பட்ஜெட்டை தெரிந்துகொள்வது ஆண்களின் வேலை என நம்புகிறார் அஞ்சனா தேவி.
“ஆண்களுக்குதான் அதைப் பற்றி தெரியும். என் கணவர் வீட்டில் இல்லை,” என்கிறார் அவர். ஆனால் வீட்டைப் பொறுத்தவரை குடும்ப பட்ஜெட்டை கையாளுவது அவர்தான். அஞ்சனா, சமார் என்ற பட்டியல் சாதியை சேர்ந்தவர்.
“ பஜ்ஜட் (பட்ஜெட்)!” என்கிறார் அவர் புதிய அறிவிப்புகளை அவர் கேட்டாரா என நினைவுபடுத்திக் கொண்டு. “இல்லை, கேள்விப்படவில்லை.” ஆனால் பிகாரின் வைசாலி மாவட்டத்தின் சோந்தோ ரட்டி கிராமத்தில் வசிக்கும் தலித்தான இவர் சொல்கிறார்: “ஆனால் இது (பட்ஜெட்) பணக்காரர்களுக்கானது.”
அஞ்சனாவின் கணவரான 80 வயது ஷம்புராம், நாங்கள் சென்றபோது இல்லை. பக்தி பாடல் பாட சென்றிருந்தார். வீட்டில் ரேடியோ ரிப்பேர் கடை நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் வாடிக்கையாளர்கள் குறைவுதான். “வாரத்தில் 300-400 ரூபாய் கிடைத்தால் அதிகம்,” என்கிறார் அஞ்சனா. வருட வருமானம் 16,500 ரூபாய். வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கும் தனிநபர் வருமான உச்சவரம்பான 12 லட்சம் ரூபாயில் 1.37 சதவிகிதம் அது. உச்சவரம்பை பற்றி சொன்னதும் அவர் சிரிக்கிறார். “சில நேரங்களில் வார வருமானம் 100 ரூபாய் கூட கிடைக்காது. இது செல்பேசிகளின் காலம். யாரும் ரேடியோ கேட்பதில்லை,” என்கிறார் அவர்.
‘விருப்பங்கள்’ பூர்த்தி செய்யப்பட்டு விட்டதாக மோடி சொன்ன 140 கோடி இந்திய மக்களில் 75 வயது அஞ்சனாவும் ஒருவர். ஆனால் டெல்லி அதிகார மையத்திலிருந்து 1,100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அவருக்கு அந்தக் கூற்றில் நம்பிக்கை இல்லை.
அது அமைதியான ஒரு குளிர்கால மதியவேளை. மக்கள் பட்ஜெட் பற்றி ஏதும் அறியாமல் தங்களின் அன்றாட வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர். அல்லது பட்ஜெட்டுக்கும் அவர்களுக்கும் ஏதும் சம்பந்தமில்லை என நினைத்திருக்கலாம்.
அஞ்சனாவுக்கு பட்ஜெட்டில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. “அரசாங்கம் எங்களுக்கு என்ன கொடுக்கும்? நாங்கள் சம்பாதித்தால்தான் சாப்பிட முடியும். இல்லையெனில் பட்டினிதான்!”
கிராமத்தின் 150 சமர் குடும்பங்களில் 90 சதவிகிதம் நிலமற்றவர்கள். பெரும்பாலும் வேலை தேடி புலம்பெயர்ந்து செல்பவர்கள். இதுவரை எந்த வருமான வரி வரம்புக்குள்ளும் அவர்கள் வந்ததில்லை.
அஞ்சனா தேவி மாதந்தோறும் ஐந்து கிலோ இலவச உணவு தானியம் பெறுகிறார். எனினும் நிலையான வருமானத்துக்கு விரும்புகிறார். “என் கணவருக்கு வயதாகி விட்டது. வேலைக்கு செல்ல முடியாது. நாங்கள் பிழைக்க ஒரு நிலையான வருமானத்தை அரசாங்கம் எங்களுக்கு தர வேண்டும்.”
தமிழில்: ராஜசங்கீதன்