிறார். மீனவர் முக்சத் அலி வேதனையுடன் அறிந்த ஒரு உண்மை: “முன்பு, நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரம்மபுத்திராவில் நீர் பாய்வதை, என் வீட்டிலிருந்தே பார்க்கலாம். நான் வயல்களில் மூழ்கியிருக்கும் இடைவெளிகளுக்கு இடையில் மண்ணைப் போட்டு குறுகிய ஓடைகளை உருவாக்கி மீன்பிடி பொறிகளை அமைப்பேன்”. நவீன வலைகளை வாங்க முடியாததால், பைர்களை நம்பியிருந்ததாக, இந்த முதியவர் கூறுகிறார்.

"ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் நிறைய மீன் பிடித்தோம். ஆனால் இப்போது எனது நான்கு பைர்களிடமிருந்து அரை கிலோ மீன் கிடைப்பதும் அரிது,” என்கிறார் தர்ராங் மாவட்ட அரிமாரி கிராமத்தில் 4ம் எண்ணில் தனது மனைவியுடன் வசிக்கும் முக்சத் அலி.

PHOTO • Mahibul Hoque
PHOTO • Mahibul Hoque

இடது: அரிமாரி கிராமத்தில் 4ம் எண்ணில் உள்ள அவரது வீட்டில் முக்சத் அலி, டார்கிகளை  காண்பிக்கின்றார். அருகில் உள்ள பள்ளியில் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரியும் மனைவிக்கு, மீன் விற்று உதவி செய்து வருகிறார். வலது: முக்ஸத் அலி முந்தைய இரவில் தான் அமைத்திருந்த மூங்கில் பொறிகளில் ஒன்றை சரிபார்க்கிறார். கடந்த மூன்று வருடங்களில், மீன்பிடியின் அளவு குறைந்துள்ளதால், நான்கு பொறிகள் வைத்தும், சில சமயங்களில் அரை கிலோ மீன் மட்டுமே கிடைக்கிறது

*****

பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் 166 செ.மீ மழையும், பராக் பள்ளத்தாக்கில் 183 செ.மீ மழையும் என அசாமில் ஏராளமாக மழை பொழிகிறது. தென்மேற்கு பருவமழை, ஏப்ரல் இறுதியில் தொடங்கி அக்டோபர் வரை நீடிக்கிறது. ஜலால் தனது வேலையை இதற்கு ஏற்ப அமைத்துக்கொள்கிறார். “நான் ஜோஷ்டி மாஷில் [மே நடுப்பகுதியில்] மீன்பிடி பொறிகளை உருவாக்கத் தொடங்குவேன், மக்கள் அசார் மாஷிலிருந்து [ஜூன் நடுப்பகுதியில்] பொறிகளை வாங்கத் தொடங்குவார்கள். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக மழை குறைந்ததால், மக்கள் வழக்கமாக வாங்கும் நேரத்தில் வாங்குவதில்லை,” என்கிறார்.

2023 இல் வெளியிடப்பட்ட உலக வங்கி அறிக்கையின்படி , அஸ்ஸாமில் வெப்பநிலை அதிகரிப்பு, ஆண்டு மழை குறைதல், மற்றும் கடும் வெள்ளம் போன்ற நிகழ்வுகள் ஏற்படும் என்று கூறுகிறது. காலநிலை மாற்றம், நீர்நிலைகளில் வண்டல் படிவத்தை அதிகரிக்கும் என்றும், அதனால, நீர்மட்டம் குறைந்து, மீன்களின் அளவும் குறையும் என்கிறது.

1990 முதல் 2019 வரை, ஆண்டு சராசரி அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 0.049 மற்றும் 0.013 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது என்று மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அரசாங்க அறிக்கை கூறுகிறது. தினசரி சராசரி வெப்பநிலை வரம்பு, 0.037 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளதோடு, இக்காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 மிமீ குறைவாக மழை பெய்துள்ளது.

“முன்பெல்லாம், மழை எப்போது பெய்யும் என்று எங்களுக்குத் முன்பே தெரியும். ஆனால் இப்போது கால மாற்றத்தால், அப்படி கணிக்க முடிவதில்லை. சில நேரம், குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்யும், சில சமயங்களில் மழையே பெய்யாது,” என்று ஜலால் சுட்டிக்காட்டுகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மழைக்காலத்தில், அவரைப் போன்ற ஒரு கைவினைஞர், ரூ.20,000 முதல் 30,000 வரை சம்பாதிக்க முடியும்.

ஜலால் அலி, மூங்கில் மீன்பிடி பொறியை உருவாக்குவதை இந்த வீடியோவில் பார்க்கலாம்

கடந்த ஆண்டு, அவர் சுமார் 15 பைர்களை விற்றார். ஆனால் இந்த ஆண்டு பழங்கால மூங்கில் மீன்பிடி பொறிகளை மக்கள் வாங்குவதற்கான வழக்கமான நேரமான ஜூன் நடுப்பகுதியிலிருந்து ஜூலை நடுப்பகுதி வரை, அவர் ஐந்து பைர்களை மட்டுமே விற்றுள்ளார் என்கிறார்.

வருமானம் குறைந்தது இவருக்கு மட்டுமில்லை. ஜோப்லா டைமேரி, உடலுரி மாவட்டத்தில் 79 வயதான செப்பா தயாரிப்பவர். அவர் கூறுகையில், ''மரங்களில் பலாப்பழங்கள் குறைவாக உள்ளன. வெப்பம் அதிகமாக உள்ளது, இதுவரை மழை இல்லை. இந்த ஆண்டு மழையை கணிக்கவும் முடியாது, எனவே நான் ஆர்டர்கள் வரும் வரை வேலையை துவங்க மாட்டேன். ஒரு செப்பாவை முடிக்கும் நிலையில், டைமேரி பாரியிடம் பேசுகிறார். வாடிக்கையாளர்கள் தனது வீட்டிற்கு வருவது கிட்டத்தட்ட நின்றுவிட்டதாகவும், மே 2024 இல், கோடை வெயிலில், நாங்கள் அவரைச் சந்தித்தபோது அவர் ஐந்து மீன்பிடி பொறிகளை மட்டுமே செய்துள்ளதாக கூறுகிறார்.

அஸ்ஸாமில் உள்ள மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான பலுகான் வாரச் சந்தையில், சுர்ஹப் அலி, பல தசாப்தங்களாக மூங்கில் பொருட்களைக் கையாளுகிறார். "ஜூலை முதல் வாரம் ஆகிவிட்டது. ஆனால் இந்த ஆண்டு நான் ஒரு பைரைக் கூட விற்கவில்லை," என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஜலால் தனது கைவினைப்பொருளின் கலை, மெதுவாக மறைந்து வருவதைக் காண்கிறார்: “யாரும் என்னிடம் இந்த கைவினையைக் கற்றுக்கொள்ள வருவதில்லை. மீன் இல்லாமல், இந்தக் கலையைக் கற்று என்ன பயன்? என்று தனது டார்கியை முடித்துக்கொண்டே, மௌசிதா-பலபாரி பட்டியலிடப்படாத பீல் (பெரிய சதுப்பு நிலம்) வழியாகச் செல்லும், மண் சாலையில் இருக்கும் தனது வீட்டின் பின்புறத்தில் இருந்து கொண்டு அவர் நம்மிடம் கேட்கிறார்.

PHOTO • Mahibul Hoque
PHOTO • Mahibul Hoque

இடது: ஜோப்லா டைமேரி தனது வீட்டின் முற்றத்தில் செப்பாக்களை செய்கிறார். உடல்குரி மாவட்டத்தைச் சேர்ந்த 79 வயது முதியவர் கூறுகையில், 'வெப்பம் அதிகமாக உள்ளது. இதுவரை மழை பெய்யவில்லை. இந்த ஆண்டு மழையும் கணிக்க முடியாததாக இருக்கும். எனவே நான் ஆர்டர்கள் வரும் வரை வேலையை துவங்க மாட்டேன்,’ என்கிறார்

PHOTO • Mahibul Hoque
PHOTO • Mahibul Hoque

இடது: சுர்ஹப் அலி பலுகான் வாரச் சந்தையில் மூங்கில் பொருட்களை விற்கிறார். அவர் வாடிக்கையாளர்கள் கிடைக்கவில்லை என்கிறார். வலது: சுர்ஹப் அலியின் கடையில் ஒரு பழங்கால மூங்கில் மீன்பிடி பொறி பார்வைக்கு வைக்கப்படுள்ளது. அந்த பொறிக்குள் இருந்து மீனை வெளியேற்றுவதற்கான வழி தெரிகிறது

*****

"நீங்கள் இந்த பொறிகளை உருவாக்க, சலிப்படையாமல், சிதறாத கவனத்தை கொண்டிருக்க வேண்டும்," என்று ஜலால் கூறுகிறார். இது இந்த பணிக்கு மிகவும் முக்கியமானது என்பதை வலியுறுத்துகிறார். "வேண்டுமென்றால், நீங்கள் மற்றவர் பேசுவதை கேட்கலாம். ஆனால் நீங்களும் பேச வேண்டும் என்றால், முடிச்சுகள் போடுவதை நீங்கள் நிறுத்த வேண்டும்." தொடர்ந்து கவனமாக வேலை செய்தால், இரண்டு நாட்களில் ஒரு பொறியை முடிக்க முடியும். "அவ்வப்போது நிறுத்தினால், நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை ஆகலாம்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்த பொறிகளை உருவாக்கும் செயல்முறை அதற்கான மூங்கிலை தேர்ந்தெடுப்பதில் இருந்து தொடங்குகிறது. மீன்பிடி பொறிகளை உருவாக்க, கைவினைஞர்கள், உள்ளூரில் கிடைக்கும். இடைக்கணுக்களுக்கு இடையில் அதிக நீளம் கொண்ட மூங்கில்களைப் பயன்படுத்துகின்றனர். பைர் மற்றும் செப்பா இரண்டும், மூன்று அல்லது மூன்றரை அடி நீளம் உள்ளவை. தொல்லா பாஷ் அல்லது ஜாதி பா (பாம்புசா துல்டா) அவற்றின் இணக்கத்தன்மைக்காக விரும்பப்படுகின்றன.

“பொதுவாக மூன்று அல்லது நான்கு வயது, முழுமையாக வளர்ந்த மூங்கில், இதற்கு அவசியம். இல்லையெனில் அந்த பொறி நீண்ட காலம் நீடிக்காது. இடைக்கணுக்கள், குறைந்தபட்சம் 18 முதல் 27 அங்குலங்கள் இருக்க வேண்டும். மூங்கில் வாங்கும் போது, பார்வையாலேயே அதை நான் சரியாக அளவிட வேண்டும்,” என்கிறார். "நான் அவற்றை ஒரு இடைக்கணுவின் முனையிலிருந்து மற்றொரு முனை வரை துண்டுகளாக வெட்டுவேன்," என்று ஜலால் தனது கையால், மெல்லிய சதுர மூங்கில் கம்பிகளை அளவிடுகிறார்.

மூங்கில் துண்டுகளாக வெட்டப்பட்டவுடன், ஜலால் மீன்பிடிப் பொறியின் பக்கச் சுவர்களில் நெய்வதற்கு நேர்த்தியான சதுர ஸ்லிப்களை உருவாக்குகிறார். "முன்பு, நான் காதியை [மெல்லிய மூங்கில் ஸ்லிப்கள்] நெசவு செய்ய சணல் சரங்களைப் பயன்படுத்தினேன். ஆனால் இப்போது எங்கள் பகுதியில் சணல் பயிரிடப்படாததால், பிளாஸ்டிக் நூல்களைப் பயன்படுத்துகிறேன்."

PHOTO • Mahibul Hoque
PHOTO • Mahibul Hoque

இடது: மூங்கில்களை வீட்டிற்கு கொண்டு வந்த பிறகு, ஜலால், இடைக்கணுக்களுக்கு இடையில 18 முதல் 28 அங்குலங்கள் நீளம் உள்ள மூங்கில்களை கவனமாக தேர்ந்தெடுக்கிறார். இது மெல்லிய, சதுர வடிவ ஸ்லிப்களை, மென்மையான மேற்பரப்புடன் உருவாக்க அனுமதிப்பதோடு, பின்னல் செயல்முறையை எளிதாக்கி,  மூங்கில் மீன்பிடி பொறிக்கு அழகான சமச்சீரான தோற்றத்தை கொடுக்கின்றது. வலது: 'காதிகளை ஒவ்வொன்றாக விரல்களால் எண்ணுகிறேன். நீளமான பக்கங்களுக்கு 280 மூங்கில் ஸ்லிப்கள் இருக்க வேண்டும். மண்ணின் அழுத்தத்தைத் தாங்க ஏதுவாக, 6 முதல் 9 அங்குலம் வரை இருக்கும் டார்கியின் அகலத்திற்கு, நான் 15 முதல் 20 தடிமனான செவ்வக ஸ்லிப்களைப் பயன்படுத்துகிறேன்,' என்கிறார் ஜலால்

PHOTO • Mahibul Hoque
PHOTO • Mahibul Hoque

இடது: 'பக்கச் சுவர்களை தோலியால் கட்டிவிட்டு, பக்கவாட்டுச் சுவரில் சால் கட்ட ஆரம்பித்தேன்,' என்கிறார் ஜலால். பின்னர் நான் பாராக்களை [மீன்கள் பொறிக்குள் நுழையும் வால்வுகளை] உருவாக்க வேண்டும். டார்கிகள் பொதுவாக மூன்று பாராக்களையும், செப்பாவுக்கு இரண்டு பாராக்களையும் கொண்டுள்ளது. வலது: ஒரு டார்கிக்கு, சிறந்த அளவு 36 அங்குல நீளம், 9 அங்குல அகலம் மற்றும் 18 அங்குல உயரம். செப்பா நடுத்தர பகுதியில் 12 முதல் 18 அங்குல உயரம் கொண்டது

ஜலால், 18 அங்குலம் அல்லது 27 அங்குல உயரம் கொண்ட 480 சதுர வடிவ மூங்கில் ஸ்லிப்களை உருவாக்க வேண்டும். "இது மிகவும் கடினமான வேலை," என்கிறார். " காதிகள் அளவு மற்றும் வடிவத்தில் சமமாகவும் மிகவும் மென்மையாக இருக்க வேண்டும். இல்லையெனில் நெய்த, பக்கவாட்டு  சுவர்கள் ஒரே மாதிரியாக இருக்காது." இதை உருவாக்க, அவருக்கு அரை நாள் ஆகும்.

மீன் உள்ளே நுழைந்து பிடிபடும், வால்வுகளை உருவாக்குவது மிகவும் முக்கியம். "ஒரு மூங்கிலில் இருந்து நான் நான்கு பைர்களை உருவாக்க முடியும். அதற்கு சுமார் 80 ரூபாய் செலவாகும். பிளாஸ்டிக் சரத்தின் விலை சுமார் 30 ரூபாய் ஆகும்," என்று ஜலால் கூறுகிறார். அவர் வடிவமைக்கும் டார்கியின் மேல் முனைகளில் முடிச்சு போடுவதற்காக தனது பற்களுக்கு இடையில் ஒரு அலுமினிய கம்பியை வைத்திருந்தார்.

மூங்கில் ஸ்லிப்களின் பின்னல் மற்றும் முடிச்சிற்கு, நான்கு நாட்கள் தீவிர உழைப்பு தேவைப்படும். “சரம் மற்றும் மூங்கில் ஸ்லிப்களில் இருந்து உங்கள் கண்களை எடுக்க முடியாது. நீங்கள் ஒரு தடியைப் பின்னுவதைத் தவறவிட்டால், இரண்டு மூங்கில் ஸ்லிப்கள் ஒரு முடிச்சிற்குள் நுழையக்கூடும். மேலும் நீங்கள் ஆரம்பித்த புள்ளி வரை அவிழ்த்துவிட்டு மீண்டும் பின்னல் செயல்முறையை செய்ய வேண்டும்,” என்று அவர் விளக்குகிறார். "இது வலிமையைப் பற்றியது அல்ல, ஆனால் சில இடங்களில் போட வேண்டிய மிகவும் நுட்பமான பின்னல் மற்றும் முடிச்சுகளை பற்றியது. ஆழ்ந்து கவனிப்பதால், தலை முதல் கால் வரை, வியர்வை வழிந்தோடுகிறது.”

குறைந்த மழை மற்றும் குறைவான மீன்கள் காரணமாக, ஜலால் தனது கைவினைக்கலையின் எதிர்காலம் பற்றி கவலை கொள்கிறார். "இவ்வளவு பொறுமையும், விடாமுயற்சியும் தேவைப்படும் இந்த கைவினையை, யார் கற்றுக்கொள்ள விரும்புவார்கள்?" என்று கேட்கிறார்.

இந்தக் கட்டுரை மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளை (MMF) மானியத்தின் ஆதரவில் எழுதப்பட்டது.

தமிழில் : அஹமத் ஷ்யாம்

Mahibul Hoque

Mahibul Hoque is a multimedia journalist and researcher based in Assam. He is a PARI-MMF fellow for 2023.

Other stories by Mahibul Hoque
Editor : Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Translator : Ahamed Shyam

Ahamed Shyam is an independent content writer, scriptwriter and lyricist based in Chennai.

Other stories by Ahamed Shyam