“இதுதான் பள்ளி,” என்னும் அதுல் போசலேவின் விரல், மகாராஷ்டிர குண்டேகாவோன் கிராமத்தின் பொட்டல் வெளிக்கு நடுவே நிற்கும் இரு அறைகளை கொண்ட ஒரு சிறு கட்டடத்தை சுட்டிக் காட்டுகிறது. கிராமத்தை நோக்கி செல்லும் வழியில் அக்கட்டடத்தை நீங்கள் தவறவிட முடியாது. மண் சாலையில் சென்றால் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பார்தி குடியிருப்பு வரும்.

வெளிர் மஞ்சள் பூச்சில் நீல நிற ஜன்னல்களையும் வண்ணமய கார்ட்டூன்களையும் சுவர்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் முகங்களையும் கொண்டிருக்கும் அப்பள்ளி உங்களின் கவனத்தை ஈர்க்கும். தார்ப்பாய் கூரை மண் வீடுகளை கொண்டு 20 பார்தி குடும்பங்கள் வசிக்கும் அப்பகுதியில் அது தனித்து நிற்கும் கட்டடமாக இருக்கிறது.

“வளர்ச்சி என எங்கள் ஊரில் நடந்த ஒரே விஷயம் இதுதான்,” என்கிறார் 46 வயது அதுல் போசலே பெளத்காவஸ்தியை பற்றி. அகமதுநகர் மாவட்ட நாகர் தாலுகாவிலூள்ள அந்த கிராமத்துக்கு அதுதான் பெயர்.

“வேறொன்றும் இல்லை. சாலைகள் இல்லை. நீர், விளக்கு, காரவீடு எதுவும் இல்லை. இந்தப் பள்ளி அருகே இருக்கிறது. எனவே எங்களின் குழந்தைகள் குறைந்தபட்சம் படிக்கவும் எழுதவும் முடியும்,” என்கிறார் அவர். அதுல் இந்த சிறு கட்டடம் பற்றி பெருமிதம் கொண்டிருக்கிறார். இங்குதான் அவரது குழந்தைகளான சாஹில் மற்றும் ஷப்னம் ஆகியோர் ஏழு பெண் குழந்தைகள் மற்றும் ஒன்பது ஆண் குழந்தைகளுடன் சேர்ந்து படிக்கின்றனர்.

இந்தப் பள்ளியைதான் மாநில அரசாங்கம் அப்புறப்படுத்தி வேறு பள்ளியுடன் இணைக்க விரும்புகிறது. வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் இந்த மக்களுக்கு அது அதிர்ச்சி தரும் செய்தி. மேய்ச்சல் குழுவும் சீர் மரபினராகவும் இருக்கும் பார்திகள் மகாராஷ்டிராவில் பட்டியல் பழங்குடி யினராக இருக்கின்றனர்.

ஒன்றரை நூற்றாண்டுகளாக இம்மக்கள் கடும் பாரபட்சத்தையும் வறுமையையும் எதிர்கொண்டு வந்திருக்கின்றனர். 1871ம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சி ‘குற்றப்பழங்குடி சட்டத்தை’ கொண்டு வந்தது. அச்சட்டம் கிட்டத்தட்ட 200 பழங்குடி சமூகங்களையும் பிற சாதிகளையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஏற்காத காரணத்தால் ஒடுக்கியது. பார்திகளும் அதில் இடம்பெற்றிருந்தனர். இச்சட்டத்தின்படி, இக்குழுக்களை சேர்ந்தவராக இருந்தால் நீங்கள் பிறப்பால் குற்றவாளி என அர்த்தம். இச்சட்டம் 1952ம் ஆண்டில் சுதந்திர இந்தியாவில் ரத்து செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சமூகத்தினர் சீர்மரபினர் என அறிவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் மீதான களங்கம் மட்டும் போகவே இல்லை. வழக்கமான வேலைகள் பெறுவதென்பது பார்திகளுக்கு அசாத்தியமான காரியம். பள்ளிக்கு செல்ல முயலும் அவர்களது குழந்தைகள் கேலி கிண்டலுக்கும் ஒடுக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டு தாக்கப்படவும் நேர்வதுண்டு.

PHOTO • Jyoti
PHOTO • Jyoti

இடது: அதுலும் ருபாலி போசலேவும் தங்களின் குழந்தைகளான சாகில் மற்றும் ஷப்னம் ஆகியோருடன் அகமது நகர் தாலுகாவிலுள்ள பெளத்காவஸ்தி வீட்டுக்கு வெளியே. வலது: சாகிலும் ஷப்னமும் படிக்கும் பிரதான ஜில்லா பரிஷத் பள்ளி. ‘இந்தப் பள்ளிதான் வளர்ச்சி என்கிற பெயரில் எங்களுக்கு கிடைத்த ஒரே விஷயம்,’ என்கிறார் அதுல்

விளிம்புநிலையில் இருக்கும் இச்சமூகத்தினருக்கு பள்ளி என்பது வெறும் கட்டடம் என்பதையும் தாண்டிய விஷயம். மனித மேம்பாட்டுக்கென அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. அதை அரசின் வளர்ச்சி பணியாக அவர்கள் பார்க்கவில்லை. நல்ல வேலைவாய்ப்பு அவர்களின் குழந்தைகளுக்கு கிடைக்கும் வாய்ப்பாகவும் அது மாறலாம். கல்வியிலிருந்து பல காலமாக ஒதுக்கி வைக்கப்பட்ட கொடூரத்தை முழுமையாக அனுபவித்த குழுவுக்குதான், பள்ளிக் கல்வியின் அருமை புரியும்.

“என் குழந்தைகள் மராத்தி பேசுவார்கள். எழுதவும் தெரியும். எங்களால் முடியாது,” என்கிறார் அதுலின் மனைவியான 41 வயது ருபாலி போசலே. “ஆனால் பள்ளியை இங்கிருந்து அரசாங்கம் அப்புறப்படுத்துவதாக ஆசிரியர்கள் கூறினார்கள்,” என்கிறார் அவர்.

அவநம்பிக்கையும் பதற்றமும் அதுலின் குரலில் நிறைந்திருக்கின்றன. “அவர்கள் அப்படி செய்துவிடுவார்களா?” எனக் கேட்கிறார்.

செய்து விடுவார்கள் என்பதுதான் துயரம். மகாராஷ்டிர அரசாங்கத்தின் தற்போதைய திட்டங்கள் தொடருமானால், பெளத்கவஸ்தி பள்ளி மட்டுமின்றி, மாநிலத்திலுள்ள 14,000 பள்ளிகளும் மூடப்படும், மாற்றப்படும் அல்லது வேறு பள்ளிகளுடன் இணைக்கப்படும்.

*****

சிவப்பு எழுத்துகளால் வெளிப்புற சுவரில் எழுதப்பட்டிருக்கும் - பெளத்கவஸ்தி குண்டேகாவோன் ஆரம்ப பள்ளி - எழுத்துகள் இன்னும் வாசிக்கக் கூடிய நிலையில் இருந்தன.17 வருடங்களுக்கு பிறகும் கூட. இப்பள்ளி 2007ம் ஆண்டில் சர்வா ஷிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. ஒன்றிய அரசின் திட்டம் அது. இங்கு வசிக்கும் குழந்தைகளுக்கு 1ம் வகுப்பிலிருந்து 4ம் வகுப்பு வரை ஆரம்பக் கல்வி அப்பள்ளி வழங்கி வருகிறது. பள்ளிக்கான நோக்கமாக, சுவரில் எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கு செல்ல வேண்டும், ஒரு குழந்தை கூட வீட்டில் தேங்கி விடக் கூடாது என்பதுதான் இருந்தது.

அந்த நோக்கம் முன்பு அற்புதமாக இருந்தது.

ஆனால் சமீபத்தில் செப்டம்பர் 21, 2023 அன்று வெளியான சுற்றறிக்கையின்படி, பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், முழுமையான வளர்ச்சி மற்றும் கல்வி வசதிகள் குழந்தைகளின் மத்தியில் ஏற்படுத்த, 20 குழந்தைகள் மட்டுமே கொண்ட பள்ளிகள் சமூக சாலை என்கிற பெயரில் தொடங்கப்படும். சிறு சாலைகளை இது போல் ஒரு பகுதியில் உருவாக்குவது தேசிய கல்விக் கொள்கையின் 7ம் பிரிவின்படி செய்யப்படுகிறது .

PHOTO • Jyoti
PHOTO • Jyoti

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் முகங்கள் (இடது) பள்ளியின் வகுப்பறை சுவர்களில் வரையப்பட்டிருக்கிறது. ’ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கு செல்லும், ஒரு குழந்தையும் வீட்டில் தேங்காது’ என்கிற முழக்கம், 2007ம் ஆண்டில் சர்வா ஷிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பள்ளியின் சுவர்களில் எழுதப்பட்டிருக்கிறது

அப்பள்ளியை தொகுப்பு பள்ளியில் சேர்ப்பது குறித்து ஆராய, பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை சமர்ப்பிக்கும்படி பெளத்கவாஸ்தி பள்ளியின் முதல்வரான குசால்கர் கங்காராம் கேட்கப்பட்டிருக்கிறார். அவருக்கும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. “குழந்தைகள் நன்றாக படிக்கின்றனர். கணிதம், ஆங்கிலம்-மராத்தி எழுத்துகள், கவிதைகள் எல்லாவற்றையும் அவர்கள் படிக்கிறார்கள்.

“பள்ளியில் எங்களுக்கு கழிவறைகள் இல்லை. குடிநீர் குழாய்களும் இல்லை,” என்கிறார் அவர். “அவற்றுக்கு செலவழிக்கப்படும் பணம் என்பது, புதிய பெரிய கட்டடத்தை கட்டுவதற்கு ஆகும் செலவை விடக் குறைவுதான். மனேமேளா பள்ளியும் பிற பள்ளிகளும் இருக்கின்றன. 20 மாணவர்களுக்கும் குறைவாகதான் இருக்கின்றன. அவற்றை எல்லாம் ஒன்றிணைப்பது நடக்காத காரியம். இந்த பள்ளி, இங்கு, குழந்தைகளுக்கு அருகேதான் இருக்க வேண்டும்,” என்னும் அவரின் குரலும் எண்ணங்களும் தெளிவாக இருக்கின்றன.

“குழந்தைகளுக்கு கற்றல் பழக்கத்தை ஏற்படுத்த ஆசிரியர்களான நாங்கள் கடுமையக உழைக்கிறோம்,” என்கிறார் கங்காராம். “நடந்து செல்லும் தூரத்தை தாண்டி பள்ளிகள் சென்றுவிட்டால், குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி கிடைக்காமல் போய் விடும்,” என்கிறார் அவர்.

புதிய தொகுப்பு பள்ளி “பேருந்தில் 40 நிமிடங்களில் எட்டும் தூரத்துக்குள்” இருக்க வேண்டும். இலவச பேருந்து பயணச் சேவை அரசாங்கத்தாலும் கார்ப்பரேட் CSR நிதியாலும் அளிக்கப்படும் என அதிகார சுற்றறிக்கை தெரிவிக்கிறது. “தூரம் பற்றி தெளிவு இல்லை. 40 நிமிடங்கள் என்றால் என்ன அர்த்தம்; எத்தனை தூரத்தில் இருக்க வேண்டும்? ஒரு கிலோமீட்டருக்கு மேலாக நிச்சயம் இருக்கும்,” எனச் சுட்டிக்காட்டுகிறார் குசால்கர். இலவச பேருந்து சேவைக்கான வாக்குறுதி அவருக்கு திருப்தியை அளிக்கவில்லை.

”மேல்நிலை பள்ளி இப்பகுதியிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. ஆளரவமற்ற சாலைகளில் குழந்தைகள் நடந்து செல்ல வேண்டும். பல குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகள், பாதுகாப்பின்மையால் பள்ளிக் கல்வியை இடைநிறுத்தி விடுகின்றனர். இலவச பேருந்து பயணச் சேவை எங்கு போனது?” எனக் கேட்கிறார் கங்காராம். கடந்த வருடத்தில், ஏழெட்டு மாணவர்கள் 4ம் வகுப்புக்கு பிறகு பள்ளிக் கல்வியை நிறுத்திவிட்டதாக சொல்கிறார் அவர். அவர்கள் தற்போது பெற்றோருடன் வேலைக்கு செல்கின்றனர்.

பொது போக்குவரத்து இல்லாததும் தூரமும் முக்கியப் பிரச்சினைகள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவற்றை தாண்டியும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த குழந்தைகளின் பெற்றோர் வேலைகளுக்கு செல்ல வேண்டும். பெரும்பாலும் புலம்பெயர வேண்டியிருக்கும். இதுவும் ஒரு முக்கியப் பிரச்சினை. மழைக்காலத்தில், அவர்களில் பெரும்பாலானோர் அருகாமையிலுள்ள விவசாய நிலங்களில் தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர். சில நேரங்களில் அந்த நிலங்கள் அருகே இருப்பதில்லை. வருடத்தின் மிச்ச காலத்துக்கு அவர்கள் 34 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அகமதுநகர் டவனின் கட்டுமான தளங்களில் வேலை பார்க்கின்றனர்.

“பட்டியல் பழங்குடிகளுக்கென பேருந்துகளோ ஷேரிங் ஜீப்போ இங்கு இல்லை. மெயின் ரோடுக்கு செல்ல 8-9 கிமீ நாங்கள் நடக்க வேண்டும். அங்கு சென்றுதான் வேலைக்கு செல்ல வாகனங்களை பிடிக்க வேண்டும்,” என்கிறார் அதுல். “பணியிடத்தில் காலை 6 அல்லது  7 மணிக்கு இருக்க வேண்டும். தூரமான பள்ளிகளுக்கு குழந்தைகள் செல்வதென்பது எங்களுக்கு சிரமத்தையே கொடுக்கும்,” என்கிறார் ருபாளி. “முழு வருடமும் தினசரி நாங்கள் வேலை தேட வேண்டும்.” ருபாளியும் அதுலும் சேர்ந்து நாளொன்றுக்கு 400-450 ரூபாய் சம்பாதிக்கின்றனர். 150 நாட்களுக்கு அந்த ஊதியம் கிடைக்கும். பிழைப்பை ஓட்ட வருடத்தின் மிச்ச காலத்துக்கான வேலை ஒன்றை அவர்கள் தேடி கண்டறிய வேண்டும்.

PHOTO • Jyoti
PHOTO • Jyoti

தார்ப்பாய் கூரை போடப்பட்ட குடிசை மற்றும் மண் வீடுகள் பெளத்கவஸ்தியின் 20 பார்தி குடும்பங்களுக்கு வசிப்பிடமாக இருக்கிறது. இந்த விளிம்புநிலை சமூகத்துக்கு இந்தப் பள்ளிதான்  இருக்கும் ஒரே கான்க்ரீட் கட்டடம். மனித வளர்ச்சிக்கென அவர்களிடம் இருக்கும் விலைமதிப்பற்ற விஷயம் அது ஒன்றுதான்

புதிய கல்விக் கொள்கை திட்ட 2020 ஆவணத்தின்படி, சிறு பள்ளிகளை கையாளுவது அரசாங்கத்துக்கு சிரமமான விஷயம். அவற்றின் அளவினால், பொருளாதார ரீதியாகவும் நன்மை இல்லை. அவற்றை  நடத்துவதற்கான நுட்பங்களும் அதிகம். ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். முக்கியமான வசதிகளை அளிக்க வேண்டும்.” அவை நிர்வகிக்கப்பட அமைப்புரீதியிலான சிக்கல்களை கொடுக்கின்றன. “பூகோள அமைவு, அணுகுவதற்கான வசதியின்மை மற்றும் பெரும் எண்ணிக்கையிலான பள்ளிகள் இருப்பதால் அவற்றை சமமாக நடத்தவும் இயலுவதில்லை.”

சிறு பள்ளிகள், பல வகை சவால்களை கொடுக்கின்றன. இணைவுகள் பலனையும் அளிக்கவில்லை. மகாராஷ்டிர அரசாங்கம் பரீட்சார்த்த வகையில் முதன்முதலாக புனேவின் பன்ஷேத் கிராமத்தில் முயன்று பார்த்தது. வெல்ஹே தாலுகாவின் தொகுப்பு பள்ளி, போதுமான ஆசிரியர்கள் இல்லாமலும் அடிப்படை கட்டமைப்பு இன்றியும் பல பிரச்சினைகள் சந்தித்து வந்ததால், முதன்முதலாக மறுநிர்மாணத்துக்குள்ளாக்கப்பட்ட பள்ளி அதுதான். அரசாங்கம் அத்திட்டத்தை மாநிலம் முழுமைக்கும் அமல்படுத்தியது.

“மலைப் பகுதிகளிலும் தூரப் பகுதிகளிலும் சிறு பள்ளிகள் இருப்பது பிரச்சினைதான். அந்தப் பள்ளிகளில் நற்கல்வி அளிப்பதற்கான வாய்ப்பும் வேறெதுவும் இல்லை. குறிப்பாக மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது,” என்கிறார் ஜாந்தியாலா பி.ஜி.திலக். கல்விப் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர் அவர். பாரி மின்னஞ்சல் செய்திருந்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருந்தார்.

“பள்ளிகள் இணைக்கப்படும் நடைமுறை, கல்வியுரிமை சட்டத்துக்கு எதிரானது,” என்கிறார் அவர். 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கான பள்ளிகள் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இருக்க வேண்டுமென அச்சட்டம் சொல்கிறது. 6-11 வயதுக்குள்ளான குழந்தைகள் 20 பேர் வரை படிக்கலாம்.

“மேலும் முழு எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கும் பள்ளியில் வெறும் 2-3 ஆசிரியர்கள் இருப்பதும் 5-10 குழந்தைகளே படிக்கும் பள்ள்யில் கல்வியுரிமை சட்டம் சொல்லும் எல்லா வசதிகளை உருவாக்குவதும் வீண்ட். நிர்வாகம் இப்பிரச்சினையை எழுப்புகிறது. புதுமையான தீர்வுகளை யோசிக்க வேண்டும். பள்ளிகளை இணைத்தல் என்பது ஈர்க்கத்தக்க விஷயமாக இருந்தாலும் நல்ல தீர்வு இல்லை,” என விளக்குகிறார் திலக்.

*****

மகாராஷ்டிராவின் மாநிலக் கல்வித்துறையின் பிரச்சினை பெளத்காவஸ்தி பள்ளிக்கு மட்டுமானது அல்ல. 2023ம் ஆண்டின் மாநில சுற்றறிக்கை யின்படி 20 மாணவர்கள் மட்டுமே கொண்டிருக்கும் பள்ளிகள் 14,783 இருக்கின்றன. அவற்றில் படிக்கும் மாணாக்கர் எண்ணிக்கை மாநில அளவில் 1, 85, 467. அவைதான் தொகுப்பு பள்ளிகளாக இணைக்கப்படவிருக்கின்றன.  அந்த மாணவர்களுக்கு நிச்சயமின்மைதான் எதிர்காலம்.

PHOTO • Jyoti

நாகர் தாலுகாவிலுள்ள வாலுஞ்ச் கிராமத்தின் பார்தி வசிப்பிடக் குழந்தைகள் பள்ளி ஆசிரியருக்காக காத்திருக்கின்றனர். ‘எங்களின் பள்ளி 10 மணிக்கு தொடங்கும். அதற்கு முன்பே நாங்கள் வந்து விட்டோம்,’ என்கிறார் ஏழு வயது ஆயிஷா

“பல காரணங்களால் இப்பள்ளிகள் சிறியவையாக இருக்கின்றன,” என்கிறார் சிறு சாலைகளின் வரலாற்றை பேசும் கீதா மகாஷாப்தே. நவநிர்மிதி கற்றல் அறக்கட்டளையின் இயக்குநராக அவர் இருக்கிறார்.

2000மாம் ஆண்டில் மகாராஷ்டிரா அரசாங்கம் வஸ்தி சாலா யோஜனா திட்டத்தை தொடங்கியது. பெளத்காவஸ்தி போன்ற சிறு குடியிருப்புகளில் சர்வா ஷிக்‌ஷா அபியானுக்குக் கீழ் பள்ளிகளை நிர்மாணிக்கும் திட்டம் அது. “கல்வி பெற இயலாத குழந்தைகளை கண்டறிந்து புது பள்ளிகளை அவர்களுக்கென அவர்களது ஊர்களிலும் மலைப்பகுதிகளிலும் தொடங்குவதுதான் அரசாங்கத் திட்டத்தின் நோக்கம். அத்திட்டத்தின் பெயர் மகாத்மா ஷிஷான் ஹமி கேந்திரா யோஜனா,” என்கிறார் கீதா.

அத்திட்டத்தின் கீழ், வஸ்தி சாலையில் 1-4ம் வகுப்பு வரை படிக்கும் 15 மாணவர்கள் இருக்கலாம். ஜில்லா பரிஷத் அல்லது நகராட்சி நிர்வாகக் குழு ஒப்புதலின் பேரில் இந்த எண்ணிக்கையை மாற்றிக் கொள்ள முடியும். விதிவிலக்கான சமயங்களில் மாணவர்கள் எண்ணிக்கை 10 என்ற அளவில் கூட இருக்கலாம்.

இது போல எட்டாயிரம் வஸ்தி சாலைகளை 2000மாம் ஆண்டு தொடங்கி 2007ம் ஆண்டு வரை அரசாங்கம் தொடங்கியது.

ஆனால் மார்ச் 2008-ல், இத்திட்டத்தை ‘தற்காலிக ஏற்பாடு’ என சொல்லி திட்டத்தை நிறுத்த முடிவு செயதது அரசாங்கம்.

“இந்த பள்ளிகளின் நிலைகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவென ஒரு குழுவை மகாராஷ்டிரா அரசாங்கம் நியமித்தது,” என்கிறார் கீதா. அவர் உறுப்பினராக இருக்கும் இக்குழு, சில பள்ளிகளை வழக்கமான ஆரம்பப் பள்ளிகளாக மாற்றும்படி பரிந்துரைத்தது. 2008ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரை 6,852 வஸ்தி சாலைகளை ஆரம்பப் பள்ளிகளாக்கி விட்டு, 686 பள்ளிகளை மூடுவதென மாநில அரசாங்கம் முடிவெடுத்தது.

PHOTO • Jyoti

பார்தி வசிப்பிடங்களில் உள்ள குழந்தைகளின் பெற்றோர் வீட்டை விட்டு வசிக்க வேண்டி வரும். சிறுமிகள்தான் வீட்டில் சமைத்து, தம்பி தங்கையரை பார்த்துக் கொண்டு வீட்டை பராமரிப்பார்கள்

வஸ்தி சாலா யோஜனா திட்டத்தின்கீழ், 2000மாம் ஆண்டு தொடங்கி 2007ம் ஆண்டு வரை மாநில அரசாங்கம் எட்டாயிரம் வஸ்தி சாலைகளை தொடங்கியது. ஆனால் மார்ச் 2008-ல், ‘தற்காலிக ஏற்பாடு’ என சொல்லி அத்திட்டத்தை நிறுத்தியது அரசாங்கம்

அடுத்த பத்தாண்டுகளில் எந்த மாற்றமும் இல்லை. புதிய கல்வி கொள்கையின் கீழ் மிச்சமுள்ள பள்ளிகளையும் மூடுவதை நோக்கி உரையாடல் நகர்ந்தது. “முறைப்படுத்தப்பட்ட பள்ளிகளை மூட வேண்டிய தேவை கிடையாது,” என்கிறார் கீதா. “மாணவர்கள் சிறு எண்ணிக்கையில் இருந்தாலும், வசிப்பிடம் இங்குதான் இருக்கிறது. குழந்தைகளுக்கும் வேறு இடத்தில் கல்விக்கு வாய்ப்பில்லை.

“ட்ரம்மில் உள்ள ஓவியம் டடம் டட்டட் டடம் என எழுதப்பட்டிருக்கிறது. அதுலின் எட்டு வயது மகள் ஷப்னம், தன்னுடைய கல்வி அறிவை வெளிப்படுத்த ஆர்வத்துடன் இருக்கிறார். “கவிதைகள் படிக்க எனக்கு பிடிக்கும்,” என்கிறார் அவர். மூன்றாம் வகுப்பு மராத்தி புத்தகத்திலிருந்து ஒரு கவிதையைப் படித்துக் காட்டுகிறார்.

“கணக்குகளை கழிக்கவும் கூட்டவும் எனக்கு தெரியும். 5ம் வாய்ப்பாடு வரை தெரியும். ஐந்தும் ஒன்றும் ஐந்து, ஐந்தும் இரண்டும் பத்து…” சாஹில் குறுக்கிடுகிறார்.

இருவரும் பள்ளிக்கு செல்ல விரும்புகிறார்கள். கணக்குக்காகவும் கவிதைக்காகவும் மட்டுமல்ல. “எங்களின் பகுதியை சேர்ந்த எல்லா குழந்தைகளையும் சந்திக்க முடியும். நொண்டி மற்றும் கோ கோ விளையாட்டுகளை இடைவெளியின்போது விளையாடுவோம்,” என்கிறார் சாஹில். பெளத்காவஸ்தி பள்ளியின் குழந்தைகள் அனைவரும் முதல் தலைமுறையாக பள்ளிக்கு வருபர்கள்தான்.

“பள்ளியிலும் கல்வியிலும் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் எங்களை சந்தோஷமடைய வைக்கிறது,” என்கிறார் ருபாளி குடிசை வீட்டுக்கு வெளியே அமர்ந்து கொண்டு. பள்ளி மூடப்படும் என்கிற பயம் அவரின் முகத்தில் தெரிகிறது. அவரோ அவரின் கணவர் அதுலோ பள்ளிக்கு சென்றதில்லை. கல்வி பெறுவது பார்தி சமூகத்தினருக்கு சவாலாகவே இருந்திருக்கிறது. 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 223,527 பார்திகள் மகாராஷ்டிராவில் வசிக்கின்றனர். பல பத்தாண்டுகளாக தொடரும் கொள்கை ரீதியிலான தலையீடுகளுக்கு பிறகும் பார்தி குழந்தைகளை கல்வி சென்றடையவில்லை.

PHOTO • Jyoti

‘எனக்கு கவிதைகள் வாசிக்கப் பிடிக்கும்,’ என்கிறார் எட்டு வயது ஷப்னம் (சிவப்பு பாவாடையில் நடுவே இருப்பவர்). பெளத்காவஸ்தி குண்டேகாவோன் பள்ளி குழந்தைகள் அனைவரும் முதல் தலைமுறையாக படிக்க வருபவர்கள்

*****

“இங்கு எவரும் பள்ளுக்கு செல்வதில்லை,” என்கிறார் 10 வயது ஆகாஷ் பார்தே. 76 கிமீ தொலைவில் இருக்கும் ஷிரூர் தாலுகாவிலுள்ள பார்தி குடியிருப்பில் வசிப்பவர் அவர். ஆரம்பக் கல்வி மற்றும் நடுப்பள்ளி ஆகியவை குகாடி ஆற்றங்கரைகளில் இருக்கும் இந்த ஷிண்டோடி காலனியில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அது நடப்பதற்கு பெரும் தூரம். “சில நேரங்களில் நான் மீன் பிடிப்பேன். மீன் பிடிக்க எனக்கு பிடிக்கும்,” என்கிறார் அவர். “என் பெற்றோர் செங்கல் சூளைகளிலும் கட்டுமான தளங்களிலும் வேலை பார்க்கின்றனர். அவர்கள் கூலி வேலைக்காக 3-4 மாதங்களுக்கு சென்றிருக்கின்றனர். பள்ளியை பற்றி அவர்கள் என்னிடம் சொன்ன நினைவே இல்லை.”

5-14 வயதுகளில் இருக்கும் இப்பகுதியின் 21 குழந்தைகளில் எவரும் பள்ளிக்கு செல்லவில்லை.

மகாராஷ்டிராவின் மேய்ச்சல் பழங்குடியினர் மற்றும் சீர்மரபினர் ஆகியோரின் கல்வித் தகுதி குறித்து 2015ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ,  2006-07க்கும் 2013-14க்கும் இடைப்பட்ட காலத்தில், இக்குழுக்களை சேர்ந்த 22 லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படவில்லை என்கிறது.

PHOTO • Jyoti
PHOTO • Jyoti

ஷிரூர் தாலுகாவில் பெளத்காவஸ்தியிலிருந்து 76 கிமீ தொலைவில் இருக்கும் இன்னொரு பார்தி குடியிருப்பான ஷிண்டோடி காலனியில் ‘எவரும் பள்ளிக்கு செல்வதில்லை,’ என்கிறார் 10 வயது ஆகாஷ் பார்தே (சிவப்பு சட்டை). ஷிண்டோடி குழந்தைகள், தங்களின் நேரத்தை பெரும்பாலும் ஆறு மற்றும் படகை சுற்றி விளையாடி கழிக்கின்றனர். 5-14 வயதுகளில் இருக்கும் 21 குழந்தைகளில் எவரும் பள்ளிக்கு செல்லவில்லை

PHOTO • Jyoti

’பள்ளியை பற்றி எனக்கு தெரியவில்லை. அதை குறித்து யோசித்தது கிடையாது. சீருடையில் நான் சிறுமிகளை பார்த்திருக்கிறேன். நன்றாக இருப்பார்கள்,’ என்கிறார் அஷ்வினி (நடுவே) சாஹில் மற்றும் ட்விங்கிளுடன் விளையாடியபடி

“இந்த குழந்தைகளின் பல பெற்றோர் வெளியே மும்பை அல்லது புனேவில் பணிபுரிகின்றனர். குழந்தைகள் வீட்டிலேயே தனியாக இருக்க வேண்டும். அவர்களில் ஒரு சிலர் மட்டும் பெற்றோருடன் செல்கின்றனர்,” என்கிறார் 58 வயது கண்டாபாய் பார்தே. கண்டாபாய் தன்னுடைய பேத்திகளான ஒன்பது வயது அஷ்வினி மற்றும் ஆறு வயது ட்விங்கிள் ஆகியோரை விட்டுச் செல்கிறார். அவரும் அவாது மகன் மற்றும் மருமகள் ஆகியோரும் சங்லியிலுள்ள கரும்பு ஆலைகளில் பணிபுரிய செல்வார்கள். எந்த குழந்தையும் பள்ளிக்கு செல்வதில்லை.

ட்விங்கிள் கரும்பு வயலில் பிறந்ததாக சொல்கிறார் அவர். குடும்பம் அவரை பள்ளியில் சேர்க்க முயன்றபோது, பிறப்பு சான்றிதழ் கேட்டிருக்கிறார்கள். “இங்கு சுகாதார பணியாளர் எவரும் வருவதில்லை. எங்களின் குழந்தைகள், பேரக் குழந்தைகள் அனைவரும் வீட்டில்தான் பிறந்தனர். பிறப்பு சான்றிதழ் கிடையாது,” என்கிறார் கண்டாபாய்.

“பெரும்பாலும் என் சகோதரியுடன்தான் இருக்கிறேன்,” என்கிறார் இளம் அஷ்வினி. “பாட்டி எங்களை பார்த்துக் கொள்ள சில வாரங்களுக்கு வருவார். நான் உணவு சமைப்பேன். பள்ளியை பற்றி எனக்கு தெரியாது. அதைப் பற்றி யோசித்ததில்லை. சீருடைகளில் பெண் குழந்தைகளை பார்த்திருக்கிறேன். அவர்கள் நன்றாக இருப்பார்கள்,” என்கிறார் அவர்.

ஷிண்டோடியில் இருக்கும் ஆகாஷ், அஷ்வினி, ட்விங்கிள் போல, இந்திய கிராமப்புறங்களில் 3-35 வயதுகளில் இருக்கும் கிட்டத்தட்ட 13 சதவிகித ஆண்களும் 19 சதவிகித பெண்களும் கல்விச் சாலைக்கு சென்றதில்லை என்கிறது தேசிய மாதிரி கணக்கெடுப்பு 2017-18 .

“பிற மக்கள் எங்களை திருடர் என்கிறார்கள். எங்களை அசிங்கமாக இருப்பதாக சொல்லி ஊர்களுக்குள் அவர்கள் எங்களை அனுமதிப்பதில்லை. எங்கள் குழந்தைகளை நாங்கள் எப்படி பள்ளிக்கு அனுப்புவது?” கண்டாபாய் தன் குழந்தைகள் பாதுகாப்பாக படிக்க கூடிய பள்ளிக் கூடத்தை ஊருக்குள் கண்டறியவில்லை.

குற்றப்பழங்குடி சட்டம் ரத்து செய்யப்பட்டு பல பத்தாண்டுகள் ஆனபிறகும், பார்திகள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது. (வாசிக்க: குற்றம் ஏதுமின்றி தொடரும் தண்டனை ). பிறப்பு சான்றிதழ்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை போன்ற முக்கிய ஆவணங்கள் இல்லாததால், அரசாங்க திட்டப் பலன்களை அவர்கள் பெற முடியாமல் போகிறது. (வாசிக்க: ‘ என் பேரக்குழந்தைகள் சொந்தமாக வீடு கட்டுவார்கள்’ மற்றும் பர்தி பள்ளி நெடுஞ்சாலை அமைப்பதற்காக இடிக்கப்பட்டிருக்கிறது ). ஒருவேளை பள்ளியில் சேர முடிந்தாலும் அங்கு காட்டப்படும் பாரபட்சத்தால் இந்த குழந்தைகள் பள்ளிக் கல்வியை இடை நிறுத்துகின்றனர்.

PHOTO • Jyoti
PHOTO • Jyoti

இடது: கண்டாபாய் (ஊதா புடவை) குழந்தைகளுக்கு பாதுகாப்பான பள்ளிகளை தன் ஊரில் கண்டறிய முடியவில்லை. ‘பிற மக்கள் எங்களை திருடர்கள் என அழைக்கிறார்கள். எங்களை அசுத்தமானவர்கள் என சொல்லி ஊர்களுக்கும் அவர்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள். எங்கள் குழந்தைகளை நாங்கள் எப்படி பள்ளிக்கு அனுப்ப முடியும்?’ வலது: திவ்யா மாலி, மீனா பவார் மற்றும் மோனிகா துலே (இடதிலிருந்து வலது) ஆகியோர் பள்ளியை பார்த்ததே இல்லை. ‘மீனாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இந்த வருடத்தில் அவர் மணம் முடிப்பார். எங்களின் பெற்றோரும் மணமகன்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். அதுதான் எங்களுக்கு நேர்ந்தது. பள்ளியல்ல,’ என்கிறார் மோனிகா

ஹைதராபாத்தில் இருக்கும் சமூக மேம்பாடு சபை, மகாராஷ்டிராவின் 25 மாவட்டங்களை சேர்ந்த சீர்மரபினர், நாடோடி மற்றும் அரை நாடோடிகள் பற்றி 199 குடும்பங்களில் 2017ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி , 38 சதவிகித குழந்தைகள் ஆரம்பக் கல்விக்கு பிறகு பள்ளி கல்வியை பாரபட்சம் காட்டப்படுவதால் நிறுத்தியிருக்கிறார்கள். மொழித் தடை, திருமணம், கல்வியின் முக்கியத்துவம் பற்றிய அறியாமை ஆகியவையும் காரணங்களாக இருக்கின்றன.

“கல்வி எங்களின் குழந்தைகளுக்கு இல்லை. சமூகம் இன்னும் எங்களை வெறுத்துக் கொண்டுதான் இருக்கிறது. எதுவும் மாறாது என்றுதான் நினைக்கிறேன்,” என்கிறார் கண்டாபாய்.

அவரின் வார்த்தைகள் அச்சுறுத்தும் வகையில் உண்மையாக இருக்கின்றன. மகாராஷ்டிராவை சேர்ந்த பெரும் சீர்திருத்தவாதியும் கல்வியாளருமான கர்மவீர் பாவ்ராவ் பாடில் 1919ம் ஆண்டில் கல்வியை மக்களுக்கு கொண்டு செல்வதென முடிவெடுத்தார். ஒவ்வொரு பகுதியிலும் பள்ளி அமைக்க வேண்டுமென சொன்னார். 105 வருடங்கள் ஆகி விட்டது. இன்னும் ஷிண்டோடிக்கு பள்ளி வந்து சேரவில்லை. பெளத்காவஸ்திக்கு பள்ளி வந்து சேர 90 வருடங்கள் ஆகியிருக்கிறது. அதுவும் தற்போது இல்லாமல் போகும் நிலையில் இருக்கிறது. அப்பகுதி குழந்தைகள் பதற்றத்தில் இருக்கின்றனர்.

பெளத்காவஸ்தி பள்ளி சுவரில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள்:

ஷிஷான் ஹக்காச்சி கிம்யா நியாரி
ஷிஷான் கங்கா ஆடா கரோகாரி

(கல்வி உரிமை அளிக்கும் அற்புதமான மாயத்தில்
கல்வி கங்கை எல்லா வீடுகளுக்கும் பாயும்.)

இந்த வார்த்தைகள் உண்மையாக எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்?

தமிழில்: ராஜசங்கீதன்

Jyoti is a Senior Reporter at the People’s Archive of Rural India; she has previously worked with news channels like ‘Mi Marathi’ and ‘Maharashtra1’.

Other stories by Jyoti

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan