நீங்கள் 6-14 வயதுக்குள்ளான குழந்தையாக இருந்தால், “இலவச கட்டாயக் கல்வி”யை அருகாமை பள்ளிகளில் பெற நீங்கள் உரிமை பெற்றிருக்கிறீர்கள். 2009ம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் இந்த உரிமையை உங்களுக்கு வழங்குகிறது.

ஆனால் அருகாமை பள்ளியே வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 3.5 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் ஒடிசாவின் ஜஜ்பூர் மாவட்டத்திலுள்ள ஒன்பது வயது சந்திரிகா பெஹெரா, இரண்டு வருடங்களாக பள்ளிக்கு செல்லவில்லை .

கிராமப்புற இந்தியாவில் கற்றலும் கற்பித்தலும் தொடர்ச்சியாக நடைபெறுவதில்லை. சட்டங்களும் கொள்கைகளும் காகிதத்தில்தான் இருக்கின்றன. குறைந்தபட்சம் சில இடங்களில், இத்தகைய அமைப்புரீதியான சிக்கல்கள், தனிப்பட்ட ஆசிரியர்களின் முயற்சியாலும் ஆர்வத்தாலும் களையப்படுகின்றன. எனினும் அது முழு அளவிலான மாற்றமாக பரிணமிக்க முடிவதில்லை.

உதாரணமாக காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பயணிக்கும் ஆசிரியர் , லிட்டர் பள்ளத்தாக்கிலுள்ள குஜ்ஜார் வசிப்பிடத்தின் நாடோடி சமூக குழந்தைகளுக்கு கல்வி புகட்ட நான்கு மாதங்கள் இடம்பெயருகிறார். குறைவாக இருக்கும் சாத்தியங்களில் ஆசிரியர்கள் புதிய விஷயங்களையும் முயற்சி செய்து பார்க்கின்றனர். கோவையின் வித்யா வனம் பள்ளி யிலுள்ள ஆசிரியர்கள், தம் மாணவர்களை மரபணு மாற்ற பயிர் குறித்து விவாதிக்க வைக்கின்றனர். அவர்களில் பலரும் ஆங்கிலம் பேசுவதில் முதல் தலைமுறையினர். ஆனாலும் ஆங்கிலத்தில் விவாதிக்கின்றனர். இயற்கையாய் விளைவிக்கப்பட்ட அரிசியின் முக்கியத்துவத்தையும் பல விஷயங்களுடன் பேசுகின்றனர்.

பாரி நூலகம் வழியாக, இந்தியாவில் இருக்கும் கல்வி கட்டமைப்பு மற்றும் வகுப்பில் நேரும் கற்றலின் விளைவுகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளுங்கள். கிராமப்புற கல்வியின் தரம், இடைவெளிகள், கிடைக்கும் தன்மை ஆகியவை பற்றிய அறிக்கைகள் கொண்டிருக்கிறோம். நூலகத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆவணமும், அது கொண்டிருக்கும் முக்கியமான தகவல்களை முதலிலேயே தருகிறது.

PHOTO • Design courtesy: Siddhita Sonavane

சமீபத்தில் வெளியான Annual Status of Education (Rural) அறிக்கையின்படி, 2022ம் ஆண்டில் குழந்தைகளின் அடிப்படை வாசிக்கும் தன்மை, 2012ம் ஆண்டுக்கு முந்தைய அளவுகளுக்கு குறைந்து விட்டது கண்டறியப்பட்டிருக்கிறது. தனியார் மற்றும் அரசு ஆகிய இருவகை பள்ளிகளிலும் நிலைமை இதுதான். மகாராஷ்டிராவின் நந்துர்பர் மாவட்டத்திலுள்ள டோரன்மால் பகுதியில் மார்ச் 2020-ல் பள்ளி மூடப்பட்ட பிறகு,  8 வயது ஷர்மிளா தையல் மிஷின் இயக்கக் கற்றுக் கொண்டார். மராத்தி எழுத்துகளை பற்றி சொல்கையில் அவர், “ எனக்கு அவை நினைவிலில்லை ,” என்கிறார்.

கோவிட் தொற்று, கல்வி நெருக்கடியை மாநிலங்களில் உருவாக்கியது. ஏற்கனவே கல்வி கிடைக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தவர்கள், இணைய வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு, இன்னும் தீவிரமான புறக்கணிப்புக்கு உள்ளாயினர். நகர்ப்புறங்களின் 24 சதவிகித குழந்தைகளுக்கும் கிராமப்புறங்களில் 8 சதவிகித குழந்தைகளுக்கும் மட்டும்தான் ’போதுமான இணைய வசதி’ இருப்பதாக ஆகஸ்ட் 2021-ல் நடத்தப்பட்ட இக்கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது.

PHOTO • Design courtesy: Siddhita Sonavane

பள்ளிகளில் மதிய உணவு 1-8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட 11.80 கோடி மாணவர்கள். கிராமப்பகுதிகளிலுள்ள 50 சதவிகித மாணவர்கள், இலவச மதிய உணவை பள்ளிகளில் பெறுவதாக குறிப்பிட்டிருக்கின்றனர். 99.1 சதவிகித பேர் அரசாங்க பள்ளிகளில் சேர்ந்திருக்கின்றனர். ”சில பெற்றோரால் தம் குழந்தைகளுக்கு இந்த மதிய உணவு பெற்றுத் தர முடிகிறது,” என்கிறார் சட்டீஸ்கரின் அரசாங்க ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியையான பூனம் ஜாதவ். இத்தகைய நலத்திட்டங்களை பள்ளிகளில் வலுப்படுத்துவதன் அவசியம் தெளிவாக தெரிகிறது.

“நான் தேவையான அளவுக்கு படித்து விட்டதாக என் தந்தை கூறுகிறார். இப்படி படித்துக் கொண்டே இருந்தால் யார் என்னை திருமணம் செய்து கொள்வார் என்கிறார்,” எனச் சொல்கிறார் பிகாரின் சமஸ்டிப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது ஷிவானி குமார். கல்வியில் பாலினம் முக்கியமான குறியீடு. வாய்ப்புகள் கொடுக்கப்படும் வரிசையில் கூட எப்போதும் பெண்கள் கடைசியாகத்தான் இடம்பெறுகின்றனர்.  இந்தியக் குடும்பத்தின் கல்வி நுகர்வு: NSS 75th Round (ஜூலை 2017 - ஜூன் 2018) அறிக்கை இதை உறுதிப்படுத்துகிறது. 3-35 வயதுகளில் இருக்கும் கிராமப்புற பெண்களில் 19 சதவிகித பேர் பள்ளியில் சேர்க்கப்படவே இல்லை என்கிறது அறிக்கை.

PHOTO • Design courtesy: Siddhita Sonavane

2020ம் ஆண்டில் இந்தியாவில் உயர்கல்வியில் சேர்ந்த 4.13 கோடி மாணவர்களில் வெறும் 5.8 சதவிகித பேர்தான் பட்டியல் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். இந்திய சமூகக் குழுக்கள் கல்வி பெறுவதில் நிலவும் சமமற்ற தன்மையை இது எடுத்துக் காட்டும். “கிராமப்புற பகுதிகளில் திறக்கப்படும் தனியார் பள்ளிகளும் கூட, புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கு பதிலாக, ஏற்கனவே நிலவும் சமூகப் பொருளாதார நிலையையே தொடர்கின்றன,” என ஆக்ஸ்ஃபாம் இந்தியாவின் அறிக்கை குறிப்பிடுகிறது.

தனியார் பள்ளிகள் வந்தாலும் பலரும் கல்விக்கு அரசாங்க உதவியைத்தான் சார்ந்திருக்கின்றனர். காரணம் தெளிவானது. ஆரம்பக் கல்விக்கான வருடாந்திர செலவின் சராசரி அரசாங்கப் பள்ளிகளில் ரூ.1,253-தான். தனியார் பள்ளிகளிலோ அது ரூ.14,485 ஆக இருக்கிறது. “தனியார் பள்ளி ஆசிரியர்கள் நாங்கள் என்னவோ வெறுமனே சமைத்து, சுத்தப்படுத்தும் வேலையை மட்டும் செய்வதாக நினைக்கின்றனர். அவர்களை பொறுத்தவரை ஆசிரியப் பணிக்கான அனுபவம் எனக்கு கிடையாதாம்,” என்கிறார் பெங்களூருவின் அங்கன்வாடி யில் ஆசிரியராக இருக்கும் 40 வயது ராஜேஷ்வரி.

PHOTO • Design courtesy: Siddhita Sonavane

குடிநீர் மற்றும் கழிவறை போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு இல்லாததால், ராஜேஷ்வரி போன்ற ஆசிரியர்களின் பணி கடினமாகிறது. உதாரணமாக ஒஸ்மனாபாத்திலுள்ள சஞ்சா கிராமத்தின் ஆரம்பப் பள்ளியில் 2017ம் ஆண்டின் மார்ச் மாதம் தொடங்கி மின்சாரம் இல்லை. “அரசாங்கம் கொடுக்கும் நிதி குறைவாக இருக்கிறது. பள்ளி பராமரிப்புக்கும் மாணவர்களுக்கான பொருட்களை வாங்கவும் வருடத்துக்கு 10,000 ரூபாய் தான் கொடுக்கப்படுகிறது,” என்கிறார் பள்ளியின் முதல்வரான ஷீலா குல்கர்னி.

இது அரிதான விஷயமொன்றும் அல்ல. 2019ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில், 2 கோடியே 30 லட்சம் குழந்தைகள் பள்ளியில் நீர் கிடைக்காத சூழலிலும் 6 கோடியே 20 லட்சம் குழந்தைகள் கழிவறை வசதிகள் பள்ளியில் இல்லாத நிலையிலும் இருந்திருக்கின்றனர்.

PHOTO • Design courtesy: Siddhita Sonavane

கிராமப்புற கல்வி வெறும் பற்றாக்குறைகள் நிரம்பிய கதை மட்டுமல்ல. கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் அங்கு நடக்கிறது. All India Survey of Higher Education அறிக்கையின்படி 2019-20-ல் 42,343 ஆக இருந்த கல்லூரிகள் எண்ணிக்கை 2021-ல் 43,796 ஆக உயர்ந்திருக்கிறது. அவற்றில் பெண்களுக்கு மட்டுமான கல்லூரிகளின் எண்ணிக்கை 4,375.

நாடு முழுக்க இருக்கும் கிராமங்களிலும் சிறு டவுன்களிலும் பெண் குழந்தைகள் உயர்கல்வி படிக்க போராடியிருக்கின்றனர். மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமத்தை சேர்ந்த ஜமுனா சொலாங்கி, 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முதல் நாத்ஜோகி நாடோடி சமூகப் பெண்ணானார். “சீக்கிரமே வேலை கிடைக்குமென்பதால் என்னை பேருந்து நடத்துநராகவோ அங்கன்வாடிப் பணியாளராகவோ ஆகும்படி அனைவரும் சொன்னார்கள். ஆனால் நான் விரும்பும் வேலைக்குதான் நான் செல்வேன் ,” என உறுதியாகக் கூறுகிறார் ஜமுனா.

முகப்புப் படம் : ஸ்வதேஷா ஷர்மா

தமிழில் : ராஜசங்கீதன்

Dipanjali Singh

Dipanjali Singh is an Assistant Editor at the People's Archive of Rural India. She also researches and curates documents for the PARI Library.

Other stories by Dipanjali Singh
Editor : PARI Library Team

The PARI Library team of Dipanjali Singh, Swadesha Sharma and Siddhita Sonavane curate documents relevant to PARI's mandate of creating a people's resource archive of everyday lives.

Other stories by PARI Library Team
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan