அதிகாலை 3 மணி. கிழக்கிந்திய கடற்கரை. டார்ச் லைட் வெளிச்சத்தில் ரமோலு லஷ்மய்யா ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை தேடுகிறார். ஒரு நீளமான குச்சியும் பக்கெட்டும் வைத்திருக்கும் அவர், ஜலாரிப்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டுக்கும் ஆர்கே கடற்கரைக்கும் இடையே உள்ள மணல் பாதையில் மெதுவாக நடக்கிறார்.
ஆலிவ் ரிட்லி பெண் ஆமைகள் முட்டையிட கரைக்கு வரும். விசாகப்பட்டணத்தின் மணற்பாங்கான சரிந்த கடற்கரைகளும் நல்ல கூடாக அவற்றுக்கு இருக்கிறது. 1980களிலிருந்து அந்த ஆமைகள் இங்கு தட்டுப்பட்டு வருகின்றன. ஆனால் சில கிலோமீட்டர் வடக்கே இருக்கும் ஒடிசா கடற்கரைதான் நாட்டின் பெரும் கூட்டுப் பகுதியாக இருக்கிறது. பெண் ஆமைகள் ஒரு நேரத்தில் 100-150 முட்டைகள் போடுகின்றன. அவற்றை ஆழமான மணற்குழிகளில் புதைக்கின்றன.
“மணல் உதிரியாக இருந்தால், தாய் ஆமை அங்கு முட்டைகளிடும்,” என விளக்குகிறார் குச்சியைக் கொண்டு எச்சரிக்கையாக மணலை கிளறும் லஷ்மய்யா. அவருடன் கர்ரி ஜல்லிபாபுவும் புட்டியபனா யெர்ரனாவும் புல்ல பொலாராவும் இருக்கின்றனர். ஜலாரி சமூகத்தை (ஆந்திராவின் பிற பிற்படுத்தப்பட்ட சாதி) சேர்ந்த மீனவர்கள் அவர்கள். 2023ம் ஆண்டு, ஆந்திரப்பிரதேச வனத்துறையின் (APFD) பகுதி நேரக் காவலர் வேலையில் சேர்ந்த அவர்கள், கடலோர ஆமை பாதுகாப்பு திட்டத்தில் பணிபுரிகின்றனர்.
ஆலிவ் ரிட்லி ஆமைகளை ‘பாதிப்புக்குள்ளான இனம்’ என சர்வதேச இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தின் Red List வரையறுத்திருக்கிறது. இந்திய வன உயிர் பாதுகாப்பு சட்டப்பிரிவு 1-ன் கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
கடலோர அழிவு போன்றவற்றால் ஆமைகள் சிக்கலை எதிர்கொள்கின்றன. “குறிப்பாக வளர்ச்சி என்கிற பெயரிலும் காலநிலை மாற்றத்தாலும் அழிவுக்குள்ளாகும் கடலுயிர் வசிப்பிடங்கள் அவற்றுக்கு சிக்கலை கொடுக்கின்றன,” என்கிறார் விசாகப்பட்டிணத்தில் இருக்கும் கம்பலக்கொண்டா வன உயிர் சரணாலயத்தின் திட்ட அறிவியலாளரான யக்னபதி அதாரி. கறிக்காகவும் முட்டைகளுக்காகவும் கடல் ஆமைகளும் வேட்டையாடப்படுகின்றன.















