அது மார்ச் மாதத்தின் ஒரு மதியப்பொழுது. ஆராபானி கிராமத்தின் பெரியவர்கள் ஒரு சிறு வெள்ளை தேவாலயத்துக்குள் கூடியிருக்கின்றனர். தார்மிக அழுத்தம் அவர்களை ஒன்றிணைத்திருக்கவில்லை.
குழுவினர் வட்டமாக தரையில் உட்காந்திருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் தீவிர ரத்த அழுத்த பிரச்சினை கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே அவர்கள் மாதமொருமுறை சந்தித்து ரத்த அழுத்தத்தை பரிசோதித்து விட்டு, மருந்துகள் வாங்க காத்திருக்கும் வரை பல விஷயங்கள் குறித்து பேசியிருப்பார்கள்.
“சந்திப்புகளில் என் கவலைகளை பகிர வாய்ப்பிருப்பதால் இங்கு வருவதை விரும்புகிறேன்,” என்கிறார் ரூபி பகேல். ரூபி பாய் என அவர் குறிக்கப்படுகிறார். 53 வயதாகும் அவர் கடந்த ஐந்து வருடங்களாக இங்கு வருகிறார். பைகா பழங்குடியான அவர், நலிவுற்ற விவசாயி ஆவார். விறகு, இலுப்பைப் பூ போன்ற காட்டுற்பத்தியை (NTFP) கொண்டு வருமானத்தை ஈடு கட்டிக் கொள்கிறார். பைகா, எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடி குழுக்களாக (PVTG) வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். ஆராபானி கிராமத்தில் பைகா சமூகத்தினர்தான் பெருமளவில் வாழ்கின்றனர்.
பிலாஸ்பூர் மாவட்டத்தின் கோடா ஒன்றியத்தில் இருக்கும் கிராமம், சட்டீஸ்கரின் அச்சனாக்மர் -அமர்கந்தக் பன்மயப்பகுதிக்கு அருகே அமைந்திருக்கிறது. “விளக்குமாறு தயாரிக்து விற்பதற்காக, மூங்கில் சேகரிக்க காட்டுக்குள் நான் சென்றதுண்டு. தூரமாக நடக்க முடியாமல் ஆனதால், வீட்டில் இருக்கிறேன்,” என்கிறார் ஃபுல்சோரி லக்டா, உயர் ரத்த அழுத்தம் கொடுக்கும் சோர்வு வாழ்க்கையை எப்படி பாதித்திருக்கிறது என விளக்கி. அறுபது வயதுகளில் இருக்கும் அவர், தற்போது வீட்டில்தான் இருக்கிறார். ஆடுகளை பராமரித்து, பகலில் மாட்டுச் சாணம் சேகரிக்கிறார். பெரும்பாலான பைகாக்கள் காட்டைத்தான் வாழ்வாதாரத்துக்கு நம்பியிருக்கிறார்கள்.








