முதலில் மழையின்மை, பின்னர் காலம் தப்பிய மழை ஆகியவை சத்ரா தேவியின் பயிர்களை நாசமாக்கின. “நாங்கள் பஜ்ரா [கம்பு] பயிரிட்டோம். அது நன்றாக வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலையில், மழை பெய்யவில்லை. பின்னர் அறுவடை காலத்தில் பெய்த மழை, பயிர்களை நாசமாக்கியது,” என்று ராஜஸ்தானின் கரௌலி மாவட்டத்தில் உள்ள கிர்கிரி கிராமத்தைச் சேர்ந்த இந்த 45 வயது விவசாயி கூறுகிறார்.
கரௌலியின் பொருளாதாரம், அதிகப்படியாக விவசாயத்தை சார்ந்துள்ளது. அங்கு வசிக்கும் பெரும்பான்மையானோர், பயிரிடுபவர்கள் அல்லது விவசாய தொழிலாளர்கள் (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011) ஆவர். மாநிலத்தின் இப்பகுதியில் பல காலமாக தண்ணீர் பஞ்சம் இருப்பதால், விவசாயம் பெரும்பாலும் மானாவாரியாக உள்ளது.
மீனா சமூகத்தைச் (மாநிலத்தில் ஓபிசியாகப் பட்டியலிடப்பட்டவர்) சேர்ந்த சத்ரா தேவி, கடந்த 10 ஆண்டுகளின் மழைப்பொழிவில் காலநிலை மாற்றத்தைக் கண்டதாகக் கூறுகிறார். ராஜஸ்தான், இந்தியாவின் மிகப்பெரிய (பரப்பளவில்) மாநிலம். அங்குள்ள 70 சதவீத மக்களுக்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தான் வாழ்வாதாரமாக உள்ளது.
மாறிவரும் மழைப்பொழிவு, கிர்கிரியில் உள்ள விவசாயிகளை, பால் விற்பனையை வாழ்வாதாரத்திற்காக நம்பியிருக்க கட்டாயப்படுத்துகிறது. ஆனால் வானிலையில் ஏற்படும் மாற்றங்கள், பல்வேறு நோய்களுக்கு இரையாகும் கால்நடைகளின் ஆரோக்கியத்தையும் எதிர்மறையாக பாதிக்கிறது. "கடந்த 5-10 நாட்களாக, என் மாடு சரியாக சாப்பிடவில்லை," என்கிறார் சத்ரா தேவி.
கிர்கிரியில் உள்ள மகாத்மா காந்தி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையான 48 வயது அனூப் சிங் மீனா, எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார். “என் கிராமத்தின் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கும்போது, பருவமழையை நம்பியிருக்கும் விவசாயம், நிறைய மாற்றங்களைக் காணப் போவதை உணர்கிறேன். எதிர்காலம் மிகவும் இருண்டதாகத் தெரிகிறது.”
கிர்கிரியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், அந்த நிலத்தை நம்பி வாழ்பவர்களின் கதையைச் சொல்வதோடு, ஒழுங்கற்றதாக மாறும் வானிலை முறைகளால் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றியும் கூறுகிறது.
தமிழில் : அஹமத் ஷ்யாம்