ஒரு புதியவரின் கேள்வி மற்றும் ஒரு துண்டு காகிதம் ஆகியவற்றில்தான் எல்லாமும் தொடங்கியது.
12 வயது கம்லேஷ் டண்டோலியா, ரதெட் கிராமத்தில் இருக்கும் தன் வீட்டருகே இருக்கும் சுற்றுலா விருந்தினர் விடுதி அருகே சுற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு புதியவரை சந்தித்தார். “பரியா தெரியுமா என என்னைக் கேட்டார்.” கம்லேஷ் பதிலளிப்பதற்குள், “அவர் ஒரு காகிதத்தை என்னிடம் கொடுத்து வாசிக்க சொன்னார்.”
புதியவர் நியாயமாகதான் கேட்டார். தமியா ஒன்றியத்தில் இருக்கும் இந்த பாதாள்கோட் பள்ளத்தாக்கில் வசிக்கும் பலரும் மத்தியப் பிரதேசத்தில் எளிதில் பாதிக்கத்தக்க பழங்குடியாக (PVTG) வகைப்படுத்தப்பட்டிருக்கும் பரியா சமூகத்தை சேர்ந்தவர்கள். கம்லேஷ் ஒரு பரியா. அச்சமூகத்தின் பரியாட்டி மொழியை சரளமாக பேசுபவர்.
இளம் சிறுவன் நம்பிக்கையோடு அந்த காகிதத்தை முதலில் படித்தான். இச்சமூகம் பற்றிய பொது தகவல்களை அது கொண்டிருந்தது. தேவநாகரி எழுத்தில் இருந்ததால், “படிக்க சுலபமாக இருந்தது.” இரண்டாம் பகுதியில் பொருட்களின் பெயர்கள் இருந்தன. கம்லேஷ் தடுமாறத் தொடங்கினார். “வார்த்தைகள் பரியாட்டி மொழியில் இருந்தன,” என நினைவுகூருகிறார். “ஒலி பரிச்சயமாக இருந்தது. ஆனால் வார்த்தைகள் வித்தியாசமாக இருந்தன.”
சற்று தாமதித்து நினைவுகூருகிறார். “ஒரு வார்த்தை இருக்கிறது. அது ஒருவகை காட்டு மூலிகை. அதை நான் எழுதியிருக்கலாம்,” என்கிறார் அதிருப்தியில் தலையை அசைத்தபடி. “இப்போது அந்த பெயரும் நினைவில் இல்லை, அர்த்தமும் நினைவில் இல்லை.”
கம்லேஷின் நெருக்கடி அவரை யோசிக்க வைத்தது. “பரியாட்டி மொழியில் எத்தனை வார்த்தைகள் எனக்கு தெரியாது என யோசித்தேன்.” சரளமாக அம்மொழி தெரியுமென நினைத்திருந்தார். அவரை வளர்த்த தாத்தா-பாட்டியுடன் அந்த மொழியை பேசிதான் அவர் வளர்ந்தார். “என்னுடைய பதின்வயதுகள் வரை நான் அம்மொழியை மட்டும்தான் பேசினேன். இப்போதும் இந்தி பேச எனக்கு தடுமாறும்,” என்கிறார் சிரித்தபடி.





















