சத்யபிரியா கதையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி எங்க பெரியம்மாவ பத்தி சொல்லனும்னு நினைக்கிறேன். எங்க பெரியம்மாவுக்கும் சத்யபிரியாக்கும் ஆர்ட் மூலமா ஒரு தொடர்பிருக்கு. நான் ஆறாவது படிக்கும் போது இருந்தே எங்க பெரியம்மா, பெரியப்பா வீட்டில் இருந்து தான் படிச்சிட்டு இருந்தேன். நான் அவங்களை பெரியம்மா பெரிப்பானு எல்லாம் கூப்பிட்டது கிடையாது, அம்மா அப்பான்னு தான் கூப்பிடுவேன். ஆறாவதுல இருந்து என்ன அவங்க ரொம்ப நல்லா பாத்துக்கிட்டாங்க. விடுமுறை நாட்கள் வந்தாலே நாங்க பெரியம்மா வீட்டுக்கு போயிடுவோம்.

என்னோட லைஃப்ல எங்க பெரியம்மா ரொம்பவே முக்கியமானவங்க. எங்க பெரியம்மா எங்களை ரொம்ப நல்லா பாத்துப்பாங்க .காலையில சாயந்திரம் டீ, சாப்பாடுனு  எங்களுக்கு என்ன என்ன வேணும்ன்றதை எல்லாமே கரெக்டா பண்ணி கொடுப்பாங்க. நான் ஸ்கூல்ல இங்கிலீஷ் எல்லாம் படிக்க ஆரம்பிச்சப்போ, எங்க பெரியம்மா தான் எனக்கு எல்லாமே சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க கிச்சன்ல வேலை பார்த்துட்டு இருக்கும்போது நான் போய் டவுட் எல்லாம் கேட்பேன். எனக்கு நிறைய வார்த்தைகளுக்கு ஸ்பெல்லிங் தெரியாது. அவங்க தான் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. அப்போ இருந்து எனக்கு எங்க பெரியம்மாவை ரொம்ப பிடிக்கும்.

அவங்க வந்து பிரஸ்ட் கேன்சர்ல இறந்து போயிட்டாங்க. அவங்க அவங்களுக்கான வாழ்க்கையை வாழாமலே இறந்து போயிட்டாங்கன்னு சொல்லலாம். அவங்கள பத்தி சொல்றதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு, ஆனா இது மட்டும் போதும்னு நான் நினைக்கிறேன்.

*****

என்னோட பெரியம்மா இறந்த போது அவங்களோட புகைப்படத்தை நான் சத்யா கிட்ட வரைய முடியுமானு கேட்டிருந்தேன். நான் எந்த ஆர்டிஸ்ட் பார்த்து பொறாமைப்பட்டது கிடையாது. ஆனா சத்யாவோட ஒர்க் பார்க்கும் போது எனக்கு ரொம்பவே பொறாமையா இருந்துச்சு. அந்த மாதிரி நுணுக்கமா பொறுமையா சத்யாவால் மட்டும் தான் ஓவியத்தை பண்ண முடியும். சத்யாவோட பாணி ஹைபர் ரியலிசம் பாணி. ஹைரெசெல்யூஷன் படம் மாதிரி வரைவாங்க.

எனக்கு சத்யா இன்ஸ்டாகிராம் மூலமா தான் அறிமுகமானாங்க. அதனாலதான் அவங்க கிட்ட நான் வரைய முடியுமான்னு கேட்டேன் நான் போட்டோ அனுப்பும்போது அந்த போட்டோ பிக்சலேட் ஆகிடுச்சு. அதை வரைய முடியுமா அப்படிங்கற ஒரு சந்தேகம் இருந்தது. கடைசியா வரைய முடியாமலே போயிடுச்சுன்னு நினைக்கிறேன்.

அதன் பிறகு மதுரையில துப்புரவு பணியாளர்கள் ஒர்க்ஷாப் பண்ணி இருந்தோம். அந்த ஒர்க் ஷாப்க்கு சத்யா வந்திருந்தாங்க. அப்போ அவங்க என் பெரியம்மாவோட புகைப்படத்தை வரைஞ்சு எடுத்துட்டு வந்தாங்க. அந்த ஓவியம் ரொம்பவே சூப்பரா இருந்தது. அது என்னோட ரொம்பவே கனெக்ட் ஆச்சு. அப்போதான் நானும் சத்யாவும் முதல்முறையா நேரில் சந்திக்கிறோம்.

அந்த வொர்க் ஷாப் தான் என்னோட முதல் ஒர்க்க்ஷாப். அப்போவே அந்த புகைப்படம் என் கைக்கு வந்தது இன்னும் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியா இருந்தது. அப்படித்தான் எனக்கு சத்யபிரியாவோட அறிமுகம் தொடங்குச்சு.  அப்போவே சத்யபிரியாவோட ஒர்க் பத்தி நான் எழுதணும்னு முடிவு பண்ணேன். சத்யாவோட ஒர்க்க இன்ஸ்டாலே பார்க்கும்போதும் ஃபாலோ பண்ணும் போதெல்லாம் எனக்கு ரொம்பவே பிரமிப்பா இருக்கும். அந்த பிரமிப்பு அவங்க வீட்டுக்கு போனப்பவும் குறையவே இல்ல. அவங்க வீடு முழுக்க அவங்க பண்ண ஒர்க் எல்லா தான் நிரம்பி இருந்தது. சுவத்துலயும் தரையிலயும் எல்லா இடத்துலயும் அவங்க ஒர்க் மட்டும் தான் இருந்தது.

PHOTO • M. Palani Kumar

ஸ்டுடியோவில் சத்யபிர்யாவின் பணி. அவரின் பாணி ஹைபர்ரியலிசம். அவரது ஓவியம் ஹை ரெசொல்யூஷன் படம் போல இருக்கும்

PHOTO • M. Palani Kumar

சத்யபிரியாவின் வீடு, அவரது ஓவியங்களால் நிரம்பியிருக்கும். ஒவ்வொரு ஓவியத்துக்குமான அடித்தளத்தை உருவாக்க அவர் ஐந்து மணி நேரங்கள் எடுத்துக் கொள்கிறார்

சத்யபிரியா தன்னோட கதையை சொல்ல தொடங்கியதும், அவங்க வரைஞ்ச ஓவியங்களும் சேர்ந்து பேச ஆரம்பிச்சது.

“என் பேரு சத்யபிரியா. வயசு 27. நான் மதுரைல இருந்து வரேன். நான் ஹைப்பர் ரியலிசம் பண்ணிட்டு இருக்கேன். முதல்ல எனக்கு வரையவே தெரியாது. நான் படிச்சிட்டு இருக்க காலத்துல லவ் ஃபெயிலியர் ஆச்சு. அதுல இருந்து வெளிய வருவதற்காகதான் சும்மா வரைவோமே அப்படினு ஸ்டார்ட பண்ணேன். என்னோட ஃபர்ஸ்ட் லவ்வால் ஏற்பட்ட டிப்ரெஷன வெளிய தள்ளுறதுக்காக ஆர்ட்டை  நான்  பயன்படுத்திக்கிட்டேன். எப்படி ஒவ்வொருத்தவங்களும்  சிகரெட் பிடிக்கிறது, டிரிங்க் பண்றது இருக்கோ  அந்த மாதிரிதான் எனக்கு ஆர்ட்.

நான் வரையும் போது நல்ல ஒரு ரிலீஃப் கிடைச்சுச்சு. அதுக்கப்புறம் நான் வீட்ல சொல்லிட்டேன், இனிமேல் வரையதான் போறேன்னு. எந்த நம்பிக்கைல சொன்னேன்னு எனக்கு தெரியல. ஏன்னா, முதல்ல எனக்கு  ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகணும்னுதான் ஆசை இருந்துச்சு. அதுதான் எனக்கு கனவா இருந்துச்சு. நான் யுபிஎஸ்சி எக்ஸாம்க்கு ட்ரை பண்ணிட்டு இருந்தேன். ஆனா தொடரலை.

சின்ன வயசுல இருந்தே என்னோட தோற்றத்தை வச்சு  ரொம்ப டிஸ்கிரிமினேட் பண்ணியிருக்காங்க. ஒரு மாதிரி தாழ்த்தி பேசுவாங்க. வேற மாதிரி ட்ரீட் பண்ணுவாங்க. இந்த மாதிரி எல்லாம் என்னோட ஸ்கூல்ல, காலேஜ்ல, என்னோட என்சிசி கேம்ப்ல எல்லா இடத்துலயுமே நடந்துட்டேதான் இருந்துச்சு.  என்னோட  ஸ்கூல்ல இருந்தே என்னோட பிரின்சிபல் டீச்சர்ஸ் எல்லாருமே  எப்பவுமே என்னையே  டார்கெட் பண்ணி ஏதாவது திட்டிக்கிட்டே இருப்பாங்க.

நான் 12th படிக்கும்போது ஒரு சம்பவம் நடந்துச்சு.  எங்க ஸ்கூல்ல ட்ரெயினேஜ் அடைச்சிக்கிச்சு.  பொண்ணுங்க  கரெக்டா நாப்கின டிஸ்போஸ் பண்ணாததுதான் காரணம். அப்போ எங்க பிரின்ஸிபல்  ஒரு அஞ்சாது, ஆறாவது, ஏழாவது படிக்கிற பசங்களையோ புதுசா ஏஜ் அடென்ட் பண்ணவங்களையோ கூப்பிட்டு எப்படி நாப்கின் டிஸ்போஸ் பண்ணனும்னு சொல்லலாம்.

ஆனா காலைல பிரேயர்ல 12-வது படிக்கிற பசங்க எல்லாரும் இருக்கும்போதும் பொண்ணுங்க பசங்க எல்லாருமே யோகா பண்ணிட்டு இருக்கும்போதும் என்னை எழுப்பி நிக்க வச்சு, ’இந்த  மாதிரி பொண்ணுங்கதான் இப்படி எல்லாம் பண்ணுவாங்க’ அப்படின்னு  சொன்னாங்க. அந்த சமயத்துல எனக்கு ஒண்ணும் புரியல. ட்ரெயினேஜ் அடைச்சதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: பள்ளி சிறுமியின் படம். வலது: பாரியில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையில் இடம்பெற்ற ரீட்டா அக்காவின் படம்

என்னோட ஸ்கூல்ல அதிகமா என்னை மட்டுமே டார்கெட் பண்ணி நிறைய விஷயம் நடந்தது. 9வது படிக்கும்போது என்கூட படிக்கிறவங்க லவ் பண்ணாலும்  எங்க அப்பா அம்மாவை கூப்பிட்டு ’இந்த பிள்ளைதான் ஹெல்ப் பண்ணுது, இந்த பிள்ளைதான் எல்லாரையும் சேர்த்து வைக்கிது’ன்னு சொல்லுவாங்க. ஒரு தடவை எங்க அப்பாவ கூப்பிட்டு லெட்டர் எல்லாம் எழுதி தர சொன்னாங்க. அந்த லெட்டர்ல “தகாத வார்த்தைகளை பேசியதற்காக, தகாத செயலை செய்தற்காக “ அப்படின்னு வார்த்தைகள் இருக்கும். அப்போ எனக்கு அதோட அர்த்தம்  தெரியல.  அது மட்டுமில்லாம என்னை  பகவத் கீதை எல்லாம் கொண்டுவர சொல்லி  சத்தியம் பண்ண சொல்லி, உண்மைதான் பேசுறியா அப்படின்னு எல்லாம் கேட்பாங்க.

நான்  ஒவ்வொரு நாளுமே ஸ்கூல்ல இருந்து வரும்போது அழுகாம வந்ததே கிடையாது. வீட்ல  சொன்னாலும் ’நீ தான் ஏதாவது பேசி இருப்ப’, ’நீ தான் ஏதாவது பண்ணி இருப்ப’ன்னு சொல்வாங்க. அதனால வீட்லயும் சொல்ல முடியாது.

அந்த விஷயம் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா சேந்து எனக்குள்ளே ஒரு இன்செக்யூரிட்டி வர ஆரம்பிச்சுச்சு.

காலேஜ்ல போயும் எனக்கு அதே தான் நடந்துச்சு. என்னோட பல்ல வச்சு தான் எல்லா கேலி கிண்டலும் நடக்கும். நம்ம படங்கள்ல பார்த்தா கூட இந்த மாதிரி விஷயங்களத்தான் கேலி கிண்டலா பயன்படுத்துறாங்க. இதுல கிண்டல் பண்றதுக்கு என்ன இருக்கு? நானும் எல்லாரும் மாதிரியே சராசரி மனுஷன் தானே! எல்லாரும் இந்த மாதிரி பண்றதுனாலதான் இத ஒரு சாதாரண விஷயமா எல்லாரும் எடுத்துக்குறாங்க. ஆனா, அப்படி கிண்டல் பண்றவங்களுக்கு, அது மத்தவங்களை எவ்வளவு பாதிக்கும்,  அவங்க எவ்ளோ இன்செக்யூரிட்டியா ஃபீல் பண்ணுவாங்க அப்படிங்கறதெல்லாம் தெரியறதில்ல.

என்னோட வாழ்க்கையில அப்ப நடந்த விஷயங்களால இப்பவுமே எனக்கு பாதிப்பு இருந்துக்கிட்டே தான் இருக்கு. இப்ப கூட என்னை யாராவது போட்டோ எடுக்கும்போது எனக்கு  ஒரு இன்செக்யூரிட்டி வந்திடும். ஒரு 25, 26 வருஷமா நான்  இதே மாதிரி தான் ஃபீல் பண்ணிட்டு இருக்கேன். உருவகேலி ஒரு நார்மலான விஷயமா மாறிடுச்சு.

*****

ஏன்  நம்மள நம்ம வரைய கூடாது? நம்மள நாமளே ரெப்ரெசண்ட் பண்ணலனா, வேற யாரு பண்ணுவா?

என் முகத்தை போல ஒரு முகத்தை ஏன் வரையக்கூடாதுன்னு யோசிச்சேன்

PHOTO • M. Palani Kumar

தன்னைத் தானே வரைந்த சத்யபிரியாவின் ஓவியம். வரைவதற்கு அவர் பயன்படுத்தும் உபகரணங்கள்

PHOTO • M. Palani Kumar

ஓவியம் குறித்த தன் எண்ணங்களை உற்சாகத்துடன் பகிர்ந்து கொள்கிறார் சத்யபிரியா

இந்த ஒர்க்கை  அழகான முகங்கள வச்சுதான் நான்  ஸ்டார்ட் பண்ணேன். அதுக்கு அப்புறம்தான் நம்ம அழகை வச்சு மட்டுமே மக்களை எடை போடுறது கிடையாதுன்னு தெரிஞ்சுது. அவங்களோட ஜாதி, மதம், திறன், அவங்க செய்ற தொழில், பாலினம், பாலின தன்மை என்ற அடிப்படையிலதான் மக்களை எடை போடறோம். அதனால் நான் வழக்கமா சொல்லப்படற அழகுக்கான அர்த்தத்துல ஆர்ட் பண்றதுல்ல. அதைத் தாண்டிய அழகைதான் வரையறேன். இப்போ திருநங்கைகள் எடுத்துக்கிட்டாலும் அதுலயுமே பொண்ணு மாதிரி அழகா இருக்குறவங்களதான் காட்டுறாங்க. அப்ப மத்த திருநங்கைகள எல்லாம் யாரு காட்டுவா? எல்லாத்துக்கும் ஒரு தரம் வச்சிருக்காங்க. அந்த தரத்துல எனக்கு விருப்பம் கிடையாது. நம்மளோட ஆர்ட் ஒர்க்ல  எல்லாருமே இருக்கணும், எல்லாரும் சந்தோஷமா இருக்கணும் அப்படின்னுதான் நான் விரும்புறேன்.

யாருமே மாற்றுத் திறனாளி மக்களை வச்சு எந்த ஆர்ட் ஒர்க்கும் பண்றது கிடையாது. மாற்றுத்திறனாளி மக்கள்  நிறைய ஒர்க் பண்ணி இருக்காங்க. ஆனா அவங்கள சார்ந்து எந்த ஆர்ட் ஒர்க்குமே கிடையாது. துப்புரவு பணியாளர்களோட இறப்ப பத்தியும் யாருமே ஒர்க் பண்றது கிடையாது.

ஏன் இது எதையுமே யாருமே பண்றது இல்ல? ஆர்ட்ட அழகியலாவும், அதை   அழகுங்கற கண்ணோட்டத்துல வச்சு மட்டும்தான் எல்லாருமே பார்க்குறாங்க. ஆனா நான்  அதை   எளிய மக்களோட அரசியலாவும், அவங்க வாழ்வியலையும் அதோட உண்மைத்தன்மையை வெளிப்படுத்துற வழியாவும் பார்க்கறேன். இதுக்கு ஹைப்பர் ரியலிசம்  ஒரு முக்கியமான வகை. நிறைய பேர், ’நீங்க என்ன போட்டோகிராபியதான வரையறீங்க?’ அப்படின்னு கேட்பாங்க. ஆமா, நான் போட்டோகிராபியதான் வரையிறேன். இது போட்டோகிராபியில் இருந்து திரிஞ்சு உருவான ஒரு விஷயம். கேமரா கண்டுபிடிச்சு போட்டோ எடுக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறமா வந்ததுதான் ஹைப்பர் ரியலிசம்.

‘இந்த மக்களை பாருங்க, இவங்கள பத்தி தெரிஞ்சுக்கோங்க,’ அப்படிங்கறதை  நான் சொல்லணும்னு  நினைக்கிறேன்.

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

நுணுக்கங்களை சரியாக கொண்டு வர 20-லிருந்து 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இவை குலசை விழாவில் எடுத்தவை

மாற்றுத்திறனாளிகளை நாம எப்படி காட்டுவோம்? ஒரு பரிதாப உணர்வுக்குள்ள போயிடுவோம். அவங்களோட டிசெபிலிட்டிய காட்டாம ’இது  ஒரு ஸ்பெஷல் விஷயம்’, ’இவன்  ஒரு ஸ்பெஷல் குழந்தை’ அப்படிங்கறத்துக்குள்ள போய் நம்ம முடிச்சிடுறோம். அந்த மாதிரி பார்க்க வேணாம்னு நான் சொல்றேன். அவனை ஏன் ஸ்பெஷலா பார்க்கணும்? அவனும் நம்மள மாதிரி ஒரு சராசரியான மனுசன்தான். நம்மளால ஒரு விஷயம் பண்ண முடியுது. அது அவனால பண்ண முடியல. அப்போ என்ன பண்ணனும்? அவனுக்கு அத பண்றதுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கணும்.  எந்த வாய்ப்பைக் கொடுக்காம, ’நீ   ஸ்பெஷல் குழந்தை. உனக்கு இதெல்லாம் தேவையில்லை’ அப்படின்னு சொல்றது எந்த விதத்தில் நியாயம்?

அவனுக்கும் வெளிய போகணும்னு எந்த ஆசையும் இருக்காதா? எல்லாமே முடியுற நம்ம கொஞ்ச நேரத்துக்கு மேல வெளியே போகல அப்படின்னா பைத்தியம் பிடிக்குது. அப்போ அவனால மட்டும் எப்படி இருக்க முடியும்? அவனுக்கு ஒரு பொழுதுபோக்கு வேணாமா? அவனுக்கும் கல்வி, செக்ஸ், காதல் எதுவுமே இருக்கக் கூடாதா? நம்ம அவன பார்க்குறதே கிடையாது. அவன பத்தி தெரிஞ்சுக்கிறதும் கிடையாது. எந்த ஒரு ஆர்ட் ஒர்க்கும் மாற்றுத்திறனாளிகளை காட்டுறது கிடையாது. எந்த மெயின்ஸ்ட்ரீம் மீடியாவும் அவங்கள காட்டுறது கிடையாது. இந்த நிலைமைல, நம்ம எப்படி மக்களுக்கு இவங்களும் இருக்காங்க, இவங்களுக்கு இதெல்லாம் தேவைப்படும்னு நினைவூட்ட முடியும்?

இப்போ நீங்களே (பழனி குமார்) துப்புரவு பணியாளர்களை பத்தி 6, 7 வருஷமா தொடர்ந்து ஒர்க் பண்ணிட்டே இருக்கீங்கனா, ஏன் பண்றீங்க? ஏன்னா தொடர்ந்து நம்ம ஒரு விஷயத்தை சொல்லிட்டே இருக்கும்போதுதான் மக்களுக்கு அதைப் பத்தி தெரிய வரும். இது இன்னமும் இருக்குன்னு நம்ம தொடர்ந்து பதிவு பண்ணிக்கிட்டே இருக்கணும். மாற்றுத் திறனாளிகள், நாட்டுப்புற கலைகள், காயங்கள்னு எல்லா சப்ஜெக்ட் பத்தியும் ஆவணப்படுத்த வேண்டிய தேவை இருக்கு. நம்ம பண்ற இந்த எல்லா ஒர்க்குமே நம்ம சொசைட்டிக்கு பண்ணக்கூடிய ஒரு சப்போர்ட் தான். நம்மளோட சப்போர்ட் சிஸ்டமா தான் இந்த ஆர்ட்டை நான் பார்க்கிறேன். இது  ஒரு சப்போர்ட் சிஸ்டம். மக்களுக்கு  நடக்குற விஷயங்களை தெரியப்படுத்துற ஒரு மீடியம். ஏன் மாற்றுத்திறனாளி குழந்தையைக் காட்டக்கூடாது? ஏன் அது சிரிக்கிற மாதிரி காட்டக்கூடாது? அந்த குழந்தை  எப்பவுமே சோகமாவும் பரிதாபமாவும்தான் இருக்கணுமா?

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: நாடோடிப் பழங்குடி மக்களின் குழந்தைகள். வலது: மாற்றுத்திறனாளி ஒருவர்

அனிதா அம்மா பத்திய ஒர்க்கும் இந்த மாதிரியான ஒர்க்தான். அனிதா அம்மாவை பொறுத்தவரைக்கும் இந்த ப்ராஜக்ட்ட நாங்க பண்ணும் போது அவங்களுக்கு  பண உதவி இல்ல, எமோஷனல் சப்போர்ட்டும் இல்லை. அதனால, இதை தொடர்ந்து பண்ண முடியலனு ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. நம்ம முதல்ல இந்த விஷயத்தை வெளியே கொண்டு வரணும். வெளியே காட்டணும். அப்போதான் இது சம்பந்தமா நம்மால நிதி திரட்ட முடியும். அவங்கள மாதிரியான மக்களுக்கு ஒரு மானிட்டரி ஹெல்ப்பையும் நாம கொடுக்க முடியும். அதோட எமோஷன் சப்போர்ட்டும் ரொம்ப முக்கியமா இருக்கு. என்னோட கலைய நான் அவங்களுக்காக யூஸ் பண்ணணும்னு நினைக்கிறேன்.

நான் பிளாக் அண்ட் ஒயிட் பாணிய தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்,  இதுல தான் நான் யாரை எப்படி காட்டணும்னு நினைக்கிறேனோ அவங்கள மட்டும்தான்  மக்கள்  பார்ப்பாங்க என்பதுதான். எந்த ஒரு கவனச்சிதறலும் இதுல இருக்காது.  அவங்க யாருங்கறதையும் அவங்களோட உண்மையான உணர்வுகளையும் நம்மளால வெளியே கொண்டு வர முடியும்.

நான் இதுவரை பண்ண ஒர்க்ஸ்லையே அனிதா அம்மாவோட ஒர்க் தான் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒர்க். நான் அந்த ஒர்க் பண்ணும்போது ரொம்பவே ஆத்மார்த்தமா ஃபீல் பண்ணேன். இந்த ஒர்க்க நான் பண்ணும் போது என்னோட மார்பகமும் எனக்கு வலிக்க ஆரம்பிச்சது. அந்த அளவுக்கு இந்த ஒர்க் என்ன பாதிச்சது.

இப்ப வரைக்குமே மலக்குழி மரணங்கள் நடந்துக்கிட்டுதான் இருக்கு. பல உயிர்களும் குடும்பங்களும் தொடர்ச்சியா பாதிக்கப்பட்டுக்கிட்டுதான் இருக்கு, அதைப் பத்தி விழிப்புணர்வு மக்களுக்கு இல்ல. அவங்க உயிருக்கு மதிப்பு இல்ல. ஜாதிய அடையாளத்தினால அவங்க விரும்பாமலேயே அந்த வேலை அவங்க மேல சுமத்தப்படுது.  சுயமரியாதையை இழந்துதான் இந்த வேலையை அவங்க செய்றாங்க. இதையெல்லாம் மீறி இந்த சமுதாயமும் அவங்களை கீழ்த்தரமாதான் பார்க்குது.  அரசாங்கமும் இந்த மக்களுக்கு உதவ, பெருசா முயற்சி எடுத்துக்கிட்ட மாதிரி தெரியல .

ஒரு contemporary ஆர்ட்டிஸ்ட்டா, என்னை சுத்தி என்ன நடக்குதுங்கறதையும் இந்த சமுதாயம் என்னவா இருக்குங்கறதையும் அதுல இருக்குற பிரச்சினைகள் என்னங்கறதையும் என்னோட ஆர்ட் மூலமா வெளிப்படுத்துறேன்.”

PHOTO • M. Palani Kumar

’நான் பிளாக் அண்ட் ஒயிட் பாணிய தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்,  இதுல தான் நான் யாரை எப்படி காட்டணும்னு நினைக்கிறேனோ அவங்கள மட்டும்தான் மக்கள்  பார்ப்பாங்க என்பதுதான். எந்த ஒரு கவனச்சிதறலும் இதுல இருக்காது.  அவங்களோட உண்மையான உணர்வுகளையும் நம்மளால வெளியே கொண்டு வர முடியும்,’ என்கிறார் சத்யபிரியா

PHOTO • M. Palani Kumar

ஒரு contemporary ஆர்ட்டிஸ்ட்டா, என்னை சுத்தி என்ன நடக்குதுங்கறதையும் இந்த சமுதாயம் என்னவா இருக்குங்கறதையும் அதுல இருக்குற பிரச்சினைகள் என்னங்கறதையும் என்னோட ஆர்ட் மூலமா வெளிப்படுத்துறேன்,’ என்கிறார் அவர்

PHOTO • M. Palani Kumar

மார்பகப் புற்றுநோய் கொண்ட பெண்களும் மாற்றுத்திறனாளிகளும் சத்யபிரியா ஓவியங்களில் இடம்பெறுகின்றனர்

M. Palani Kumar

M. Palani Kumar is Staff Photographer at People's Archive of Rural India. He is interested in documenting the lives of working-class women and marginalised people. Palani has received the Amplify grant in 2021, and Samyak Drishti and Photo South Asia Grant in 2020. He received the first Dayanita Singh-PARI Documentary Photography Award in 2022. Palani was also the cinematographer of ‘Kakoos' (Toilet), a Tamil-language documentary exposing the practice of manual scavenging in Tamil Nadu.

Other stories by M. Palani Kumar
Sathyapriya

Sathyapriya is a Madurai-based artist creating works in the hyperrealism genre.

Other stories by Sathyapriya
Editor : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan