1937ம் ஆண்டு ரத்தவெள்ளத்தில் நடந்த பிரிவினையின் விளைவாக இரண்டு நாடுகளின் எல்லைகளைக் குறிக்கும் ராட்க்ளிஃப் கோடு, பஞ்சாபையும் இரு பாதிகளாக பிரிக்கிறது. எல்லை வாரியங்களின் தலைவராக பணியாற்றிய பிரிட்டிஷ் வழக்கறிஞரின் பெயர் சூட்டப்பட்டிருக்கும் கோடு, பகுதிகளை பிரிப்பதோடு மட்டுமின்றி, பஞ்சாபி மொழியின் எழுத்துருக்களையும் பிரித்திருக்கிறது. “இலக்கியத்துக்கும் பஞ்சாபி மொழியின் இரு எழுத்துருக்களுக்கும் நீங்கா ரணத்தை பிரிவினை ஏற்படுத்தியிருக்கிறது,” என்கிறார் லூதியானா மாவட்டத்தின் பயால் தாலுகாவிலுள்ள கதாஹ்ரி கிராமத்தை சேர்ந்த கிர்பால் சிங் பன்னு.

பிரிவினை காயத்தின ரணத்தை தணிக்க தன் முப்பது வருட வாழ்க்கையை அர்ப்பணித்தவர் இந்த 90 வயது முன்னாள் ஆயுதக் காவல்படைவீரரான பன்னு. எல்லை பாதுகாப்பு படையின்  ஓய்வு பெற்ற துணை தளபதியான பன்னு, குரு கிரந்த் சாகிப், மகான் கோஷ் (பஞ்சாபில் பெரிதும் மதிக்கப்படும் தகவல் களஞ்சியம்) போன்ற புனித நூல்களையும் பிற இலக்கியங்களையும் குர்முகியிலிருந்து ஷாமுகிக்கும் ஷாமுகியிலிருந்து குர்முகிக்கும் ஒலிபெயர்த்திருக்கிறார்.

உருது போல வலமிருந்து இடப்பக்கம் எழுதப்படும் ஷாமுகி எழுத்துருக்கள், 1947ம் ஆண்டிலிருந்து இந்தியாவின் பஞ்சாபில் பயன்படுத்தப்படவில்லை. 1995-1996-ல், குரு கிராந்த் சாகிபை குர்முகியிலிருந்து ஷாமுகிக்கும் ஷாமுகியிலிருந்து குர்முகிக்கும் ஒலிபெயர்க்கும் ஒரு கணிணி ப்ரோக்ராமை பன்னு உருவாக்கினார்.

பிரிவினைக்கு முன், உருது பேசுபவர்களும் ஷாமுகி எழுத்துருக்கள் கொண்டு எழுதப்பட்ட பஞ்சாபி மொழியை வாசிக்க முடிந்தது. பாகிஸ்தான் உருவானதற்கு முன் பல இலக்கியங்களும் அதிகாரப்பூர்வ ஆவணங்களும் ஷாமுகியில்தான் வெளியாகின. அந்த காலக்கட்டத்தின் பாரம்பரிய கதைசொல்லல் வடிவமான கிஸ்ஸா கூட, ஷாமுகியைதான் பயன்படுத்தியது.

இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கத்துக்கு எழுதப்பட்டு தேவநாகரி எழுத்தைப் போல் இருக்கும் குர்முகி எழுத்துருக்கள் பாகிஸ்தானிலிருக்கும் பஞ்சாபில் பயன்படுத்தப்படுவதில்லை. விளைவாக, பிறகு வந்த பஞ்சாபி பேசும் பாகிஸ்தானியர் தலைமுறைகளால் குர்முகி வாசிக்க முடியவில்லை. அவர்களுக்கான இலக்கியத்திலிருந்தே அவர்கள் அந்நியமானார்கள். அவர்களுக்கு தெரிந்த ஷாமுகி எழுத்துருக்களில் வெளியானால்தான், பிரிக்கப்படாத பஞ்சாபின் பெருமைக்குரிய இலக்கியங்களை அவர்கள் வாசித்தறிய முடியும்.

Left: Shri Guru Granth Sahib in Shahmukhi and Gurmukhi.
PHOTO • Courtesy: Kirpal Singh Pannu
Right: Kirpal Singh Pannu giving a lecture at Punjabi University, Patiala
PHOTO • Courtesy: Kirpal Singh Pannu

இடது: ஷாமுகி மற்றும் குர்முகியில் குரு கிராந்த் சாகிப். வலது: பாடியாலாவின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தும் கிர்பால் சிங் பன்னு

மொழி வல்லுனரும் பிரஞ்சு மொழி ஆசிரியருமான 68 வயது டாக்டர் போஜ் ராஜும் ஷாமுகி வாசிக்கிறார். “1947ம் ஆண்டுக்கு முன் ஷாமுகியும் குர்முகியும் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் குர்முகி பெரும்பாலும் குருத்வாராக்களில் (சீக்கிய வழிபாட்டுத்தலங்கள்) இருந்தன,” என்கிறார் அவர். ராஜை பொறுத்தவரை, சுதந்திரத்துக்கு முந்தைய வருடங்களில் பஞ்சாபி மொழித் தேர்வுகள் எழுதிய மாணவர்கள் ஷாமுகி எழுத்துருக்களில்தான் எழுதினார்கள்.

“ராமாயணம், மகாபாரதம் போன்ற இந்து மத இலக்கியங்களும் பாரசீக - அரபு எழுத்துருக்களில்தான் எழுதப்பட்டன,” என்கிறார் ராஜ். பஞ்சாப் பிரிக்கப்பட்டபோது மொழியும் பிரிக்கப்பட்டது. ஷாமுகி மேற்கு பஞ்சாபுக்கு பெயர்ந்து பாகிஸ்தானிய எழுத்தானது. குர்முகி தனித்து இந்தியாவில் தங்கிவிட்டது.

பஞ்சாபி கலாச்சாரம், மொழி, இலக்கியம் மற்றும் வரலாறு ஆகியவற்றின் முக்கியமான உட்கூறு இல்லாமலிருந்த பல்லாண்டு கால கவலையை தணிக்கும் விதமாக பன்னுவின் பணி அமைந்தது.

“கிழக்கு பஞ்சாபின் (இந்தியா) எழுத்தாளர்களும் கவிஞர்களும் தங்களின் படைப்புகள் மேற்கு பஞ்சாபிலும் (பாகிஸ்தான்) வாசிக்கப்பட வேண்டும் என விரும்பினர். மறுதரப்பும் அவ்வாறே விரும்பியது,” என்கிறார் பன்னு. கனடாவின் டொரொண்டோவில் அவர் சென்ற இலக்கிய சந்திப்புகளில் பாகிஸ்தானிய பஞ்சாபியர்களும் பிற தேசங்களை சேர்ந்த பஞ்சாபியர்களும் அந்த இழப்பை குறித்து வருந்தியிருக்கின்றனர்.

ஒரு சந்திப்பில், வாசகர்களும் அறிஞர்களும் அடுத்த தரப்பின் இலக்கியத்தை படிப்பதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தினர். “இரு தரப்பும் இரு எழுத்துருக்களையும் கற்றுக் கொண்டால்தான் அது சாத்தியம்,” என்கிறார் பன்னு. “ஆனால் அது சொல்வதைக் காட்டிலும் கடினமான வேலை.”

இந்த சிக்கலுக்கான ஒரே தீர்வு, இலக்கியங்கள் கிடைக்கப்பெறாத எழுத்துரு மொழிக்கு அவற்றை ஒலிபெயர்ப்பது மட்டும்தான். பன்னுவுக்கு யோசனை கிடைத்தது.

பாகிஸ்தானை சேர்ந்த வாசகர் ஒருவர், சீக்கிய மதத்தின் புனித நூலான குரு கிரந்த் சாகிபை ஷாமுகியில் வாசிக்க பன்னுவின் கணிணி ப்ரோக்ராம் உதவுகிறது. அதே ப்ரோக்ராம், பாகிஸ்தானில் உருது அல்லது ஷாமுகி ஆகியவற்றில் இருக்கும் புத்தகங்களையும் எழுத்துகளையும் குர்முகிக்கு ஒலிபெயர்க்கவும் உதவுகிறது.

Pages of the Shri Guru Granth Sahib in Shahmukhi and Gurmukhi
PHOTO • Courtesy: Kirpal Singh Pannu

குரு கிரந்த் சாகிபின் அங்காக்கள் (பக்கங்கள்) ஷாமுகியிலும் குர்முகியிலும்

*****

1988ம் ஆண்டில் பணி ஓய்வு கிடைத்ததும் பன்னு கனடாவுக்கு சென்றார். அங்கு கணிணி பயன்படுத்த கற்றுக் கொண்டார்.

