"மிர்ச்சி மே ஆக் லக் கயி [மிளகாய் எரிகிறது]."
டிசம்பர் 2, 1984 அன்று இரவு, போபாலில் வசிக்கும் நுஸ்ரத் ஜஹான் உறங்கிக் கொண்டிருக்கும் போது மூச்சுவிட முடியாமல் கண் விழித்தார். கண் எரிச்சலுடன், கண்ணீர் வழிந்தது. சிறிது நேரத்தில் அவரது ஆறு வயது மகனும் அழ ஆரம்பித்தான். அழுகை சத்தம், அவரது கணவர் முகமது ஷஃபீக்கையும் எழ வைத்தது.
"கயாமத் கா மன்சர் தா" [பார்க்க பேரழிவு போன்று இருந்தது]," என்று தற்போது 70 வயதாகும் ஷஃபீக் கூறுகிறார். நவாப் காலனியில் உள்ள தனது வீட்டில் அமர்ந்து, போபால் வாயு பேரழிவு (BGD) நிகழ்வுகளை நினைவுகூருகிறார். மத்தியப் பிரதேசத்தின் தலைநகரில் இந்த நிகழ்வு நடந்து இன்றோடு 40 ஆண்டுகள் ஆகிறது.
காகித ஆலை ஒன்றில் தினசரி கூலித் தொழிலாளியாக பணியாற்றும் ஷஃபீக், நச்சு வாயுக்களின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தின் சிகிச்சைக்காக, அடுத்த சில வருடங்களை அவநம்பிக்கையுடன் செலவிட வேண்டியிருந்தது. இதைத் தாண்டி, 18 வருடங்களாக அவர்கள் பயன்படுத்திய, அவர்களின் நீர் தேவைக்கு ஒரே ஆதாரமாக இருந்த, நச்சுக் கலந்த கிணற்று நீரும், இவர்களின் நிலையை இன்னும் மோசமாக்கி இருந்தது. அந்த நீர் அவரது கண்களுக்கு எரிச்சலூட்டியது. ஆனால் அவர்களுக்கு வேறு நீர் ஆதாரம் இல்லை என்று அவர் கூறுகிறார். 2012 ஆம் ஆண்டில் தான் சம்பவ்னா டிரஸ்ட் கிளினிக் தண்ணீரைச் சோதித்து, அதில் உள்ள நச்சுக் கூறுகளைக் கண்டறிந்தது. இதையடுத்து மாநில அரசு, அப்பகுதியில் உள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மூடியது.
1984 ஆம் ஆண்டு இரவு, ஷஃபீக்கின் வீட்டில் அசௌகரியத்தை ஏற்படுத்திய நச்சு வாயு, அப்போது பன்னாட்டு யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனுக்கு (UCC) சொந்தமான யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் (UCIL) தொழிற்சாலையில் இருந்து வெளியேறி இருந்தது. டிசம்பர் 2 ஆம் தேதி இரவு கசிவு ஏற்பட்டது - UCIL தொழிற்சாலையில் இருந்து கசிந்த அதிக நச்சுத்தன்மை வாய்ந்த மெத்தில் ஐசோசயனேட்டின், உலகின் மிக மோசமான தொழில்துறை பேரழிவாகக் கருதப்படுகிறது.
"அதிகாரப்பூர்வ ஆதாரங்கள், உடனடி மனித இறப்பு எண்ணிக்கை சுமார் 2,500 ஆக இருக்கும் என்று மதிப்பிட்டது. ஆனால் மற்ற ஆதாரங்கள் (டெல்லி அறிவியல் மன்றத்தின் அறிக்கை) இறப்பு எண்ணிக்கை, இதை விட குறைந்தது இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று கூறுகிறது" என்று தி லீஃப்லெட்டில் உள்ள அறிக்கை கூறுகிறது.
நச்சு வாயு, போபால் நகரம் முழுவதும் பரவியது. இருப்பினும் ஷஃபீக்கின் குடும்பம் போன்று தொழிற்சாலைக்கு அருகில் வசித்தவர்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். நகரின் 36 வார்டுகளில் கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
பதட்டத்தில், தனது குழந்தைக்கு சிகிச்சை பெற, ஷஃபீக் முதலில் அவர்களது வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹமீதியா மருத்துவமனைக்குச் சென்றார்.
"லாஷேன் படி ஹுயி தி வஹான் பே [அங்கு எல்லா இடங்களிலும் சடலங்கள் இருந்தன]," என்று அவர் நினைவுகூருகிறார். நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற வந்திருந்தனர். அலை மோதிய கூட்டத்தால், மருத்துவ ஊழியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல், திணறிக் கொண்டிருந்தனர்.
"மாதே பே நாம் லிக் தேதே தி [இறந்தவர்களின் பெயரை அவர்கள் நெற்றியில் எழுதுவார்கள்]," என்று குவிந்து கிடந்த உடல்கள் கையாளப்பட்டதை அவர் நினைவுகூருகிறார்.
மருத்துவமனையிலிருந்து சாலையின் குறுக்கே சாப்பிடுவதற்காக, இமாமி கேட் வழியே ஷஃபீக் வந்தபோது, அவரது ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டார்: அவர் சாப்பிடக் கேட்டிருந்த டால் வந்திருந்தது, ஆனால் அது நீல நிறமாக இருந்தது. " ராத் கி டால் ஹை, பையா [இது நேற்று இரவு உணவு, தம்பி]." நச்சு வாயு, அதன் நிறத்தை மாற்றியிருந்தது. அதன் சுவையையும் புளிப்பாக்கியிருந்தது.
"யுசிஐஎல்லில் அபாயகரமான நச்சு இரசாயனங்கள் பெருமளவில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதால், போபாலில் பேரழிவு ஏற்படக்கூடும் என உணர்ந்து UCC [யூனியன் கார்பைடு நிறுவனம்] அதிகாரிகளும், அரசாங்க அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் முற்றிலும் புறக்கணித்த விதம் அதிர்ச்சியளிக்கிறது,” என என்.டி.ஜெயபிரகாஷ் தி லீஃப்லெட்டில் எழுதியுள்ளார். ஜெயப்பிரகாஷ், டெல்லி அறிவியல் மன்றத்தின் இணைச் செயலாளராக உள்ளார். மேலும் இந்த வழக்கை ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து வருகிறார்.
போபால் விஷவாயு பேரழிவிற்குப் பிறகு, பல தசாப்தங்களாக சட்டப் போராட்டங்கள் தொடர்ந்தன. பேரழிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடும், பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ பதிவுகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கைகளாக இருந்தது. 1992-ல், இப்போது UCC-ஐ சொந்தமாக வைத்திருக்கும் டோவ் கெமிக்கல் நிறுவனத்தின் மீதும், 2010-ல் UCIL மற்றும் அதன் அதிகாரிகள் மீதும் என, இரண்டு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இரண்டு வழக்குகளும் போபால் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன என்கிறார் ஜெயபிரகாஷ்.
2010-ல் பேரழிவில் தப்பியவர்கள், போபாலில் இருந்து டெல்லி வரை நடந்து சென்ற, டில்லி சலோ அந்தோலன் பேரணியில் ஷஃபீக் பங்கேற்றார். “ இலாஜ் [சிகிச்சை], முஅஃப்ஸா [இழப்பீடு] அவுர் சாஃப் பானி [சுத்தமான நீர்] கே லியே தா ,” என்று அவர் கூறுகிறார். தலைநகரில் உள்ள ஜந்தர் மந்தரில் 38 நாட்கள் அமர்ந்திருந்த அவர்கள், பிரதமர் இல்லத்திற்குள் நுழைய முயன்ற போது, அங்குள்ள போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
"பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், முக்கியமாக இரண்டு வழக்குகளுக்காக போராடினர். ஒன்று, இந்திய உச்ச நீதிமன்றத்தின் (SC) முன் உள்ள ஒரு வழக்கு, மற்றொன்று ஜபல்பூரில் உள்ள மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் முன் உள்ள வழக்கு,” என்று உறுதி செய்கிறார், போபால் எரிவாயு பீடித் சங்கர்ஷ் சஹயோக் சமிதியின் (போபால் வாயு பாதிக்கப்பட்டவர்களை ஆதரிக்கும் கூட்டணி) இணை-ஒருங்கிணைப்பாளரான, N.D. ஜெயபிரகாஷ்.
*****
" பேட் காலே ஹோ கயே தி, பட்டே ஜோ ஹரே தி, நீலே ஹோ கயே, தூவா தா ஹர் தரஃப் [மரங்கள் கருப்பாக மாறியிருந்தன, பச்சை இலைகள் நீலமாக மாறியிருந்தன, எங்கும் புகையாக இருந்தது]" என்று கல்லறையாக மாறியிருந்த நகரத்தை நினைவுகூருகிறார், தாஹிரா பேகம்.
"அவர் [என் தந்தை] எங்கள் வீட்டு வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தார்," என்று அந்த இரவை நினைவுகூருகிறார். " கராப் ஹவா [கெட்ட காற்று] வீசத் தொடங்கியதும், அவருக்கு இருமல் வந்து விழித்தெழுந்தார். உடனடியாக ஹமீதியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்." மூன்று நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், "சுவாசப் பிரச்சனை முழுமையாக குணமாகவில்லை. மூன்று மாதங்களில் இறந்துவிட்டார்" என்கிறார் தாஹிரா. அவரது குடும்பத்திற்கு ரூ. 50,000 இழப்பீடு கிடைத்தது. நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் வழக்குகள் பற்றி அவருக்குத் தெரியவில்லை.
இந்த சோக நிகழ்வுக்கு பிறகு, நகரவாசிகள் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக பெரும் புதைகுழிகளைத் தோண்டினர். அத்தகைய ஒரு புதை குழியில், அவரது தந்தைவழி அத்தை, உயிருடன் மீட்கப்பட்டார். "எங்கள் உறவினர்களில் ஒருவர், அவரை அடையாளம் கண்டு வெளியே இழுத்தார்," என்று அவர் நினைவுகூருகிறார்.
யுசிஐஎல் தொழிற்சாலையில் இருந்து சற்று தொலைவில், சக்தி நகரில் உள்ள அங்கன்வாடியில் தாஹிரா 40 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். பேரழிவிற்கு தன் தந்தையை இழந்த, ஒரு வருடம் கழித்து, அவர் இங்கே சேர்ந்துள்ளார்.
தந்தையின் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு, அவரது குடும்பம் ஜான்சிக்கு சென்றிருந்தது. 25 நாட்களுக்குப் பிறகு அவர்கள் திரும்பி வந்தபோது, " சிர்ஃப் முர்கியன் பச்சி தி, பாக்கி ஜான்வர் சப் மார் கயே தி [கோழி மட்டும் உயிர் பிழைத்திருந்தது, மற்ற விலங்குகள் அனைத்தும் இறந்திருந்தன]," என்று தாஹிரா கூறுகிறார்,
அட்டைப்படம், ஸ்மிதா காட்டோர்.
இந்தப் கட்டுரைக்கு உதவிய பேராசிரியர் சீமா ஷர்மா மற்றும் போபாலின் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மோஹித் காந்தி ஆகியோருக்கு பாரியின் நன்றி.
தமிழில் : அஹமத் ஷ்யாம்