ஆணாக வளர்ந்த ரம்யா, 5ம் வகுப்பிலிருந்து பெண்ணாக தன்னை அடையாளப்படுத்தத் தொடங்கினார்.
“என் (நடுநிலை) பள்ளியில் நான் கால்சட்டை அணிய வேண்டும். என் தொடைகள் தெரியும் வகையில் இருந்தது,” என்கிறார் அவர். “சிறுவர்களுடன் அமர வைத்தது சங்கடமாக இருந்தது.” தற்போது முப்பது வயதுகளில் இருக்கும் அவர் சிவப்புப் புடவை கட்டி நீண்ட முடி வைத்து, பெண்ணுக்கான அடையாளத்துடன் இருக்கிறார்.
செங்கல்பட்டு மாவட்ட திருப்போரூரில் ஒரு சிறு அம்மன் கோவிலை நிர்வகித்து வருகிறார் ரம்யா. அவரின் தாயான வெங்கம்மா, தரையில் அவருக்கருகே அமர்ந்திருக்கிறார். “வளரும்போது இவன் (ரம்யாவை சுட்டிக் காட்டுகிறார்) சுடிதார், தாவணி, கம்மல் அணிய ஆசைப்படுவான். ஆணைப் போல நடந்து கொள்ளும்படி அவனிடம் சொல்லிப் பார்த்தோம். ஆனால் அவன் இப்படித்தான் ஆக விரும்பினான்,” என்கிறார் ரம்யாவின் 56 வயது தாய்.
கன்னியம்மன் கோவில் மூடியிருப்பதால், உரையாடல் எந்த தொந்தரவும் இல்லாமல் தொடர்ந்தது. அவர்களைப் போன்ற இருளர் சமூகத்தினர், கன்னியம்மனை வணங்க இந்தக் கோவிலுக்கு வருவார்கள்.
ரம்யாவுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். இந்த இருளர் பகுதியில்தான் அவர் வளர்ந்தார். அதிகம் பாதிக்கத்தக்க பழங்குடி குழுக்களில் (PVTG) இருளர் சமூகமும் ஒன்று. அவரின் பெற்றோர், சமூகத்திலுள்ள பிறரை போல், விவசாய நிலம், கட்டுமானப் பணி, ஊரக வேலைத் திட்ட வேலைகள் போன்ற தினக்கூலி வேலைகள் பார்த்து நாளொன்றுக்கு 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகின்றனர்.
“அந்த காலத்தில் மக்களுக்கு திருநங்கைகளை பற்றி தெரியாது. எனவே வீட்டை விட்டு நான் வெளியே வரும்போதெல்லாம், எனக்கு பின்னால் பலரும் பலவிதமாக பேசுவார்கள்,” என்கிறார் ரம்யா. “‘ஆணைப் போல் உடையணிந்திருந்தாலும் பெண்ணை போல் நடந்து கொள்கிறான். இது ஆணா, பெண்ணா?’ எனப் பேசுவார்கள். அது எனக்கு கஷ்டமாக இருந்தது,” என்கிறார்.
9ம் வகுப்பில் பள்ளிப் படிப்பை நிறுத்திய அவர், பெற்றோரை போல தினக்கூலி வேலைக்கு செல்லத் தொடங்கினார். தன் பாலினத்தை பெண்ணாக தொடர்ந்து வெளிப்படுத்தினார் ரம்யா. அவரிடம் “சிறுவனைப் போல் நடந்து கொள்ள” தொடர்ந்து கெஞ்சியதை நினைவுகூர்ந்த அவரின் தாய், பிறர் தங்களை பற்றி என்ன சொல்வார்களென அஞ்சியதாக சொல்கிறார்.
இருபது வயதுகளின் தொடக்கத்தில் இருந்தபோது, வீட்டை விட்டு வெளியேறி தன் விருப்பத்துக்கு வாழவிருப்பதாக கூறியிருக்கிறார். அப்போதுதான் அவரது தாயும் காலஞ்சென்ற தந்தை ராமச்சந்திரனும் அவர் சொல்வதை கேட்கத் தொடங்கினர். “எங்களுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். நமக்கு இல்லாத மகளாக அவன் இருக்கட்டும் என சொல்லிக் கொண்டோம்,” என்கிறார் வெங்கம்மா. “ஆணோ பெண்ணோ அவன் எங்களின் குழந்தைதான். வீட்டை விட்டு அவன் செல்ல நாங்கள் எப்படி விட முடியும்?”
எனவே வீட்டில் பெண்களின் உடை அணிய ரம்யா அனுமதிக்கப்பட்டார். எனினும் திருநங்கைகள் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சினைகளுக்கு அஞ்சி வெங்கம்மா, “நீ கடை ஏறக் கூடாது,” எனக் கடைகளில் சென்று பிச்சை கேட்கும் வேலையை செய்யக் கூடாது என மகளிடம் கூறியிருக்கிறார்.
“உள்ளே நான் பெண்ணாக உணர்ந்தபோதும் வெளியில் தாடியுடன் என்னை ஓர் ஆணாகதான் பார்த்தார்கள்,” என்கிறார் ரம்யா. 2015ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாய் வரை சேமித்து வைத்திருந்த மொத்த பணத்தை, பாலினத்தை உறுதி செய்யும் அறுவை சிகிச்சைக்கும் லேசர் கதிர் கொண்டு முடி அகற்றும் சிகிச்சைக்கும் செலவு செய்திருக்கிறார் அவர்.
திருப்போரூரிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் இருந்த மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு மருத்துவமனையில் பாலினத்தை உறுதி செய்யும் அறுவை சிகிச்சை செய்ய, அவருக்கு 50,000 ரூபாய் செலவானது. தூரமாகவும் செலவு கொண்டதாகவும் இருந்தபோதும் பாலினம் சார்ந்த பராமரிப்பு குழு நன்றாக இருப்பதாக நண்பர் சொன்ன பரிந்துரையின் பேரில் அங்கு அவர் சென்றார். இலவச அறுவை சிகிச்சைகள், தமிழ்நாட்டின் சில அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுகிறது. முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சென்னையின் மருத்துவ மையத்துக்கு ஆறு முறை சென்று, ரூ.30,000 செலவழித்தார் அவர்.
அவருக்கு துணையாக மருத்துவமனைக்கு வளர்மதி என்னும் இருளர் திருநங்கை சென்றார். அறுவை சிகிச்சைக்கு சற்று முன்னால், மருத்துவமனை படுக்கையில் அமர்ந்திருக்கும்போது, தான் எடுத்திருந்த முடிவின் முழுமையை ரம்யா உணர்ந்தார். பல திருநங்கையரின் அறுவை சிகிச்சைகள் வெற்றி அடையாத கதைகளை அவர் கேட்டிருக்கிறார். “சில அங்கங்கள் முழுமையாக அகற்றப்படாமல் இருக்கும், அல்லது சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருக்கும்.”
அவரின் அறுவை சிகிச்சை வெற்றி பெற்றது. “மறுபிறப்பு போல் இருந்தது,” என்கிறார் ரம்யா. “இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகுதான் என் பெற்றோர் என்னை ரம்யா என அழைக்கத் தொடங்கினர். அது வரை அவர்கள் என்னை பழைய பெயர் கொண்டு அழைத்திருந்தார்கள்.”
சுற்றியிருந்த பெண்களின் பார்வையை அறுவை சிகிச்சை மாற்றியதாக அவர் கருதுகிறார். அவர்கள் தற்போது அவரை தங்களில் ஒருவராக பார்க்கின்றனர். “கழிவறைக்கு செல்லும்போது கூட அவர்கள் உடன் வருகிறார்கள்,” என்கிறார் அவர் புன்னகையுடன். 14 உறுப்பினர்களுடன் இயங்கும் காட்டுமல்லி இருளர் பெண்கள் குழு என்னும் சுய உதவிக் குழுவின் தலைவராக ரம்யா இருக்கிறார்.
பாம்பு பிடிப்பதற்கான உரிமம் பெற்றவரான அவரும் அவரின் சகோதரரும் விஷமுறிவு மருந்து தயாரிப்புக்காக இருளர் பாம்பு பிடிப்பவர்களின் தொழில்துறை கூட்டுறவு சொசைட்டிக்கு பாம்புகளை அளித்து, வருடத்தில் ஆறு மாதங்களுக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய் சம்பாதிக்கின்றனர். தினக்கூலி வேலையும் அவர் தொடர்ந்து செய்கிறார்.
56 குடும்பங்களை கொண்டிருக்கும் அவரது இருளர் சமூகத்தினர் கடந்த வருடத்தில், ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள செம்பாக்கம் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் அரசாங்கம் ஒதுக்கியிருக்கும் குடியிருப்புக்கு இடம்பெயர்ந்தனர். அரசு அதிகாரிகளை ரம்யா சந்தித்து, மின்சார இணைப்புகளை பெறவும் அடையாள ஆவணங்களை பெறவும் உதவினார்.
அவரின் சமூக மற்றும் அரசியல் பணிகள் வலுவாகிக் கொண்டு வருகின்றன. 2022ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலின்போது, தனது சமூகத்தினருக்கு வாக்குரிமை பெற்றுத் தர அவர் போராட்டங்கள் நடத்தினார். செம்பாக்கம் பஞ்சாயத்திலிருந்த இருளர் அல்லாத உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். “இப்போது நான் எங்களின் ஊருக்கு சிறப்பு வார்டு தகுதி பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்,” என்னும் அவர், என்றேனும் ஒருநாள் தன் சமூகத்துக்காக பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் நம்பிக்கையுடன் இருக்கிறார். “நாம் விரும்பும் வாழ்க்கையை நாம் வாழ வேண்டும். பொய்யான வாழ்க்கையை நான் வாழ முடியாது.”
முழு மாநிலத்திலும் சுமாராக இரண்டு லட்சம் இருளர் மக்கள் (கணக்கெடுப்பு 2011) இருக்கின்றனர். “எங்களுக்கு ஆண், பெண், திருநங்கை என்ற பேதமெல்லாம் இல்லை. எங்களின் குழந்தையை அப்படியே ஏற்றுக் கொண்டு, தேவையானவற்றை அளிக்கிறோம். ஆனால் குடும்பத்துக்கு குடும்பம் அது வேறுபடும்,” என்கிறார் அவர். அவரின் நண்பர்களும் இருளர் சமூகத்தை சேர்ந்தவர்களுமான சத்யவாணி மற்றும் சுரேஷ் ஆகியோருக்கு மணமாகி 10 வருடங்களாகிறது. இருபது வயதுகளில் இருக்கின்றனர். 2013ம் ஆண்டிலிருந்து அவர்கள், திருப்போரூரிலிருந்து 12 கிமீ தொலைவில் இருக்கும் இருளர் வசிப்பிடமான குன்னப்பட்டில் தார்ப்பாய் போட்ட குடிசையில் வாழ்ந்திருக்கின்றனர்.
ஒரு திருநங்கையாக வளர்வதில் எந்த சிரமும் இல்லாமல் இருந்ததற்கான காரணமாக தன் சமூகத்தையும் வளர்மதி போன்ற நண்பர்களையும் சொல்கிறார் ரம்யா. வீட்டுக்கு வெளியே அமர்ந்திருக்கும் அவர்கள், ஆடி திருவிழா மற்றும் வருடந்தோறும் இருளர்களுக்காக மாமல்லபுரத்தில் கொண்டாடப்படும் மாசி மகம் ஆகியவற்றை பற்றி விளக்குகிறார்கள். அந்த இரு விழாக்களையும் தமக்கான கொண்டாட்டங்களாக உணர்வதாக அவர்கள் சொல்கிறார்கள்.
இந்த விழாக்களின்போது “சிறுமிகளை போல் உடையணிந்து” ஆடும் நடன நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கு பெறுவதாக சொல்கிறார் வளர்மதி. ஆடி விழாவுக்கு அவர் ஆர்வத்துடன் காத்திருக்கிறார். ஆனால் அந்த விழாவில் உடையணிவது போல் ஏன் தினமும் அணியவில்லை என அவர் யோசிக்கிறார்.
“பேண்ட் சட்டை போட்டிருந்த காலத்திலிருந்து நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம்,” என்கிறார் ரம்யா. 6ம் வகுப்பில் அவர்கள் சந்தித்தபோது, தாயை இழந்திருந்த வளர்மதி, காஞ்சிபுரத்திலிருந்து எடையான்குப்பத்துக்கு இடம்பெயர்ந்திருந்தார். திருப்போரூருக்கு அருகே இருக்கும் இருளர் கிராமமான அங்கு தந்தை மற்றும் இரு உடன்பிறந்தாருடன் இடம்பெயர்ந்திருந்தார்.
*****
மூத்த ‘மகனாக’ பிறந்த வளர்மதியின் பாலின அடையாளம், தந்தையுடனான உறவில் பிரச்சினையை ஏற்படுத்தியது. பதின்வயதுகளின் தொடக்கத்தில் பள்ளிப் படிப்பை அவர் நிறுத்தி விட்டு, 35 கிலோமீட்டர் தொலைவில் இருந்த திருநங்கை குடும்பத்துடன் இணைய ஓடி வந்து விட்டார். “பிற திருநங்கைகளுடன் சேர்ந்து ஒரு வீட்டில் நான் வசித்தேன். மூத்த திருநங்கையான அம்மாவால் நாங்கள் தத்தெடுக்கப்பட்டோம்.”
மூன்று வருடங்களுக்கு வளர்மதியின் வேலை உள்ளூர் கடைகளுக்கு சென்று, ஆசிர்வாதம் வழங்கி பணம் கேட்பதுதான். “அன்றாடம் நான் சென்றேன். பள்ளிக்கு செல்வது போல இருந்தது,” என்கிறார் அவர். கிட்டத்தட்ட அவர் சம்பாதித்த மொத்த பணமான சில லட்சங்களை குருவிடம் (அம்மாவிடம்) கொடுத்தார். அவரது பாலினத்தை உறுதி செய்யும் அறுவை சிகிச்சைக்காகவும் பிறகு அதை கொண்டாடும் சடங்குக்காகவும் குரு பெற்றிருந்ததாக சொன்ன ஒரு லட்சம் ரூபாய் கடனையும் கூட அந்த சமயத்தில் அவர் கட்ட வேண்டி இருந்தது.
வீட்டுக்கு பணமும் அனுப்ப முடியவில்லை. குடும்பத்தையும் சந்திக்க முடியவில்லை. அங்கிருந்து வெளியேற இன்னொரு குருவின் உதவியை நாடினார் வளர்மதி. சென்னையிலுள்ள புதிய திருநங்கை குடும்பத்திடம் செல்வற்காக பழைய குருவுக்கு அவர் அபராதமாக ரூ. 50,000 கட்டினார்.
“உடன் பிறந்தவர்களை பார்த்துக் கொள்வதற்கென பணம் அனுப்புவதாக தந்தைக்கு உறுதி அளித்திருந்தேன்,” என்கிறார் அவர். திருநங்கையருக்கு கல்விக்கான சாத்தியமும் வேலைவாய்ப்பும் குறைவாக இருப்பதால், அவரைப் போன்ற திருநங்கையர் தங்களின் பதின்வயதுகளில் பாலியல் தொழில் செய்கின்றனர். ரயில்களில் ஆசிர்வாதம் வழங்கி பணம் பெறுகின்றனர். இத்தகைய ரயில் பயணங்களில் ஒன்றின்போதுதான் அவர், இருபது வயதுகளின் பிற்பகுதியில் இருந்த ராகேஷை சந்தித்தார். அப்போது ராகேஷ் கப்பல் கட்டும் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
இருவரும் காதல்வயப்பட்டு திருமணம் செய்துகொண்டு 2021ம் ஆண்டிலிருந்து ஒன்றாக வாழத் தொடங்கினர். திருப்போரூரில் வீடு கிடைக்காமல், தொடக்கத்தில் அவர்கள் எடையான்குப்பத்திலுள்ள வளர்மதியின் தந்தையான நாகப்பனின் வீட்டுக்கு குடிபுகுந்தனர். நாகப்பன் அவர்களை அனுமதித்தபோதும் முழு மனதாக அவர் ஏற்றிருக்கவில்லை. எனவே இருவரும் வெளியேறி பக்கத்திலுள்ள குடிசையில் வாடகைக்கு தங்கினர்.
”வசூலுக்கு செல்வதை நான் நிறுத்தினேன். கைகளை தட்டி சில ஆயிரங்களை சம்பாதிக்க ஆர்வமாகதான் இருந்தது. ஆனால் ராகேஷுக்கு விருப்பம் இல்லை,” என்கிறார் வளர்மதி. எனவே தந்தையுடன், அருகே இருந்த திருமண மண்டபத்தில் பாத்திரங்களை கழுவி இடத்தை சுத்தப்படுத்தும் வேலை பார்த்து நாளொன்றுக்கு 300 ரூபாய் வருமானம் ஈட்டினார் வளர்மதி.
“தன்னை பற்றிய எல்லா விஷயங்களையும் அவர் என்னிடம் சொன்னார்,” என்கிறார் ராகேஷ் டிசம்பர் 2022-ல் சந்தித்த தருணத்தை நினைவுகூர்ந்து. பாலினத்தை உறுதி செய்யும் அறுவை சிகிச்சைக்கு பிறகு மார்பகத்தை பெரிதாக்கும் சிகிச்சையின்போது அவருக்கு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் துணை நின்றார் ராகேஷ். அறுவை சிகிச்சைக்கும் அதற்கு பின்னான மருத்துவத்துக்கும் அவர்கள் ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் செலவழித்தனர். “எல்லா அறுவை சிகிச்சைகளும் என்னுடைய முடிவுதான். மற்ற்றவர்கள் செய்ததால் நான் அவற்றை செய்யவில்லை. நான் என்னவாக விரும்பினேனோ அப்படியாவதற்குதான் அவற்றை செய்தேன்,” என்கிறார் அவர்.
திருமணத்துக்கு பிறகு வந்த வளர்மதியின் முதல் பிறந்தநாளன்று அவரும் ராகேஷும் கேக் வாங்க சென்றனர். அவரைப் பார்த்ததும் கடைக்காரர், வசூலுக்கு வந்திருப்பதாக நினைத்து சில்லறைக் காசுகளை கொடுத்திருக்கிறார். சங்கடமாகி அவர்கள், வந்திருந்த காரணத்தை சொன்னதும் கடைக்காரர் மன்னிப்பு கேட்டார். பிறகு அன்றிரவில், உடன்பிறந்தவர்கள் மற்றும் கணவர் ஆகியோருடன் நினைவுக்கூரத்தக்க ஒரு பிறந்தநாள் விழாவை வளர்மதி கொண்டாடினார். இருவரும் வளர்மதியின் தாத்தாவை சந்தித்து ஆசியும் பெற்றுக் கொண்டனர்.
இன்னொரு நேரத்தில், அவர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது காவலர்கள் நிறுத்தியதை நினைவுகூருகிறார் அவர். தாலியைக் காட்டியதும், அவர்கள் பயந்தது போலன்றி, காவலர்கள் ஆச்சரியப்பட்டு வாழ்த்துகள் தெரிவித்து அனுப்பியிருக்கின்றனர்.
ஆகஸ்ட் 2024 அன்று, அரசாங்க வேலை பெற்றதும் ராகேஷ் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். “என் அழைப்புகளை அவர் ஏற்காமல் தவிர்த்தார்,” என்னும் வளர்மதி, தந்தை ஊக்குவித்ததன் பேரில் அவரை தேடி நகரத்துக்கு சென்றார்.
“ராகேஷின் பெற்றோர், தங்களின் மகன் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் வகையில் ஒருவரை மணம் முடிக்க அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். திருமணத்தை பதிவு செய்ய வேண்டுமென எனக்கு தோன்றியிருக்கவே இல்லை. அவர் என்னை விட்டு செல்ல மாட்டாரென நம்பினேன்,” என்கிறார் அவர். ராகேஷை கட்டாயப்படுத்த விரும்பாமல், வளர்மதி மீண்டும் சென்னையிலிருந்த திருநங்கை குடும்பத்துடன் இணைந்து விட்டார்.
இந்த பின்னடைவுகளை தாண்டி, வழிகாட்டவென குறைவான வருமானம் கொண்ட சமூகங்களை சேர்ந்த இரு இளம் திருநங்கையரை அவர் தனது திருநங்கையர் குடும்பத்தில் தத்தெடுத்திருக்கிறார். அவர்களில் ஒருவர் காவல்துறை அதிகாரியாகும் விருப்பத்தில் இருக்கிறார். அவரது கனவு நிறைவேற உதவுவதென வளர்மதி நினைத்திருக்கிறார்.
தமிழில் : ராஜசங்கீதன்