கனடாவில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் பஞ்சாபிகள், சொந்த நாட்டிலிருந்து வரும் செய்திகளை வாசிக்க ஆர்வத்துடன் இருக்கின்றனர். அஜித் மற்றும் பஞ்சாபி ட்ரிப்யூன் போன்ற பஞ்சாபி தினசரிகள், விமானம் வழியாக கனடாவுக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்படுகிறது.

இவற்றிலிருந்தும் பிற செய்தித்தாள்களிலிருந்தும் வெட்டப்பட்ட செய்திகள் கொண்டு டொரொண்டோவில் மற்ற செய்தித்தாள்கள் உருவாக்கப்பட்டன என்கிறார் பன்னு. இந்த செய்தித்தாள்கள், பல பிரசுரங்களிலிருந்து வெட்டப்பட்டவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டதால் பல எழுத்துருக்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.

ஹம்தார்த் வீக்லி அப்படியொரு தினசரிதான். அதில்தான் பன்னு வேலைக்கு சேர்ந்தார். 1993ம் ஆண்டில் அதன் ஆசிரியர்கள் ஒற்றை எழுத்துருவில் பத்திரிகையை கொண்டு வர முடிவு செய்தனர்.

“எழுத்துருக்கள் வரத் தொடங்கி விட்டன. கணிணிகளும் வந்துவிட்டன. குர்முகி எழுத்துருவிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றும் வேலையைதான் முதலில் செய்தேன்,” என்கிறார் பன்னு.

அனந்தபூர் எழுத்துருவில் அச்சடிக்கப்பட்ட முதல் ஹம்தார்த் வீக்லி, டொரொண்டோவின் அவர் வீட்டிலிருந்து தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வெளியானது. டொரொண்டோ வாழ் பஞ்சாபி எழுத்தாளர்களுக்காக தொடங்கப்பட்ட பஞ்சாபி எழுத்தாளர்கள் சங்கத்தின் 1992ம் ஆண்டு சந்திப்பில், குர்முகி-ஷாமுகி பெயர்ப்பு முக்கியமென உறுப்பினர்கள் முடிவெடுத்தனர்.

Left: The Punjabi script as seen on a computer in January 2011.
PHOTO • Courtesy: Kirpal Singh Pannu
Kirpal Singh Pannu honoured by Punjabi Press Club of Canada for services to Punjabi press in creating Gurmukhi fonts. The font conversion programmes helped make way for a Punjabi Technical Dictionary on the computer
PHOTO • Courtesy: Kirpal Singh Pannu

இடது: ஜனவரி 2011-ல் கணிணியில் பஞ்சாபி எழுத்துரு. வலது: குர்முகி எழுத்துருக்கள் உருவாக்கி பஞ்சாபி பத்திரிகைத்துறைக்கு பங்களித்ததற்காக கனடாவின் பஞ்சாபி ஊடகக் குழு கிர்பால் சிங் பன்னுவை கெளரவித்தது

கணிணியை சுலபமாக பயன்படுத்தும் சிலரில் பன்னுவும் ஒருவர். இப்பணியை செய்யும் வேலை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பஞ்சாப் இலக்கியத்தில் பணிபுரியும் வட அமெரிக்காவின் பஞ்சாப் அகாடெமி என சொல்லப்படும் APNA Sanstha நிறுவனம் 1996ம் ஆண்டில் ஒரு மாநாடு நடத்தியது. அதில் பிரபலமான பஞ்சாபிய கவிஞரான நவ்தெஜ் பாரதி இப்படி அறிவித்தார்: “கிர்பால் சிங் பன்னு ஒரு ப்ரொக்ராம் வடிவமைத்துக் கொண்டிருக்கிறார். ஷாமுகியிலிருந்து குர்முகிக்கும் குர்முகியிலிருந்து ஷாமுகிக்கும் எழுத்துகளை ஒரே க்ளிக்கில் நீங்கள் மாற்ற முடியும்.”

தொடக்கத்தில் பெரும் குழப்பம் இருந்ததாக சொல்கிறார் அவர். சில தொழில்நுட்ப சிக்கல்களுக்கு பிறகு, முன்னேற்றம் ஏற்பட்டது.

“உருதுவும் ஷாமுகியும் தெரிந்த இலக்கியவாதி ஜாவெஜ் பூட்டாவிடம் காட்ட உற்சாகத்துடன் சென்றேன்,” என்கிறார் அவர்.

ஷாமுகிக்கு பன்னு பயன்படுத்திய எழுத்துரு தட்டையாக, சுவரில் பதிக்கப்பட்ட கற்கள் போல இருப்பதாக பூட்டா சுட்டிக் காட்டினார். கூஃபி (அரபி எழுத பயன்படும் எழுத்துரு) போல இருக்கும் அந்த எழுத்துருவை உருது வாசிப்பவர் ஏற்க மாட்டார் என பன்னுவிடம் அவர் கூறினார். காய்ந்த மரத்தில் இருக்கும் இலையற்ற சுள்ளிகளை போல் இருக்கும் நஸ்தாலிக் எழுத்துருதான் உருதுவிலும் ஷாமுகியிலும் ஏற்கப்படும் என்றார்.

ஏமாற்றத்துடன் பன்னு திரும்பி வந்தார். பிறகு அவரது மகன்களும் நண்பர்களும் அவருக்கு உதவினர். வல்லுனர்களை ஆலோசித்தார். நூலகங்களுக்கு சென்றார். பூடாவும் அவரது குடும்பமும் உதவின. இறுதியில் பன்னு நூரி நஸ்தலீக் எழுத்துருவை கண்டுபிடித்தார்.

Left: Pannu with his sons, roughly 20 years ago. The elder son (striped tie), Narwantpal Singh Pannu is an electrical engineer; Rajwantpal Singh Pannu (yellow tie), is the second son and a computer programmer; Harwantpal Singh Pannu, is the youngest and also a computer engineer.
PHOTO • Courtesy: Kirpal Singh Pannu
Right: At the presentation of a keyboard in 2005 to prominent Punjabi Sufi singer
PHOTO • Courtesy: Kirpal Singh Pannu

இடது: மகன்களுடன் பன்னு 20 வருடங்களுக்கு முன். மூத்த மகனான (கோடு போட்ட டை) நர்வந்த்பால் சிங் பன்னு மின்சாதனப் பொறியாளராக இருக்கிறார். இரண்டாம் மகனான ரஜ்வந்த்பால் சிங் பன்னு (மஞ்சள் நிற டை) கணிணி வல்லுனராக இருக்கிறார். இளைய ஹர்வந்த்பால் சிங் பன்னுவும் கணிணி வல்லுனராக இருக்கிறார். வலது: கணிணிக்கான தட்டெழுத்து பலகையை 2005ம் ஆண்டில் முன்னணி பஞ்சாபி சூஃபி பாடகருக்கு பரிசளிக்கிறார்

எழுத்துரு பற்றி குறிப்பிடத்தக்க அளவில் அறிவை பெற்றுவிட்டார். நூரி நஸ்தலீக் எழுத்துருவை தேவைக்கேற்ப மாற்ற அவருக்கு முடிந்தது. “குர்முகிக்கு இணையாக நான் அதை உருவாக்கினேன். இன்னொரு முக்கியமான பிரச்சினை இருந்தது. வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் எழுதும் வகையில் வலப்பக்கம் அதை நாங்கள் கொண்டு வர வேண்டியிருந்தது. ஒரு கம்பத்தில் கட்டப்பட்ட விலங்கை இழுப்பது போல் ஒவ்வொரு எழுத்தையும் இடதிலிருந்து வலப்பக்கம் நான் இழுத்தேன்,” என்கிறார் பன்னு.

மூல எழுத்துருவிலும் இலக்கு எழுத்துருவிலும் ஒரே வகை உச்சரிப்பு இருந்தால்தான் ஒலிபெயர்க்க முடியும். ஆனால் இந்த எழுத்துரு ஒவ்வொன்றிலும் அதற்கு இணையான மாற்று எழுத்துருவையும் தாண்டி சில சப்தங்கள் இருந்தன. உதாரணமாக நூன் ن என்கிற ஷாமுகி எழுத்தின் உச்சரிப்பு நாசி ஒலியில் சென்றடங்கும். அது குர்முகியில் இருக்காது. இத்தகைய சப்தம் ஒவ்வொன்றுக்கும், இருக்கும் எழுத்துருவுடன் சில விஷயங்களை சேர்த்து புது எழுத்தை உருவாக்கினார்.

இப்போது பன்னு 30க்கும் மேற்பட்ட எழுத்துருக்களில் இயங்க முடியும். ஷாமுகிக்கென மூன்று நான்கு எழுத்துருக்களை அவர் கொண்டிருக்கிறார்.

*****

விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர் பன்னு. குடும்பத்துக்கு என 10 ஏக்கர் நிலம் கதாஹ்ரியில் இருக்கிறது. பன்னுவின் மூன்று மகன்களும் பொறியாளர்கள். கனடாவில் வாழ்கின்றனர்.

1958ம் ஆண்டில் அவர் ஆயுதம் தாங்கிய காவற்படையில் அப்போதைய பாடியாலா மற்றும் தெற்கு பஞ்சாப் மாநில ஒன்றியத்தில் (PEPSU) சேர்ந்தார். முந்தைய சமஸ்தானப் பகுதியிலிருந்த ஒன்றியம் அது. பாடியாலாவின் கிலா பகதூர்கரில் மூத்த கான்ஸ்டபிள் பணியில் சேர்ந்தார். 1962ம் ஆண்டின் போரில், குர்தாஸ்பூரின் தெரா பாபா நானகில், தலைமை கான்ஸ்டபிள் பதவியில் அமர்த்தப்பட்டார். அச்சமயத்தில் ராட்க்ளிஃப் கோட்டை பஞ்சாப் ஆயுதக் காவல்படைதான்  (PAP) காத்திருந்தது.

1965ம் ஆண்டில் PAP எல்லை பாதுகாப்பு படையுடன் (BSF) இணைக்கப்பட்டு, பஞ்சாபின் பகுதிகளாக இருந்த லகாலிலும் ஸ்பிதியிலும் அவர் வேலைக்கு அனுப்பப்பட்டார். பொதுப்பணித்துறையில் எல்லை பாதுகாப்புப் படையின் கட்டுமானப் பணியில் அவர் பணியாற்றினார். பிறகு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அடுத்து எல்லை பாதுகாப்புப் படையின் உதவி தளபதியாக மாறினார்.

Left: Pannu in uniform in picture taken at Kalyani in West Bengal, in 1984.
PHOTO • Courtesy: Kirpal Singh Pannu
He retired as Deputy Commandant in 1988 from Gurdaspur, Punjab, serving largely in the Border Security Force (BSF) in Jammu and Kashmir . With his wife, Patwant (right) in 2009
PHOTO • Courtesy: Kirpal Singh Pannu

இடது: சீருடையில் பன்னு இருக்கும் புகைப்படம் மேற்கு வங்க கல்யாணியில் 1984ம் ஆண்டு எடுக்கப்பட்டது. உதவி தளபதியாக அவர் பஞ்சாபின் குர்தாஸ்பூரில் 1988ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஜம்மு காஷ்மீரின் எல்லை பாதுகாப்புப் படையில் அதிகமாக அவரின் பணிக்காலம் இருந்தது. மனைவி பத்வந்துடன் (வலது) 2009-ல்

வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த எல்லைகளிலிருந்தும் சுதந்திரமான சிந்தனையிலிருந்தும்தான் இலக்கியம் மற்றும் கவிதை மீதான பற்று உருவெடுத்தது என்கிறார் அவர். மனைவிக்காக எழுதிய ஒரு கவிதையை அவர் பாடினார்:

”உனக்கான ஏக்கத்திமின்றி ஒரு கணம் கழியாது
ஏக்கம்தான் எனக்கு என்றேன்றும் விதிக்கப்பட்டது, அல்லாஹு!

எல்லைப் பாதுகாப்பு படையின் நிறுவன தளபதியாக கெம் கரனில் பணியமர்த்தப்பட்டபோது அவரும் பாகிஸ்தானி தளபதியும் ஒரு வழக்கத்தை உருவாக்கினார்கள். “அந்த நாட்களில், எல்லையின் இரு பக்கங்களிலிருந்தும் எல்லைக்கு மக்கள் வருவார்கள். பாகிஸ்தானி விருந்தினருக்கு நான் தேநீர் கொடுக்க வேண்டும். இந்திய விருந்தினர்கள் அவரிடமிருந்து தேநீர் பெறாமல் செல்லாததை அவர் உறுதிப்படுத்தினார்,” என்கிறார் அவர்.

இறுதியில் குர்முகியிலிருந்து ஷாமுகிக்கான எழுத்துரு மாற்றத்தை பன்னு டாக்டர் குல்பிர் சிங் திண்டிடம் காட்டினார். நரம்பியல் மருத்துவரான அவர் பஞ்சாபி இலக்கியத்தில் ஈர்ப்பு கொண்டவர். பிற்பாடு அவர் பன்னுவின் ஒலிபெயர்ப்பை அவரது இணையதளமான Sri Granth Dot Org - ல் பதிவேற்றினார். “பல வருடங்களாக அதில் எழுத்துருக்கள் இருந்தன,” என்கிறார் பன்னு.

2000மாம் வருடத்தில் குரு கிராந்த் சாகிபின் அரபி பிரதிக்கு டாக்டர் குர்பச்சன் சிங் பாரசீக எழுத்துருக்களை பயன்படுத்தினார். அப்படி செய்கையில் அவர் பன்னு வடிவமைத்த ப்ரொக்ராமை பயன்படுத்தினார்.

Left: The cover page of Computran Da Dhanantar (Expert on Computers) by Kirpal Singh Pannu, edited by Sarvan Singh.
PHOTO • Courtesy: Kirpal Singh Pannu
Right: More pages of the Shri Guru Granth Sahib in both scripts
PHOTO • Courtesy: Kirpal Singh Pannu

கிர்பால் சிங் பன்னுவால் எழுதப்பட்டு சர்வான் சிங்கால் திருத்தப்பட்ட கம்ப்யூட்ரான் தா தனந்தர் (கணிணிகளின் வல்லுநர்) புத்தகம். வலது: குரு கிராந்த் சாகிப்பின் அங்காக்கள் (பக்கங்கள்) இரு எழுத்துருக்களிலும்

14 வருடங்களாக பாய் கான் சிங் நபாவால் ஒருங்கிணைக்கப்பட்டு, பிரதானமாக குர்முகியில் எழுதப்பட்ட பஞ்சாபின் பிரபல தகவல் களஞ்சியங்களில் ஒன்றான மகான் கோஷை ஒலிபெயர்க்கும் பணியில் பன்னு ஈடுபட்டார்.

மேலும் 1,000 பக்க கவிதையான ஹீர் வாரிஸ் கே ஷெரோன் கா ஹவாலாவையும் குர்முகிக்கு ஒலிபெயர்த்தார்.

1947ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவின் குர்தாஸ்பூர் மாவட்டத்திலிருந்து தற்போது பாகிஸ்தானிலிருக்கும் ஷங்கர்கர் தாலுகாவைச் சேர்ந்த  27 வயது செய்தியாளர் சபா சவுத்ரி, பாகிஸ்தானில் உருது படிக்க அறிவுறுத்தப்படுவதால் அப்பகுதியை சேர்ந்த புதிய தலைமுறைக்கு பஞ்சாபி மொழி தெரியவில்லை என்கிறார். “பள்ளிப் பாடங்களில் பஞ்சாபி போதிக்கப்படுவதில்லை,” என்கிறார் அவர். “இங்கிருக்கும் மக்களுக்கு குர்முகி தெரியாது. எனக்கும் தெரியாது. எங்களுக்கு முந்தைய தலைமுறைகளுக்குதான் தெரிந்திருந்தது.”

இப்பயணம் எல்லா நேரங்களிலும் களிப்பூட்டுவதாக இருந்துவிடவில்லை. 2013ம் ஆண்டில் கணிணி அறிவியல் பேராசிரியர் ஒருவர், ஒலிபெயர்ப்பு பணியை தன்னுடையது என முறையிட்டார். விளைவாக அவரின் முறையீட்டை நிராகரிக்கும் பொருட்டு பன்னு புத்தகம் எழுத நேர்ந்தது. அவருக்கு எதிராக மானநஷ்ட வழக்கு போடப்பட்டது. கீழமை நீதிமன்றம் மன்னுவின் சார்பில் தீர்ப்பு வழங்கிய நிலையில் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.

இத்தனை வருட பணி, பிரிவினையின் கடுமையான தாக்குதலை இலகுவாக்க பயன்பட்டதில் பன்னு சந்தோஷம் கொள்கிறார். பஞ்சாபி மொழியின் சூரியனாகவும் நிலவாகவும் இருக்கும் எழுத்துருக்கள், எல்லைகள் கடந்து ஒளிர்கின்றன. அன்பு மற்றும் ஏக்கம் ஆகியவற்றுக்கான பொது மொழியின் நாயகனாக கிர்பால் சிங் பன்னு திகழ்கிறார்.

தமிழில் : ராஜசங்கீதன்

Amir Malik

Amir Malik is an independent journalist, and a 2022 PARI Fellow.

Other stories by Amir Malik
Editor : Kavitha Iyer

Kavitha Iyer has been a journalist for 20 years. She is the author of ‘Landscapes Of Loss: The Story Of An Indian Drought’ (HarperCollins, 2021).

Other stories by Kavitha Iyer
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan