“தண்ணீ வாங்கலையோ! தண்ணீ…!”
பாத்திரங்களை எடுத்து வர ஓடி விடாதீர்கள். இந்த குடிநீர் வாகனம் சிறியது. பழைய ரப்பர் செருப்பு, சிறிய பிளாஸ்டிக் குழாய் மற்றும் குச்சிகள் ஆகியவற்றுடன் பிளாஸ்டிக் குடுவையில் செய்யப்பட்ட, இந்த குடிநீர் வாகனம் ஒரு கோப்பை நீர்தான் சுமக்க முடியும்.
பல்வீர் சிங், பவானி சிங், கைலாஷ் கன்வார் மற்றும் மோதி சிங் ஆகியோர் சன்வதாவை சேர்ந்த குழந்தைகள். 5 முதல் 13 வயது வரை நிறைந்த அக்குழந்தைகள், வாரத்துக்கு இருமுறை வரும் குடிநீர் வாகனம் பெற்றோருக்கும் கிராமத்தின் பிறருக்கும் கொடுக்கும் சந்தோஷத்தைப் பார்த்து இந்த பொம்மையை செய்திருக்கின்றனர். ராஜஸ்தானின் கிழக்கு மூலையில் இருக்கிறது இக்கிராமம்.
பல மைல்களுக்கு காய்ந்த நிலம், நிலத்தடி நீர் இன்றி இங்கு பரந்திருக்கிறது. சில குளங்கள் மட்டும்தான் சுற்றியிருக்கும் ஒரான் களில் (புனித தோப்புகளில்) இருக்கின்றன.
குடிநீர் வாகனத்துக்கு பதிலாக சமயங்களில், ஒரு பிளாஸ்டிக் குடுவையை பாதியாக அறுத்து லாரி போல குழந்தைகள் பயன்படுத்துகின்றனர். பொம்மை செய்யும் முறை குறித்து விசாரிக்கையில், பொம்மைக்கான பல பொருட்களை சேகரிப்பது கஷ்டமென்பதால், அவற்றை தேடி அலைய வேண்டியிருக்கும் என சொல்கின்றன குழந்தைகள்.
உறுதியான சட்டகம் தயாரானதும், அசைந்தாடும் சக்கரங்களுடனான பொம்மையை, ஒரு வயரைக் கொண்டு இழுத்து கெர் மரத்தை சுற்றி அவரவர் வீடுகளுக்கு கொண்டு செல்கின்றனர். அவை யாவும் கூப்பிடு தூரத்தில்தான் இருக்கின்றன.
தமிழில்: ராஜசங்கீதன்