ராகி களி சமைக்கப்படும் மணத்தை நாகராஜ் பந்தன் நினைவுகூருகிறார். சிறுவராக இருக்கும்போது தினசரி அதற்காக ஆர்வத்துடன் அவர் இருப்பார்.

ஐம்பது வருடங்கள் கழித்தும் அந்த ராகி களிக்கு ஈடு இணை இல்லை. “இன்று கிடைக்கும் ராகிக்கும் அந்த மணமோ ருசியோ இருப்பதில்லை,” என்னும் அவர், எப்போதேனும்தான் ராகி செய்யப்படுவதாகவும் கூறுகிறார்.

பட்டியல் பழங்குடியான  இருளர் சமூகத்தை சேர்ந்தவர் நாகராஜ். நீலகிரியின் பொக்காபுரத்தில் வசிக்கிறார். அவரது பெற்றோர் விளைவித்த ராகி, சோளம், கம்பு மற்றும் சாமை போன்ற தானியங்களுக்கு மத்தியில்தான் அவர் வளர்ந்தார். குடும்பத்துக்கான கொஞ்சத்தை ஒதுக்கிக் கொண்டு மிச்சத்தை சந்தையில் விற்பார்கள்.

வளர்ந்த பிறகு நாகராஜ், நிலத்தை பராமரிக்கத் தொடங்கிய பிறகு, தந்தை காலத்தில் வந்த விளைச்சலை விட கணிசமாக குறைவதை கவனித்தார். “நாங்கள் உண்ணுமளவுக்குதான் ராகி விளைந்தது. சில நேரங்களில் அது கூட விளையவில்லை,” என்கிறார் அவர். எனினும் தொடர்ந்து ராகி வளர்க்கும் அவர், பீன்ஸ் மற்றும் கத்தரிக்காய் போன்ற காய்கறிகளை ஊடுபயிராக இரண்டு ஏக்கர் நிலத்தில் விதைக்கிறார்.

பிற விவசாயிகளும் இந்த மாற்றத்தை கவனித்திருக்கின்றனர். 10-12 சாக்குகள் வரை தந்தைக்கு ராகி கிடைத்ததாக மாரி சொல்கிறார். ஆனால் தற்போது இரண்டு ஏக்கர் நிலத்திலிருந்து வெறும் 2-3 சாக்குகள்தான் கிடைப்பதாக 45 வயது விவசாயி சொல்கிறார்.

நாகராஜ் மற்றும் மாரி ஆகியோரின் அனுபவங்கள் அதிகாரப்பூர்வ தரவுகளிலும் பிரதிபலிக்கிறது. நீலகிரியில் 1948-49ல் 1,369 ஹெக்டேர் நிலத்தில் விளைவிக்கப்பட்ட ராகி, 1998-99-ல் வெறும் 86 ஹெக்டேராக சுருங்கியிருக்கிறது.

கடந்த கணக்கெடுப்பின்படி (2022) தானிய விளைச்சல், மாவட்டத்தின் ஒரு ஹெக்டேரில் மட்டும்தான் இருக்கிறது.

PHOTO • Sanviti Iyer

மாரி (இடது), சுரேஷ் (நடுவே) மற்றும் நாகராஜ் (வலது) ஆகிய விவசாயிகள், நீலகிரியின் ராகி விளைச்சல் கடந்த சில பத்தாண்டுகளில் குறைந்துவிட்டதாக சொல்கின்றனர். கடந்த கணக்கெடுப்பின்படி (2011) தானிய விளைச்சல் மாவட்டத்தின் ஒரு ஹெக்டேரில்தான் நடக்கிறது

PHOTO • Sanviti Iyer
PHOTO • Sanviti Iyer

நாகராஜ் பந்தனின் விவசாய நிலமும் (இடது) மாரியின் நிலமும் (வலது). ‘இப்போது கிடைக்கும் ராகியில் மணமும் இல்லை, ருசியும் இல்லை,’ என்கிறார் நாகராஜ்

“கடந்த வருடத்தில் எனக்கு ராகி கிடைக்கவில்லை,” என்கிறார் நாகராஜ், ஜூன் 2023-ல் செய்த விதைப்பை குறித்து. “விதைப்புக்கு முன் மழை பெய்தது. ஆனால் பிறகு பெய்யவில்லை. விதைகள் காய்ந்துவிட்டன.”

இன்னொரு இருளர் விவசாயியான சுரேஷ், தற்போது புதிய விதைகள் பயன்படுத்துவதால் ராகி செடிகள் மெதுவாக வளர்வதாக சொல்கிறார். ”விவசாயத்தை சார்ந்து நாங்கள் இனி இருக்க முடியாது,” என்கிறார். அவரது இரு மகன்களும் விவசாயத்தை கைவிட்டு, கோவையில் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர்.

மழையும் நிச்சயமற்று போய்விட்டது. “முன்பு ஆறு மாதங்களுக்கு மழை பொழியும் (மே இறுதி தொடங்கி அக்டோபர் தொடக்கம் வரை). ஆனால் இப்போது மழைப்பொழிவை நிர்ணயிக்க முடியவில்லை. டிசம்பர் மாதம் கூட மழை பெய்யலாம்,” என மழையின்மையை குறைவான விளைச்சலுக்கு காரணமாக குற்றஞ்சாட்டுகிறார் நாகராஜ். “மழையை நாங்கள் சார்ந்திருக்க முடியாது.”

நீலகிரி பன்மைய காப்பு மண்டலம், மேற்கு தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. உயிர் பன்மையச் செறிவு கொண்ட பகுதியாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. பூர்விகமில்லாத செடி வகைகள் அறிமுகப்படுத்தியபிறகும் உயர்மலைகளை தோட்டப்பயிருக்கேற்ப மாற்றி, காலனிய காலத்தில் தேயிலை பயிரிடப்பட்டதாலும் “சூழலின் பன்மையத்தன்மை அழிவுக்கள்ளாகியிருக்கிறது,” எனக் குறிப்பிடுகிறது மேற்கு தொடர்ச்சி மலைக்கான சூழலியல் குழுவின் இந்த ஆய்வு .

நீலகிரியில் இருக்கும் மாயாறு போன்ற பிற நீர்நிலைகளும் தூரத்தில்தான் இருக்கிறது. அவரின் நிலம் பொக்காபுரத்தில்தான் இருக்கிறது. முதுமலை புலிகள் சரணாலயத்தின் பகுதி அது. அங்கு வனத்துறையினர் ஆழ்துளைக் கிணறுகளை அனுமதிக்க மாட்டார்கள். பொக்காபுரத்தை சேர்ந்த இன்னொரு விவசாயியான பி.சித்தன், 2006ம் ஆண்டின் வனத்துறை சட்டத்துக்கு பிறகு பல விஷயங்கள் மாறி விட்டதாக கூறுகிறார். “2006ம் ஆண்டுக்கு முன், காட்டிலிருந்து நாங்கள் நீரெடுக்க முடியும். ஆனால் இப்போது நாங்கள் காட்டுக்குள் செல்ல கூட அனுமதி இல்லை,” என்கிறார் 47 வயதாகும் அவர்.

”இந்த வெயிலில் ராகி எப்படி விளையும்,” எனக் கேட்கிறார் நாகராஜ்.

நிலம் கொடுத்த நஷ்டத்திலிருந்து மீண்டு வாழ்க்கை ஓட்ட, மசினக்குடியின் சுற்றுப்புறங்களிலுள்ள பிற நிலங்களில் தினக்கூலி தொழிலாளராக பணிபுரிகிறார் நாகராஜ். “ஒருநாளுக்கு 400-500 ரூபாய் கிடைக்கும். ஆனால் அதுவும் வேலை கிடைத்தால்தான்,” என்கிறார். அவரின் மனைவி நாகியும் தினக்கூலி தொழிலாளர்தான். மாவட்டத்தின் பல பெண்களை போல அவரும் தினக்கூலி தொழிலாளராக வேலை பார்க்கிறார். மாவட்டத்தின் பல பெண்கள் போல, பக்கத்து தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்து தினசரி 300 ரூபாய் சம்பாதிக்கிறார்.

PHOTO • Sanviti Iyer
PHOTO • Sanviti Iyer

புது விதைகளால் ராகி செடிகள் மெதுவாக வளர்வதாக சொல்கிறார் சுரேஷ் (இடப்பக்கத்தில் அவரின் வயல்). பி.சித்தன் (வலது), 2006 வனத்துறை சட்டத்துக்கு பிறகு நிறைய மாறிவிட்டதாக சொல்கிறார்: ‘2006க்கு முன்பு காட்டிலிருந்து நாங்கள் நீர் கொண்டு வர முடியும். இப்போதெல்லாம் காட்டுக்குள் நுழையக் கூட முடியாது’

*****

யானைகளுக்கு ராகி பிடிக்கும் போல என விவசாயிகள் சிரிக்கின்றனர். “ராகியின் மணம் யானைகளை நிலங்களுக்குள் கொண்டு வருகிறது,” என்கிறார் சுரேஷ். பொக்காபுரம் கிராமம், மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையிலான சிகூர் யானை வழித்தடத்தில் அமைந்திருக்கிறது.

அவர்கள் இளைஞர்களாக இருக்கும்போது இந்த அளவுக்கு யானைகள் நிலத்துக்கு வந்த நினைவில்லை. “ஆனாலும் யானைகளை நாங்கள் பழி சொல்வதில்லை,” என்னும் சுரேஷ், கூடுதலாக, “மழையின்றி காடுகளும் காய்ந்து கொண்டிருக்கிறது. யானைகள் என்ன சாப்பிடும்? உணவுக்காக காட்டை விட்டு வெளியேறுகின்றன,” என்கிறார். சர்வதேச வன கண்காணிப்பு மையத்தின்படி நீலகிரி மாவட்டத்தில் 511 ஹெக்டேர் நிலம் 2002க்கும் 2022க்கும் இடையில் பறிபோயிருக்கிறது.

ரங்கய்யாவின் நிலம், பொக்காபுரத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மேல் பூதநத்தத்தில் இருக்கிறது. அவரும் சுரேஷ் சொல்வதை ஒப்புக் கொள்கிறார். ஐம்பது வயதுகளில் இருக்கும் அவர் ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்க்கிறார். ஆனால் அந்த நிலத்துக்கு அவரிடம் பட்டா இல்லை. “1947க்கும் முன்பிருந்து என் குடும்பம் இங்கு விவசாயம் பார்த்து வருகிறது,” என்கிறார் அவர். சோளிகரான அவர், நிலத்துக்கு அருகே சோளிகர் கோவிலும் பராமரித்து வருகிறார்.

யானைகளின் தொந்தரவால் சில வருடங்களாகவே ராகி மற்றும் பிற தானியங்கள் விதைப்பதை ரங்கய்யா நிறுத்தி வைத்திருக்கிறார். “யானைகள் வந்து எல்லாவற்றையும் தின்று விடும்,” என்கிறார் அவர். “ஒருமுறை யானை நிலத்துக்கு வந்து ராகியை ருசித்து விட்டால், மீண்டும் மீண்டும் வரத் தொடங்கி விடும்.” பல விவசாயிகள் ராகி மற்றும் பிற தானியங்கள் விளைவிப்பதை நிறுத்தி விட்டதாக சொல்கிறார். முட்டைக்கோஸ், பீன்ஸ் போன்ற காய்கறிகளை ரங்கய்யா விளைவிக்கிறார்.

இரவு முழுக்க விவசாயிகள் கண்விழித்து காவல் காக்க வேண்டும். தவறி தூங்கிவிட்டால், யானைகள் தாக்கும் பயம் கொண்டிருப்பார்கள். “யானைகள் வரும் பயம் இருப்பதால், விவசாயிகள் ராகி விதைப்பதில்லை.”

ராகி போன்ற தானியங்களை சந்தைகளில் விவசாயிகள் வாங்கியதில்லை என்கிறார் அவர். விளைவித்ததையே சாப்பிடுவார்கள். அவர்கள் அவற்றை விளைவிப்பதை நிறுத்தி விட்டதால், உண்ணுவதையும் நிறுத்தி விட்டார்கள்.

PHOTO • Sanviti Iyer
PHOTO • Sanviti Iyer

சோளிகரான ரங்கய்யா, மேல் பூதநத்தத்தை சேர்ந்த விவசாயி. உள்ளூர் தொண்டு நிறுவனம் தந்ததன் பேரில் சமீபமாக அவரும் பிற விவசாயிகளும் ராகி விளைவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். விலங்குகளிலிருந்து நிலத்தை பாதுகாக்க வேலி அடைத்திருக்கின்றனர். ‘யானைகள் வந்து எல்லாவற்றையும் தின்று விடும்,’ என்கிறார் அவர்

PHOTO • Sanviti Iyer
PHOTO • Sanviti Iyer

ரங்கய்யா சோளிகர் கோவிலையும் (இடது) பார்த்து கொள்கிறார். ஆனைகட்டி கிராமத்தை சேர்ந்த லலிதா முகாசாமி (வலது), உள்ளூர் தொண்டு நிறுவனத்தின் சுகாதாரக் கள ஒருங்கிணைப்பாளர் ஆவார். ‘தானிய விதைப்பு குறைந்ததும், ரேஷன் க்டைகளிலிருந்து வாங்க வேண்டியதாயிற்று. அதற்கு நாங்கள் பழகவில்லை,’ என்கிறார் அவர்

ஒரு உள்ளூர் தொண்டு நிறுவனம் அவருக்கும் பிற விவசாயிகளுக்கும், யானை மற்றும் பிற விலங்குகளிடமிருந்து காத்துக் கொள்வதற்கான சூரிய ஆற்றல் வேலிகளை தந்திருக்கிறது. ரங்கய்யா மீண்டும் ஒரு பாதி நிலத்தில் ராகி வளர்க்கத் தொடங்கியிருக்கிறார். இன்னொரு பாதியில் காய்கறி விளைவிக்கிறார். கடந்த பருவத்தில், அவர் பீன்ஸ் மற்றும் பூண்டு விற்று 7,000 சம்பாதித்தார்.

தானிய விவசாயம் சரிந்து வருவது, உணவு பழக்கத்தை மாற்றியிருக்கிறது. “தானிய விவசாயம் சரிந்தபின், நாங்கள் ரேஷன் கடைகளிலிருந்து உணவுப்பொருட்கள் வாங்க வேண்டியதாயிற்று. அதற்கு நாங்கள் பழகியிருக்கவில்லை,” என்கிறார் அங்கு வசிக்கும் லலிதா முகசாமி. உள்ளூர் தொண்டு நிறுவனத்தின் சுகாதாரக் களப் பணியாளராக பணிபுரிகிறார். ரேஷன் கடைகள் பெரும்பாலும் அரிசி மற்றும் கோதுமைதான் விற்பதாக சொல்கிறார்.

“நான் குழந்தையாக இருந்தபோது ராகிக் களி மூன்று வேளை சாப்பிடுவேன். இப்போது அரிதாகவே சாப்பிடுகிறேன். அரிசி சாப்பாடுதான் இப்போது உண்ணுகிறோம். சமைப்பதற்கும் எளிதாக இருக்கிறது,” என்கிறார் லலிதா. இருளர் சமூகத்தை சேர்ந்த அவர் ஆனைகட்டி கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 19 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். மாறியிருக்கும் உணவு வழக்கத்தால் கூட சுகாதாரப் பிரச்சினைகள் அதிகரித்திருக்கலாம் என்கிறார் அவர்.

தானிய ஆய்வுக்கான இந்திய நிறுவனம் (IIMR) தன்னுடைய ஆய்வறிக்கை , தெரிந்த சத்துகள், வைட்டமின்கள், கனிமங்கள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் ஆகியவையும் சத்துக்குறைபாட்டை தாண்டி பல நோய்களை தடுக்க உதவுகின்றன,” என்கிறது. தெலங்கானாவை சேர்ந்த இந்த நிறுவனம் இந்திய விவசாய ஆய்வுக் குழுவின் (ICAR) பகுதியாகும்.

“ராகியும் திணையும் எப்போதும் உண்ணத்தகுந்தவையாக இருந்தன. கடுகுக் கீரை மற்றும் காட்டுக் கீரையுடன் சேர்த்து அவற்றை உண்டிருக்கிறோம்,” என்கிறார் ரங்கய்யா. கடைசியாக இதை எப்போது உண்டார் என்பது அவருக்கு நினைவிலில்லை: “இப்போதெல்லாம் காட்டுக்கு நாங்கள் செல்வது கூட இல்லை.”

இக்கட்டுரையாளர், கட்டுரை எழுத உதவிய கீஸ்டோன் அறக்கட்டளையை சேர்ந்த ஸ்ரீராம் பரமசிவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறார்.

தமிழில்: ராஜசங்கீதன்

Sanviti Iyer

Sanviti Iyer is Assistant Editor at the People's Archive of Rural India. She also works with students to help them document and report issues on rural India.

Other stories by Sanviti Iyer
Editor : Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan