“தற்போதைய பட்ஜெட் எங்களின் பிழைப்பை பற்றி எதுவும் சொல்லவில்லை. இது மத்திய தர வர்க்கத்தை, குறிப்பாக ஊதியம் வாங்குபவர்களை மட்டும்தான் பிரதானமாக கவனம் செலுத்தியிருக்கிறது,” என்கிறார் கீதா வழச்சல்.
எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடி குழுவாக (PVTG) வரையறுக்கப்பட்டிருக்கும் காடர் சமூகத்தை சேர்ந்த 36 வயது கீதா, கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் அதிரப்பள்ளி நீர் மின்சார திட்டத்துக்கான பகுதியில் வசிக்கிறார்.
சாலக்குடி ஆற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் அணையால், அவரது சமூகம் நான்காவது முறை இடம்பெயர்த்தப்படவிருக்கிறது. “நாடு முழுவதும் நடந்து வரும் பெருமளவுக்கான உள்கட்டமைப்பு பணிகளின் விளைவாக நாங்கள் பெருமளவில் இடப்பெயர்வுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறோம். மேலும் எங்களின் நிலம், காடுகள் மற்றும் வளம் ஆகியவற்றை கைப்பற்றிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட்டுகளை பற்றிய பேச்சும் இல்லை,” என சுட்டிக் காட்டுகிறார் கீதா. அணைக்கு எதிரான போராட்ட இயக்கத்தின் முகமாக அவர் மாறியிருக்கிறார்.
“காடுகளில் வாழும் பழங்குடி சமூகங்களுக்கு காலநிலை மாற்றம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் எங்களின் காடுகளும் வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டு வருகிறது,” என்கிறார் கீதா. கேரளாவின் ஒரே பழங்குடி பெண் தலைவர் அவர்தான்.
![](/media/images/02a-IMG008-2-KAS-Cosmetic_changes_for_Adiv.max-1400x1120.jpg)
![](/media/images/02b-IMG015-1-KAS-Cosmetic_changes_for_Adiv.max-1400x1120.jpg)
இடது: கீதா தன் மாணவர்களுடன். வலது: கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் அதிரப்பள்ளி நீர் மின்சார திட்டத்துக்கான பகுதியில்தான் கீதா வசிக்கிறார்
காடர் சமூகத்தை சேர்ந்த பிறரைப் போல, கீதாவின் முன்னோர்கள் காட்டில் வசித்தவர்கள்தான். 1905ம் ஆண்டில், பிரிட்டனுக்கு மரங்களை கொண்டு செல்வதற்காக, பரம்பிகுளம் புலிகள் சரணாலயத்துடன் கொச்சி துறைமுகத்தை இணைக்கும் ட்ராம் பாதையை பிரிட்டிஷார் கட்ட அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
கீதாவின் குடும்பம் பெரிங்கல்குத்துக்கும் பிறகு சோலையாறு காடுக்கும் இடம்பெயர்ந்தது. இப்போது அங்கிருந்தும் அவர்கள் இடம்பெயர வேண்டும்.
பழங்குடி நலனுக்கென பட்ஜெட்டில் நிதி அதிகரிக்கப்பட்டிருந்தாலும், “அந்த நிதி ஒதுக்கீடு விடுதி பள்ளிகள், உள்கட்டமைப்பு வசதிகள், இணைப்பு பாதைகள் போன்றவற்றுக்காகதான் அளிக்கப்படுகிறது. அது வெறும் ஒப்பனைதான். எளிதில் பாதிக்கத்தக்க பழங்குடி சமூகங்களின் விவசாய நிலங்கள், காடுகள், நீர்வளம், வாழ்வாதாரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, சாலை மேம்பாடு கொடுப்பதும் உள்கட்டமைப்பு வசதி அளிப்பதும் அர்த்தமற்ற வேலைகள்,” என்கிறார்.
கேரளாவின் மக்கள் பலரும் வயநாட்டின் முண்டக்கை மற்றும் சூரல்மலா நிலச்சரிவுக்கென நியாயமான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தனர். “இந்தியாவின் தெற்குப் பகுதி மொத்தமும் கண்டுகொள்ளப்படவில்லை.”
கொச்சியின் மாதவன் நாயர் அறக்கட்டளையின் கேரளா அருங்காட்சியக ஜனல் பெட்டகத்தின் அனுமதியுடன் படங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது
தமிழில்: ராஜசங்கீதன்