சுகுமார் பிஸ்வாஸ் சாதாரண இளநீர் வியாபாரி இல்லை. “உணவு இல்லாமல் என்னால் வாழமுடியும். ஆனால், பாடாமல் என்னால் வாழ முடியாது,” என்று கூறும் அவரது இசைக் காதல், தாகம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இளநீரை வெட்டும்போதுகூட நிற்பதில்லை. மேற்கு வங்கத்தின் சாந்திபூரில் உள்ள லங்காபுரா பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அவர் ‘தாப்தாது’ (இளநீர் தாத்தா) என்றே அறியப்படுகிறார்.
அந்த 70 வயது மனிதர், பச்சை இளநீரை வெட்டி ஸ்டிரா போட்டுத் தருகிறார். குடித்து முடித்தவுடன், காயை இரண்டாக வெட்டி, வழுக்கையை வழித்துத் தருகிறார். நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிக்கொண்டே இவை எல்லாவற்றையும் செய்கிறார். லாலோன் ஃபக்கீர் போன்ற ஞானிகள் மற்றும் இசைக் கலைஞர்கள் ஷா அப்துல் கரீம், பாபா கெய்ப்பா போன்றோர் இசையமைத்த பாடல்களை அவர் பாடுகிறார். வாழ்க்கையின் பொருளை இந்தப் பாடல்களில் பார்ப்பதாக கூறும் அவர், ஒரு பாடலை பாரிக்காக விளக்குகிறார்: “உண்மை என்பது என்ன என்று அறிந்தால்தான் அந்த உண்மையை நம்மால் அடைய முடியும். அப்படி உண்மையை அறிய நமக்குள் நாம் நேர்மையாக இருக்க வேண்டும். வஞ்சகம் துறந்தால்தான் நாம் பிறரை நேசிக்க முடியும்.”
ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு தன் டோலியை (மூன்று சக்கர சைக்கிளில் இணைக்கப்பட்ட வேன்) ஓட்டிக்கொண்டு செல்லும்போதும் அவர் பாடிக்கொண்டே செல்கிறார். அவரது பாட்டு கேட்டு, அவர் அந்தப் பகுதிக்கு வந்திருப்பதைத் தெரிந்து கொள்கிறார்கள் மக்கள்.
“சிலர் இளநீர் வாங்க மாட்டார்கள். ஆனால், சிறிது நேரம் நின்று என் பாட்டைக் கேட்டுவிட்டுச் செல்வார்கள். அவர்கள் வாங்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. நிறைய விற்பனை ஆகவேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. அதில் எனக்கு மகிழ்ச்சிதான்,” என்கிறார், வாடிக்கையாளர்களுக்கு வேண்டியதைச் செய்துகொண்டே.




