“இந்தத் தொழில் மறைந்தால், வேறு மாநிலத்துக்கு செல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை,” என்கிறார் அசாமின் தர்ராங் மாவட்டத்தின் நா மாட்டி கிராமத்தை சேர்ந்த மஜேதா பேகம். கூடையின் அடி பாகத்தில் மூங்கில் இழைகளை அவர் பின்னிக் கொண்டிருக்கிறார்.
25 வயது கைவினைத் தொழிலாளரான அவர் தினக்கூலி தொழிலாளர் ஆவார். தனி ஆளாய் 10 வயது மகனை வளர்த்து வருகிறார். நோயுற்ற தாயையும் பார்த்துக் கொள்கிறார். “ஒரு நாளில் 40 கூடைகள் என்னால் செய்ய முடியும். ஆனால் இப்போது வெறும் 20 மட்டும்தான் செய்கிறேன்,” என்கிறார் அவர் மியா வட்டார வழக்கில். மஜேதா நெய்யும் ஒவ்வொரு 20 கூடைகளுக்கும் ரூ.160 சம்பாதிக்கிறார். மாநில அரசு விதித்திருக்கும் குறைந்தபட்ச ஊதியமான ரூ.241.92-க்கும் கீழான தொகை இது (2016ம் ஆண்டுக்கான குறைந்தபட்ச கூலி சட்டம், 1998)
மூங்கில் கூடைகளின் வருமானம், மூங்கிலின் விலை உயர்வாலும் மண்டிகளில் குறைந்து வரும் மூங்கில் கூடைகளின் தேவையாலும் பாதிப்படைந்திருக்கிறது. அசாமின் இரண்டு பெரிய மண்டிகள் தர்ராங்கில் இருக்கின்றன. பெச்சிமாரி மற்றும் பலுகாவோன் ஆகிய மண்டிகளிலிருந்து விளைச்சல் வட கிழக்கு பகுதிகளுக்கும் தில்லி வரையும் செல்கிறது.
கட்டாயப் புலப்பெயர்வு குறித்த மஜேதாவின் அச்சம் உண்மைதான். 80-லிருந்து 100 குடும்பங்கள் வரை ஏற்கனவே “நல்ல வேலை” தேடி சென்றுவிட்டதாக 39 வயது ஹனிஃப் அலி சொல்கிறார், உள்ளூர் மதராசாவுக்கு அருகே இருக்கும் வார்ட் ஏ-வை சுற்றிக் காட்டியபடி. ஒரு காலத்தில் 150 குடும்பங்கள் வரை மூங்கில் கலையில் ஈடுபட்டிருந்தன. ஆனால் தற்போது பலரும் கேரளா மற்றும் கர்நாடகா போன்ற இடங்களுக்கு தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய புலம்பெயர்ந்து விட்டதால் பல வீடுகள் காலியாகக் கிடக்கின்றன.














