பொட்டல் பீடபூமியில் இருக்கும் தர்கா, மல்காவோனில் வசிப்பவர்களுக்கு பெரிதும் உதவியிருக்கிறது. மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் இருக்கும் இந்த தலம் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. எப்போதும் உதவியே வந்திருக்கிறது.

தர்கா மீது சாய்ந்திருக்கும் மரத்தடியில்தான் பள்ளிக் குழந்தைகள் வீட்டுப் பாடம் செய்வார்கள். இளைஞர்களும் இளம்பெண்களும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு நுழைவாயிலில் அமர்ந்து படிப்பார்கள். கொளுத்தும் கோடைக்காலங்களில் அங்குதான் குளிர்ந்த தென்றல் வீசும். சுற்றியிருக்கும் திறந்தவெளியில், போலீஸ் ஆக விரும்புபவர்கள் கடும் உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

”தர்காவைப் பற்றி என் தாத்தா கூட நிறைய சொல்வார்,” என்கிறார் 76 வயது வினாயக் ஜாதவ். கிராமத்தில் 15 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்திருக்கிறார். “எவ்வளவு பழமையானது என யோசித்துக் கொள்ளுங்கள். இந்துக்களும் இஸ்லாமியரும் ஒன்றாக அதை பராமரித்து வந்திருக்கின்றனர். சமாதானமான ஒருமித்த வாழ்வுக்கான அடையாளம் அது.”

செப்டம்பர் 2023-ல் நிலவரம் மாறியது. அதிகமாய் நேசிக்கப்பட்ட மலகாவோனின் அந்த தர்காவுக்கு புது அர்த்தம் கற்பிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டம் கொண்ட இளைஞர்களின் சிறு குழு ஒன்று, அந்த தர்கா ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாக சொன்னது. இந்துத்துவ குழுக்களின் ஆதரவில் அக்குழு இயங்கியது.

மலகாவோனில் வசிக்கும் இந்த 20-25 வயதுக்குள் இருக்கும் இந்து இளைஞர்கள் “சட்டவிரோத ஆக்கிரமிப்பை” அகற்றும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினர். சிலர், தர்காவுக்கு அருகே இருந்த நீர் தொட்டியை ஏற்கனவே இடித்து விட்டனர். “அதை சுற்றி இருக்கும் நிலத்தை இஸ்லாமிய சமூகம் அபகரிக்க நினைக்கிறது,” என்றது கடிதம். “கிராமப் பஞ்சாயத்தின் விருப்பத்துக்கு எதிராக தர்கா கட்டப்பட்டிருக்கிறது.”

PHOTO • Parth M.N.

விநாயக் ஜாதவ் (காந்தி தொப்பி) நண்பர்களுடன் மலகாவோனில். மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக இத்தலம் இருக்கிறது

ஆனால் தலத்தை இடிக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டதும் கிராமம் நியாயத்தின் பக்கம் நிற்க முடிவெடுத்தது. “இத்தலம் 1918ம் ஆண்டு வரைபடங்களில் கூட குறிப்பிடப்பட்டிருக்கிறது,” என்கிறார் ஜாதவ் கவனமாக ஒரு மங்கலான காகிதத்தை பிரித்தபடி. “சுதந்திரத்துக்கு முன்பிருந்தே பல மதத் தலங்கள் இக்கிராமத்தில் இருந்து வருகிறது. அவை எல்லாவற்றையும் நாங்கள் பாதுகாக்க விரும்புகிறோம். அமைதியான சூழலில் எங்களின் குழந்தைகள் வளர வேண்டுமென விரும்புகிறோம்.”

மேலும் தொடர்கிறார்: “மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிப்பது நம்மை பின்னோக்கித்தான் கொண்டு செல்லும்.”

தர்காவை தகர்க்க இந்துத்துவ உறுப்பினர்கள் அழைப்பு விடுத்ததும், மலகாவோனை சேர்ந்த இரு சமூகங்களின் மூத்தவர்களும் ஒன்றிணைந்து, அதற்கு எதிராக கடிதம் வெளியிட்டனர். பெரும்பான்மையினரின் கோரிக்கை அல்ல அது என கடிதம் அறிவித்தது. இரு நூறு இஸ்லாமியர்களும் இந்துக்களும் சாதி வேறுபாடின்றி அதில் கையொப்பம் இட்டிருந்தனர். தற்போதைய நிலையில் அவர்கள் அத்தலத்தை காக்க முடிந்தது.

அமைதியை பாதுகாப்பதுதான் மிகப் பெரிய சவால்.

*****

பிரிவினை சக்திகளை எதிர்த்து ஒரு கிராமமே நின்று இஸ்லாமியர் சமூகத்தின் தலம் ஒன்றை பாதுகாத்ததற்கு அரிய உதாரணமாக மலகாவோன் இருக்கிறது.

கடந்த ஒன்றரை வருடங்களில், மகாராஷ்டிராவின் இஸ்லாமியர் தலங்கள் அதிகமாக தாக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான நேரங்களில், தாக்கியவர்கள் தப்பித்தும் விட்டிருக்கிறார்கள். அதிகமாக காவல்துறை செயல்படாமல் இருந்ததும் பெரும்பான்மை சமூகம் அமைதியாக இருந்ததும்தான் காரணங்களாக இருந்திருக்கிறன.

2019ம் ஆண்டின் சட்டசபை தேர்தல்களுக்கு பிறகு இரண்டரை வருடங்களுக்கு இந்தியாவின் பணக்கார மாநிலமான அம்மாநிலத்தை சிவசேனை, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணி ஆண்டது. உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தார்.

ஆனால் ஜூன் 2022-ல் பாரதீய ஜனதா கட்சி 40 சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களை கையகப்படுத்தி, கூட்ட்டணி ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சியமைத்தது. அப்போதிருந்து தீவிர வலதுசாரி இந்துக் குழுக்கள் ஒன்றிணைந்து டஜனுக்கும் மேற்பட்ட ஊர்வலங்களை மாநிலத்தில் நடத்தி, இஸ்லாமியர்களையும் அவர்களின் பொருளாதாரத்தை அழித்தொழிக்க அறைகூவல் விடுத்தது. மாநிலத்தில் இருந்த அமைதிச் சூழலை குலைப்பதற்கான தெளிவான முயற்சி அது. இஸ்லாமியர் வழிபாட்டு தலங்களை தாக்குவது அம்முயற்சியின் ஓரங்கம்.

PHOTO • Parth M.N.
PHOTO • Parth M.N.

இடது: தர்கா மீது சாய்ந்திருக்கும் மரத்தடியில்தான் பள்ளிக் குழந்தைகள் வீட்டுப் பாடம் செய்வார்கள். இளைஞர்களும் இளம்பெண்களும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு நுழைவாயிலில் அமர்ந்து படிப்பார்கள். வலது: தர்காவுகு தன் ஸ்கூட்டியை ஓட்டிச் செல்கிறார் ஜாதவ். ‘சுதந்திரத்துக்கு முன்பிருந்தே பல மதத் தலங்கள் இக்கிராமத்தில் இருந்து வருகிறது. அவை எல்லாவற்றையும் நாங்கள் பாதுகாக்க விரும்புகிறோம்,’ என்கிறார் அவர்

சதாராவை சேர்ந்த செயற்பாட்டாளரான மினாஜ் சய்யது சொல்கையில், பிரிவினையை உருவாக்கும் இத்திட்டம் பல வருடங்களாக இருந்தாலும் அதன் தீவிரம் 2022ம் ஆண்டில் அதிகரித்ததாக கூறுகிறார். “கிராமத்தை சேர்ந்த இந்துக்களும் இஸ்லாமியரும் ஒன்றாக பராமரித்து காத்து வந்த தர்காக்கள் போன்ற தலங்கள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன,” என்கிறார் அவர். “ஒத்திசைவான பண்பாட்டை குலைப்பதுதான் நோக்கம்.”

பிப்ரவரி 2023-ல், தீவிர இந்துக்கள் சிலர், கொல்ஹாப்பூரின் ஹஸ்ரத் துறவியான மாலிக் ரெஹான் ஷாவின் தர்கா மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினர். காவல்துறையில் இருந்தபோதே நடந்த சம்பவம் அது.

செப்டம்பர் 2023-ல் பாஜகவின் விக்ரம் பவாஸ்கர் தலைமை வகிக்கும் ஹிந்து ஏக்தா என்ற குழு, வாட்சப்பில் வந்த உறுதிபடுத்தப்படாத படக்காட்சிகளுக்கு பதிலடி கொடுப்பதாக சதாராவின் பூசேசாவலி கிராமத்து மசூதியை கொடூரமாக தாக்கியது. கிட்டத்தட்ட 10-12 இஸ்லாமியர்கள் அமைதியாக உள்ளே தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். டைல்கள், குச்சிகள், இரும்புத் தடிகள் கொண்டு அவர்கள் தாக்கப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார். வாசிக்க: பூசேசாவலியில்: சித்தரிக்கப்பட்ட படங்கள், கொல்லப்பட்ட உயிர்கள்

டிசம்பர் 2023, சலோகா சமார்க் காட் என்ற மத ஒருங்கிணைவு குழு, சதாராவில் இஸ்லாமியர் வழிபாட்டுத் தலங்களில் நடத்தப்பட்ட இது போன்ற 13 தாக்குதல்களை கொண்ட பிரசுரத்தை பதிப்பித்தது. நினைவகத்தை தகர்த்ததிலிருந்து மசூதியின் மீது காவிக் கொடி ஏற்றுவது வரையிலான மதப் பிரிவினையை ஏற்படுத்தும் பல்வேறு வன்முறைகளை இது ஆவணப்படுத்தியிருந்தது.

2022ம் வருடத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் 8,218 கலவர சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் 9,500 பேர் பாதிக்கப்பட்டதாக பிரசுரம் குறிப்பிடுகிறது. அதாவது வருடத்தின் ஒவ்வொரு நாளிலும் 23 கலவர சம்பவங்கள்.

PHOTO • Parth M.N.
PHOTO • Parth M.N.

இடது: சலோகா சமார்க் காட் என்ற மத ஒருங்கிணைவு குழு, சதாராவில் இஸ்லாமியர் வழிபாட்டுத் தலங்களில் நடத்தப்பட்ட 13 தாக்குதல்களை கொண்ட பிரசுரத்தை பதிப்பித்தது. 2022ம் வருடத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் 8,218 கலவர சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் 9,500 பேர் பாதிக்கப்பட்டதாக பிரசுரம் குறிப்பிடுகிறது. வலது: மலகாவோனில் இருக்கும் தர்கா, இந்து-இஸ்லாமியர் ஒற்றுமையின் அடையாளமாக விளங்குகிறது

53 வயது ஷம்சுதீன் சய்யது சதாரா மாவட்டத்திலுள்ள கோந்த்வா கிராமத்து மசூதிக்குள் ஜூன் 2023-ல் ஒருநாள் நுழைந்தபோது இதயம் நின்றது. ‘ஜெய்ஸ்ரீராம்’ என கருப்பு எழுத்துகளில் எழுதப்பட்ட ஒரு காவிக் கொடி பள்ளி வாசல் தூபியில் பறந்து கொண்டிருந்தது. சய்யது பீதிக்குள்ளானார். உடனே காவல்துறையை அழைத்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரச் சொன்னார். ஆனால் கொடி இறக்குவதை பார்த்தபடி குறுகிய சந்துக்குள் காவல்துறை நின்று கொண்டிருந்தபோதும், சட்ட ஒழுங்கு பாதிக்குமோ என்கிற அச்சம் அவருக்குள் இருந்தது.

“ஓர் இஸ்லாமிய இளைஞன் சில நாட்களுக்கு முன் திப்பு சுல்தான் பற்றிய பதிவை சமூகதளத்தில் இட்டிருந்தான்,” என விளக்குகிறார் மசூதியின் அறங்காவலரான சய்யது. “18ம் நூற்றாண்டிண்டின் இஸ்லாமிய ஆட்சியாளரை புகழ்ந்தது பிடிக்காமல் இந்துத்துவ குழுக்கள் மசூதியை சேதப்படுத்தியிருக்கிறது.” திப்பு சுல்தான் பதிவை இட்ட 20 வயது சோஹேல் பத்தான் உடனே அதன் பிரச்சினையை உணர்ந்தார். “அதை நான் செய்திருக்கக் கூடாது,” என்கிறார் அவர். “இன்ஸ்டாகிராம் பதிவை இட்டதால் என் குடும்பத்துக்கு ஆபத்தான நிலையை உருவாக்கி விட்டேன்.”

பதிவிட்ட சில மணி நேரங்களில், தீவிர இந்துக்கள், மங்கலான வெளிச்சத்தைக் கொண்டிருந்த அவரது ஓரறை குடிசைக்குள் நுழைந்து அவரை அறைந்தனர். “நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தெரிவித்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும்,” என்கிறார் சோஹேல். “ஆனால் அது வெறும் இன்ஸ்டாகிராம் பதிவுதான். இஸ்லாமியர்களை தாக்க அவர்களுக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது, அவ்வளவுதான்.”

அவர் அறையப்பட்ட அதே இரவில், காவல்துறை தலையிட்டு, வழக்குப் பதிவு செய்தது. சோஹேலின் மீது. காவல்நிலையத்தில் அவர் இரவைக் கழித்தார். மத மோதலை பரப்பிய குற்றத்தின் கீழ் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு, மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அவரை அறைந்தவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்.

சோஹேலின் தாயான 46 வயது ஷானாஸ் சொல்கையில், அவர்களின் குடும்பம் பல தலைமுறைகளாக சதாராவில் வாழ்ந்து வருவதாகவும் இத்தகைய மிரட்டலையும் கண்காணிப்பையும் இதுவரை எதிர்கொண்டதில்லை எனவும் கூறுகிறார். “என் பெற்றோரும் தாத்தா பாட்டியும் பிரிவினையின்போது மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தில் நம்பிக்கை கொண்டிருந்ததால்தான் இந்தியாவில் தங்குவதென முடிவெடுத்தனர்,” என்கிறார் அவர். “இது என் நிலம், இது என் கிராமம், இது என் வீடு. ஆனாலும் என் குழந்தைகள் வேலைக்கு வெளியே சென்றால் பயம் வந்து விடுகிறது.”

PHOTO • Parth M.N.

சதாராவின் கோந்த்வே கிராமத்தில் வசிக்கும் சோஹேல் பதான், திபு சுல்தான் பற்றிய பதிவை சமூகதளக் கணக்கில் பதிவேற்றியதும் அவரது ஊரிலிருந்த மசூதி தாக்கப்பட்டது. அவரும் வீட்டில் தாக்கப்பட்டார்

சோஹேல் ஒரு கராஜில் பணிபுரிகிறார். அவரது சகோதரரான 24 வயது அஃப்தாப் வெல்டராக பணிபுரிகிறார். குடும்பத்தில் அவர்கள் இருவர் மட்டும்தான் வருமானம் ஈட்டுபவர்கள். மாதத்துக்கு 15,000 ரூபாய் சம்பாதிக்கின்றனர். சோஹேல் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் பிணை பெறவும் வழக்கறிஞர் கட்டணத்துக்கு இரு மாத சம்பளம் கழிந்தது. “நாங்கள் எப்படி வாழ்கிறோம் என நீங்கள் பார்க்கலாம்,” என்கிறார் ஷானாஸ் அஃப்தாபின் வெல்டிங் மெஷின் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் சிறு வீட்டைக் காட்டி. “வழக்குக்கு செலவழிக்கும் நிலையில் நாங்கள் இல்லை. ஒரே நல்ல விஷயம், கிராமத்தின் சமாதானக் குழு தலையிட்டு, பிரச்சினையை சரி செய்ததுதான்.”

71 வாது மதுகர் நிம்பால்கர் ஒரு விவசாயியும் சமாதானக் குழுவின் மூத்த உறுப்பினரும் ஆவார். 2014ம் ஆண்டில் குழு தொடங்கப்பட்டதிலிருந்து அக்குழு தலையிட வேண்டி வந்த முதல் பிரச்சினை இதுதான் என்கிறார் அவர். “காவிக் கொடி ஏற்றப்பட்ட மசூதியில் நாங்கள் கூட்டம் நடத்தினோம்,” என்கிறார் அவர். ”இரு சமூகத்தினரும் நிலைமையை மோசமாக்கக் கூடாதென ஒப்புக் கொண்டனர்.”

ஒரு காரணத்துக்காகதான் கூட்டம் மசூதியில் நடத்தப்பட்டதாக கூறுகிறார் நிம்பால்கர். “அதற்கு முன் இருக்கும் திறந்த வெளி இந்து திருமண நிகழ்ச்சிகளுக்காக பல காலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது,” என்கிறார் அவர். “இத்தன வருடங்களாக எப்படி வாழ்ந்து வந்திருக்கிறோம் என நினைவுபடுத்தவே அப்படி செய்யப்பட்டது.”

*****

ஜனவரி 22, 2024 அன்று ராம் லல்லா கோவில் அயோத்தியில் திறக்கப்பட்டது. 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒருமனதாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம், கோவில் கட்ட கொடுக்கப்பட்டது. நாற்பது வருடங்களுகு முன் விஷ்வ இந்து பரிஷத் தலைமையிலான தீவிர இந்து அமைப்புகள் தகர்த்த பாபர் மசூதியின் இடத்தில்தான் அக்கோவில் கட்டப்பட்டது.

அப்போதிருந்து பாபர் மசூதிதான், இந்தியாவில் பிரிவினைவாதத்துக்கான அடையாளமாக பாபர் மசூதி தகர்ப்பு மாற்றப்பட்டது.

பாபர் மசூதி தகர்ப்பை சட்டவிரோதமென உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டறிந்தும், கோவில் கட்ட அந்த நிலம் அளிக்கப்பட்டது, இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை ஆதரிப்பதாக மாறிப் போனது. இம்முடிவால், ஊடக வெளிச்சம் இல்லாத கிராமங்களில் இருக்கும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களை இலக்காக்கும் வலிமை, தீவிர இந்துக் குழுக்களுக்கு ஏற்பட்டுவிட்டதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.

PHOTO • Parth M.N.
PHOTO • Parth M.N.

2023ம் ஆண்டில் தாக்கப்பட்டு காயம்பட்ட, மகனின் புகைப்படத்தை நசீம் வைத்திருக்கிறார். நசீம் குடும்பத்துடன் வசிக்கும் வர்தாங்காட்டில் மத ஒருங்கிணைவுக்கென செறிவான வரலாறு இருக்கிறது

சுதந்திரம் பெறப்பட 1947ம் ஆண்டில் மதத் தலங்கள் இருக்கும் இடங்கள் அப்படியே ஏற்கப்பட்டதாக மினாஜ் சய்யது கூறுகிறார். “உச்சநீதிமன்ற தீர்ப்பு அதை தலைகீழாக்கி விட்டது,” என்கிறார் அவர். “ஏனெனில் அது பாபர் மசூதியுடன் முடிந்து விடவில்லை. இந்துக் குழுக்கள் தற்போது பிற மசூதிகளை நோக்கியும் வருகிறார்கள்.”

அவரின் கிராமத்தைப் போலவே மாவட்டமும் மாநிலமும் பிரச்சினைக்குரிய காலத்தை எதிர்கொண்டிருக்கிறது. 69 வயது ஹுசேன் ஷிகால்கர் சதாராவின் வர்தாங்காட் கிராமத்தில் தையல்காரராக இருக்கிறார். தலைமுறை தூரம் தெளிவாக தெரிவதாக சொல்கிறார். “என் வயது ஆட்கள் பழைய நாட்கள் போய்விட்டதை நினைத்து தவிக்கிறோம். பாபர் மசூதி தகர்ப்புக்கு பின்னான பிரிவினையை நான் பார்த்திருக்கிறேன். தற்போது இருப்பதைக் காட்டிலும் மிக அதிகம் அது. 1992ம் ஆண்டில்தான் ஊர்த்தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இன்று, இரண்டாம் தரக் குடிமகன் போல் உணர்கிறேன்.”

மதப் பன்முகத்தன்மையை பல வருடகாலமாக கொண்டிருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஷிகால்கரின் வர்ணனை நிலவரம் கொண்டிருக்கும் குரூரத்தை நமக்கு சுட்டுகிறது. கோட்டை வர்தாங்காட் மலைகளின் அடிவாரத்தில் இருக்கும் அந்த கிராமத்துக்கு, மகாராஷ்டிராவிலிருந்து பலர் புனித யாத்திரை வருவார்கள். மலைப்பாங்கான காட்டுப்பகுதியாக இருக்கும் கிராமத்தில் ஐந்து புனிதக் கல்லறைகளும் கோவில்களும் நெருக்கமான தூரத்தில் இருக்கின்றன. இந்துக்களும் இஸ்லாமியரும் அக்கம் பக்கமாக அங்கு வணங்குகின்றனர். இரு சமூகத்தினரும் தலத்தை ஒன்றாக பராமரிக்கின்றனர். குறைந்தபட்சம் ஜூலை 2023 வரை அதுவே நிலவரமாக இருந்தது.

கிராமத்தை சாராத சிலரால், இஸ்லாமியர்கள் வழக்கமாக தொழுகை செய்யும் பீர் டா உல் மாலிக் நினைவுக் கல், ஜூன் 2023-ல் உடைக்கப்பட்டதிலிருந்து வந்தங்காடில் நான்கு புனித கல்லறைகள்தாம் இருக்கின்றன. அடுத்த மாதத்தில் வனத்துறை அக்கல்லை, சட்டவிரோத கட்டுமானம் என சொல்லி மொத்தமாக இடித்து தரைமட்டமாக்கியது. ஐந்து நினைவகங்களில் ஏன் அந்த ஒன்று மட்டும் தகர்க்கப்பட்டது என இஸ்லாமியர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

PHOTO • Courtesy: Residents of Vardhangad

வர்தாங்காடில் இருந்த கல்லறைக் கல் தகர்க்கப்பட்டுவிட்டது. தங்களின் நினைவகம் மட்டும் ஏன் தனியாக ஆக்கிரமிப்பு என குறிக்கப்படுகிறதென இஸ்லாமியர்கள் கேட்கின்றனர்

”கிராமத்திலுள்ள இஸ்லாமியர்களுக்கு கோபத்தை ஊட்டும் முயற்சி இது,” என்கிறார் 21 வயது மாணவரும் வர்தாங்காடில் வசிப்பவருமான முகமது சாத். “அதே நேரத்தில் ஒரு சமூக தளப் பதிவுக்காக நானும் இலக்காக்கப்பட்டேன்.”

புனேவில் வாழும் சாதின் ஒன்று விட்ட சகோதரன், 17ம் நூற்றாண்டு ஆட்சியாளர் அவுரங்செப் பற்றிய இன்ஸ்டாகிராம் பதிவு இட்டார். கோபமான இந்துத்துவ குழுக்கள், சாதிவின் வீட்டுக்கு வந்து, அவரை வெளியே இழுத்துப் போட்டு இரும்பத் தடிகள் ஹாக்கி குச்சிகளை கொண்ட் தாக்கினர். “அவரங்செப் மகனே!” என அவரைக் கத்தினர்.

“அது இரவு நேரம். நான் எளிதாகக் கொல்லப்பட்டிருப்பேன்,” என நினைவுறுகிறார் சாத். “நல்வாய்ப்பாக அதே நேரத்தில் காவல்துறை வாகனம் அந்தப் பகுதியில் சென்றது. அதைக் கண்ட கும்பல் ஓடி விட்டது.”

அடுத்த 15 நாட்களை தலைக்காயம், உடைந்த கால், உடைந்த கன்ன எலும்பு ஆகியவற்றுடன் மருத்துவமனையில் கழித்தார் சாத். சில நாட்களுக்கு ரத்த வாந்தி எடுத்தார். இன்றும் கூட, தனியாக பயணிக்க அவருக்கு முடியவில்லை. “மீண்டும் என்னை தாக்குவார்கள் என்ற பயம் இருக்கிறது,” என்கிறார் அவர். “படிப்பில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை.”

சாத், கம்யூட்டர் சயின்ஸ் இளங்கலை படிக்கிறார். நன்றாக படிக்கக் கூடிய அவர் 12ம் வகுப்பு தேர்வில் 93 சதவிகித மதிப்பெண் பெற்றார். ஆனால் சமீப மாதங்களில் அவரின் கல்வி சரிந்து விட்டது. “மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூன்று நாட்களில் என் மாமாவுக்கு மாரடைப்பு வந்து இறந்துவிட்டார்,” என்கிறார் அவர். “அவருக்கு 75 வயதாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருந்தார். இதயப் பிரச்சினை அவருக்கு இருக்கவில்லை. மன அழுத்தத்தின் காரணமாகதான் அந்த மாரடைப்பு வந்தது. அவரை நான் மறக்க முடியாது.”

அச்சம்பவம் நடந்ததிலிருந்து, இஸ்லாமியர்கள் தனியாக இருக்கத் தொடங்கினர். இந்துக்களுடன் பழகுவதில்லை. கிராமத்தின் முகமே மாறிவிட்டது. பழைய நட்புகள் பாதிப்படைந்தன. உறவுகள் தொலைந்து விட்டன

PHOTO • Parth M.N.
PHOTO • Parth M.N.

இடது: ’கிராமத்திலுள்ள இஸ்லாமியர்களுக்கு கோபத்தை ஊட்டும் முயற்சி இது,’ என்கிறார் மாணவரும் வர்தாங்காடில் வசிப்பவருமான முகமது சாத். வலது: வர்தாங்காடின் தையற்காரர் ஹுசேன் ஷிகால்கர் சொல்கையில், ‘மொத்த கிராமத்துக்குமான துணியை நான் வாழ்க்கை முழுக்க தைத்து வந்திருக்கிறேன். கடந்த சில வருடங்களாக என் இந்து வாடிக்கையாளர்கள் வருவதை நிறுத்தி விட்டார்கள். அவர்கள் விரும்பி அது நடந்ததா அல்லது மற்றவரின் கட்டாயமா என தெரியவில்லை,’ என்கிறார்

இந்த இரண்டு சம்பவங்கள் மட்டுமல்ல என்கிறார் ஷிகால்கர். தினசரி விஷயங்களிலேயே அந்நியப்படுத்தப்படுவது தெரிகிறது.

“நான் ஒரு தையற்காரர்,” என்கிறார் அவர். “மொத்த கிராமத்துக்குமான துணியை நான் வாழ்க்கை முழுக்க தைத்து வந்திருக்கிறேன். கடந்த சில வருடங்களாக என் இந்து வாடிக்கையாளர்கள் வருவதை நிறுத்தி விட்டார்கள். அவர்கள் விரும்பி அது நடந்ததா அல்லது மற்றவரின் கட்டாயமா என தெரியவில்லை.”

பேசும் விதம் கூட மாறிவிட்டதாக சொல்கிறார் அவர். “’லந்தியா’ என்கிற வார்த்தையை நான் முன்பு கேட்டதே இல்லை,” என்கிறார் அவர் இஸ்லாமியர்களை குறிக்க கீழ்த்தரமாக பயன்படுத்தப்படும் வார்த்தையை சொல்லி. “இப்போதெல்லாம் அதை நிறைய கேட்கிறோம். இந்துக்களும் இஸ்லாமியரும் நேருக்கு நேராக பார்த்துக் கொள்வது கூட இல்லை.”

மேற்கு மகாராஷ்டிராவின் சதாரா பகுதியிலுள்ள வர்தாங்காட் ஒரு தனித்த நிகழ்வு அல்ல. மதப் பிரச்சினைகள் கிராமங்களை மதரீதியாக பிரித்திருக்கின்றன. கிராமங்களின் விழாக்களும் திருமண நிகழ்ச்சிகளும் வெகுவாக மாறிவிட்டன.

இந்து கணேஷ் விழாவை முன்னணியில் இருந்து நடத்தியவர்களில் தானும் ஒருவன் என்கிறார் ஷிகால்கர். பல இந்துக்களும் சூஃபி துறவி மொஹினுதீன் சிஷ்டியின் மரணத்தை நினைவுகூரும் வருடாந்திர விழாவான அர்ஸில் கலந்து கொண்டிருக்கின்றனர். “அதெல்லாம் இப்போது தொலைந்து விட்டது,” என அவர் புலம்புகிறார். “ராம நவமியின்போது மசூதியை கடந்து செல்ல நேர்ந்தால் மரியாதை நிமித்தமாக இசையை நிறுத்தி கடக்கும் காலம் ஒன்று இருந்தது. இப்போது எங்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் அதிக சத்தத்துடன் ஒலிக்கிறது.”

இருந்தாலும் இரு சமூகத்தின் கணிசமான மக்கள், இன்னும் எல்லாமும் மாறி விடவில்லை என நம்புகின்றனர். இரு மதங்களுக்கு இடையே பிரிவினையை உருவாக்க முயலும் கும்பல்கள் பெரும்பான்மை மக்களை அடையாளப்படுத்த முடியாதென நினைக்கின்றனர். “அவர்கள் அதிக ஆரவாரத்துடன் இருக்கிறார்கள். அரசின் ஆதரவும் அவர்களுக்கு இருக்கிறது. எனவே நிறைய பேர் இருப்பதை போல் தோன்றுகிறது,” என்கிறார் மலகாவோனை சேர்ந்த ஜாதவ். “பிரச்சினை இல்லாமல் வாழ்க்கையை ஓட்ட பெரும்பாலான மக்கள் விரும்புவதால், இந்துக்கள் பேச பயப்படுகின்றனர். அந்த நிலை மாற வேண்டும்.”

சதாராவின் பிற பகுதிகளுக்கான முன் மாதிரியாக  மலகாவோன் மாற முடியுமென நம்புகிறார். ”தர்காவை காக்க இந்துக்கள் முன் வந்த பிறகு, பயங்கரவாத சக்திகள் பின்னுக்கு சென்று விட்டன,” என்கிறார் அவர் அழுத்தமாக. “மதப் பன்முகத்தன்மையை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு தான் இருக்கிறது. இஸ்லாமியர்கள் மீது அதை சுமத்த முடியாது. நம் அமைதிதான் சமூக விரோத சக்திகளுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது.”

தமிழில் : ராஜசங்கீதன்

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Editor : Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan