முப்பது வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் கணேஷ் பண்டிட், புது டெல்லியில் பழைய யமுனா பாலத்தருகே இருக்கும் லோஹா புல் பகுதியில் வசிக்கும் இளையவர் ஆவார். அவரின் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், நீச்சல் பயிற்சியாளர் மற்றும் கடைப் பணியாளர் போன்ற பிரதான வேலைகளுக்கு செல்லவே விரும்புவதாக சொல்கிறார் அவர்.
டெல்லியில் ஓடும் யமுனா, கங்கையின் நீளமான துணை ஆறு ஆகும். (காகராவுக்கு பின்னான) இரண்டாவது பெரிய ஆறு அது.
யமுனையில் புகைப்படம் எடுக்க விரும்புபவர்களுக்கு புகைப்பட பதிவுகளை ஒருங்கிணைத்துக் கொடுக்கும் பண்டிட், ஆற்றின் நடுவே சடங்குகள் செய்ய விரும்புபவரை படகில் கொண்டு செல்லும் வேலையையும் செய்கிறார். “அறிவியல் தோற்கும் இடத்தில், நம்பிக்கை செயலாற்றுகிறது,” என்கிறார். அவரின் தந்தை இங்கு புரோகிதராக இருக்கிறார். அவரும் இரு சகோதரர்களும் யமுனையில்தான் நீச்சல் கற்றிருக்கின்றனர். பண்டிட்டின் சகோதரர்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலில் லைஃப் கார்டுகளாக வேலை பார்க்கின்றனர்.
படகோட்டுதல், நல்ல வருமானம் கொண்ட தொழிலாகவும் மதிப்புமிக்க வேலையாகவும் இல்லாது இருப்பதால், யாரும் தங்களின் மகளை படகோட்டிக்கு மணம் முடித்து தர விரும்புவதில்லை என்கிறார் அந்த இளைஞர். அவருக்கு புரியவில்லை. “நாளொன்றுக்கு 300-500 ரூபாயை படகோட்டி சம்பாதிக்கிறேன்.” ஆற்றில் ஃபோட்டோ மற்றும் வீடியோ ஷூட் ஒருங்கிணைத்துக் கொடுத்தும் கணிசமான வருமானம் ஈட்டுகிறார் பண்டிட்.
பத்தாண்டு காலமாக படகோட்டி வரும் அவர், ஆறு மாசுபடுவதை பற்றி புலம்புகிறார். செப்டம்பர் மாத மழை வந்து அழுக்கை அடித்து செல்லும்போது மட்டும்தான் ஆறு சுத்தமாகிறது என்கிறார் அவர்.
தலைநகரிலிருந்து 22 கிலோமீட்டர் (1.6 சதவிகிதத்துக்கு) தூரத்துக்கு யமுனா ஓடுகிறது. ஆனால் இந்த சிறு தூரத்தில் கொட்டப்படும் கழிவுகள், 1,376 கிமீ நீள ஆற்றின் 80 சதவிகித மாசுபாடுக்குக் காரணமாக இருக்கிறது. வாசிக்க: யமுனையில் 'இறந்த மீன்களும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்'
தமிழில் : ராஜசங்கீதன்