2009-10-லிருந்து மினாகான் - சந்தேஷ்காலி ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 34 பணியாட்கள், ஒன்பது மாதங்களிலிருந்து மூன்று வருடங்கள் வரை ரேமிங் மாஸ் துறையில் வேலை பார்த்து உயிரிழந்திருக்கின்றனர்.
பணியாட்கள் சுவாசிக்கும்போது சிலிகா தூசு, நுரையீரலின் அல்வியோலர் குழாய்களில் படிந்து, மெல்ல உறுப்பை இறுக்கமாக்கி விடுகிறது. சிலிகாஸிஸின் முதல் அறிகுறி, இருமலும் மூச்சுத்திணறலும். பிறகு உடலின் எடை குறைந்து தோல் கருப்பாகும். மெல்ல, நெஞ்சு வலியும் உடல் பலவீனமும் வரும். இறுதிக் கட்டத்தில் ஆக்சிஜன் உதவி நோயாளிகளுக்கு தேவைப்படும்.சிலிகாசிஸ் நோய் கொண்டவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பார்கள்.
சிலிகாஸிஸ் குணமாக்க முடியாத, பணி நிமித்தத்தில் ஏற்படும் நோய். நிமோகானியாஸிஸின் குறிப்பிட்ட வடிவம் ஆகும். தொழில்ரீதியிலான நோய்களுக்கான வல்லுநர் டாக்டர் குணால் குமார் தத்தா சொல்கையில், “சிலிகாஸிஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, காசநோய் பாதிப்பு ஏற்படும் சாத்தியங்கள் 15 மடங்கு அதிகம்,” என்கிறார். இதை சிலிகோ ட்யூபர்குலோசிஸ் அல்லது சிலிகாடிக் டிபி என்கிறார்கள்.
ஆனால் இத்தகைய வேலைக்குதான் இருபது வருடங்களாக, தொடர்ந்து மக்கள் புலம்பெயர்ந்து சென்று பணிபுரிகிறார்கள். 2000மாம் ஆண்டில், கோல்டாஹா கிராமத்தை சேர்ந்த 30-35 தொழிலாளர்கள், 300 கிலோமீட்டர் தொலைவிலுள்ள குல்தியில் இருக்கும் ரேமிங் மாஸ் உற்பத்தி ஆலையில் வேலைக்கு சென்றனர். சில வருடங்கள் கழித்து மினாகான் ஒன்றியத்தை சேர்ந்த கோல்டாஹா, தெபிதாலா, காரிபியாரியா மற்றும் ஜேய்கிராம் கிராமங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் விவசாயிகள், தத்தாபுகூர் பராசத்திலுள்ள ஆலையில் வேலைக்கு சென்றனர். சந்தேஷ்காலி ஒன்றியங்கள் 1 மற்றும் 2 ஆகியவற்றை சேர்ந்த சுந்தரிகாலி, சரபாரியா, படிடாஹா, அகர்ஹாதி, ஜெலியாகாலி, ராஜ்பாரி மற்றும் ஜுப்காலி கிராமங்களின் விவசாயிகளும் 2005-2006ல் புலம்பெயர்ந்தனர். அதே காலக்கட்டத்தில், இந்த ஒன்றியங்களை சேர்ந்த தொழிலாளர்களும் ஜமுரியாவில் இருக்கும் ரேமிங் மாஸ் உற்பத்தி ஆலைக்கு சென்றனர்.
“குவார்சைட் கல்லை ஓர் அரவை மற்றும் செமோலினா மற்றும் சர்க்கரை ஆகியவற்றைக் கொண்டு பொடியாக்குவோம்,” என்கிறார் ஜுப்காலியை சேர்ந்த அமோய் சர்தார். “முழங்கைக்கு மேல் பார்க்க முடியாதளவுக்கு தூசு இருக்கும். முழுமையாக என் மீது தூசு படியும்,” என்கிறார் அவர். இரண்டு வருடங்கள் பணிபுரிந்த பிறகு, கடந்த நவம்பர் 2022-ல் அமொய்க்கு சிலிகாஸிஸ் நோய் கண்டறியப்பட்டது. கனமான சுமைகளை தூக்கும் வேலைகளை அவர் செய்ய முடியவில்லை. “குடும்பத்துக்காகதான் வேலைக்கு சென்றேன். ஆனால் நோய் என்னை பிடித்துக் கொண்டது,” என்கிறார் அவர்.
2009ம் ஆண்டு அடித்த ஐலா புயல், சுந்தரவன விவசாய நிலங்களை அழித்த பிறகு புலப்பெயர்வு இன்னும் தீவிரமடைந்தது. குறிப்பாக இளையோர், வேலை தேடி மாநிலம் விட்டும் நாடு விட்டும் செல்ல முயன்றனர்.