கிட்டத்தட்ட நடு இராத்திரி வேளை. தமிழ்நாட்டில் உள்ள வடநெம்மேலி கிராமம் அது. ஸ்ரீ பொன்னியம்மன் தெருக்கூத்து மன்றத்தை சேர்ந்த கலைஞர்கள் எல்லோரும் காரியக்கூத்து நிகழ்த்த தயாராகிக் கொண்டிருந்தனர். வழக்கம்போல இதுவும் பல கதாபாத்திரங்களோடும் ஒப்பனையோடும் விடிய விடிய நடக்கும் கூத்து.

திரைச்சீலைக்கு பின்னால் 33 வயதான சர்மி ஒப்பனை செய்து கொண்டிருந்தார். சிவப்பு பொடியோடு எண்ணெய் கலந்து தனக்கான அதரப்பூச்சை (லிப்ஸ்டிக்) தயாரித்துக் கொண்டே அரிதாரம் பூசுவதற்கான அடிப்படை வழிமுறைகளை விளக்கினார்: “அரிதாரம் ஆம்பள வேசத்திற்கும் பொம்பள வேசத்திற்கும் வேற வேற. அந்தந்த கதாப்பாத்திரத்திற்கு தகுந்த மேக்கப் தான் போடுவோம். நடிக்கப்போற காட்சி நேரம் குறைவா இருந்தா அதுக்கு தகுந்த மாதிரி மேக்கப் போடுவோம்”

தமிழ்நாட்டின் பழமையான நிகழ்த்துக் கலையான தெருக்கூத்தை நிகழ்த்தி வரும் ஸ்ரீ பொன்னியம்மன் தெருக்கூத்து மன்றத்தில் 17 கலைஞர்கள் இருக்கிறார்கள். அதில் 4 திருநங்கை கலைஞர்களுள் ஒருவர்தான் சர்மி. “எனக்கு தெரிஞ்சு என்னோட முன்னோர்கள் கூத்து பண்ணிருக்காங்க. அவங்களுக்கு முன்னாடியும் பண்ணிருக்காங்க. இது எவ்ளோ பழமையான கலைன்னு சரியா சொல்ல தெரியல,” என்றார் சர்மி.

வீதிகளில் நடத்தப்படும் தெருக்கூத்து பெரும்பாலும் இராமாயண மகாபாரத புராணங்களை தழுவி இரவு முழுவதும் நிகழ்த்தக்கூடியது. பங்குனி(ஏப்ரல்) முதல் புரட்டாசி(செப்டெம்பர்) வரை தெருக்கூத்தின் விழாக்காலங்கள். இந்த காலத்தில் சர்மியும் மற்ற கலைஞர்களும் வாரத்தில் முக்கால்வாசி நாட்களில் கூத்து நிகழ்த்துவார்கள். அப்படி நிகழ்த்தினால் மாதத்திற்கு 15-20 கூத்துகள் ஆடுவார்கள். இவர்களுக்கு ஒரு கூத்திற்கு ரூபாய் 700-800 சம்பளம் கிடைக்கும். அப்படியாக ஒரு கலைஞருக்கு மாதம் தலா 10,000 – 15,000 வரை வருமானம் கிடைக்கும்.

விழாக்காலங்கள் முடிந்துவிட்டால், கலைஞர்கள் அனைவரும் வேறு வழியின்றி வருமானத்திற்காக மற்ற வேலைகளுக்கு செல்ல வேண்டும். சடங்காக நடத்தப்படும் காரியக்கூத்து கூட இழவு வீடுகளில் மட்டுமே நிகழ்த்தப்படும். “யாராவது செத்தா, எங்களுக்கு ஒன்னு, ரெண்டு கூத்து கொடுக்கும்,” என்று கூறும் சர்மி தனது கூத்து கம்பெனியின் சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப்பெருமந்தூரில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் பயணப்பட்டு வடநெம்மேலி கிராமத்திற்கு காரியக்கூத்து நிகழ்த்த வந்துள்ளார்.

PHOTO • Akshara Sanal
PHOTO • Akshara Sanal

சர்மி, வடநெம்மேலி கிராமத்தில் தெருக்கூத்திற்கு தயாராகிறார். கடந்த நான்கு வருடங்களாக வீதிகளில் நிகழ்த்தப்படும் தெருக்கூத்து கலையை ஆடிவருகிறார் சர்மி

PHOTO • Akshara Sanal
PHOTO • Akshara Sanal

சிவப்பு பொடியோடு எண்ணெய் கலந்து தனக்கான அதரப்பூச்சை(லிப்ஸ்டிக்) தயாரித்துக் கொண்டே அரிதாரம் பூசுவதற்கான அடிப்படை வழிமுறைகளை விளக்கினார்: 'அரிதாரம் ஆம்பள வேசத்திற்கும் பொம்பள வேசத்திற்கும் வேற வேற. அந்தந்த கதாப்பாத்திரத்திற்கு தகுந்த மேக்கப் தான் போடுவோம். நடிக்கபோற காட்சி நேரம் குறைவா இருந்தா அதுக்கு தகுந்த மாதிரி மேக்கப் போடுவோம்'

கூத்திற்கான இடம் தயாரானது. இழவு(இறந்தவர்) வீட்டிற்கு வெளியே வீதியில் கருப்பு துணி விரிக்கப்பட்டு சாமியானா கூடாரம் அமைக்கப்பட்டு இருந்தது. இறந்தவரின் புகைப்படம் வீட்டிற்கு முன் வைக்கப்பட்டு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. அதன் அருகில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த மேசைகளும் இருக்கைககளும் பாத்திரங்களும் அங்கு உணவளிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்தன.

“ஊர் அடங்கிடுச்சு, இப்போ மேளம் கட்டுவோம். எடுப்பா இருக்கும். அப்போதான் எல்லாருக்கும் கேக்கும். அப்படியே நாங்க மேக்கப் போட ஆரம்பிச்சுருவோம்” என்றார் சர்மி. கூத்து பத்து மணிக்கு முடி (தெருக்கூத்து கிரீடம்) பூசையோடு தொடங்கும். “கூத்துக்கு மரியாதை செய்யவும், அப்ரோம் கூத்து நல்லபடியாக முடிஞ்சு கலைஞர்கள் எல்லோரும் நல்ல படியா வீடு திரும்பனும் அப்படிங்கறக்காகவும் முடிக்கு பூசை போடுறோம்” என்று கூத்திற்கு முன்பு பூசை போடுவது ஒரு சடங்கு என்றார்.

இன்று அவர்கள் நிகழ்த்த இருக்கும் நாடகம் மின்னலொளி சிவபூசை. இது மகாபாரதத்தோடு தொடர்புடைய கதை. பாண்டவர்களுள் ஒருவனான அர்ச்சுனன் மற்றும் அவனது எட்டு மனைவிகள் பற்றியது. “நா இந்த கதைல எல்லா வேசமும் ஆடுவேன். இன்னைக்கு நா போகவதி ஆடறேன்” என்றவாறு கதையை சுருக்கமாக சொல்ல தொடங்கினார்.

மின்னலொளி, அர்சுனன் மனைவி எட்டு பேரில் ஒருவர். மேகலோகம் எனும் மேல் உலகத்தில் அரசன் மேகராசனுக்கும் அரசி கொடிக்கலாதேவிக்கும் பிறந்தவள். மின்னலொளி ஐந்து வயதாக இருக்கும் போது அர்ச்சுனனுக்கு குழந்தை திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். பின் அவளுக்கு பருவம் வர தன் கணவன் யாரென பெற்றோரை கேட்கிறாள். 48 நாட்கள் சிவபூசை செய்தால் கணவனை காணலாம் என்று சொல்லியதும் சிவப்பூசையை குறையின்றி செய்து வருகிறாள். 48ஆவது நாள் சிவபூசை முடிவதற்குள் அர்ச்சுனன் அவளை காண வர, சிவ பூசை தடைப்படும் என தவிர்த்தாள். அர்ச்சுனன் கேட்க மறுக்கிறான். அதன் பிறகு நடக்கும் திருப்புமுனைகளே கதை. இறுதியில் கிருஷ்ணரின் திட்டப்படி மின்னலொளியும் அர்ச்சுனனும் மீண்டும் இணைகிறார்கள்.

PHOTO • Akshara Sanal
PHOTO • Akshara Sanal

இடது: கூத்து பத்து மணிக்கு முடி (தெருக்கூத்து கிரீடம்) பூசையோடு தொடங்கும்.  வலது: கூத்திற்கான இடம் தயாரானது

கருப்பு மை எடுத்து உதட்டு மேல் போட ஆரம்பித்தார் சர்மி. “பொதுவா எல்லாரும் உதடுக்கு மை எழுத மாட்டாங்க. என்னைய பாத்து நிறைய பேர் எழுத ஆரம்பிச்சுருக்காங்க. பாக்கறவங்க நீ பொம்பளையானு கேக்கற அளவுக்கு மேக்கப் போட கத்துக்கிட்டே. நா மேக்கப் பண்ணிட்டு போனா ஆம்பளைங்க நம்மள பார்த்திடனும். அந்த அளவுக்கு வெறி எனக்கு மேக்கப் பண்றதுல”.

சர்மிக்கு ஒப்பனை செய்து கொள்வதில் அத்தனை ஆர்வம். ஒப்பனை மற்றும் அலங்காரம் பற்றிய 6 மாத சான்றிதழ் படிப்பு கூட பெற்றுள்ளார். “ஆனாலும் நா திருநங்கை ஆகறக்கு முன்னாடி பொம்பளைகளுக்கு மேக்கப் போட என்னைய விடமாட்டாங்க”

சர்மி அரிதாரம் பூசி கூத்து ஒப்பனை முடிக்க ஒன்றரை மணி நேரம் ஆனது. இறுதியாக புடவை கட்டி போகவதியாக மாறினார். “ பொடவ கட்ட யாரும் எனக்கு சொல்லி தரல. நானே பொடவ கட்டுனேன்… நானே மூக்கு குத்துனேன், நானே காது குத்துனேன். எல்லாம் நானே கத்துக்கிட்டேன்”

“எனக்கு ஆபரேஷன் மட்டும் தான் டாக்டர் பண்ணாங்க. அதுக்கூட என்னால பண்ண முடிஞ்சிருந்தா, நானே பண்ணிருப்பேன். அது முடியாதனால தான் ஆஸ்பத்திரி போயி ஐம்பதாயிரம் செலவு பண்ணேன்” என்று 23 வயதில் தான் செய்து கொண்ட பாலின உறுதி அறுவை சிகிச்சை குறித்து பகிர்ந்து கொண்டார்.

“மத்த பொம்பளைங்க போல நாங்க பொடவ கட்டறது அவ்ளோ சாதாரணம் இல்ல. ஒரு திருநங்கையா பொடவ கட்டிட்டு தெருவுல போறதே போராட்டம் தான். கூத்து கலைஞரா இருக்கறதால சனங்க மதிக்கறாங்க,” என்று தனது கலைத்தொழில் மற்ற திருநங்கைகள் படும் கேலி கிண்டல்களில் இருந்து தன்னை பாதுகாக்கிறது என்கிறார்.

PHOTO • Akshara Sanal
PHOTO • Akshara Sanal

சர்மி அரிதாரம் பூசி கூத்து ஒப்பனை முடிக்க ஒன்றரை மணி நேரம் ஆனது(இடது). 'என்னைய பாத்து நிறைய பேர் உதடுக்கு மை எழுத ஆரம்பிச்சுருக்காங்க'. மற்ற கலைஞர்களுக்கு அரிதாரம் பூச உதவுகிறார்

PHOTO • Akshara Sanal
PHOTO • Akshara Sanal

ஆண் கலைஞர்கள்(பெண் வேடம்) கூத்திற்கு ஒப்பனை செய்து தயாராகிறார்கள்

*****

“திருவள்ளூர் மாவட்டதுல (தமிழ்நாடு) இருக்கற ஈக்காடு கிராமம் தான் எனக்கு சொந்த ஊரே.” டோப்பா முடியின் சிக்கல்களை சீவி நீக்கிகொண்டு இருந்த சர்மி சொன்னார். “எனக்கு சின்ன வயசுல இருந்தே நாடகம்னா ரொம்ப பிடிக்கும். அவங்க போடற மேக்கப், டிரஸ்னு எல்லாமே ரசிச்சு பாப்பேன். ஆனா நினைச்சுக்கூட பாக்கல நானும் கூத்துக்கலைஞர் ஆவேன்னு.”

சர்மி கலைஞராக தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். தொடக்கத்தில் ராஜா ராணி ஆட்டம் என்று சொல்லக்கூடிய வீதிகளில் அதிரடி மேளத்திற்கு ஆடியிருக்கிறார். “அப்ரோ பத்து வருசமா ஸ்டேஜ் டிராமால இருந்து நவீன நாடகங்கள் ஆடியிருக்கேன். இப்போ தெருக்கூத்துல வந்து நாலு வருசம் ஆகபோகுது.”

மற்ற கலைஞர்களும் திரைக்கு பின் அரிதாரம் பூசிக்கொண்டு இருந்தனர். சர்மி தொடர்ந்து தன் அனுபவங்களை சொல்லிக்கொண்டு இருந்தார். “என்னய சின்ன வயசுல இருந்தே பொண்ணாதான் வளர்த்தாங்க. ரொம்ப சாதாரணமா இருந்துச்சு. நாலாவது படிக்கும் போதே நான் திருநங்கைனு தெரிஞ்சுது. அது எனக்கு புரிஞ்சுதே தவிர மத்தவங்களுக்கு எப்படி புரிய வெக்கறதுன்னு எனக்கு தெரியல.”

தான் திருநங்கை என்று உணர்ந்த பின் சர்மியின் வாழ்க்கை அவ்வளவு சுமூகமாக இல்லை. கேலி கிண்டல்களை எதிர்கொள்ள முடியாமல் பத்தாம் வகுப்பு பாதியிலேயே தன் படிப்பை நிறுத்திக் கொண்டார். “அப்போ திருடா திருடி படம் வந்த புதுசு. என் கிளாஸ் பசங்க எல்லாரும் சுத்தி நின்னு வண்டார்க்குழலி பாட்டுல வர ‘ஒரே ஒரு கிராமத்துலே’ வரிய பாடி கைத்தட்டி கிண்டல் பண்ணாங்க. அதுக்கு அப்ரோம் நா ஸ்கூல் போகல.

”வீட்டுல சொல்லவும் முடியாது; சொன்னாலும் புரிந்துகொள்ளும் பக்குவத்தில் அவங்க இல்ல. அதுனால சொல்லல. அதுக்கு அப்ரோம் வீட்ட விட்டு ஓடிட்ட, 15 வருஷம் கழிச்சுதான் திரும்ப வீட்டுக்கு வந்தேன்” என்றார்.

சர்மி வீடு திரும்பிய நேரமும் சிக்கலானதாக இருந்தது. அவர் பிறந்து வளர்ந்த பூர்வீக வீடு பழுதாகியிருந்தது. யாரும் வசிக்க முடியாத சூழ்நிலையில் இருந்தது. ஆகையால் வாடகைக்கு வீடு எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். “நா பொறந்து வளர்ந்தது எல்லாம் இதே ஊருதான். ஆனா எனக்கு வாடகைக்கு ஒரு வீடு கிடைக்கல. ஏன்னா நா திருநங்கை. திருநங்கைக்கு வீடு குடுத்தா பாலியல் தொழில் பண்ணுவாங்கனு ஹவுஸ் ஓனருங்க நினைக்கறாங்க.” இப்போது சர்மி தனது கிராமத்திற்கு ஒதுக்கப்புறமாக அமைத்துள்ள ஒரு வீட்டை வாடைக்கு எடுத்து வசித்து வருகிறார்.

PHOTO • Akshara Sanal
PHOTO • Akshara Sanal

'எனக்கு சின்ன வயசுல இருந்தே நாடகம்னா ரொம்ப பிடிக்கும். அவங்க போடற மேக்கப், டிரஸ்னு எல்லாமே ரசிச்சு பார்ப்பேன். ஆனா நினைச்சுக்கூட பார்க்கல, நானும் கூத்துக்கலைஞர் ஆவேன்னு '

PHOTO • Akshara Sanal
PHOTO • Akshara Sanal

'என்னய சின்ன வயசுல இருந்தே பொண்ணாதான் வளர்த்தாங்க. ரொம்ப சாதாரணமா இருந்துச்சு.' கேலி கிண்டல்களை எதிர்கொள்ள முடியாமல் பத்தாம் வகுப்பு பாதியிலேயே தன் படிப்பை நிறுத்திக் கொண்டார். தற்போது 57 வயதான தன் தாயுடன் சர்மி வாழ்ந்து வருகிறார்(வலது). மேலும் 10 ஆடுகளை பராமரிக்கிறார். தெருக்கூத்து இல்லாத காலங்களில் அவைகளை விற்று வருமானத்தை உருவாக்கிக் கொள்கிறார்

ஆதி திராவிடர் எனும் பட்டியல் இன சாதியை சேர்ந்த சர்மி தற்போது 57 வயதான தன் தாயுடன் வாழ்ந்து வருகிறார் மேலும் 10 ஆடுகளை பராமரிக்கிறார். தெருக்கூத்து இல்லாத காலங்களில் அவைகளை விற்று வரும் பணத்தில் வருமானத்தை உருவாக்கிக் கொள்கிறார்.

“தெருக்கூத்து மட்டும் தான் என்னோட தொழிலா இருக்கு. மரியாதையான தொழிலாவும் இருக்கு. நாலு பேரு மத்தியில நானும் கௌரவமா இருக்கேன், அப்டிங்கறதே சந்தோசமா இருக்கு. கூத்து இல்லாத ஆறு மாசம்(ஐப்பசி-மாசி) (October to March) ஆடு வித்து வர்ற காசுல பொழப்பு நடத்துவேன். எனக்கு யாசகம் கேட்கவோ பாலியல் தொழில் போகவோ விருப்பம் இல்ல.”

சர்மிக்கு செவிலியர் பணி மிகவும் பிடித்த ஒன்று. ஆடுங்களுக்கு ஒடம்பு முடியலனா ட்ரீட்மெண்ட் பாக்குறது நான்தான். ஆடுங்க எல்லாருக்கும் நான்தான் டெலிவரி பாக்கணும். நர்சிங் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா படிக்க முடியல.

*****

கூத்து தொடங்கியதும் பபூன் தோன்றி பாட்டுப்பாடி நகைச்சுவை செய்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்பு தலப்பு வேசம் என்று சொல்லக்கூடிய ஆண் வேட கதாபாத்திரம் ஆட தொடங்கினார். மேகராசனும் கொடிக்கலா தேவியும் பாட்டுப்பாடி கூத்தை துவக்கி வைத்தனர்.

PHOTO • Akshara Sanal
PHOTO • Akshara Sanal

இதில் நிகழ்த்தப்படும் தெருக்கூத்தின் கதை, மின்னலொளி சிவா பூசை. இது மகாபாரதத்தோடு தொடர்புடையது. பாண்டவருள் ஒருவனான அர்சுனனுக்கும் அவனது எட்டு மனைவிகளுக்குமான கதை. சர்மி இதில் போகவதி எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்

PHOTO • Akshara Sanal
PHOTO • Akshara Sanal

சர்மி மற்றும் மற்ற கலைஞர்கள் எல்லோரும் சுமார் 10 முறைக்கு மேல் ஆடை மாற்றி இருப்பார்கள். இது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

கதை நகைச்சுவையோடு, பாடலோடு, ஒப்பாரியோடு விறுவிறுவென ஓடியது. பப்பூனாக இருக்கும் முனுசாமி தனது நகைச்சுவையால் மக்களின் மனதை கொள்ளையடித்துக் கொண்டு இருந்தார். சிரித்து சிரித்து பலருக்கு கண்ணீர் பெருகி வழிந்தது. நாடகத்தில் சர்மி மற்றும் மற்ற கலைஞர்கள் எல்லோரும் நிச்சயம் 10 முறை உடை மாற்றியிருப்பார்கள். பார்ப்பவர்கள் எல்லாம் வியப்பிலேயே இருந்தனர். பொதுவாக தெருக்கூத்தில் சாட்டை பயன்படுத்தப்படும். இது அடித்தால் பெரும் ஓசையை எழுப்பும். திக்கென்று இருக்கும். பார்வையாளர்களின் தூக்கம் கலைப்பதற்கான யுக்தி அது.

மணி அதிகாலை 3:30. சாபம் பெற்ற மின்னலொளி விதவையாய் வரும் காட்சி. நாடகத்தின் ஆசிரியர் ரூபன், அந்த கதாப்பாத்திரத்தை ஏற்றிருந்தார். அவர் பாடிய ஒப்பாரி, பார்வையாளர்கள் பலரை அழ வைத்தது. சிலர், அவர் பாடிக்கொண்டு இருக்கும்போதே அவரது கையில் ரூபாய் நோட்டுகளை திணித்தனர். அந்த காட்சி முடிந்ததும் மக்களை மகிழ்வூட்ட சோகத்தை வெளியேற்ற பப்பூன் மீண்டும் வந்தார்.

காலை 6 மணி. சூரியன் உதயமாகும் நேரம். மின்னலொளி அர்ச்சுனன் திருமண காட்சி முடிந்தது. ரூபன், இறந்தவரின் பெயர் சொல்லி, அவர் நிச்சயம் சொர்க்கம் சென்றிருப்பார். நம்மை எல்லாம் ஆசிர்வதிப்பார் என்று சொல்லி கூத்து பார்த்த மக்களிடம் நன்றி தெரிவித்தார்.

மற்ற கலைஞர்கள் எல்லோரும் பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தார்கள். இரவெல்லாம் கண்விழித்து ஆடிய களைப்போடும் கூத்தை முழுமையாக இடையூறுகள் இல்லாது முடித்துவிட்ட மகிழ்ச்சியோடும் இருந்தனர். “நாடகம் போடற சில ஊர்ல சில பேர் கிண்டல் பண்ணுவாங்க. நா போன் நம்பர் தரலனு ஒருமுற ஒருத்தன் கத்தில குத்த வந்தான். திருநங்கைன்னு தெரிஞ்சதும் எங்கமேல ஆசை வருது, எங்களோட செக்ஸ் வெச்சுக்கணும்னு நினைக்கறாங்க. நாங்களும் மனுசங்கதான்னு தோண மாட்டிங்குது. எங்க கஷ்டத்த எல்லாம் ஒரு நிமிசம் யோசிச்சாங்கன்னாலே இதெல்லாம் பண்ண மாட்டாங்க.”

PHOTO • Akshara Sanal
PHOTO • Akshara Sanal

தெருக்கூத்து கதை நகைச்சுவையும் ஒப்பாரியுமாக இருக்கும். கிருஷ்ணராக நடித்த கோபி(வலது) அவர்களுடன் சர்மி

PHOTO • Akshara Sanal
PHOTO • Akshara Sanal

இறுதிக்காட்சியில் மின்னலொளியாக நடித்த ரூபன்(இடது) மற்றும் அர்ச்சுனனாக நடித்த அப்புன். கூத்து முடிந்ததும் முகத்தில் எண்ணெய் தேய்த்து அரிதாரம் கலைக்கிறார் சர்மி(வலது)

அரிதாரம் எளிதாக கலைக்க முடியாது, ஆகவே முகத்தில் தேங்காய் எண்ணெய்யை தேய்த்து விட்டு துண்டால் துடைத்தார்கள். “கூத்து முடித்துவிட்டு வீட்டுக்கு போக மணி காலைல  9 அல்லது 10 ஆகும். தொலைவ பொறுத்து நேரம் மாறும். வீட்டுக்கு போனதும் சமச்சு சாப்பிட்டு தூங்குவேன். ஒருவேளை மதியம் எழுந்தா சாப்பிடுவேன். இல்லைனா இரவு கூத்து போடும் இடத்தில் சாப்பாடு குடுப்பாங்க, அங்க சாப்பிடுவேன். கூத்து இல்லைனா அசதியில் அப்டியே தூங்கிடுவேன். பெரும்பாலும் இருவேளை அல்லது ஒருவேளை தான் சாப்பிடுவேன். தொடர்ந்து நாடகம் ஆடினால் சோர்வு தெரியாது. திருவிழா இல்லாத காலத்தில் இடைவெளி விட்டு ஆடறதால சோர்வு அதிகமா இருக்கும்.”

ஓய்வு எடுப்பதோ குறைவான நாடகங்கள் நடிப்பதோ முடியாது என்கிறார் சர்மி. தெருக்கூத்து கலைஞர்களுக்கு வயது மிக முக்கியமான ஒன்று. இளமையாகவும் ஆரோக்கியத்தோடும் இருந்தால் மட்டுமே வேலைவாய்ப்பு இருக்கும். அப்படி இருந்தால் ரூபாய் 700 – 800 வரை ஒரு கூத்திற்கு சம்பளம் கிடைக்கும். வயதாகிவிட்டால் சிறிய கதாபாத்திரங்களே கிடைக்கும், அதற்கு ரூபாய் 400 – 500 வரை தான் கொடுப்பார்கள் என்று கூறுகிறார்.

“நாடகக்காரங்களுக்கு முகத்துல அழகும் உடம்புல தெம்பும் இருக்கற வரைக்கும்தான் மதிப்பு(வேலைவாய்ப்பு). இதெல்லாம்(அழகு, மரியாதை, வேலைவாய்ப்பு) போறதுக்குள்ள நமக்குன்னு ஒரு நிலம், சொந்த வீடு, கைத்தொழில்னு பண்ணனும். அப்போதான் முடியாத காலத்துல பொழைக்கலாம்”.

இக்கட்டுரை மிருணாளின் முகர்ஜி அறக்கட்டளையின் மானிய உதவியில் எழுதப்பட்டது.

Poongodi Mathiarasu

Poongodi Mathiarasu is an independent folk artist from Tamil Nadu and works closely with rural folk artists and the LGBTQIA+ community.

Other stories by Poongodi Mathiarasu
Photographs : Akshara Sanal

Akshara Sanal is an independent photojournalist based in Chennai, and interested in documenting stories around people.

Other stories by Akshara Sanal
Editor : Sangeeta Menon

Sangeeta Menon is a Mumbai-based writer, editor and communications consultant.

Other stories by Sangeeta Menon