பஞ்சாபில் தன் ஊரை சேர்ந்த ஏஜெண்டின் கெட்டக் கனவுகள் இன்னும் சிங்குக்கு வருகிறது.

ஏஜெண்டுக்கு கொடுக்கவென சிங் (உண்மைப் பெயரில்லை), தன் குடும்பத்தின் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை விற்றார். பதிலுக்கு ஏஜெண்ட் ஜதிந்தெர், செர்பியாவின் வழியாக போர்ச்சுகலுக்கு செல்வதற்கான “சட்டப்பூர்வமான ஆவணங்கள்” கிடைக்கும் என்றார்.

ஆனால் ஜதிந்தெரின் ஏமாற்று வேலை விரைவிலேயே சிங்குக்கு தெரிந்தது. சர்வதேச எல்லை தாண்டி அவர் சட்டவிரோதரமாக பயணம் செல்ல வைக்கப்பட்டார். அதிர்ச்சியும் அதிருப்தியும் ஏற்பட்ட அவர், ஊரில் இருந்த கிராமத்துக்கு தன் துயரத்தை சொல்ல முடியவில்லை.

பயணத்தின்போது, அடர் காடுகளை தாண்டி, சாக்கடைகளினூடாக சென்று, ஐரோப்பிய மலைகளில் ஏறி இறங்கி, அவரும் பிற புலம்பெயர்ந்தவர்களும் மழை குட்டைகளின் நீரை குடித்து வெறும் பிரட்டுகளை உண்டு பிழைத்தனர். பிற்காலத்தில் பிரட், அவரது வெறுப்புக்குரிய உணவாக மாறியது.

“என் தந்தை ஓர் இருதய நோயாளி. அவரால் அதிக பதற்றத்தை கையாள முடியாது. இங்கு வர எல்லாவற்றையும் செலவழித்ததால், மீண்டும் நான் வீடு திரும்ப முடியாத நிலை,” என்கிறார் 25 வயது சிங். பஞ்சாபி மொழியில் பேசும் அவர், ஐந்து பேருடன் வசிக்கும் போர்ச்சுகல் ஈரறையிலிருந்து பேசுகிறார்.

இத்தனை வருடங்களில் இந்தியா, நேபாளம், வங்க தேசம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு உவப்பான இடமாக போர்ச்சுகல் மாறியிருக்கிறது.

PHOTO • Karan Dhiman

செர்பியா வழியாக போர்ச்சுகல் செல்ல தேவையான ‘சட்டப்பூர்வ ஆவணங்கள்’ பெற குடும்பத்தின் ஒரு ஏக்கர் நிலத்தை விற்றார் சிங்

சிங் ஒரு காலத்தில் ராணுவத்தில் சேர விரும்பினார். சில முறை முயன்று தோற்றபிறகு, வெளிநாட்டுக்கு செல்ல முடிவெடுத்தார். எளிய புலப்பெயர்வு கொள்கைகள் இருந்ததால் போர்ச்சுகல்தான் அவரது தேர்வாக இருந்தது. அந்த நாட்டுக்கு சென்று வெற்றிகரமாக சேர்ந்த கிராமத்தை சேர்ந்த பிறரின் கதைகளும் அவருக்கு ஊக்கமாக இருந்தது. பிறகொரு நாள், யாரோ ஒருவர் ஜதிந்தெர் பற்றி அவருக்கு கூறினார். அவரும் அதே ஊர்தான். உதவுவதாக உறுதியளித்தார்.

“’12 லட்சம் ரூபாய் (கிட்டத்தட்ட 13,000 யூரோக்கள்) நான் எடுத்துக் கொள்கிறேன். உன்னை சட்டப்பூர்வமாக போர்ச்சுகலுக்கு அனுப்பி வைக்கிறேன்,’ எனக் ஜதிந்தெர் கூறினார். முழு பணத்தையும் கட்ட ஒப்புக்கொண்டு, சட்டப்பூர்வமாகதான் செல்ல வேண்டுமென நான் வலியுறுத்தினேன்,” என்கிறார் சிங்.

ஆனால் பணம் கொடுக்கும்போது வங்கியின் வழியாக இல்லாமல், “வேறு வழி” பயன்படுத்தும்படி ஏஜெண்ட் கூறினார். சிங் மறுத்தபோது, சொன்னபடி செய்யும்படி ஜதிந்தெர் வலியுறுத்தியிருக்கிறார். வெளிநாடு செல்லும் ஆர்வத்தில், சிங்கும் ஏற்றுக் கொண்டார். முதல் தவணையாக ரூ. 4 லட்சம் (4,383 யூரோக்கள்) பஞ்சாபின் ஜலந்தரிலுள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் கொடுக்கப்பட்டது. பிறகு ரூ. 1 லட்சம் (1,095 யூரோக்கள்) ஒரு கடையில் கொடுக்கப்பட்டது.

அக்டோபர் 2021-ல் சிங் டெல்லிக்கு சென்றார். அங்கிருந்து பெல்க்ரேடுக்கு விமானம் மூலம் சென்று, பிறகு போர்ச்சுகல் செல்வதுதான் திட்டம். விமானப் பயணம் அவருக்கு அதுதான் முதன்முறை. ஆனால் கோவிட் கட்டுப்பாடுகள் இருந்ததால், விமான நிறுவனம் அவரை அனுமதிக்கவில்லை. அந்த உண்மையை ஏஜெண்ட் அவரிடம் சொல்லியிருக்கவில்லை. மீண்டும் அவர் பயணச்சீட்டு பதிவு செய்து துபாய்க்கு சென்றார். அங்கிருந்து அவர் பெல்கிரேடுக்கு சென்றார்.

”எங்களை பெல்க்ரேட் விமானநிலையத்தில் சந்தித்த ஏஜெண்ட் பாஸ்போர்ட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டனர். செர்பிய போலீஸார் நல்லவர்கள் இல்லை என்றும் அவர்களுக்கு இந்தியர்களை பிடிக்காது என்றும் கூறினர். நாங்கள் பயந்துவிட்டோம்,” என்கிறார் பாஸ்போர்ட்டை கொடுத்த சிங்.

அடிக்கடி சிங் “இரண்டாம் நம்பர்” என்கிற வார்த்தையை சட்டவிரோத பயணத்தை குறிக்க பயன்படுத்துகிறார். செர்பிய தலைநகரம் பெல்கிரேட் தொடங்கி க்ரீஸின் திவாவுக்கு அவர் அந்த வகை பயணத்தைதான் மேற்கொண்டார். அவர்களுடன் வரும் டாங்கர்கள் (மனிதர்களை கடத்தி கொண்டு செல்பவர்கள்), க்ரீஸ் வழியாக போர்ச்சுகலுக்கு அவர் செல்வாரென உறுதியளித்தனர்.

திவாவை அடைந்தபிறகு, ஏஜெண்ட் மாற்றிப் பேசினார். உறுதியளித்தது போல் போர்ச்சுகலுக்கு அவரைக் கொண்டு செல்ல முடியாது எனக் கூறினார்.

“ஜதிந்தெர் என்னிடம், ‘உன்னிடமிருந்து ஏழு லட்சம் ரூபாய் வாங்கினேன். என் வேலை முடிந்தது. க்ரீஸுக்கு உன்னை கொண்டு செல்ல முடியாது,’ என நினைவுகூறும் சிங் கோபத்தில் அழத் தொடங்கினார்.

PHOTO • Pari Saikia

பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுவார்கள் என உறுதியளிக்கப்படும் பல இளைஞர்களும் இளம்பெண்களூம் டாங்கர்களிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்

க்ரீஸுக்கு சென்ற இரண்டு மாதங்கள் கழித்து, மார்ச் 2022-ல், பாஸ்போர்டை செர்பிய நபரிடமிருந்து பெற சிங் முயற்சித்தார். வெங்காய விவசாய நிலத்தில் அவருடன் பணிபுரிந்த பணியாளர்கள், எதிர்காலம் இருக்காது என்றும் பிடிபட்டால் நாடு கடத்தி விடுவார்கள் என்றும் சொல்லி நாட்டை விட்டு செல்லும்படி அவரிடம் கூறினார்.

எனவே அவர் மீண்டும் ஆபத்தை எதிர்கொள்ள முடிவெடுத்தார். “க்ரீஸை விட்டு செல்வதென மனதளவில் தயாராகிக் கொண்டேன். கடைசியாக ஒரு ரிஸ்க்கை எடுப்பதென நினைத்தேன்.”

800 யூரோக்களுக்கு செர்பியாவுக்கு அழைத்து செல்வதாக சொன்ன ஒரு புதிய ஏஜெண்ட்டை அவர் கண்டறிந்தார். வெங்காய வயல்களில் மூன்று மாதங்கள் வேலை பார்த்து சேமித்திருந்த பணம் இருந்தது.

இம்முறை கிளம்புவதற்கு முன், சிங் சற்று ஆய்வு செய்து, க்ரீஸிலிருந்து செர்பியாவுக்கு செல்லும் பாதையை கண்டறிந்து கொண்டார். செர்பியாவிலிருந்து ஹங்கேரி வழியாக ஆஸ்திரியாவுக்கு சென்று பின் போர்ச்சுகலுக்கு செல்ல திட்டம் கொண்டிருந்தார். க்ரீஸிலிருந்து செர்பியாவுக்கு பயணிப்பது கடினம் என அவருக்கு சொல்லப்பட்டிருந்தது. “ஏனெனில் ஒருவேளை பிடிபட்டால், துருக்கிக்கு உங்களை வெறும் உள்ளாடையோடு நாடு கடத்தி விடுவார்கள்,” என்கிறார் அவர்.

*****

ஜூன் 2022-ல் சிங் மீண்டும் செர்பியாவை ஆறு நாட்களும் இரவுகளும் நடந்து அடைந்தார். செர்பியாவின் தலைநகர் பெல்க்ரேடில், சில அகதிகள் முகாம்களை கண்டறிந்தார். செர்பிய ரோமானிய எல்லை அருகே கிகிண்டா முகாமும் செர்பிய ஹங்கேரி எல்லையருகே சுபோடிகா முகாமும் இருந்தது. ஆட்களை நாடுகள் தாண்டி கொண்டு செல்பவர்களுக்கு இந்த முகாம் சொர்க்கம் என்கிறார் அவர்.

“அங்கு (கிகிண்டா முகாமில்) நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு இரண்டாம் நபரும் ஆள் கொண்டு போகும் வேலை பார்ப்பவராக இருப்பார். அவர்கள் உங்களிடம், “உங்களை கொண்டு செல்கிறேன், ஆனால் செலவாகும்,’ என சொல்வார்கள்,” என்னும் சிங், ஆஸ்திரியாவுக்கு கொண்டு செல்லும் நபரை கண்டுபிடித்தார்.

கிகிண்டா முகாமில் இருந்த அந்த நபர் (இந்தியர்), ஜலந்தரில் “கியாரண்டி வைத்திருக்க” சொன்னார். “கியாரண்டி” என்பது புலம்பெயர்பவருக்கும் ஆள் அனுப்பி வைப்பவருக்கும் பொதுவான ஒரு நபர் பணத்தை வைத்திருந்து, புலம்பெயர்பவர் தன் இடத்தை சென்றடைந்ததும் அப்பணத்தை கொடுக்கும் முறையாகும்.

PHOTO • Karan Dhiman

சட்டவிரோத புலப்பெயர்வின் ஆபத்துகள் குறித்து பஞ்சாபின் இளைஞர்கள் தெரிந்து கொள்ள விரும்பி தன் கதையை பகிர்கிறார் சிங்

3 லட்ச ரூபாய்க்கான (3,302 யூரோக்கள்) கியாரண்டியை குடும்ப உறுப்பினர் ஒருவரின் மூலமாக ஏற்பாடு செய்துவிட்டு, ஹங்கேரிய எல்லைக்கு பயணித்தார் சிங். ஆப்கானிஸ்தானை சேர்ந்த சில டாங்கர்கள் அவரை அங்கு சந்தித்தனர். நள்ளிரவில் அவர்கள் 12 அடி உயர முள்வேலியை தாண்டினர். டாங்கர்களில் ஒருவர் அவருடன் தாண்டி, காடு வழியாக நான்கு மணி நேரம் அழைத்து சென்றார். பிறகு அவர்கள் எல்லை காவல்படையிடம் பிடிபட்டனர்.

“அவர்கள் (ஹங்கேரிய காவல்துறை) எங்களை முழங்கால் போட வைத்து எங்களின் நாடுகளை குறித்து விசாரித்தார். டாங்கரை போட்டு அடித்தனர். அதற்குப் பிறகு, எங்களை மீண்டும் செர்பியாவுக்கு கொண்டு சென்று விட்டார்கள்,” என்கிறார் சிங்.

ஆட்களை சட்டவிரோதமாக கொண்டு செல்லும் நபர், சுபோடிகா முகாம் பற்றி சிங்கிடம் சொன்னார். அங்கு ஒரு புதிய டாங்கர் அவருக்காக காத்திருந்தார். அடுத்த நாள் பிற்பகல் 2 மணிக்கு, ஹங்கேரிய எல்லைக்கு அவர் திரும்பினார். எல்லை கடக்க 22 பேர் அங்கு காத்திருந்தனர். ஆனால் சிங் உள்ளிட்ட ஏழு பேர்தான் கடக்க முடிந்தது.

பிறகு மூன்று மணி நேர காட்டுப் பயணம் டாங்கருடன் தொடங்கியது. “மாலை 5 மணிக்கு நாங்கள் பெரிய குழிக்கு வந்தோம். டாங்கர் எங்களை அதற்குள் படுத்து காய்ந்த இலைகளை போட்டு மறைத்துக் கொள்ளச் சொன்னார்.” சில மணி நேரங்கள் கழித்து, அவர்கள் மீண்டும் நடக்கத் தொடங்கினர். இறுதியாக, ஒரு வேனில் அவர்கள் ஏற்றப்பட்டு ஆஸ்திரிய எல்லையில் இறக்கி விடப்பட்டனர். “காற்று டர்பைன்களை நோக்கி செல்லுங்கள். ஆஸ்திரியாவுக்குள் நுழைந்து விடலாம்,” என சொல்லியிருக்கிறார்கள்.

இருக்கும் இடம் தெரியாமலும் நீரோ உணவோ இல்லாமலும் சிங்கும் பிறரும் இரவு முழுக்க நடந்தனர். அடுத்த நாள் காலையில், அவர்கள் ஓர் ஆஸ்திரிய ராணுவ போஸ்ட்டை கண்டனர். ஆஸ்திரிய துருப்புகளை பார்த்ததும், சரணடைய விரைந்தார் சிங். ஏனெனில், “அந்த நாடு அகதிகளை ஏற்றுக் கொள்ளுமென டாங்கர் சொல்லியிருந்தார்,” என்கிறார் அவர்.

“கோவிட் பரிசோதனை செய்தார்கள். பிறகு ஆஸ்திரிய அகதிகள் முகாமில் சேர்த்துக் கொண்டனர். அங்கு எங்களின் வாக்குமூலத்தை வாங்கி, ரேகைகளை பதிவு செய்து கொண்டனர். அதற்குப் பிறகு, ஆறு மாதத்துக்கான அடையாள அட்டை எங்களுக்கு  வழங்கப்பட்டது,” என்கிறார் சிங்.

ஆறு மாதங்களாக பஞ்சாபை சேர்ந்த அவர், செய்தித்தாள் போடும் வேலையை பார்த்து, 1,000 யூரோக்கள் வரை சேமித்தார். அவரின் அடையாள அட்டை காலாவதி ஆனதும், முகாம் அலுவலர் அவரை கிளம்ப சொன்னார்.

PHOTO • Karan Dhiman

போர்ச்சுகலை அடைந்தபிறகு பஞ்சாபிலிருக்கும் தாயை அழைப்பதெனவும் அவரின் குறுந்தகவல்களுக்கு பதிலளிப்பது எனவும் முடிவு எடுத்திருந்தார் சிங்

”பிறகு நான் ஸ்பெயினின் வேலன்சியாவுக்கு நேரடி விமானம் (ஸ்கெஞ்சன் பகுதிகளின் விமானங்கள் அரிதாகவே பரிசோதிக்கப்படும் என்பதால்) பதிவு செய்தேன். அங்கிருந்து பார்சிலோனாவுக்கு ரயிலில் சென்றேன். அங்கு இரவுப்பொழுதை ஒரு நண்பரின் இடத்தில் கழித்தேன். என் நண்பர் போர்ச்சுகலுக்கு ஒரு பேருந்து சீட்டு பதிவு செய்து கொடுத்தார். ஏனெனில் என்னிடம் எந்த ஆவணமும் இல்லை. பாஸ்போர்ட் கூட இல்லை.’ இம்முறை அவரே தன் பாஸ்போர்ட்டை க்ரீஸில் நண்பரிடம் கொடுத்து விட்டு செல்வதெனா முடிவெடுத்தார். ஏனெனில் பிடிபட்டால் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட அவர் விரும்பவில்லை.

*****

பிப்ரவரி 15, 2023 அன்று சிங் இறுதியாக, தன் கனவுப் பிரதேசமான போர்ச்சுகலுக்கு பேருந்தில் சென்று சேர்ந்தார். அங்கு சென்றடைய 500 நாட்கள் ஆகியிருந்தது.

”புலம்பெயர்பவர்கள் பலருக்கு சட்டப்பூர்வமான வசிப்பிட ஆவணங்களோ அதிகாரப்பூர்வ தரவுகளோ இல்லை,” என்பதை போர்ச்சுகலிலுள்ள இந்திய தூதரகம் ஒப்புக் கொள்கிறது. சமீபத்திய வருடங்களில் இந்தியர்களின் வருகை (குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்தவர்கள்) எண்ணிக்கை, போர்ச்சுகலின் எளிய குடியேற்ற விதிகளால் கணிசமாக அதிகரித்திருப்பதாகவும் அது குறிப்பிடுகிறது.

“உங்களின் ஆவணங்களை இங்கு நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். நிரந்தரக் குடிமகனாகவும் ஆகி விட முடியும். பிறகு, தன் குடும்பத்தையோ மனைவியையோ போர்ச்சுகலுக்கு அழைத்து வந்துவிடவும் முடியும்,” என்கிறார் சிங்.

2022ம் ஆண்டில் 35,000 இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமை போர்ச்சுகலில் வழங்கப்பட்டதாக வெளிநாடு மற்றும் எல்லை சேவை (SEF) தரவு குறிப்பிடுகிறது. அதே வருடத்தில், கிட்டத்தட்ட 229 பேர் அந்த நாட்டில் தஞ்சம் அடைந்தனர்.

சொந்த நாட்டில் எதிர்காலம் இல்லாததால், சிங் போன்ற இளைஞர்கள் புலம்பெயரும் ஆர்வத்தை கொண்டிருக்கிறார்கள். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024 -ன்படி, “ஓரளவு முன்னேற்றம் இருந்தாலும், உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு விரிவடையவில்லை.”

தன் புலப்பெயர்வை குறித்து சிங் பேசும் காணொளி

நீரும் உணவும் இன்றி, சிங் இரவு முழுவதும் நடந்தார். அடுத்த நாள் காலையில் அவர் ஓர் ஆஸ்திரிய ராணுவ செக்போஸ்ட்டை கண்டு, சரண்டடைய விரைந்தார். ஏனெனில் அது ‘அகதிகளை ஏற்கும் நாடு!’

ஐரோப்பாவிலேயே குடியுரிமை பெறுவதற்கென குறைவான கால வரையறையைக் கொண்டிருப்பது போர்ச்சுகல் மட்டும்தான். சட்டப்பூர்வ வசிப்பிடம் ஐந்து வருடங்களுக்கு இருந்தால் போதும், குடியுரிமை பெற்று விடலாம். இந்தியாவின் கிராமப்புறங்களில் விவசாயம் மற்றும் கட்டுமானப் பணிகளில் வேலை பார்க்கும் மக்கள், இந்த நாட்டுக்கு புலம்பெயர விரும்புகின்றனர். குறிப்பாக பஞ்சாபில் இருப்பவர்கள் என்கிறார் பேராசிரியர் பாஸ்வதி சர்க்கார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஐரோப்பிய கல்விக்கான ஜீன் மோனா அமர்வில் அவர் இருக்கிறார். “சிறப்பான வாழ்க்கையுடன் சென்று வசிக்கும் கோவா மற்றும் குஜராத் போன்ற சமூகத்தினரை தாண்டி, பல பஞ்சாபிகள் குறைந்த திறன் கொண்ட கட்டுமானம் மற்றும் விவசாயம் போன்ற பிரிவுகளில் வேலை பார்க்கின்றனர்,” என்கிறார் அவர்.

போர்ச்சுகல் தற்காலிக வசிப்பிட அனுமதி பெறுவதில் உள்ள பெரிய நன்மை, அதைக் கொண்டு 100 ஸ்கெஞ்சன் நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் என்பதுதான். ஆனால் நிலைமை மாறிக் கொண்டிருக்கிறது. போர்ச்சுகலின் வலதுசாரி கட்சியை சேர்ந்த லூயிஸ் மோண்டெனெக்ரோ, ஆவணமற்ற குடியேறிகளின் குடியேற்றம் கடுமையாக்கப்படும் உத்தரவை ஜூன் 3, 2024 பிறப்பித்திருக்கிறார்.

இந்த புதிய சட்டத்தால், வெளிநாடு வாழ் நபர் எவரும் போர்ச்சுகலில் வசிக்க விரும்பினால், இங்கு வருவதற்கு முன் வேலையிட அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இது இந்தியாவிலிருந்து, குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து புலம்பெயருபவர்களை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற ஐரோப்பிய நாடுகளும் குடியேற்றத்தை கடுமையாக்குகின்றன. ஆனால் பேராசிரியர் சர்க்காரோ இத்தகைய விதிகள், சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்களை அச்சுறுத்தவில்லை என்கிறார். “சொந்த நாட்டில் வாய்ப்புகள் உருவாக்கப்படுவதும் பாதுகாப்பு அளிக்கப்படுவதும்தான் உதவும்,” என்கிறார் அவர்.

போர்ச்சுகலின் AIMA-வில் (அடைக்கலம், புலப்பெயர்வு ஆகியவற்றுக்கான முகமை) 4, 10, 000 பேரின் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. புலம்பெயர்பவர்களின் ஆவணங்கள் மற்றும் விசாக்கள், குடியேறிய சமூகத்தின் நீண்ட கால கோரிக்கையை பூர்த்தி செய்யும் வண்ணம், இன்னொரு வருடம் - ஜூன் 2025 வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

2021ம் ஆண்டில் இந்தியா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் ‘இந்திய பணியாளர்களை சட்டப்பூர்வமான வழிகளில் அனுப்புவதற்கான’ ஒப்பந்தத்தை முறைப்படுத்தி கையெழுத்திட்டிருக்கின்றன. இந்திய அரசாங்கம், புலப்பெயர்வு தொடர்பான ஒப்பந்தங்களை இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா, ஃபிரான்ஸ், ஃபின்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளுடன் போட்டிருக்கிறது. ஆனால் யதார்த்தத்தில் மக்கள் இத்தகைய முடிவுகளை எடுப்பதற்குக் காரணம் விழிப்புணர்வு இல்லாததுதான்.

கட்டுரையாளர்கள் இந்திய மற்றும் போர்த்துக்கீசிய அர்சாங்கங்களை கருத்துகளுக்காக அணுகியபோது பதில்கள் கிடைக்கவில்லை.

PHOTO • Pari Saikia

இந்தியாவில் வேலை கிடைக்காததால் சிங் போன்ற இளைஞர்கள் புலம்பெயர விரும்புகின்றனர்

*****

‘கனவு’ பிரதேசத்துக்கு சென்றதும் சிங்குக்கு முதலில் தென்பட்டது அங்கும் நிலவிய வேலையின்மைதான். விளைவாக வசிப்பிட அனுமதி கிடைப்பது கடினமானது. ஐரோப்பாவுக்கு செல்வதற்கான திட்டத்தை போடும்போது அவருக்கு இவை எதுவும் தெரியாது.

பாரியிடம் அவர், “போர்ச்சுகலை அடைந்ததும் சந்தோஷம் கொண்டேன். பிறகு அங்கு வேலைவாய்ப்பு குறைவு என புரிந்து கொண்டேன். ஏற்கனவே பல ஆசியர்கள் அங்கு வாழ்வதால் வேலைக்கான சாத்தியம் இல்லை. எனவே வேலைவாய்ப்புக்கு வாய்ப்பு இருக்கவில்லை,” என்கிறார்.

புலம்பெயர்பவர்களுக்கு எதிராக உள்ளூரில் இருக்கும் மனநிலையையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். “குடியேறிகள் அவர்களுக்கு பிடிப்பதில்லை. எனினும் விவசாயத்திலும் கட்டுமானத்திலும் உழைக்க நாங்கள் அவர்களுக்கு தேவை.” இந்தியர்கள்தான் கடின வேலைகளை அங்கு செய்கிறார்கள். அந்த வேலைகளை அவர் “3 D வேலைகள்” என்கிறார். அழுக்கு (dirty), ஆபத்து (dangerous), அவமதிப்பு (demeaning) நிறைந்த வேலைகள் அவை. “அவர்களுக்கு இருக்கும் சிக்கலால், மிகக் குறைவான ஊதியத்துக்கும் அத்தகைய வேலைகள் செய்ய தயாராக இருக்கிறார்கள்.”

வேலை தேடும்போது இன்னும் பிற விஷயங்களையும் சிங் தெரிந்து கொண்டார். ஸ்டீல் ஆலையில் ஐந்து கிளைகளிலும் அறிவிப்பு பலகைகள் போர்த்துக்கீசிய மொழியிலும் பஞ்சாபி மொழியிலும் எழுதப்பட்டிருக்கின்றன. “ஒப்பந்தக் கடிதங்கள் கூட பஞ்சாபி மொழிபெயர்ப்பை கொண்டிருக்கின்றன. இப்படியான சூழலிலும் வேலை கேட்டு சென்றால், அவர்கள் ‘இல்லை என்றுதான் சொல்கிறார்கள்’ என்கிறா சிங்.

PHOTO • Karan Dhiman

போர்ச்சுகலில் குடியேறிகளுக்கு எதிரான மனநிலை இருந்தாலும் அதிர்ஷ்டவசாமாக தனக்கு இரக்கம் கொண்ட ஒரு நில உரிமையாளர் கிடைத்திருப்பதாக சொல்கிறார் சிங்

ஆவணங்களற்ற குடியேறியாக அவருக்கு கட்டுமான தளத்தில் வேலை கிடைக்க ஏழு மாதங்கள் பிடித்தது.

“ராஜிநாமா கடிதங்களை எழுதிக் கொடுக்கும்படி நிறுவனங்கள் முன்னதாகவே கேட்கின்றன. குறைந்தபட்ச ஊதியம் 920 யூரோக்களை அவர்கள் மாதந்தோறும் தந்தாலும், வேலை பார்ப்பவர்களுக்கு எப்போது வேலை பறிபோகும் எனத் தெரியாது,” என்கிறார் சிங். அவரும் ராஜிநாமா கடிதம் முன் கூட்டியே கொடுத்திருக்கிறார். வசிப்பிட விசாவுக்கு விண்ணப்பித்திருக்கும் அவர், எல்லாம் சட்டப்பூர்வமாகி விடுமென நம்புகிறார்.

“பஞ்சாபில் ஒரு வீடு கட்ட வேண்டும். சகோதரிக்கு மணம் முடிக்க வேண்டும். இங்கு குடியுரிமை பெற வேண்டும். பிறகு என் குடும்பத்தையும் இங்குக் கொண்டு வர முடியும்,” என்றார் சிங் நவம்பர் 2023-ல்.

2024ம் ஆண்டிலிருந்து சிங் பணம் அனுப்பத் தொடங்கினார்.

போர்ச்சுகலிலிருந்து கூடுதல் செய்தி சேகரிப்பு கரன் திமான்

இந்த கட்டுரைக்கான ஆய்வு இந்தியாவிலும் போர்ச்சுகலிலும் மாடர்ன் கிராண்ட் அன்வீல்ட் திட்டத்தின் இதழியல் மானிய ஆதரவில் நடத்தப்பட்டது.

தமிழில் : ராஜசங்கீதன்

Pari Saikia

Pari Saikia is an independent journalist and documents human trafficking from Southeast Asia and Europe. She is a Journalismfund Europe fellow for 2023, 2022, and 2021.

Other stories by Pari Saikia
Sona Singh

Sona Singh is an independent journalist and researcher from India. She is a Journalismfund Europe fellow for 2022 and 2021.

Other stories by Sona Singh
Ana Curic

Ana Curic is an independent investigative and data journalist from Serbia. She is currently a fellow of Journalismfund Europe.

Other stories by Ana Curic
Photographs : Karan Dhiman

Karan Dhiman is a video journalist and social documentarian from Himachal Pradesh, India. He is interested in documenting social issues, environment and communities.

Other stories by Karan Dhiman
Editor : Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Editor : Sarbajaya Bhattacharya

Sarbajaya Bhattacharya is a Senior Assistant Editor at PARI. She is an experienced Bangla translator. Based in Kolkata, she is interested in the history of the city and travel literature.

Other stories by Sarbajaya Bhattacharya
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan