“OTP-கள் என்றாலே எனக்கு பயம். ஆறு எண்கள்தான். பணம் பறிபோய்விடும்,” என பேருந்து சத்தம், வியாபாரிகளின் சத்தம், அறிவிப்புகளின் ஒலி போன்றவற்றால் நிறைந்திருக்கும் பேருந்து நிறுத்தத்தில் கூறுகிறார் அனில் தோம்ப்ரே. யாரோ ஒருவர் அவரிடம் OTP கேட்டிருக்கிறார். என்னிடம் உதவக் கேட்டிருக்கிறார்.
பட்ஜெட் பற்றி அவர் கேள்விப்பட்டிருக்கிறார். “ஜனவரி 31 அன்று, அது குறித்த செய்தியை ரேடியோவில் கேட்டேன். ஒவ்வொரு துறைக்குமென சில அறிவிப்புகளை அரசு வெளியிட்டிருக்கிறது. எனக்கு அது தெரியும். முழுமையாக இல்லையெனினும் கொஞ்சமேனும் தெரியும்,” என்கிறார் வெற்றிலைப் பாக்கை சீவியபடி.
சற்று அமைதியான இடத்துக்கு செல்வதென முடிவெடுத்ததில் சிவப்பு கறுப்பு குச்சி வழிகாட்ட அவர் கேண்டீனுக்கு நம்மை அழைத்து செல்கிறார். நடைமேடைகள், கூட்டம், கேண்டீன் கவுண்டர்கள், படிக்கட்டுகள் எல்லாம் அவருக்கு அத்துப்படி. “ஒரு வயதாகும்போது தட்டம்மை வந்து என் பார்வை போய் விட்டதாக சொன்னார்கள்.”
![](/media/images/02-1738822924160-MK-Mai-baap_sarkar_forget.max-1400x1120.jpg)
பாருலை சேர்ந்த இசைக் கலைஞரான அனில் தோம்ப்ரே, ஒன்றிய பட்ஜெட் மாற்றுத் திறனாளிகள் மேல் அதிகம் கவனம் செலுத்த வேண்டுமென விரும்புகிறார்
துல்ஜாப்பூர் டவுனிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாருல் கிராமத்தில் வசிக்கிறார். 2,500 பேர் வசிக்கும் கிராமம் அது. பஜனை பாடல்கள் பாடும் குழு ஒன்றில் தோம்ப்ரா தபலா போன்ற இசைக்கருவிகளை வாசிக்கிறார். அங்கு கிடைக்கும் பணத்துடன் மாத்ந்தோறும் அவருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகையாக ரூ.1000-மும் கிடைக்கிறது. “ஒழுங்காக குறிப்பிட்ட நேரத்துக்கு அது வருவதில்லை,” என்கிறார். சமீபத்தில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அவருக்கு வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் வேலை தொடங்கும். அதற்கும் கூட முதல் தவணை என்னுடைய வங்கிக் கணக்குக்கு வர வேண்டும். அதற்கு முதலில் என்னை பற்றிய தகவல்களை வங்கிக்கு அளிக்க வேண்டும்,” என்கிறார் 55 வயது தோம்ப்ரே.
லாண்ட்ரியில் இருந்து துணிகளை வாங்க இன்று அவர் துல்ஜாப்பூர் சென்றிருக்கிறார். பாருலிலுள்ள அவரது நண்பர் அச்சேவையை வழங்குகிறார் “எனக்கு திருமணம் ஆகவில்லை. எல்லா குடும்ப வேலைகளையும் நானே செய்து கொள்கிறேன். நானே சமைக்கிறேன். குழாயிலிருந்து நீர் பிடித்துக் கொள்கிறேன். துணி துவைக்கத்தான் பிடிப்பதில்லை,” என்கிறார் அவர் சிரித்தபடி.
தோம்ப்ரேவை பொறுத்தவரை, “தாய், தந்தையாக இருக்கும் அரசாங்கம் எல்லாரையும் பார்த்துக் கொள்ள வேண்டும். என்னைக் கேட்டால், என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பட்ஜெட்டில் இன்னும் கொஞ்சம் கவனம் கொடுக்க வேண்டும்,” என்கிறார்.
ஆனால் 2025ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளி என்கிற வார்த்தை கூட இடம்பெறவில்லை என்கிற உண்மை தோம்ப்ரேவுக்கு தெரியாது.
தமிழில் : ராஜசங்கீதன்