“நாங்கள் படிக்கலாம் என்று உட்கார்ந்தால், எங்கள் பாடநூல்கள், நோட்டுகள் மீது தண்ணீர் சொட்டுகிறது. கடந்த ஆண்டு (2022) ஜூலையில் வீடு இடிந்தது. ஒவ்வோர் ஆண்டும் இது நடக்கிறது.” பெரும் கற்கள், மூங்கில் கொண்டு கட்டப்பட்ட தனது வீடு குறித்து 8 வயது மாணவன் விஷால் சவாண் கூறியது இது.

ஆலேகாவ் பாகா மாவட்ட ஊராட்சிப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிற விஷால், மகாராஷ்டிராவில் நாடோடிப் பழங்குடி என்று வகைப்படுத்தப்பட்டுள்ள பெல்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்.

“குறிப்பாக, மழை பெய்யும்போது குடிசைக்குள் இருப்பது கடினம். பல இடங்களில் இருந்து நீர் சொட்டும்,” என்று கூறும் விஷாலும், அவரது 9-வயது அக்கா வைஷாலியும் வீட்டில் ஒழுகாத இடத்தை தேடிக்கொண்டே இருப்பார்கள்; மழை வரும்போது அங்கே உட்கார்ந்து படிப்பார்கள். ஷிரூர் வட்டம், ஆலேகாவ் பாகா என்ற ஊரில் இவர்கள் வசிக்கிறார்கள்.

அக்கா – தம்பி இருவரும் படிப்பில் ஆர்வத்தோடு இருப்பதைப் பார்த்து அவர்களது பாட்டி ஷாந்தாபாய் சவாண் மிகவும் பெருமைப்படுகிறார். “முதலில் எழுத படிக்க கற்பவர்கள் என் பேரப்பிள்ளைகள்தான்,” என்கிறார் அந்த 80 வயது பெண்மணி.

தனது பேரப்பிள்ளைகள் குறித்துப் பேசும்போது அவரது சுருக்கங்கள் நிரம்பிய முகத்தில் சோகமும், பெருமையும் கலந்த ஓர் உணர்ச்சி நிழலாகப் படர்கிறது. “அவர்கள் நிம்மதியாகப் படிப்பதற்கு எங்களிடம் ஒரு நல்ல வீடு இல்லை. மின் விளக்கும் இல்லை.” ஆலேகாவ் பாகா வஸ்தி என்ற இடத்தில் உள்ள தார்ப்பாய் குடிசைக்குள் இருந்தபடியே இதைக் கூறுகிறார் அவர்.

Left: Nomadic families live in make-shift tarpaulin tents supported by bamboo poles.
PHOTO • Jyoti
Right: Siblings Vishal and Vaishali Chavan getting ready to go to school in Alegaon Paga village of Shirur taluka.
PHOTO • Jyoti

இடது: மூங்கில் கழிகள் நட்டு, வாரை கட்டி, அவற்றைச் சுற்றி தார்ப்பாய் கொண்டு அமைக்கப்பட்ட கூடாரங்களில் நாடோடிக் குடும்பங்கள் வசிக்கின்றன. வலது: அக்கா, தம்பியான வைஷாலி, விஷால் ஆகிய இருவரும் பள்ளி செல்லத் தயாராகிறார்கள். ஷிரூர் வட்டம், ஆலேகாவ் பாகா என்ற ஊரில் உள்ளது இவர்களது பள்ளி

Vishal studying in his home (left) and outside the Alegaon Zilla Parishad school (right)
PHOTO • Jyoti
Vishal studying in his home (left) and outside the Alegaon Zilla Parishad school (right)
PHOTO • Jyoti

வீட்டில் படிக்கும் விஷால் (இடது) ஆலேகாவ் மாவட்ட ஊராட்சிப் பள்ளிக்கு வெளியே விஷால் (வலது)

மூங்கில் கழிகள் நட்டு, மேலே வாரைகள் இறக்கி அமைக்கப்பட்ட இந்த முக்கோண கட்டுமானத்தில் 5 அடிக்கு மேல் வளர்ந்த ஒருவர் நுழைய வேண்டுமானால், குனிந்துதான் செல்லவேண்டும். இப்படி 40 கூடாரங்கள் தொகுப்பாக அமைந்துள்ளன. இதற்கு நடுவில் இருக்கிறது இவர்களின் கூடாரம். பெல்தார், ஃபான்சே பார்தி, பில் பழங்குடிகள் இந்தக் கூடாரங்களில் வசிக்கின்றனர். புனே மாவட்டம், ஆலேகாவ் பாகா என்ற ஊரில் இருந்து 2 கி.மீ. தள்ளி இருக்கிறது இந்த இடம். “கூடாரத்தில் வாழ்வது கடினம். ஆனால், இந்தக் குழந்தைகள் புகார் சொல்வதில்லை. பொருந்திக் கொள்கிறார்கள்,” என்கிறார் ஷாந்தாபாய்.

குடிலைப் போர்த்தியுள்ள தார்ப்பாயும் நைந்து போயிருக்கிறது. 9 ஆண்டுகளாக அவர்கள் தார்ப்பாயை மாற்றவும் இல்லை, மராமத்து செய்யவும் இல்லை.

“என் அப்பா அம்மா எப்போதும் வேலையாகவே இருக்கிறார்கள்,” என்கிறார் விஷால். அவரது பெற்றோர் சுபாஷ், சந்தா ஆகியோர் புனேவில் கல் குவாரி ஒன்றில் வேலை செய்கிறார்கள். கல் உடைத்து, லாரியில் ஏற்றும் இந்த வேலையில் அவர்கள் ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். அதில் கிடைக்கும் ரூ.6,000 மாத வருமானத்தில் அவர்கள் 5 பேர் கொண்ட குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும். “எண்ணெய், பருப்பு எல்லாமும் விலை அதிகமாக இருக்கிறது. எப்படி பணம் சேமிக்க முடியும்? வீடு கட்ட முடியும்?” என்று கேட்கிறார் விஷாலின் தாய் சந்தா.

*****

நாடோடி பழங்குடிகளுக்கு வீடு கட்டித் தரும் பல்வேறு அரசாங்க நலத்திட்டங்கள் மகாராஷ்டிரத்தில் உள்ளன. ஆனால்,  சவாண் குடும்பத்துக்கு அவர்களது சொற்ப வருமானத்தில் மீதம் வைத்து சொந்தமாக கான்கிரீட் வீடு கட்டுவது என்பது எட்டாத கனவு. சபரி ஆதிவாசி கர்குல் திட்டம், பார்தி கர்குல் திட்டம், யஷ்வந்த்ராவ் சவாண் முக்த் வசஹத் திட்டம் போன்ற அரசாங்கத் திட்டங்களின் கீழ் விலையில்லாமல் வீட்டுவசதி பெறுவதற்கு, சாதிச் சான்றிதழ் வேண்டும். “எந்த வீட்டு வசதித் திட்டத்திலும் பலன் பெறுவதற்கு, நாங்கள் யார் என்பதை நிரூபித்தாக வேண்டும். எங்கள் சாதி இன்னது என்று எப்படி நாங்கள் நிரூபிப்பது?” என்று கேட்கிறார் சந்தா.

நாடு முழுவதும் நாடோடிப் பழங்குடிகளின் வீட்டு வசதி மிக மோசமாக இருப்பதை, 2017-ல் வெளியான ஐடேட் ஆணைய அறிக்கை காட்டுகிறது. “நாங்கள் எப்படி வாழ்கிறோம் என்பதை நீங்களே பார்க்கலாம்,” என்கிறார் சந்தா. அந்த ஆணையம் கணக்கெடுத்த 9,000 குடும்பங்களில் 50 சதவீதத்துக்கு மேலானவர்கள் அரைகுறை சிமெண்ட் வீடுகளில் அல்லது தற்காலிக கட்டுமானங்களில் வசிப்பது தெரியவந்தது. 8 சதவீதம் குடும்பங்கள் கூடாரங்களில் வசிப்பதும் தெரியவந்தது.

Left and Right: Most nomadic families in Maharashtra live in thatched homes
PHOTO • Jyoti
Left and Right: Most nomadic families in Maharashtra live in thatched homes.
PHOTO • Jyoti

இடது, வலது: மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும்பாலான நாடோடி குடும்பங்கள் கூரை வீடுகளில் வசிக்கின்றன

அரசாங்கத் திட்டங்களில் பலன் பெறுவதற்கான அடையாள ஆவணங்கள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து பல புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. சீர் மரபினர், நாடோடி, அரைகுறை நாடோடிப் பழங்குடிகளுக்கான தேசிய ஆணையம் இந்தப் புகார்களை பெற்றுப் பதிவு செய்துகொண்டது. இப்படிச் சென்ற 454 புகார் மனுக்களில் பெரும்பாலானவை, அதாவது 304 மனுக்கள், சாதிச் சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல் தொடர்பானவை.

“மகராஷ்டிர பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகள், சீர் மரபினர், நாடோடிப் பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறப்பு பிற்படுத்தப்பட்ட வகையினர் சாதிச் சான்றிதழ்கள் (வழங்கும் முறைகள், சரிபார்க்கும் முறைகள்) சட்டம் 2000 ” என்ற சட்டத்தின்படி சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் அளிப்போர், தாங்களோ, தங்கள் முன்னோரோ குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட காலத்தில் (சீர் மரபினர் எனில் 1961-ம் ஆண்டு) நிரந்தரமாக குடியிருந்தார்கள் என்பதை நிரூபிக்கவேண்டும். “இந்த விதிமுறைப்படி சாதிச் சான்றிதழ் வாங்குவது எளிதான வேலை அல்ல,” என்கிறார் ஷிரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுனிதா போசலே.

“குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்டு பிறகு அந்த அறிவிப்பு நீக்கப்பட்ட சீர் மரபினரின் பல தலைமுறைகள் ஊர் ஊராக, ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு சுற்றித் திரிந்தவர்கள். இவர்கள் எப்படி 50-60 ஆண்டுகளுக்கு முன்பே எங்கே வாழ்ந்தார்கள் என்பதற்கு முகவரிச் சான்று அளிக்க முடியும்? இந்த சட்டம் மாற்றப்படவேண்டும்,” என்கிறார் சுனிதா.

ஃபான்சே பார்தி சமூகத்தைச் சேர்ந்தவரான சுனிதா, ‘கிரந்தி’ என்ற தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, சீர் மரபினருக்கு எதிரான வழக்குகளை நடத்துகிறார். சாதிச் சான்றிதழ் வாங்கவும், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களில் பலன் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் வாங்கவும் அந்த அமைப்பு மக்களுக்கு உதவுகிறது. அத்துடன், சாதி வன்கொடுமை தொடர்பான வழக்குகளையும் நடத்துகிறது. “13 ஆண்டுகளில் நாங்கள் சுமார் 2,000 பேர் சாதிச் சான்றிதழ் பெற உதவியிருக்கிறோம்,” என்கிறார் சுனிதா.

புனே மாவட்டத்தின் தௌன்ட், ஷிரூர் வட்டங்களில் உள்ள 229 ஊர்களில் கிரந்தி அமைப்பின் தன்னார்வலர்கள் வேலை செய்கிறார்கள். ஃபான்சே பார்தி, பெல்தார், பிள் போன்ற சீர்மரபு இனங்களைச் சேர்ந்த 25 ஆயிரம் பேர் மத்தியில் இவர்கள் வேலை செய்கிறார்கள்.

Left: Poor housing arrangements are common among nomadic tribes who find it difficult to access housing schemes without a caste certificate.
PHOTO • Jyoti
Right: The office of the Social Justice and Special Assistance Department, Pune
PHOTO • Jyoti

இடது: நாடோடிப் பழங்குடிகளின் குடியிருப்புகள் பொதுவாகவே மோசமான நிலையில் உள்ளன. சாதிச் சான்றிதழ் இல்லாமல் அவர்களால் அரசாங்கத்தின் வீடுகட்டும் திட்டங்களின் கீழ் பலன் பெற முடிவதில்லை. வலது: புனேவில் உள்ள சமூக நீதி, சிறப்பு உதவிகள் துறை அலுவலகம்

சாதிச் சான்றிதழ் பெறுவதற்கு ஏராளமான வேலைகள் செய்யவேண்டும். நிறைய பணமும், நேரமும் செலவாகும் என்கிறார் சுனிதா. “வட்டாட்சியர் அலுவலகம் சென்று வரவும், ஆவணங்களை ஜெராக்ஸ் எடுக்கவும் நம் பாக்கெட்டில் இருந்து செலவிடவேண்டும். இன்னார், இன்ன சாதிதான் என்று நிரூபிப்பதற்கு ஏராளமான ஆவணங்களை, அடுத்தடுத்து  சமர்ப்பிக்கவேண்டும். இதனால், சாதிச்சான்றிதழ் பெற முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுகிறார்கள்,” என்றார் சுனிதா.

*****

“வீடு என்று சொல்வதற்கு எங்களுக்கு ஓர் இடம் இல்லை,” என்கிறார் விக்ரம் பர்டே. “என் குழந்தைப் பருவத்தில் இருந்து எத்தனை முறை நாங்கள் இருப்பிடத்தை மாற்றியிருக்கிறோம் என்று என்னால் கணக்கிட முடியாது. மக்கள் இப்போதுகூட எங்களை நம்புவதில்லை. அதனால்தான் நாங்கள் இடம் மாறிக்கொண்டே இருக்கிறோம். நாங்கள் யார் என்று தெரிந்துவிட்டால், எங்களை இடத்தை காலி செய்யச் சொல்லி ஊர் மக்கள் அழுத்தம் தருகிறார்கள்,” என்று கூறுகிறார் 36 வயது விக்ரம்.

தினக்கூலித் தொழிலாளியான விக்ரம் ஃபான்சே பார்தி பழங்குடியைச் சேர்ந்தவர். தன் மனைவி ரேகாவுடன், தகரக் கூரைபோட்ட ஒரே ஒரு அறஒ உள்ள வீட்டில் வசிக்கிறார் அவர். ஆலேகாவ் பாகா வஸ்தியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள குருளி என்ற ஊருக்கு வெளியே பில், பார்தி சமூகத்தவர் அமைத்திருக்கிற சுமார் 50 குடிசைகளில் ஒன்றுதான் அவரது வீடு.

2008ல் ஜால்னா மாவட்டத்தின் ஜால்னா வட்டத்திலுள்ள பில்புரி குர்த் என்ற ஊருக்கு பெற்றோர் இடம் பெயர்ந்தபோது விக்ரம் 13 வயது சிறுவன். “பில்புரி குர்த் ஊருக்கு வெளியே குடிசை வீட்டில் நாங்கள் வசித்தது எனக்கு நினைவிருக்கிறது. தாங்கள் பீட் மாவட்டத்தில் எங்கோ வசித்து வந்ததாக தாத்தா – பாட்டி கூறியிருக்கிறார்கள்,” என்று மங்கலாக நினைவுகூர்ந்தார் அவர். (படிக்கவும்: குற்றம் ஏதுமின்றி தொடரும் தண்டனை )

புனேவில் அவர் தற்போது வாழும் இடத்துக்கு 2013ல் தன் குடும்பத்தோடு வந்தார். புனே மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களுக்கு அவரும் அவரது மனைவி 28 வயது ரேகாவும் பயணித்து விவசாய வேலை, கட்டுமான வேலை செய்கிறார்கள். “ஒரு நாளில் நாங்கள் மொத்தம் 350 ரூபாய் சம்பாதிக்கிறோம். சில நேரங்களில் 400 ரூபாய்கூட சம்பாதிப்போம். இரண்டு வாரங்களுக்கு மேல் எங்களுக்கு வேலை கிடைக்காது,” என்று கூறுகிறார் விக்ரம்.

Vikram Barde, a daily-wage worker, lives with his wife Rekha in a one-room house with a tin roof. ' We never had a place to call home,' the 36-year-old says, “I can’t recall how many times we have changed places since my childhood'
PHOTO • Jyoti
Vikram Barde, a daily-wage worker, lives with his wife Rekha in a one-room house with a tin roof. ' We never had a place to call home,' the 36-year-old says, “I can’t recall how many times we have changed places since my childhood'.
PHOTO • Jyoti

தினக்கூலித் தொழிலாளியான விக்ரம் பர்டே, தன் மனைவி ரேகாவுடன் தகரக் கூரை போட்ட வீட்டில் வசிக்கிறார். இந்த வீட்டில் ஒரே ஒரு அறைதான் உள்ளது. ‘வீடு என்று சொல்வதற்கு எங்களுக்கு ஓர் இடம் இல்லை. என் குழந்தைப் பருவத்தில் இருந்து எத்தனை முறை நாங்கள் இடங்களை மாற்றினோம் என்று கூற என்னிடம் கணக்கு இல்லை,’ என்கிறார் 36 வயது விக்ரம்

இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் சாதிச் சான்றிதழ் பெறுவதற்கு மாதம் ரூ.200 செலவு செய்து வந்தார். சாதிச் சான்றிதழ் விண்ணப்பம் குறித்து விசாரிப்பதற்காக, முயற்சி செய்வதற்காக 10 கி.மீ. தொலைவில் உள்ள ஷிரூர் என்ற இடத்துக்கு மாதம் நான்கைந்து முறை செல்லவேண்டும் அவர்.

“ஷேர் ஆட்டோ மூலம் ஒரு முறை போக வர கட்டணம் ரூ.60. அதன் பிறகு ஜெராக்ஸ் செலவு இருக்கிறது. பிறகு அலுவலகத்தில் நாம் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டும். அன்றைய நாளுக்கு கூலி கிடைக்காது. என்னிடம் முகவரிச் சான்றோ, சாதிச் சான்றிதழோ இல்லை. எனவே, நான் முயற்சி செய்வதை நிறுத்திவிட்டேன்,” என்கிறார் விக்ரம்.

அவர்களது பிள்ளைகளான 14 வயது கரன், 11 வயது சோகம் ஆகியோர் புனேவின் முல்ஷி வட்டம், வட்காவ்ன் என்ற இடத்தில் உள்ள அரசு உறைவிடப் பள்ளியில் படிக்கின்றனர். கரன் 9-ம் வகுப்பும், சோகம் 6-ம் வகுப்பும் படிக்கிறார்கள். “எங்கள் குழந்தைகளே எங்கள் நம்பிக்கை. அவர்கள் நன்றாகப் படித்தால், ஊர் ஊராகச் சுற்றும் வாழ்க்கை அவர்களுக்கு நேராது.”

சமூக பொருளாதார ரீதியில் பலவீனமான குழுக்களைச் சேர்ந்த எத்தனை பேர் வீட்டு வசதித் திட்டங்களின் கீழ் நிதியுதவி பெற்றிருக்கிறார்கள் என்று சமூக நீதி, சிறப்பு உதவிகள் துறையின் புனே கோட்ட அதிகாரி ஒருவரிடம் பாரி செய்தியாளர் தொடர்புகொண்டு விசாரித்தார். “புனேவின் பாராமதி வட்டம், பண்டரே என்ற ஊரில் உள்ள சீர்மரபினர் சமூகத்தை  [Vimukt Jati Notified Tribes] சேர்ந்த 10 குடும்பங்களுக்கு 2021-22 நிதியாண்டில் ரூ.88.3 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அது தவிர, இந்த ஆண்டு (2023) நாடோடி பழங்குடி சமூகத்தவருக்கு எந்த முன்மொழிவுகளும் ஏற்கப்படவில்லை,” என்றார் அவர்.

ஆலேகாவ் பாகா வஸ்தியில், தனது பேரப்பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான எதிர்காலம் இருக்கும் என்ற தன்னுடைய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் ஷாந்தாபாய். “எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் இதுவரை சிமெண்ட் சுவர் கொண்ட வீட்டில் வசித்தது இல்லை. ஆனால், என் பேரப்பிள்ளைகள் நிச்சயமாக ஒரு வீடு கட்டுவார்கள். அவர்கள் அங்கே பத்திரமாக இருப்பார்கள்,” என்கிறார் ஷாந்தாபாய்.

மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்

Jyoti is a Senior Reporter at the People’s Archive of Rural India; she has previously worked with news channels like ‘Mi Marathi’ and ‘Maharashtra1’.

Other stories by Jyoti
Editor : Sarbajaya Bhattacharya

Sarbajaya Bhattacharya is a Senior Assistant Editor at PARI. She is an experienced Bangla translator. Based in Kolkata, she is interested in the history of the city and travel literature.

Other stories by Sarbajaya Bhattacharya
Translator : A.D.Balasubramaniyan

A.D.Balasubramaniyan, is a bilingual journalist, who has worked with leading Tamil and English media for over two decades from Tamil Nadu and Delhi. He has reported on myriad subjects from rural and social issues to politics and science.

Other stories by A.D.Balasubramaniyan