நவல்கவனில் சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருக்கையில் இளையோரும் வளர்ந்தவரும் பள்ளி மைதானத்துக்கு சென்று கொண்டிருக்கின்றனர். விளையாட்டு மைதானத்திலுள்ள கற்களையும் குப்பைகளையும் நீக்கி சுத்தப்படுத்தி, எல்லைக்கோடுகள் வரைந்து, விளக்குகளை பரிசோதிக்கின்றனர்.

8 முதல் 16 வயது வரையிலான குழந்தைகள் நீல நிற ஜெர்சியில் தயாராகி, ஏழு பேர் கொண்ட குழுக்களாக பிரிகின்றனர்.

கபடி கபடி கபடி

விளையாட்டு தொடங்குகிறது. மாலை தொடங்கி இரவு வரை, விளையாட்டு வீரர்களின் துடிப்பான குரல்கள் காற்றை நிறைக்கும். மராத்வாடாவின் ஹிங்கோலி மாவட்ட கிராமத்தில் நண்பர்களும் குடும்பங்களும் விளையாட்டை பார்த்து மகிழ்கிறார்கள்.

மூச்சைப் பிடித்துக் கொண்டு ஒரு வீரர், எதிர் அணியின் பக்கத்துக்கு சென்று, தொட முயற்சிக்கிறார். மீண்டும் தன் பக்கம் திரும்புவதற்கு முன் முடிந்த வரை எல்லா வீரர்களையும் தொட்டு, ஆட்டத்தை விட்டு நீக்கிவிட்டு வர முயலுகிறார். மீண்டும் தன் பக்கத்துக்கு திரும்பும் வரை ‘கபடி’ என அவர் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். எதிரணியினர் அவரைப் பிடித்து விட்டால் அவர் ஆட்டத்தை விட்டு செல்ல வேண்டும்.

கபடி விளையாட்டை காண்க!

கிராமத்தின் விளையாட்டு வீரர்கள் எளிய குடும்பப் பின்னணிகளை சேர்ந்தவர்கள். பெரும்பாலானோர் மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்கள். விவசாயத்தை சார்ந்திருக்கிறார்கள்

அனைவரும் சிறந்த வீரர்களான ஷுபம் கோர்டே மற்றும் கன்பா கோர்டே ஆகிய இருவரும் விளையாடுவதை பார்க்கின்றனர். எதிரணியினரும் அவர்களுக்கு அஞ்சுகின்றனர். “கபடி தங்களின் நரம்புகளில் ஓடுவது போல் விளையாடுவார்கள்,” என கூட்டத்தில் இருக்கும் ஒருவர் நம்மிடம் சொல்கிறார்.

ஷுபமும் கன்பாவும் அவர்களின் அணியை வெற்றியடையச் செய்கிறார்கள். அனைவரும் கூடுகின்றனர். விளையாட்டை பற்றி விவாதித்து, அடுத்த நாளுக்கான புதிய திட்டம் உருவாக்கப்படுகிறது. பிறகு வீரர்கள் வீட்டுக்கு செல்கின்றனர்.

மகாராஷ்டிராவின் நவல்கவான் கிராமத்தின் அன்றாடம் இதுதான். “எங்களின் கிராமத்துக்கு கபடி விளையாட்டில் நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. பல தலைமுறைகள் இந்த விளையாட்டை விளையாடியிருக்கின்றனர். இப்போதும் கூட, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு விளையாட்டு வீரரை நீங்கள் கண்டறியலாம்,” என்கிறார் மரோதிராவ் கோர்டே. அவர்தான் ஊர்த்தலைவர். “ஒருநாள் நவல்கவன் குழந்தைகள் பெரும் இடங்களுக்கு சென்று விளையாட வேண்டும். அதுதான் எங்களுக்கு கனவு.”

இந்திய துணைக்கண்டத்தில் பல நூற்றாண்டுகளாக கபடி விளையாடப்பட்டு வருகிறது. 1918ம் ஆண்டில்தான் இப்போட்டிக்கு தேசிய விளையாட்டு அந்தஸ்து கிடைத்தது. 1936ம் ஆண்டு நடந்த பெர்லின் ஒலிம்பிக் போட்டிகள்தான் சர்வதேச அளவில் கபடி போட்டி நடந்த முதல் நிகழ்வு. கபடி லீக் 2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிறகு அதற்கான புகழ் அதிகரித்தது.

கிராமத்தின் விளையாட்டு வீரர்கள் எளிய குடும்பப் பின்னணிகளை சேர்ந்தவர்கள். சில குடும்பங்களை தவிர்த்து பார்த்தால், இங்குள்ள பெரும்பாலானோர் மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். பிழைப்புக்கு விவசாயம் செய்கிறார்கள். செம்மண்ணும் பாறைகளும் இருக்கும் பகுதியாக இது இருக்கிறது.

PHOTO • Pooja Yeola
PHOTO • Pooja Yeola

இடது: ஷுபமும் கன்பா கோர்டேவும் 2024ம் ஆண்டில் நடந்த மத்ருத்வ சன்மான் கபடி போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை பெற்றார்கள். வலது: நவல்கவன் கபடி வீரர்கள் வென்ற விருதுகளும் கோப்பைகளும்

PHOTO • Nikhil Borude
PHOTO • Pooja Yeola

இடது: இந்திய துணைக்கண்டத்தில் பல நூற்றாண்டுகளாக கபடி விளையாடப்பட்டு வருகிறது. கபடி லீக் 2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிறகு அதற்கான புகழ் அதிகரித்தது. வலது: பயிற்சிக்கு பிறகு விளையாட்டு பற்றி பேச வீரர்கள் அமருகின்றனர்

ஷுபமும் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்தான். ஆறு வயதிலிருந்து கபடி விளையாடி வருகிறார். “கிராமத்தில் இருக்கும் சூழல் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. நான் இங்கு தினமும் வந்து அரை மணி நேரமேனும் பயிற்சி செய்கிறேன்,” என்கிறார் 6ம் வகுப்பு படிக்கும் 12 வயதாகும் அவர்.

ஷுபமும் கன்பாவும் பக்கத்து கிராமமான பண்டேகவோனிலுள்ள சுக்தேவானந்த் உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். கன்பா 10ம் வகுப்பு படிக்கிறார். அவருடன் வேதாந்த் கோர்டே மற்றும் ஆகாஷ் கோர்டே ஆகிய இருவரும் ‘ரெய்டு’ விளையாட்டு சிறப்பாக விளையாடுவார்கள். ஒருமுறை சென்றாலும் 4-5 பேரை ஆட்டமிழக்க செய்து விட்டு வருவது ‘ரெய்டு’ ஆட்டம் என்றழைக்கப்படுகிறது. “பின்னாலும் பக்கவாட்டிலும் உதைத்து ஆட்டத்தை விட்டு நீக்கி, எகிறி தப்பித்து வந்து விடுவோம்,” என்கிறார்கள் அவர்கள். அனைவரும் விளையாட்டில் ‘ஆல் ரவுண்டர்கள்’.

நவல்கவனில் எடையை வைத்து அணிகள் தீர்மானிக்கப்படுகின்றன. 30 கிலோ அணி, 50 கிலோ அணி மற்றும் அனைவருக்குமான அணி.

அனைவருக்குமான அணியின் தலைவர் கைலாஸ் கோர்டே. “பல கோப்பைகள் வென்றிருக்கிறோம்,” என்கிறார் 26 வயது கைலாஸ். 2024ம் ஆண்டில் அவர்கள் மத்ருத்வ சன்மான் கபடி போட்டிகளையும் 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் வசுந்தரா அறக்கட்டளையின் கபடி போட்டிகளையும் வென்றிருக்கிறார்கள். சுக்தேவானந்த் கபடி கிரிடா மண்டல் ஒருங்கிணைத்த மாநில அளவிலான போட்டிகளிலும் வென்றிருக்கிறார்கள்.

“ஜனவரி 26, குடியரசு தினத்தன்று நடத்தப்படும் போட்டிகள் பெரியவை. பக்கத்து கிராம அணிகளுடன் நாங்கள் போட்டியிடும் போட்டிகளை காண மக்கள் வருவார்கள். எங்களுக்கு விருதுகளும் ரொக்கப்பரிசுகளும் கிடைக்கும்.” நிறைய போட்டிகள் நடத்தப்பட வேண்டுமென்கிறார் அவர். தற்போது இவை வருடத்துக்கு இருமுறை அல்லது மும்முறைதான் நடத்தப்படுகிறது. இளம் விளையாட்டு வீரர்களுக்கு அதிகமாக இவை நடத்தப்பட வேண்டும் என்கிறார் கைலாஸ்.

PHOTO • Pooja Yeola
PHOTO • Pooja Yeola

இடது: கைலாஸ் கோர்டே நவல்கவனின் கபடி குழுவுக்கு தலைவராக இருந்து பயிற்சி அளிக்கிறார். கடந்த வருடம் அவர் புனேவில் 10 நாட்கள் பயிற்சியில் கலந்து கொண்டார். வலது: இளையோருக்கு நாராயண் சவான் பயிற்சி  அளித்து காவல்துறை தேர்வுகளுக்கும் தயாராக உதவுகிறார். ஆரோக்கியத்தை வளர்க்க கபடி உதவியதாக அவர் சொல்கிறார்

காவல்துறை தேர்வுக்கு கைலாஸ் தயாராகிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு காலையும் அவர் 13 கிலோமீட்டர் பயணித்து ஹிங்கோலிக்கு சென்று இரண்டு மணி நேரங்கள் வாசிப்பறையில் படிக்கிறார். பிறகு அவர் மைதானத்துக்கு சென்று பயிற்சியும் உடற்பயிற்சியும் மேற்கொள்கீறார். விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் கல்வி ஆகியவற்றுக்கான அவரின் ஈடுபாடு பல இளம் மாணவவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது.

“நவல்கவன் மற்றும் சதாம்பா, பண்டேகாவோன் மற்றும் இஞ்சா போன்ற அருகாமை கிராமங்களை சேர்ந்த பல இளையோர் தங்களுக்கான வேலைகளை பெற கபடி உதவுகிறது,” என்கிறார் நாராயண் சாவன். கைலாஸை போலவே 21 வயது நிறைந்த இவரும் காவலர் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அவரின் உடற்பயிற்சிக்கு கபடி உதவுகிறது. “எங்களுக்கு கபடி பிடிக்கும். குழந்தை பிராயத்திலிருந்து விளையாடி வருகிறோம்.”

ஹிங்கோலியை சேர்ந்த பல சிறு டவுன்களில் பல வயதுகளை சேர்ந்தோருக்கான வருடாந்திர கபடி போட்டிகள் நடக்கின்றன. இவை ஸ்ரீபத்ராவ் கட்கர் அறக்கட்டளையால் ’மத்ருத்வ சன்மான் கபடி போட்டி’ என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்படுகிறது. கட்கற அறக்கட்டளையின் நிறுவனரான சஞ்சய் கட்கர், இந்த நிகழ்வுகளை கபடி பயிற்சியோடு சேர்த்து ஒருங்கிணைக்கிறார். உள்ளூர் வணிகத்தை ஊக்குவித்து, புலப்பெயர்வை தடுக்கும் நோக்கத்தை முன் வைத்து கிராமங்களில் பணிபுரிவதை அறக்கட்டளை இலக்காகக் கொண்டிருக்கிறது. ஹிங்கோலி மாவட்ட தாலுகாக்களில் நடத்தப்படும் கபடி போட்டிகளுக்கு அவர்கள் பெயர் பெற்றவர்கள்.

2023-ல் விஜய் கோர்டே மற்றும் கைலாஸ் கோர்டே ஆகியோர் புனேவில் நடந்த 10 நாள் பயிற்சியில் கலந்து கொண்டனர். இன்று அவர்கள் நவல்கவனின் குழந்தைகளுக்கும் இளையோருக்கும் பயிற்சி கொடுக்கின்றனர். “குழந்தைப் பருவத்திலிருந்து இந்த விளையாட்டு எனக்கு பிடிக்கும். அதிகதிகமாக அதைப் பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் முயன்றிருக்கிறேன். இந்த இளையோருக்கு நன்றாக பயிற்சியளித்து நன்றாக விளையாட வைக்க விரும்புகிறேன்,” என்கிறார் விஜய்.

PHOTO • Pooja Yeola
PHOTO • Pooja Yeola

இடது: நவல்கவனின் இளையோரும் முதியோரும் அன்றாடம் மாலை வரும் ஜில்லா பரிஷத் பள்ளி மைதானம. வலது: நீல நிற உடை அணிந்திருக்கும் இளையோர் விளையாடத் தயாராக இருக்கிறார்கள்

இங்குள்ள குழந்தைகளுக்கு பெரியளவில் திறமை இருக்கிறது என்றும் அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாட முடியுமென்றும் அவர் நினைக்கிறார். ஆனால் எல்லா காலநிலையிலும் விளையாடக் கூடிய மைதானம் போன்ற வசதிகள்தான் அவர்களுக்கு இல்லை. “மழை பெய்யும்போது நாங்கள் பயிற்சி எடுக்க முடியாது,” என்கிறார் விஜய்.

வேதாந்தும் நாராயணும் தங்களின் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்கின்றனர். “எங்களுக்கு மைதானம் இல்லை. பிற விளையாட்டு வீரர்கள் போல, தரைவிரிப்பில் பயிற்சி எடுக்க முடியுமென்றால் நாங்களும் நிச்சயம் பயிற்சி செய்வோம்,” என்கிறார்கள் அவர்கள்.

ஆனாலும் நவல்கவனின் கபடி பாரம்பரியம் பெண் குழந்தைகளுக்கு போதுமான இடம் தருவதில்லை. பள்ளி அளவில் விளையாடப்படும் பலருக்கும் எந்தவித வசதிகளும் கிடையாது. பயிற்சியாளர் கூட கிடையாது.

*****

கபடி போன்ற வெளிப்புற விளையாட்டுகள் யாவும் சில சவால்களை கொண்டு வருகின்றன. பவன் கொராடேவுக்கு அது தெரிகிறது.

கடந்த வருடம் ஹோலி நாளன்று நவல்கவனில் போட்டிகள் நடந்தது. மொத்த கிராமமும் வேடிக்கை பார்க்கக் கூடியது. 50 கிலோ போட்டியில் பவன் கோர்டே விளையாடினார். “எதிரணியின் களத்துக்குள் புகுந்து சில வீரர்களை ஆட்டம் விட்டு நீக்கினேன். மீண்டும் என் களத்துக்கு செல்லும்போது தடுமாறி கீழே விழுந்தேன்,” என்கிறார் பவன். அவர் மோசமாக காயமடைந்தார்.

PHOTO • Pooja Yeola
PHOTO • Pooja Yeola

இடது: கபடி வீரரான பவன் கோர்டே ஒரு விளையாட்டில் முதுகில் படுகாயம் அடைந்தார். ஆறு மாதங்களுக்கு பிறகு அவரால் நடக்கவும் மெல்ல ஓடவும் முடிந்தது. வலது: தொடர முடியாமல், விகாஸ் கோர்டே விளையாட்டை நிறுத்தி விட்டு ஒரு டெம்போ வாங்கி கிராமத்திலிருந்து விவசாயப் பொருட்களை ஹிங்கோலிக்கு கொண்டு சென்று விற்கும் வேலையைப் பார்க்கிறார்

ஹிங்கோலிக்கு அவர் உடனடியாக கொண்டு செல்லப்பட்ட போதும் அவருக்கு அறுவை சிகிச்சை அறிவுறுத்தப்பட்டு நண்டெட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தாலும் முன்பைப் போல் அவர் விளையாட முடியாது என மருத்துவர்கள் எச்சரித்தனர்.

“அதைக் கேட்டதும் எங்களுக்கு பெரும் ஏமாற்றம்,” என்கிறார் அவர். ஆனாலும் அவர் விட்டுவிடவில்லை. அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டதும் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். ஆறு மாதங்கள் கழித்து, அவர் நடக்கவும் ஓடவும் தொடங்கினார். “காவல்துறை தேர்வுக்கு செல்ல விரும்புகிறார்,” என்கிறார் அவரின் தந்தை.

அவரின் மொத்த மருத்துவச் செலவையும் கட்கர் அறக்கட்டளை பார்த்துக் கொண்டது.

கபடி விளையாட்டுக்கான பெருமையை நவல்கவன் எடுத்துக் கொண்டாலும் அங்குள்ள அனைவரும் கபடி விளையாட்டில் ஈடுபட முடியவில்லை. பிழைப்புக்கு வேலை பார்க்க வேண்டி விகாஸ் கோர்டே விளையாட்டை நிறுத்தி விட்டார். “கபடி விளையாட எனக்கு பிடிக்கும். ஆனால் பொருளாதார நெருக்கடியும் விவசாய வேலையும் காரணமாக கல்வியையும் விளையாட்டையும் நான் நிறுத்த வேண்டியிருந்தது,” என்கிறார் 22 வயதாகும் அவர். விகாஸ் கடந்த வருடம் ஒரு டெம்போ வாங்கினார். “விவசாயப் பொருட்களான மஞ்சள், சோயாபீன் போன்றவற்றை என் கிராமத்திலிருந்து ஹிங்கோலிக்கு கொண்டு சென்று வருமானம் ஈட்டுகிறேன்,” என்கிறார் அவர்.

கபடி ஊராக நவல்கவன் விரும்புகிறது. அந்த ஊரின் இளைஞர்களுக்கு “கபடிதான் இறுதி இலக்கு!”

தமிழில்: ராஜசங்கீதன்.

Student Reporter : Pooja Yeola

Pooja Yeola is a student of journalism at Chhatrapati Sambhajinagar in Maharashtra.

Other stories by Pooja Yeola
Editor : Medha Kale

Medha Kale is based in Pune and has worked in the field of women and health. She is the Marathi Translations Editor at the People’s Archive of Rural India.

Other stories by Medha Kale
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan