'யாருக்குத் தெரியும், அவசரநிலை புதிய உடையில் திரும்பும் என்று
இப்போது எதேச்சதிகாரம் ஜனநாயகம் என மறுபெயரிடப்படும் என்று

இப்போதெல்லாம் கருத்துக்களை எதிர்ப்பவர்கள் மௌனமாக்கப்படுகிறார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுகிறார்கள் அல்லது இரண்டும் நடக்கிறது, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள் நிற கொடிகளை உயர்த்தியபடி ராம்லீலா மைதானத்திற்குள் நடந்து சென்றபோது  எதிர்ப்பு பாடலின் இந்த வரிகள் மீண்டும் உண்மையாக ஒலித்தன.

AIKS (அகில இந்திய கிசான் சபா), BKU (பாரதிய கிசான் யூனியன்), AIKKMS (அகில இந்திய கிசான் கேத் மஸ்தூர் சங்கதன்) மற்றும் பிற அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் 2024, மார்ச் 14 அன்று SKM (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) ஒன்றிணைக்கும் தளத்தின் கீழ் நடைபெற்ற கிசான் மஸ்தூர் மகா பஞ்சாயத்தில் பங்கேற்க வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தில் கூடினர்.

"மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு, அரசு சில வாக்குறுதிகளை அளித்தது, ஆனால் அவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இப்போது அவர்கள் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அவர்கள் செய்யாவிட்டால், நாங்கள் தொடர்ந்து போராடுவோம்", என்று கலான் கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி பிரேமமதி பாரியிடம் கூறினார். விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம், 2020 , விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், 2020 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) சட்டம், 2020 ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.

"நாங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போராட்டத்திற்காக இங்கு வந்தோம்," என்று அவர் மேலும் கூறினார். மகாபஞ்சாயத்துக்கு வந்த உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பெண்களில் பிரேமமதியும் ஒருவர். அவர்கள் விவசாயிகள் குழுவான பாரதிய கிசான் யூனியன் (BKU) உடன் இணைந்திருந்தனர். "இந்த அரசு செழிக்கிறது, ஆனால்  விவசாயிகளை அழிக்கிறது", என்று அவர் கோபத்துடன் கூறினார்.

பாரியிடம் பேசிய பெண்கள் அனைவரும் 4 - 5 ஏக்கர் நிலத்தில் வேலை செய்யும் சிறு விவசாயிகள். இந்தியாவில் பெண் விவசாயிகளும், தொழிலாளர்களில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோரும் விவசாய வேலைகளை செய்கிறார்கள். ஆனால் பெண் விவசாயிகளில் வெறும் 12 சதவீத பெண்கள் மட்டுமே தங்கள் பெயரில் நிலம் வைத்துள்ளனர்.

PHOTO • Ritayan Mukherjee
PHOTO • Ritayan Mukherjee

இடது: இடமிருந்து வலமாக, உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்ட BKU விவசாயிகள் பிரேமமதி, கிரண் மற்றும் ஜசோதா. வலது: 2024 மார்ச் 14, அன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள்

PHOTO • Ritayan Mukherjee
PHOTO • Ritayan Mukherjee

இடது: பஞ்சாபைச் சேர்ந்த பெண் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள். வலது: பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் 'கிசான் மஸ்தூர் ஏக்தா ஜிந்தாபாத்!' என்று முழங்குகிறார்கள்

விவசாயிகளுக்கான தேசம் இயக்கத்தின் முன்முயற்சியான கிசான் மஸ்தூர் கமிஷன் (KMC), பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டிக்கிறது. 2024 மார்ச் 19, அன்று புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், KMC சார்பில் 2024-க்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டது: "பெண்களை விவசாயிகளாக அங்கீகரித்து அவர்களுக்கு நில உரிமைகளை வழங்குங்கள், குத்தகை நிலங்களில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திடுங்கள்." "விவசாயப் பணியிடங்களில் குழந்தை பராமரிப்பு மற்றும் குழந்தைகள் காப்பக வசதிகளை வழங்குங்கள்" என்று அது கூறியது.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வருமானம் வழங்கும் பிரதமர் கிசான் சம்மன் நிதி போன்ற அரசின் திட்டங்களில் பெண் விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இது விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. குத்தகை விவசாயிகளுக்கும் இத்திட்டம் பலனளிக்கவில்லை.

2024, ஜனவரி 31 அன்று பட்ஜெட் அமர்வின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் அரசு இதுவரை ரூ.2.25 லட்சம் கோடியை (ரூ. 2,250 பில்லியன்) செலுத்தியுள்ளது, இதில் ரூ.54,000 கோடி (ரூ. 540 பில்லியன்) பெண் பயனாளிகளுக்குச் சென்றுள்ளது என்றார்.

அதாவது ஆண்களுக்கு செல்லும் ஒவ்வொரு மூன்று ரூபாய்க்கும் பெண் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கிடைக்கும். ஆனால் கிராமப்புற இந்தியாவில் மிகப் பெரிய விகிதத்திலான பெண்கள் பண்ணைகளில் வேலை செய்கிறார்கள் - 80% பேர் ஊதியம் பெறாத குடும்பத் தொழிலாளர்களாக சுயதொழில் செய்கிறார்கள் - பாலின அநீதி இன்னும் கொடுமையானது.

மேடையில் பேசிய ஒரே பெண் தலைவரான மேதா பட்கர், முந்தைய போராட்டங்களின் போது அடிக்கடி கேட்ட முழக்கத்தை மீண்டும் முழங்கினார்: "நாரி கே சாஹியோக் பினா ஹர் சங்கர்ஷ் அதுரா ஹை [பெண்களின் பங்களிப்பு இல்லாமல், எந்த போராட்டமும் முழுமையடையாது]".

PHOTO • Ritayan Mukherjee
PHOTO • Ritayan Mukherjee

இடது: பஞ்சாபின் சங்ரூர் மாவட்டம், கபியல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிந்தர்பாலா (நடுவில் அமர்ந்திருப்பவர்). வலது: 'நாரி கே சாஹியோக் பினா ஹர் சங்கர்ஷ் அதுரா ஹை [பெண்களின் பங்களிப்பு இல்லாமல், எந்த போராட்டமும் முழுமையடையாது]'

விவசாயிகளாக தங்கள் உரிமைகளுக்காக போராடும் பல பெண் போராட்டக்காரர்களால் அவரது உரை வரவேற்கப்பட்டது. அவர்கள் மகாபஞ்சாயத்தில் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். இது கூட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியாகும். மோடி அரசுடன் நாங்கள் போராடுகிறோம். அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை", என்று பஞ்சாபின் சங்ரூர் மாவட்டம், கபியல் கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி சிந்தர்பாலா கூறுகிறார்.

"எங்கள் அனைவருக்கும் மூன்று அல்லது நான்கு கில்லா [ஏக்கர்] அளவிற்கு சிறிய பண்ணைகள் உள்ளன. மின் கட்டணம் அதிகமாகிவிட்டது. வாக்குறுதியளித்தபடி [மின்சார திருத்த] மசோதாவை அவர்கள் திரும்பப் பெறவில்லை," என்று அவர் மேலும் கூறினார். 2020-21ம் ஆண்டில் டெல்லியின் எல்லைகளில் நடந்த போராட்டங்களில் , விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களாக தங்கள் உரிமைகளையும் கண்ணியத்தையும் உறுதிப்படுத்த பெண்கள் ஆண்களுடன் தோளோடு தோள் நின்றார்கள்.

*****

காலை 11 மணிக்கு மைதானத்தில் தொடங்கிய மகாபஞ்சாயத்து சிறிது நேரத்திலேயே பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களால் நிரம்பியது.

பஞ்சாப் விவசாயிகளில் ஒருவரான பதிண்டா மாவட்டத்தைச் சேர்ந்த சர்தார் பல்ஜிந்தர் சிங் பாரியிடம் கூறுகையில், "விவசாயிகளாக எங்கள் உரிமைகளைக் கேட்க இங்கு வந்துள்ளோம். நாங்கள் எங்களுக்காக மட்டுமல்ல, எங்கள் குழந்தைகள், எதிர்கால சந்ததியினருக்காகவும் போராட இங்கு வந்துள்ளோம்."

மேடையில் பேசிய சமூக ஆர்வலர் மேதா பட்கர், "விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போர், மேய்ப்பர்கள், விறகு சேகரிப்போர், பண்ணைத் தொழிலாளர்கள், பழங்குடிகள், தலித்துகள் என இயற்கையை நம்பியுள்ள அனைவரையும் நான் வணங்குகிறேன். நாம் அனைவரும் நமது நீர், காடுகள் மற்றும் நிலத்தை காப்பாற்ற வேண்டும்", என்றார்.

பல்வேறு விவசாய அமைப்புகள் உருவாக்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சாவை (SKM) சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட தலைவர்கள் மேடையில் இரண்டு வரிசை நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். இந்த தலைவர்களில் பெரும்பாலோர் ஆண்கள், முதல் வரிசையின் மையத்தில் மூன்று பெண்கள் மட்டுமே முக்கியமாக அமர்ந்திருந்தனர். அவர்கள் பஞ்சாபின் BKU உக்ரஹானைச் சேர்ந்த ஹரிந்தர் பிந்து; மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கிசான் சங்கர்ஷ் சமிதியின் (KSS) ஆராதனா பார்கவா; மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டணியின் (NAPM) மேதா பட்கர்.

PHOTO • Ritayan Mukherjee
PHOTO • Ritayan Mukherjee

இடது: கிசான் மஸ்தூர் மகாபஞ்சாயத்தில் சம்யுக்தா கிசான் மோர்ச்சாவை (எஸ்.கே.எம்) உருவாக்கும் விவசாய மற்றும் தொழிலாளர் அமைப்புகளின் தலைவர்கள். வலது: மேடையில் இடமிருந்து வலமாக அமர்ந்திருப்பவர், பஞ்சாபின் BKU உக்ரஹானைச் சேர்ந்த ஹரிந்தர் பிந்து; மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கிசான் சங்கர்ஷ் சமிதியின் (KSS) ஆராதனா பார்கவா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டணியின் (NAPM) மேதா பட்கர்

PHOTO • Ritayan Mukherjee
PHOTO • Ritayan Mukherjee

இடது: பஞ்சாபைச் சேர்ந்த ஒரு விவசாயி தனது தொலைபேசி கேமராவால் பெரும் கூட்டத்தைப் படம்பிடிக்கிறார். வலது: பாரதிய கிசான் யூனியனின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள்

SKM-ன் முக்கிய கோரிக்கைகளை பேச்சாளர்கள் மீண்டும் வலியுறுத்தினர், அவற்றில் முதன்மையானது, உத்தரவாதமான கொள்முதல் கொண்ட அனைத்து பயிர்களுக்கும் C2 + 50 சதவீதத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வமாக்கப்பட்ட உத்தரவாதம். C2 என்பது பயன்படுத்தப்பட்ட நிலத்தின் வாடகை மதிப்பு, நிலத்தில் குத்தகைக்கு விடப்பட்ட வாடகை மற்றும் குடும்ப உழைப்பின் செலவு உள்ளிட்ட உற்பத்திச் செலவைக் குறிக்கிறது.

தற்போது, விதைப்பு பருவத்திற்கு முந்தைய 23 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, நில வாடகையை கருத்தில் கொள்ளவில்லை அல்லது கூடுதல் 50 சதவீதத்தை சேர்க்கவில்லை என்று பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் விவசாயிகளுக்கான தேசிய ஆணைய அறிக்கையில் பரிந்துரைத்துள்ளார். விவசாயிகளின் "நிகர லாப வருமானம்" அரசு ஊழியர்களின் வருமானத்துடன் ஒப்பிடப்பட வேண்டும்.

விதை உற்பத்தியை கார்ப்பரேட் கையகப்படுத்துதல், ஆப்பிரிக்க நாடுகளில் பெரிய நிறுவனங்களால் விவசாயத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் தொற்றுநோய்களின் போது கூட பணக்காரர்களின் வருமானம் பன்மடங்கு அதிகரிப்பு பற்றி பட்கர் பேசினார். காய்கறிகள் உட்பட அனைத்து பயிர்களுக்கும் நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அரசால் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், இது நிதிச் சுமை என்று அரசு கூறியது. "பெரும் பணக்காரர்களின் செல்வத்தின் மீது இரண்டு சதவீத வரி என்பது அனைத்து பயிர்களுக்கும் MSPயை எளிதில் ஈடுகட்டும்," என்று அவர் கூறினார்.

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்த பின்னர், 2021, டிசம்பர் 9 அன்று SKM உடனான ஒப்பந்தத்தில் நீண்டகால கோரிக்கையான அனைத்து விவசாயிகளுக்கும் விரிவான கடன் தள்ளுபடி என்று மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால் அது நடக்கவில்லை.

கடன் தொல்லை விவசாயிகளை முடக்கி வருகிறது என்பதை அதிகரித்து வரும் விவசாயிகளின் தற்கொலைகளிலிருந்து அறிய முடிகிறது. 2014 மற்றும் 2022-க்கு இடையில், அதிகரித்து வரும் கடன் சுமையால் நசுக்கப்பட்ட 100,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். மானியங்களைத் திரும்பப் பெறுதல், ஊதிய வருமானம் மறுப்பு மற்றும் PMFBY (பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா) திட்டத்தின் கீழ் தவறாக திட்டமிடப்பட்ட மற்றும் மோசமாக செயல்படுத்தப்பட்ட பயிர் காப்பீட்டு செயல்முறை ஆகியவற்றிற்கு வழிவகுத்த அரசின் கொள்கைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டனர். கடன் தள்ளுபடி ஒரு வரமாக இருந்திருக்கலாம், ஆனால் இதுவும் அரசால் வழங்கப்படவில்லை.

ராம்லீலா மைதானத்தில் விவசாயிகளும் தொழிலாளர்களும் அணிவகுத்துச் செல்ல, ஒரு கவிஞர் பாடுகிறார்: 'யாருக்குத் தெரியும், எமர்ஜென்சி புதிய உடையில் திரும்பும் என்று இந்த நாட்களில் எதேச்சதிகாரம் ஜனநாயகம் என மறுபெயரிடப்படும் என்று

வீடியோவை பார்க்க: கிசான் மஸ்தூர் மகாபஞ்சாயத்து, 2024, மார்ச் 14, புது டெல்லியில் எதிர்ப்பு கோஷங்கள் மற்றும் பாடல்கள்

மகாபஞ்சாயத்தில் பேசிய அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (அகில இந்திய கிசான் சபா) பொதுச் செயலாளர் விஜூ கிருஷ்ணன், "கடந்த பத்து ஆண்டுகளில், 4.2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், இது நாட்டில் கடுமையான விவசாய நெருக்கடியைக் குறிக்கிறது" என்றார்.

2022-ம் ஆண்டில், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் (ADSI) 2022 அறிக்கை மொத்தம் 1.7 லட்சத்துக்கும் அதிகமான தற்கொலைகளை பதிவு செய்துள்ளது – இதில் 33 சதவீதம் (56,405) தற்கொலைகள் தினசரி ஊதியம் பெறுபவர்கள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகும்.

24,350 கோடி (2016 முதல் 2021 வரை) வருவாய் ஈட்டிய தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் செழிப்புடன் இதை ஒப்பிடுங்கள். அரசாங்கத்திடமிருந்து பயிர் காப்பீட்டு வணிகத்தைப் பெற்ற 10 நிறுவனங்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட 13 நிறுவனங்களில்) அவை. மற்றொரு வரப்பிரசாதமாக, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.14.56 லட்சம் கோடி (2015 முதல் 2023 வரை) கடன் தள்ளுபடி பெற்றுள்ளன.

2024-25 நிதியாண்டு பட்ஜெட்டில் விவசாயத்திற்கு ரூ.1,17,528.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையில், 83 சதவீதம் தனிநபர் பயனாளிகள் அடிப்படையிலான வருமான ஆதரவு திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் நிலம் சார்ந்த விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.6,000 ஒரு சிறந்த உதாரணம். மொத்த விவசாயிகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமான குத்தகை விவசாயிகள் வருமான ஆதரவைப் பெறவில்லை, பெறவும் மாட்டார்கள். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், நிலங்களில் வேலை செய்யும் பெண் விவசாயிகள், ஆனால் தங்கள் பெயரில் நிலம் இல்லாதவர்கள் ஆகியோரும் இந்த சலுகைகளை இழக்க நேரிடும்.

MNREGA மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் கிராமப்புற குடும்பங்களுக்கு கிடைக்கும் பிற நிதிகள் குறைக்கப்பட்டுள்ளன - அதற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டின் பங்கு 2023-24ல் 1.92 சதவீதத்திலிருந்து 2024-25ல் 1.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.

விவசாய சங்கங்களின் இந்த பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் அனைத்தும் மார்ச் 14, 2024 அன்று ராம்லீலா மைதானத்தில் மேடையில் இருந்து ஒலித்தன.

PHOTO • Ritayan Mukherjee
PHOTO • Ritayan Mukherjee

இடது: வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு விவசாயிக்கு ராம்லீலா மைதானத்தில் உள்ள மருத்துவக் குழுவின் கவனிப்பு கிடைக்கிறது. இந்த குழு கர்னாலில் இருந்து பயணித்து சோர்வான பயணத்தை மேற்கொண்டது. வலது: 'ஒடுக்குமுறைக்கு எதிரான ஒவ்வொரு மோதலுக்கும், எங்கள் முழக்கம் போராட்டத்திற்கான அறைகூவல்' என்று சொல்லும் கொடி

PHOTO • Ritayan Mukherjee
PHOTO • Ritayan Mukherjee

இடது: ஹரியானாவிலிருந்து நீண்ட தூரம் நடந்து சென்ற விவசாயிகளுக்கு சிறிது ஓய்வு மற்றும் ஓய்வு வலது: புது தில்லியின் உயரமான கட்டிடங்களின் பின்னணியில் ராம்லீலா மைதானத்தில் பஞ்சாபைச் சேர்ந்த மூன்று மூத்த குடிமக்கள் விவசாயிகள் தங்கள் வலுவான கால்களை ஓய்வெடுக்கின்றனர்

இந்த மைதானம் ராமாயண காவியத்தின் நாடக நிகழ்ச்சிகளுக்கான வருடாந்திர மேடையாகும். ஒவ்வொரு ஆண்டும், கலைஞர்கள் நவராத்திரி திருவிழாவின் போது காட்சிகளை அரங்கேற்றுகிறார்கள், இது தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியிலும், பொய்க்கு எதிரான உண்மையின் வெற்றியிலும் முடிவடைகிறது. ஆனால் அதை 'வரலாறு' என்று அழைக்க இது ஒரு நல்ல காரணம் அல்ல. அப்படியானால் வேறு என்ன?

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் பேசியதை சாதாரண இந்தியர்கள் கேட்டனர். 1965-ம் ஆண்டில், இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற முழக்கத்தை இந்த அடிப்படையில் வழங்கினார். 1975-ம் ஆண்டில், இந்திரா காந்தியின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிரம்மாண்ட பேரணி இங்கு நடைபெற்றது; 1977 பொதுத் தேர்தலில் உடனடியாக அரசாங்கம் கவிழ்ந்தது. 2011-ம் ஆண்டில் ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தின் போராட்டங்கள் இந்த மைதானத்தில் இருந்து தொடங்கின. தற்போதைய டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் இந்த இயக்கத்தின் மூலம் ஒரு தலைவராக உருவெடுத்தார். இந்தக் கட்டுரை வெளியிடப்பட்ட நேரத்தில், 2024 பொதுத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, ஊழல் குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையால் அவர் கைது செய்யப்பட்டார்.

நவம்பர் 30, 2018 அன்று, இதே ராம்லீலா மைதானத்திலிருந்து நாடு முழுவதிலுமிருந்து விவசாயிகளும் தொழிலாளர்களும் கிசான் முக்தி மோர்ச்சாவுக்காக தில்லிக்கு வந்து, நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துச் சென்று, 2014 தேர்தல் அறிக்கையில் அவர்கள் வாக்குறுதியளித்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பாஜக அரசைக் கேட்டுக் கொண்டனர். 2018-ம் ஆண்டில், 2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக அரசாங்கம் மற்றொரு வாக்குறுதியை அளித்தது. அதுவும் நிறைவேறாமல் உள்ளது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க ராம்லீலா மைதானத்தில், சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் (எஸ்.கே.எம்) கீழ் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் கிசான் மஸ்தூர் மகாபஞ்சாயத்து, தங்கள் கோரிக்கைகளுக்கான போராட்டத்தைத் தொடரவும், டிசம்பர் 9, 2021 அன்று எஸ்.கே.எம்-க்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்தியில் தற்போதைய பாஜக ஆட்சி வெளிப்படையாக மறுப்பு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் தீர்மானித்தது.

பிரேமமதியின் வார்த்தைகளில், "நாங்கள் எங்கள் பைகள் மற்றும் படுக்கைகளுடன் டெல்லிக்குத் திரும்புவோம். தர்ணா பே பைத் ஜாயேங்கே. ஹம் வபாஸ் நஹி ஜாயேங்கே ஜப் தக் மங்கே பூரி நா ஹோ [நாங்கள் போராட்டத்தில் இறங்குவோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் திரும்பிச் செல்ல மாட்டோம்" என்றார்.

தமிழில்: சவிதா

Namita Waikar is a writer, translator and Managing Editor at the People's Archive of Rural India. She is the author of the novel 'The Long March', published in 2018.

Other stories by Namita Waikar
Photographs : Ritayan Mukherjee

Ritayan Mukherjee is a Kolkata-based photographer and a PARI Senior Fellow. He is working on a long-term project that documents the lives of pastoral and nomadic communities in India.

Other stories by Ritayan Mukherjee
Editor : Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha