கணேஷ் ஷிண்டேவின் விலைமதிப்பற்ற உடைமையான சிவப்பு ட்ராக்ட்ரை 2022ம் ஆண்டில் அவர் வாங்கினார். மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்திலுள்ள காலி கிராமத்து பருத்தி விவசாயியான ஷிண்டே, தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்க்கிறார். ஆனால் சமீப வருடங்களாக கடும் சரிவை பருத்தி விலை சந்தித்து வரும் நிலையில், வருமானத்துக்கான பிற வழிகளையும் தேட வேண்டிய நிலை ஷிண்டேவுக்கு ஏற்பட்டது. எனவே அரசாங்க வங்கியில் 8 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ட்ராக்டர் வாங்கினார்.

“என் வீட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கங்காகெத் டவுனுக்கு ட்ராக்டரை ஓட்டிச் சென்று சந்திப்பில் காத்திருப்பேன்,” என்கிறார் 44 வயதாகும் அவர். “கட்டுமானப் பணிக்கு மணலை எடுத்து செல்ல வாகனம் தேவைப்படுபவர்கள், என்னுடைய ட்ராக்டரை வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள். வேலை கிடைக்கும் நாட்களில் இது நாளொன்றுக்கு 500-லிருந்து 800 ரூபாய் வரை பெற்றுத் தரும்.” கங்காகெடுக்கு காலையில் கிளம்புவதற்கு முன், விவசாயத்தை சில மணி நேரங்களேனும் பார்த்துக் கொள்கிறார்.

ஒன்றிய பட்ஜெட் பற்றிய செய்திகளை அவர் கவனித்திருக்கிறார். பட்ஜெட் மீதுள்ள நம்பிக்கை காரணம் அல்ல. ட்ராக்டருக்கு வாடிக்கையாளர் கிடைக்க நிறைய நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதால் அந்த செய்திகளை அவர் கவனித்திருக்கிறார். “ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான ஒதுக்கீடு அப்படியேதான் இருக்கிறது,” என்கிறார். காலி கிராமத்தின் முன்னாள் தலைவராக இருந்த ஷிண்டே, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தால் பெரிய மாற்றமொன்றும் களத்தில் நேரவில்லை என்கிறார். “வேலைவாய்ப்பு உருவாக்க பணம் பெரியளவில் பயன்படுத்தப்படவில்லை. வெறுமனே திட்டம் காகிதத்தில் மட்டும்தான் இருக்கிறது.”

PHOTO • Parth M.N.

ட்ராக்ட்ரை யாரேனும் வாடகைக்கு எடுப்பதற்காக கங்காகெத் சந்திப்பில் வெறுமனே அமர்ந்திருக்கிறார் ஷிண்டே

சரிந்து வரும் பருத்தி விலை, ஷிண்டே போன்ற விவசாயிகளின் வாழ்க்கையை பாதித்திருக்கிறது. 2022ம் ஆண்டில் ஒரு குவிண்டால் பருத்திக்கு 12,000 ரூபாய் கிடைத்தது. 2024ம் ஆண்டில் இது, மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் ரூ.4,000 என்றளவுக்கு சரிந்தது.

தற்போதைய பட்ஜெட்டில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் “பருத்தி உற்பத்திக்கான திட்டம்” ஒன்றை ஐந்து வருட காலத்துக்கு முன்மொழிந்திருக்கிறார். 5,272 கோடி ரூபாய் நிதி, ஜவுளித்துறை அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடத்தை விட 19 சதவிகிதம் அதிகம். இது, “விவசாயிகளின் வருமானத்தை பெருக்கி, தரமான பருத்தி தொடர்ந்து கிடைக்கச் செய்யும்,” எனக் கூறினார் நிர்மலா சீதாராமன்.

“ஏழைகளுக்கு உதவுவதை போன்ற பாவனை மட்டும்தான் பட்ஜெட்டில் இருக்கிறது. உண்மையில் அது பணக்காரர்களுக்குதான் பலனளிக்கிறது,” என்கிறார் ஷிண்டே சொல்லப்பட்ட திட்டத்தின் மீது நம்பிக்கை எழாமல். “எரிபொருளின் விலை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. எங்களின் வருமானம் தேங்கி, குறைந்து கொண்டும் வருகிறது,” என்னும் அவர், “விவசாயிகள் எப்படி பிழைக்க முடியும்?” எனக் கேட்கிறார்.

தமிழில்: ராஜசங்கீதன்

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Editor : Dipanjali Singh

Dipanjali Singh is an Assistant Editor at the People's Archive of Rural India. She also researches and curates documents for the PARI Library.

Other stories by Dipanjali Singh
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan