மீரட்டின் கேரம் போர்டு தொழிற்சாலையில் ஐந்து தொழிலாளர்கள், 40 கேரம் போர்டுகளை செய்து முடிக்க நாளொன்றுக்கு எட்டு மணி நேரங்கள் என ஐந்து நாட்கள் தொடர்ந்து வேலை பார்க்கின்றனர். இங்குள்ள ஒவ்வொரு நிபுணருக்கும் கேரம் விளையாட்டின் ஸ்ட்ரைக்கரும் காய்களும் பலகைக்குள் வேகமாக செல்வதற்கு தேவையான நுட்பங்கள் தெரியும். நான்கு பேர் விளையாடும் விளையாட்டுக்கு தேவையான ஒவ்வொரு கேரம் போரடையும் செய்ய ஐந்து கலைஞர்கள் தேவைப்படுகிறது. கேரம் விளையாட்டை சாத்தியமாக்கும் அவர்கள் அந்த விளையாட்டை விளையாடியதே இல்லை.

”1981ம் ஆண்டிலிருந்து கேரம் போர்ட்களை நான் செய்து வருகிறேன். ஆனால் ஒரு முறை கூட கேரம் போர்ட் நான் வாங்கியதோ விளையாடியதோ இல்லை. அதற்கெல்லாம் நேரம் எங்கே இருக்கிறது?” எனக் கேட்கிறார் 62 வயது மதன் பால். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது கூட, அவரும் சக தொழிலாளர்களும் மும்முரமாக கருவேல மரக்கட்டையை வெட்டி, 2,400 தண்டாக்களை அடுக்கி வைக்கிறார்கள். ஒவ்வொன்றும் 32 அல்லது 36 அங்குல நீளம் கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள் அவற்றை சந்து முனையில், கர்கானாவின் வெளிப்புற சுவரில் சாய்த்து வைக்கின்றனர்.

“காலை 8.45 மணிக்கு நான் இங்கு வருவேன். ஒன்பது மணிக்கு வேலை செய்யத் தொடங்குவேன். வீட்டுக்கு மாலை 7-7.30 மணிக்கு செல்வேன்,” என்கிறார் மதன் பால். ‘இங்கு’ என அவர் குறிப்பிடுவது உத்தரப்பிரதேச மீரட் நகரின் சூரஜ் குண்ட் ஸ்போர்ட்ஸ் காலனியில் உள்ள சிறு கேரம் போர்டு தொழிற்சாலையை.

மீரட் மாவட்ட புத்தா கிராமத்திலுள்ள வீட்டிலிருந்து தினசரி காலை ஏழு மணிக்கு கிளம்பி வாரத்தின் ஆறு நாட்களுக்கு, 16 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்து வேலையிடத்தை அடைகிறார் மதன்.

மீரட் நகரத்தின் தாராபுரி மற்றும் இஸ்லாமாபாத் பகுதிகளின் அறுவை ஆலைகளிலிருந்து வெட்டப்பட்ட கட்டைகள், இரண்டு குட்டி யானை வண்டிகளில் வந்து இறங்கியிருக்கின்றன.

“கேரம் பலகைகளின் வெளிப்புற சட்டகம் அந்தக் கட்டைகளில் செய்யப்படும். முதலில் நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு அவை வெளியே காய வைக்கப்பட வேண்டும். காற்றும் வெயிலும் முற்றாக ஈரத்தை எடுத்து, அவற்றை நேராக்கி, பூஞ்சை வளர்ச்சியை தடுக்கும்,” என விளக்குகிறார் மதன்.

PHOTO • Shruti Sharma
PHOTO • Shruti Sharma

இடது: ஒவ்வொரு தண்டாவையும் பரிசோதிக்கும் கரண், சேதம் கொண்டவற்றை திருப்பி அனுப்ப ஏதுவாக பிரித்து வைக்கிறார். வலது: மதன் (வெள்ளை சட்டை) மற்றும் கரண் (நீலச்சட்டை) ஆகியோர் 2,400 தண்டாக்களை ஆலைக்கு வெளியே உள்ள சந்தில் அடுக்கி வைக்கின்றனர்

பத்து வருடங்களாக இங்கு பணிபுரிந்து வரும் 32 வயது கரண், ஒவ்வொரு தண்டாவையும் பரிசோதித்து, சேதம் கொண்டவைகளை திருப்பி அனுப்பும் பொருட்டு பிரித்து வைக்கிறார். “இவை காய்ந்ததும், ஒவ்வொரு தண்டாவையும் ஒரு மட்டம் வெட்டவோ உட்பக்கம் மட்டப்படுத்தவோ மீண்டும் அறுவை ஆலை உரிமையாளர்களுக்கு அனுப்பி வைப்போம்,” என்கிறார் அவர்.

“வெட்டப்பட்ட இரண்டாம் மட்டத்தில்தான் பலகை வைக்கப்படும். விளையாடுபவர்கள் கையை வைக்கும் சட்டகத்தின் இரண்டு செண்டிமீட்டர் கீழே இருக்கும் பகுதி அது. பலகையிலிருந்து காய்கள் விழுந்து விடாமல், சுற்றி செல்வதற்கு ஏதுவான எல்லைகளை இது உருவாக்கும்,” என கரண விளக்குகிறார். “பலகை செய்வது கஷ்டம் இல்லை. ஆனால் பலகையில் செல்வதற்கு ஏதுவாக காய்களை செய்வதுதான் கஷ்டம்,” என்கிறார் அவர்.

“விளையாடப்படும் பலகையின் அளவு 29X29 அங்குலம். சட்டகத்துடன் மொத்தமாக 32x32 அங்குலம் அளவு வரும்,” என்கிறார் தொழிற்சாலையின் உரிமையாளரான 67 வயது சுனில் ஷர்மா. “முன்னணி போட்டிகளுக்கு இவை பயன்படுத்தப்படுகிறது. ஆர்டர்களை பொறுத்து நாங்கள் கேரம் போர்டுகளை செய்கிறோம். 20x20 அங்குலம் தொடங்கி 48x48 அங்குலம் வரையிலான போர்டுகளை நாங்கள் செய்கிறோம். ஒரு கேரம் போர்டை செய்ய நான்கு விஷயங்கள் முக்கியம்,” என விளக்குகிறார். “கருவேல மரக் கட்டை சட்டகம்; விளையாட்டுப் பலகை; பின்னால் பலகையை தாங்குவதற்கு தேக்கு அல்லது யூகலிப்டஸ் பரக் கட்டை; காய் விழும் துளைகளுக்கான வலை. இவை ஒவ்வொன்றையும் உள்ளூரிலிருந்து பெறுகிறோம்,” என்கிறார் அவர். எனினும் விநியோகிப்பவர்கள் அவற்றை பிற மாநிலங்களிலிருந்து பெறுகின்றனர்.

“1987ம் ஆண்டில் கங்கா வீர் மற்றும் சர்தார் ஜிதேந்திர சிங் ஆகிய கேரம் போர்டு தயாரிப்பு வல்லுநர்கள், இந்த கைவினைக்கான நுட்பங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தனர். அதற்கு முன் பேட்மிண்டன் மட்டைகள் மற்றும் கிரிக்கெட் மட்டைகள் தயாரித்தோம்,” என நினைவுகூருகிறார்.

பட்டறையின் நுழைவாயிலில் இருக்கும் அலுவலக அறையிலிருந்து தண்டாக்களை தொழிலாளர்கள் அடுக்கு வைக்கும் பகுதிக்கு ஷர்மா செல்கிறார். “30-40 போர்டுகளை நாங்கள் செய்வோம். 4-5 நாட்கள் ஆகும். தற்போது ஏற்றுமதி செய்வதற்கென 240 போர்டுகளை கேட்டு டெல்லி வணிகர் ஒருவர் ஆர்டர் செய்திருக்கிறார். இன்று வரை 160 போர்டுகளை தயார் செய்து வைத்திருக்கிறோம்,” என்கிறார் அவர்.

PHOTO • Shruti Sharma
PHOTO • Shruti Sharma

இடது: தொழிற்சாலையின் உரிமையாளரான சுனில் ஷர்மா, செய்து முடிக்கப்பட்ட கேரம் போர்டுடன். வலது: பல கட்ட தயாரிப்பில் கேரம் போர்டுகள்

2022ம் ஆண்டிலிருந்து இந்திய கேரம் போர்டுகள் 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தொழிற்துறை மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் ஏற்றுமதி இறக்குமதி தரவு வங்கியின்படி, ஏப்ரல் 2022 தொடங்கி ஜனவரி 2024 வரையிலான ஏற்றுமதிகளின் மதிப்பு கிட்டத்தட்ட 39 கோடி ரூபாய். அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, யேமேன், நேபாளம், பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் கதார் ஆகிய நாடுகள் அதிக வருமானத்தை தருகின்றன.

அந்த வருமானம், இந்தியப் பெருங்கடலின் தீவுக்கூட்டங்களான கொமோரோஸ் மற்றும் மயோட்டி ஆகியவற்றிலிருந்தும் பசிபிக் பெருங்கடலின் ஃபிஜி தீவுகள் மற்றும் கரிபியனின் ஜமாய்கா மற்றும் செயிண்ட் வின்செண்ட் தீவுகளிலிருந்தும்  கிட்டத்தட்ட பத்து லட்சம் கேரம் போர்டுகளை வாங்கப்பட்டதால் ஈட்டப்பட்டது.

அதிக எண்ணிக்கையிலான கேரம் போர்டுகளை அமீரகம், நேபாளம், மலேசியா, சவுதி அரேபியா மற்றும் ஏமன் நாடுகள் இறக்குமதி செய்திருக்கின்றன.

உள்நாட்டு விற்பனை விவரம் தெரியவில்லை. இருந்திருந்தால் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.,

“கோவிட் காலத்தில் பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியதால் ஏகப்பட்ட ஆர்டர்கள் வந்தன. பொழுது போக்க விரும்பினார்கள்,” என்கிறார் சுனில் ஷர்மா. “நான் பார்த்த இன்னொரு விஷயம், ரம்ஜானுக்கு முன்பு வளைகுடா நாட்களில் இருக்கும் அதிக தேவை.”

“நானே பலமுறை கேரம் விளையாட்டு விளையாடியிருக்கிறேன். இது பிரபலமான பொழுதுபோக்கு ஆகும்,” என்கிறார் ஷர்மா. ஆனால் முறையான உள்நாட்டு, வெளிநாட்டு விளையாட்டு போட்டிகளும் இருக்கின்றன. பிற விளையாட்டுகளை போல இவை நேரலையும் செய்யப்படுகின்றன.

PHOTO • Shruti Sharma

கேரம் போர்டுகள் செய்யப்படும் தொழிற்சாலைக்குள்

'30-40 தொகுப்புகளாக நாங்கள் கேரம் போர்டுகள் தயாரிக்கிறோம். அவற்றை தயார் செய்ய 4-5 நாட்கள் ஆகும். இப்போது 240 கேரம் போர்டுகளுக்கான ஆர்டர் டெல்லி வணிகரிடமிருந்து வந்திருக்கிறது. இன்று வரை 160 தயார் செய்திருக்கிறோம்,' என்கிறார் சுனில் ஷர்மா

கேரம் தொடர்பான நிகழ்வுகள், இந்தியாவில் அனைத்து இந்தியா கூட்டமைப்பினால் (AICF) மாநில மற்றும் மாவட்ட சங்கங்களின் வழியாகக் கட்டுப்படுத்தப்பட்டு கையாளப்படுகிறது. 1956ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட AICF, சர்வதேச கேரம் கூட்டமைப்பு மற்றும் ஆசிய கேரம் கூட்டமைப்பு அங்கீகாரம் பெற்றது. இந்தியப் போட்டியாளர்களை தயார் செய்து சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு அது அனுப்பி வைக்கிறது.

பிற விளையாட்டுகளை போல சர்வதேச மதிப்பெண்கள் இந்த விளையாட்டுக்கு முறைப்படுத்தப்படவில்லை என்றாலும், கேரம் விளையாட்டில் முன்னணி வகிக்கும் நாடுகளில் நிச்சயமாக இந்தியா இடம்பெற்றிருக்கிறது. சர்வதேச பெண்களுக்கான கேரம் சாம்பியன் போட்டியில் ரஷ்மி குமாரி வெற்றி பெற்று வருகிறார். 68 வயதுக்காரரும் ஒருவர் இருக்கிறார். சென்னையை சேர்ந்த ஏ. மரியா இருதயம், இருமுறை ஆண்களுக்கான சர்வதேச கேரம் சாம்பியன் போட்டியையும் ஒன்பது முறை தேசிய சாம்பியன் போட்டியையும் வென்றிருக்கிறார். கேரம் விளையாட்டுக்கென அர்ஜுனா விருது பெற்ற ஒரே இந்தியர் இருதயம்தான். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு முன், 1996-ம் ஆண்டில் வாங்கினார். இந்தியாவின் இரண்டாம் உயரிய விளையாட்டு வீரருக்கான விருதான அது, வருடந்தோறும் வழங்கப்படுகிறது.

*****

தரையிலுள்ள அடிக்கல்லில் அமர்ந்திருக்கும் கரணருகே நான்கு தண்டாக்கள் கிடக்கின்றன. அவற்றின் ஒவ்வொன்றையும் காலடியில் வைத்து பிடித்துக் கொண்டு சரிவான முனைகளை இணைத்து  சட்டகம் ஆக்குகிறார். எட்டு இரும்பு முனைகளை கங்கி (பிடிப்பான்) அவர் சுத்தியல் கொண்டு அடித்து நான்கு முனைகளையும் இணைக்கிறார். ஆணிகளை விட கங்கிகள் முனைகளை நன்றாக இணைக்கின்றன,” என்கிறார் கரண்.

சட்டகம் முடிந்ததும், 50 வயது அமர்ஜீத் சிங் உலோகத்தை கொண்டு அதன் முனைகளை வளைக்கிறார். “நான் செய்த பால் வணிக லாபம் தரவில்லை. எனவே நான் மூன்று வருடங்களுக்கு முன்பிருந்து கேரம் போர்டுகளை செய்யத் தொடங்கினேன்,” என்கிறார் அவர்.

சட்டகத்தின் மேலே சிறு கட்டை துகள்கள் இருக்கின்றன. அவை அறுவை ஆலையில் சீவப்படும். பிறகு அமர்ஜீத், சாக்பீஸ் மற்றும் மர மெழுகு சேர்ந்த கலவையை (மராம்மத்), சட்டகத்தின் மேற்பகுதியில் தடவுகிறார்.

“சமமற்ற மரப்பகுதியை இது நிரப்பி, மரச் செதில்களை மட்டமாக்குகிறது,” என விளக்குகிறார். “ பரூடே கி மரம்மத் என இக்கலவை அழைக்கப்படுகிறது.” கலவை உலர்ந்ததும், பலகையின் விளையாடும் பகுதி வைக்கப்படும் இடம் கருப்பு மராம்மத்தால் நிரப்பப்படும்.

PHOTO • Shruti Sharma
PHOTO • Shruti Sharma

நான்கு தண்டாக்களை காலால் பிடித்துக் கொண்டு, முனைகளை (இடது) கரண் இறுக்கி சதுர சட்டகம் செய்கிறார். பிறகு எட்டு கங்கிகளை சுத்தியலால் அடித்து நான்கு முனைகளை இணைக்கிறார் (வலது)

PHOTO • Shruti Sharma
PHOTO • Shruti Sharma

சட்டகம் உருவாக்கப்பட்டதும், அமர்ஜீத் சிங் முனைகளை வளைவாக்குகிறார் (இடது). பிறகு அவர், சாக்பீஸ் மற்றும் மரமெழுகு சேர்ந்த மரம்மத் (கலவை) கொண்டு சட்டகத்தின் மேற்பகுதியில் தடவுகிறார்

பிறகு வேகமாக காயக்கூடிய, நீரெதிர்ப்பு வாய்ந்த கருப்பு ட்யூகோ பூச்சு, பலகையின் எல்லைகளுக்குள்ளாக பூசப்பட்டு, காய்ந்த பிறகு உப்புத்தாளால் மென்மையாக்கப்படுகிறது. “சட்டகத்தின் இந்த பகுதி, பலகை பொருத்தப்பட்டால் மீண்டும் அடைய முடியாது. எனவே வேகமாக தயார்படுத்த வேண்டும்,” என்கிறார் அமர்ஜீத்.

“ஐந்து தொழிலாளர்கள் இருக்கின்றன. அனைவரும் எல்லா வேலைகளிலும் திறன் கொண்டவர்கள்,” என்கிறார் 55 வயது தரம் பால்.  தொழிற்சாலையில் அவர் கடந்த 35 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்.

“எப்போது எங்களுக்கு ஆர்டர் வந்தாலும், முதலில் நாங்கள் விளையாட்டுப் பலகையை தயார் செய்து விடுவோம்,” என்கிறார் தரம். அவரும் மதனும் கரணும் தயாரான பலகைகளை கொண்டு வந்து சட்டகத்துக்குள் ஒட்டுவார்கள். “பலகையின் சிறு துளைகள் மூடும் வகையில் நீர் தடுப்பான் ஒன்றை பூசுவோம். அதற்கு பிறகு உப்புத்தாள் கொண்டு அதை மென்மையாக்குவோம்,” என விளக்குகிறார்.

“பலகைகள் சொரசொரப்பாக இருக்கும். பலகையின் மென்மைதான் கேரம் போர்டுக்கான பிரதான ஈர்ப்பு. கேரம் காய்கள் வேகமாக செல்ல வேண்டும்,” என்கிறார் ஷர்மா காய்களை கையில் சுண்டுவது போல் பாவனை செய்து. “கொல்கத்தாவிலிருந்து உள்ளூர் வணிகர்கள் பெறும் மாங்காய் அல்லது மக்காய் மர பலகைதான் நாங்கள் பயன்படுத்துவோம்,” என்கிறார் அவர்.

“1987ம் ஆண்டில் தொடங்கியபோது, விளையாடும் பலகையை கையால் பூச்சடிப்போம். நுட்பம் வாய்ந்த வேலை என்பதால் நிறைய நேரம் எடுக்கும். அந்த காலக்கட்டத்தில், ஓவியர் தொழிலாளர் குழுவில் முக்கியமானவராக இருப்பார்,” என நினைவுகூருகிறார் சுனில். “ஆனால் இன்று, விளையாடும் பலகையின் மேற்பகுதிகளை எளிதாகவும் வேகமாகவும் அச்சடித்து விட முடியும்,” என்கிறார் அவர் சுவர்களில் தொங்கவிடப்பட்டிருக்கும் சதுர தாள்களை காட்டி. இதன் அர்த்தம், பெரும்பாலான விளையாட்டு கருவித் துறையைப் போலவே கடந்த முப்பது, நாற்பது வருடங்களில் இத்துறையிலும் ஓவியரின் பங்கு இல்லாமல் போய்விட்டது என்பதுதான்.

ஸ்க்ரீன் ப்ரிண்டிங் தொழில்நுட்பத்தில் பூச்சுகள் சில பகுதிகளின் வழியாக ஊற்றப்பட்டு அச்சிடப்படுகிறது. “ஒவ்வொரு மேற்பகுதியிலும் இரு வகை ஸ்க்ரீன்களை பயன்படுத்துகிறோம். சிவப்பு அடையாளங்களுக்கு முதலாவதும் இரண்டாவது கறுப்பு நிறத்துக்கும்,” என்கிறார் தரம் பால். 240 கேரம் போர்டுகள் ஆர்டருக்கு, பலகைகளில் அடையாளங்கள் ஏற்கனவே குறிக்கப்பட்டுவிட்டது.

PHOTO • Shruti Sharma
PHOTO • Shruti Sharma

இடது: தரம், மதன் மற்றும் கரண், சட்டகத்தில் ஒட்டப்பட ஏற்கனவே அச்சிடப்பட்ட பலகைகளை கொண்டு வருகின்றனர். வலது: கேரம் போர்டின் பல்வேறு அளவுகள்

PHOTO • Shruti Sharma
PHOTO • Shruti Sharma

இடது: தொழிலாளர்கள் தேநீர் அருந்தும் ஸ்டீல் பானை மற்றும் கண்ணாடிகள். வலது: ஆலைத் தரையில் கொஞ்சம் இடத்தை உருவாக்கி, ராஜேந்தரும் அமர்ஜீத்தும் ஒரு போர்வையை விரித்து மதிய உணவு இடைவெளியின்போது 12-15 நிமிடங்களுக்கு படுத்து ஓய்வெடுக்கின்றனர்

பகல் 1 மணி ஆகிவிட்டது. தொழிலாளர்கள் மதிய உணவு இடைவேளைக்கு செல்கின்றனர். “ஒரு மணி நேர இடைவேளை. ஆனாலும் அவர்கள் 1.30 மணிக்கு திரும்பி விடுவார்கள். அப்போதுதான் மாலை அரை மணி நேரத்துக்கு முன்னதாக 5.30 மணிக்கு கிளம்ப முடியும்,” என்கிறார் உரிமையாளர் சுனில் ஷர்மா.

உணவு எடுத்துக் கொண்டு ஆலையின் பின் வளாகத்துக்கு தொழிலாளர்கள் செல்கின்றனர். சாக்கடைக்கு அருகே, கட்டைகளுக்கு மத்தியில் அவசரமாக தொழிலாளர்கள்  உண்ணுகின்றனர். 50 வயது ராஜேந்தர் குமாரும் அம்ர்ஜீத்தும் தரையில் கொஞ்சம் இடஹ்த்டை ஏற்படுத்தி, ஒரு போர்வையை விரித்து 12-15 நிமிடங்களுக்கு படுக்கிறார்கள். தூங்கத் தொடங்கும் முன்பே வேலைக்கு திரும்பும் நேரம் வந்து விடும்.

“முதுகுக்கு கொஞ்ச நேரம் ஓய்வு கொடுக்க வேண்டியிருக்கிறது,” என்கிறார் அமர்ஜீத். அருகாமை கடையிலிருந்து வாங்கி வந்த தேநீரை தங்களுக்கான தம்ளர்களில் வாங்கி குடிக்கிறார்கள். பிறகு மீண்டும் வேலை.

பலகைகள் தயார் செய்யப்பட்ட நிலையில், அடுத்த கட்டம் அதில் சகடி தடவ வேண்டும். ”பலகையின் பின்பக்கத்தை தாங்குவது சகடி தான்,” என விளக்குகிறார் 20 வருடங்களாக பணிபுரிந்து வரும் ராஜேந்தர். “ஆணி அடித்து, தேக்கு அல்லது யூகலிப்டஸ் கட்டையின் செதில்களை செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் குறுக்கே செல்லும் வகையில் ஒட்ட வேண்டும்.

”இதற்கு முன் சுவர்களுக்கு வெள்ளை அடிக்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்,” என்கிறார் அவர்.

“கேசர்கஞ்சில் இருக்கும் மெஹ்தாப் சினிமாவிலுள்ள இஸ்லாமியத் தொழிலாளர்களிடமிருந்து சகடிகளை வாங்குகிறோம். சகடி போடுவதில் மட்டும் திறன் வாய்ந்த வல்லுநர்களும் மீரட்டில் உள்ளனர்,” என்கிறார் சுனில் ஷர்மா.

PHOTO • Shruti Sharma
PHOTO • Shruti Sharma

இடது: ராஜேந்தரும் மதனும் 40 சகடிகளில் ஃபெவிகால் தடவுகின்றனர். வலது: சகடி தடவி, பலகைகள் ஒட்டப்பட்ட பிறகு அவற்றை கரண் எடுக்க வேண்டும்

சற்று நேரத்துக்கு முன் படுத்திருந்த அதே இடத்தில் மதனுக்கு எதிராக ராஜேந்தர் அமர்ந்திருக்கிறார். இருவருக்கும் இடையில் 40 சகடிகள் இருக்கின்றன. அவற்றின் மேல், ஒரு ப்ரஷ் கொண்டு ஃபெவிகால் தடவ வேண்டும். இளையத் தொழிலாளராக இருக்கும் கரணுக்கு, சகடியை அடுத்தடுத்து எடுத்து பலகைகள் ஒட்டும் வேலை.

“நாள் முடியும்போதுதான் இந்த சகடி ஒட்டும் வேலை செய்வோம். பலகைகளை ஒன்றன் மீது ஒன்று ஒட்டி, ஒரு கனமான பொருளை மேலே வைக்கப்படும் பலகைக்கும் மேலே ஒரு இரவு முழுவதும் வைத்து விடுவோம். அப்போதுதான் நன்றாக ஒட்டும்,” என விளக்குகிறார் கரண்.

மாலை 5.15 மணி ஆகிறது. வேலைகளை முடிப்பதில் தொழிலாளர்கள் வேகம் காட்டுகின்றனர். “நாளை காலை, சட்டகங்களில் நாங்கள் பலகைகளை ஒட்டுவோம்,” என்கிறார் கரண். “என் தந்தையும் விளையாட்டுப் பொருள் தொழிலாளராக இன்னொரு ஆலையில் இருந்தார். கிரிக்கெட் மட்டைகளையும் ஸ்டம்புகளையும் அவர் செய்தார்,” என்கிறார் அவர்.

*****

வேலை, அடுத்த நாள் காலை 9 மணிக்கு தொடங்குகிறது. தேநீர் குடித்து முடித்ததும் ராஜேந்தர், மதன், கரண் மற்றும் தரம் ஆகியோர் ஆலைகளில் தங்களுக்கான மேஜைகளுக்கு சென்று நின்று கொள்கின்றனர். வெளியே சந்தில் அமர்ஜீத், சட்டக முனைகளை நிரப்பும் வேலை பார்க்கிறார்.

கரணும் தரமும் பலகையையும் சகடியையும் சட்டகங்களில் ஒவ்வொன்றாக ஒட்டும் வேலையைத் தொடங்குகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பக்கம் இருக்கும் பலகையின் சகடியில் குறிக்கப்பட்ட இடங்களில் ஆணிகள் அடிக்க வேண்டும்.

”ஒரு பலகையை சட்டகத்தில் அடிக்க நான்கு டஜன் சிறு ஆணிகள் தேவைப்படும்,” என்கிறார் தரம். ஆச்சரியகரமாக அந்த இரு தொழிலாளர்களும் இந்த 48 ஆணிகளை 140 விநாடிகளில் அடித்து முடிக்கின்றனர். பிறகு பலகையை மதன் இருக்கும் இடத்தருகே இருக்கும் தூண் மீது சாய்த்து வைக்கின்றனர்.

PHOTO • Shruti Sharma
PHOTO • Shruti Sharma

கரணும் தரமும் பலகைகளையும் சகடிகளையும் பெயிண்ட் செய்யப்பட்ட சட்டகங்களில் பொருத்துகின்றனர்

இன்று கேரம் காய்களுக்கான துளைகளை வெட்டுவது மதனின் பொறுப்பு. பள்ளிக்கூட காம்பஸ் கருவி போலவே நான்கு செண்டிமீட்டர் சுற்றளவு கணக்கு வைத்து துளை வெட்டப்படுகிறது.

“விளையாட்டுப் பொருள் தொழிலாளராக இருக்கும் குடும்ப உறுப்பினர் நான் மட்டும்தான். எனக்கு மூன்று மகன்கள் உண்டு. ஒருவர் கடை நடத்துகிறார், ஒருவர் தையற்காரர், ஒருவர் ஓட்டுநர்,” என்கிறார் மதன், வெட்டும் கருவியின் கத்திகளை அழுத்தி, அதே நேரத்தில் அதை சுற்ற வைப்பதற்காக பலகையின் மீது மதன் சாய்ந்தபடி. நான்கு துளைகள் வெட்ட வெறும் 55 விநாடிகள்தான் அவருக்கு ஆகிறது. தூக்குதல், திருப்புதல் மற்றும் ஆறிலிருந்து எட்டு கிலோ பலகையை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்தும் நேரம், இதில் அடங்கவில்லை.

துளைகளை வெட்டியபிறகு, ஒவ்வொரு பலகையயியும் அவர் ராஜேந்தரின் மேஜைக்கருகே வைக்கிறார். மரம்மது கலவையை பலகை மீது பூச அவர் ஒவ்வொன்றாக எடுத்து செல்கிறார். மரமத் பூச பலகையை கீழே பார்க்கும்போது, விளையாடும் பகுதியை சுட்டிக்காட்டி, “பாருங்கள், பலகை என் விரல்களை கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது,” என்கிறார் அவர்.

“இந்த கட்டத்தில் கிட்டத்தட்ட பலகை தோற்ற அளவில் தயார் என்றாலும் விளையாடும் தகுதியை பெறுவதற்கு இன்னும் பல வேலைகள் அதில் செய்யப்பட வேண்டியிருக்கிறது,” என்கிறார் உரிமையாளர் ஷர்மா. “இன்றைய இலக்கு, 40 சட்டகங்களில் மரமத்தின் ஒரு பூச்சு நாங்கள் பூச வேண்டும் என்பதுதான். இறுதிக் கட்ட பணிகளை சட்டகங்களில் நாங்கள் நாளை செய்வோம்,” என்கிறார் அவர்.

PHOTO • Shruti Sharma
PHOTO • Shruti Sharma

காய் துளைகளை கேரம் போர்டின் நான்கு மூலைகளில் போடுவது மதனின் வேலை. துளை வெட்டும் கருவியின் சுற்றளவு நான்கு செண்டிமீட்டருக்கு வைக்கப்படுகிறது

PHOTO • Shruti Sharma
PHOTO • Shruti Sharma

இடது: பிறகு ராஜேந்தர் மரமத்தை சட்டகத்தின் மீது பூசுகிறார். ‘என் விரல்களை பலகை பிரதிபலிக்கிறது பாருங்கள்,’ என்கிறார் அவர். வலது: அடுத்த நாள் காலை, ஐந்து தொழிலாளர்களும் ஆலையின் வளாகத்தில் வேலை பார்ப்பார்கள்

அடுத்த நாள் காலை, ஐந்தில் நான்கு தொழிலாளர்கள் மேஜைகளோடு வெளியே இருக்கும் சந்துக்கு இடம்பெயருகிறார்கள். மதன் உள்ளே இருக்கிறார். “எல்லா வேலைகளையும் அனைவரும் செய்வதால், வேலை சார்ந்த ஊதியம் இங்கு இல்லை. திறன் சார் வேலை அடிப்படையில் தொழிலாளர்களுக்கு விசேஷ ஊதியம் கொடுக்கப்படுகிறது,” என்கிறார் ஷர்மா.

திறன் சார் விசேஷ ஊதியம் என்னவென்பதை பாரியால் உறுதிபடுத்த முடியவில்லை. விளையாட்டுக் கருவி தொழிற்துறைக்கென சரியான தரவுகள் இல்லை. ஆனாலும், சிறு தவறும் மொத்தப் பொருளையும் பாதிக்கக் கூடிய அளவுக்கு நுட்பங்கள் நிறைந்த வேலையை திறம்பட செய்யும் இத்தொழிலாளர்கள் மாதத்துக்கு 13,000 ரூபாயைத் தாண்டி சம்பாதிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டோம். இத்துறையில் இருக்கும் பெரும்பாலான தொழிலாளர்கள், உத்தரப்பிரதேசத்தின் திறன்சார் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமாக வரையறுக்கப்பட்டுருக்கும் மாதந்தோறும் 12,661 ரூபாய்க்கும் குறைவாகவே ஈட்டுகின்றனர். இத்துறை சார்ந்த பல ஊழியர்கள் இன்னும் குறைவாக ஊதியம் பெறும் சாத்தியமும் இருக்கவே செய்கிறது.

சந்தின் முனையில் தரமும் கரணும் இருக்கின்றனர். “சட்டகங்களில் மரம்மத் பூச்சை மூன்று முறை பூசுகிறோம். பிறகு உப்புத்தாள் கொண்டு அவற்றை மென்மையாக்குவோம்,” என்கிறார் தரம். “என் கைகளால் எத்தனை பலகைகள் செய்து முடித்திருக்கிறேன் என்ற கணக்கே இல்லை. ஆனால் அதில் விளையாடும் ஆசை எனக்கு வந்ததே இல்லை. பல வருடங்களுக்கு முன் ஓரிரண்டு முறை, பாவ்ஜி (சுனில் ஷர்மா) மதிய வேளையில் விளையாடுகையில் ஒன்றிரண்டு காய்களை அடித்திருக்கிறேன்,” என்கிறார்.

தரமும் கரணும் மென்மையாக்கி தந்த சட்டகங்களுக்கு முதல் மேஜையில் அடித்தள பூச்சை பூசிக் கொண்டிருக்கிறார் ராஜேந்தர். “மரம்மத், கறுப்பு நிறம், சரெஸ் ஆகியவற்றின் கலவை இது. சட்டகத்தில் இது நன்றாக ஒட்டிக் கொள்ள சரெஸ் உதவுகிறது,” என்கிறார் அவர். கசாப்புக் கடையிலிருந்து பெறப்பட்ட கால்நடைகளின் கறி கொண்டு செய்யப்பட்ட பசைதான் சரெஸ் எனப்படுகிறது.

அடித்தள பூச்சுக்கு பிறகு, அமர்ஜீத் சட்டகங்களை மீண்டும் ரெக்மால் கொண்டு மென்மையாக்குகிறார். “கறுப்பு ட்யூகோ பெயிண்ட்டை சட்டகங்களில் மீண்டும் போடுவோம். அது காய்ந்த பிறகு, சுந்த்ராஸ் கொண்டு வார்னிஷ் அடிப்போம்,” என்கிறார் அமர்ஜீத். மரத்தின் தண்டில் இருந்து பெறப்பட்டு வார்னிஷாக பயன்படுத்தப்படுவதுதான் சுந்த்ராஸ் என அழைக்கப்படுகிறது.

PHOTO • Shruti Sharma
PHOTO • Shruti Sharma

இடது: தரமும் கரணும் மென்மையாக்கி தந்த சட்டகங்களுக்கு முதல் மேஜையில் அடித்தள பூச்சை பூசுகிறார் ராஜேந்தர். வலது: இதற்குப் பிறகு, மீண்டும் அமர்ஜீத் சட்டகங்களை உப்புத்தாள் கொண்டு மென்மையாக்கி, ட்யூகோ பெயிண்ட் அடிப்பார்

PHOTO • Shruti Sharma
PHOTO • Shruti Sharma

இடது: சட்டகங்கள் காய்ந்த பிறகு, துளை வலைகளை பலகைகளில் மதன் பொருத்துகிறார். நான்கு தங்கப் புல்லட்டின் போர்ட் பின்களில் பாதியை, துளை வட்டத்தின் நான்கு பக்கங்களில் அவர் அடிக்கிறார். துளை வலையை விரித்து, பின்னல்களுக்கு இடையே பின்களை வைத்து சுத்தியல் கொண்டு அடித்து முடிக்கிறார். வலது: இறுதிக்கட்ட பரிசோதனை தரம் செய்து, பலகைகளை ஒரு பருத்தி துணியால் துடைக்கிறார்

ஒவ்வொரு கேரம் போர்டும் காயும் வரை, மதன் ஆலைக்குள் துளை வலையை பலகைகளில் மாட்ட காத்திருக்கிறார். நான்கு கோல்டன் புல்லட்டின் போர்ட் பின்களில் பாதியை அவர் நான்கு துளை வட்டங்களை சுற்றி அடிக்கிறார். துளை வலையை விரித்து, பின்னலுக்கு இடையே பின்களை வைத்து முற்றாக அடித்து முடிக்கிறார்.

”மல்யானா ஃபடக் மற்றும் தேஜ்கரி பகுதிகளில் வாழும் குடும்பங்களின் பெண்கள் துளை வலைகளை செய்கிறார்கள்,” என்கிறார் ஷர்மா. “12 டஜன் - 144 துளைகள்- நூறு ரூபாய் ஆகும்,” என்கிறார் அவர். ஒவ்வொரு துளைக்கும் அப்பெண்களுக்கு 69 பைசா கிடைக்கிறது.

கேரம் போர்டுகள் தயாராகிவிட்டன. தரம் கடைசிக் கட்ட பரிசோதனை நடத்தி விட்டு, பருத்தி துணி கொண்டு அவற்றை துடைக்கிறார். ஒவ்வொரு பலகையை பெரிய பாலிதீன் பைக்குள் அமர்ஜீத் கட்டுகீறார். “கேரம் காய்களின் பெட்டியும் கேரம் பவுடரும் பிளாஸ்டிக் பையில் போடுவோம்,” என்கிறார் சுனில் ஷர்மா. “காய்கள் எங்களுக்கு பரோடாவிலிருந்தும் பவுடர் உள்ளூரிலிருந்தும் கிடைக்கிறது.”

கேரம் போர்டுகள் பிறகு அட்டைபெட்டிகளில் அடைக்கப்பட்டு ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்படுகிறது. நாளை காலை, தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பும்போது, தற்போதைய ஆர்டருக்கான கடைசி 40 போர்டுகளை செய்யத் தொடங்குவார்கள். இதே வேலைகளை அடுத்த ஐந்து நாட்களுக்கு செய்வார்கள். அதற்குப் பிறகு, போர்டுகள் டெல்லிக்கு பார்சலில் அனுப்பப்படும். அங்கிருந்து வெளிநாட்டுக்கு அனுப்பப்படும். இப்படித்தான் அவர்கள் விளையாடிராத ஒரு விளையாட்டை, பொழுதுபோக்கு அவர்கள் வளர்த்து வருகிறார்கள்.

இக்கட்டுரை மிருணாளினி முகெர்ஜி அறக்கட்டளையின் மானிய உதவியில் எழுதப்பட்டது.

தமிழில் : ராஜசங்கீதன்

Shruti Sharma

Shruti Sharma is a MMF-PARI fellow (2022-23). She is working towards a PhD on the social history of sports goods manufacturing in India, at the Centre for Studies in Social Sciences, Calcutta.

Other stories by Shruti Sharma

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan