தென்கிழக்கு உத்தரபிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டம் பர்குர்ரா கிராமத்தில் பூரி கல்லு எனும் மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். அவரது வீடு, முற்றம் மற்றும் அடுப்பு முற்றிலும் மண்ணால் கட்டப்பட்டது. விதிவிலக்காக வீட்டில் ஓரிடத்தில் மட்டும் மேற்கூரையின்றி செங்கலில் கட்டப்பட்ட மூன்று சுவர் கொண்ட அறை ஒன்று உள்ளது. அது பாதியில் கைவிடப்பட்ட கழிப்பறை என்பதை பின்னர் அறிய நேர்ந்தது.
அந்த மூதாட்டி தனது வீட்டின் மண் அடுப்பை காட்டுகிறார் – அது உண்மையில் பல துவாரங்களை கொண்ட ஒரு குழியைப் போன்று காணப்படுகிறது. இதுவே அவரது முதன்மை வருவாய் ஆதாரம். அவர் பழைய சாக்குகளை வெட்டி பல அடுக்குகளாக செய்து அடுப்பை மூடியுள்ளார். "நான் இங்கு கொண்டைக்கடலை, கோதுமை போன்றவற்றை வறுக்கிறேன். ஆனால் இது திருமண காலத்தில் மட்டுமே அதிகம் செய்யப்படும்.
அரசிடம் இருந்து எனக்கு ஆண்டுதோறும் 1,800 ரூபாய் ஓய்வூதியமாக கிடைக்கிறது. அதை வைத்து நான் சமாளித்துக் கொள்கிறேன்" என்கிறார்.
நான் அவரிடம் சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுத்த விவசாய நிலம் ஏதும் உள்ளதா என்று கேட்டேன். அவர் தலையசைக்கிறார். "என்னிடம் இண்டு பிகா நிலம் இருந்துச்சு. ஆனால் இப்போது இல்லை. என் குழந்தையின் மருத்துவ செலவிற்காக அதை விற்றுவிட்டேன்." அவரது மகன் ஹரியானாவின் சோனிபட்டில் இப்போது பணிபுரிகிறார். அவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
எதற்காக அந்த மூன்று செங்கல் சுவர் அறை? "சில ஆண்டுகளுக்கு முன் அரசு கட்டியது. ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் இது கட்டப்பட்டது." கிராமப்புற இந்தியாவில் கழிப்பறைகளைக் கட்டுவதற்கான ஒன்றிய அரசின் திட்டமான நிர்மல் பாரத் அபியான் பற்றி தான் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். "அவர்கள் அதை கட்டத் தொடங்கினார்கள். ஆனால் முழுமையாக முடிக்கவில்லை." அவர்கள் ஏன் முடிக்கவில்லை? "அவர்கள் சுவர்களை மட்டுமே எழுப்பினர். தளம் எதுவும் இடவில்லை. குழி கூட தோண்டவில்லை," என்கிறார். அதாவது, மலத்தை அங்கு எங்கும் சேகரிக்க முடியாது. பூரி வீட்டில் இருப்பது, முக்கால்வாசி கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை என்பதும், அதில் முக்கிய அம்சங்களே இடம்பெறவில்லை என்பதும் எனக்குத் தெரிய வந்தது. "இப்போது நான் அங்கு விறகுகளை சேமித்து வைக்கிறேன். அதற்காவது அது பயன்படட்டும்”.
இயற்கை உபாதைக்கு எங்கு செல்வீர்கள் என்று நான் அவரிடம் கேட்டேன். கிராமத்திற்கு வெளியே என்று அவர் கையை காட்டுகிறார். உங்களைப் போன்ற வயோதிகர்களுக்கு இது கடினம் அல்லவா? "ஆமாம், கண்டிப்பாக எனக்கு சிரமமாக தான் இருக்கிறது. குறிப்பாக இருட்டில் செல்லும்போது அடிபட்டு காயம் கூட ஏற்படுகிறது. எனக்கு அப்போது யார் இருக்கிறார் உதவிக்கு?"
பூரி, தனது வீட்டின் ஒரு பகுதியை சுட்டிக்காட்டுகிறார், அதில் உலோக சட்டமிடப்பட்ட கட்டில் உள்ளது – அது அவரது படுக்கையறை. "மழைக்காலங்களில், எனது வீட்டிற்குள் அடிக்கடி வெள்ளம் வந்துவிடும். கிராமத்தின் திறந்த சாக்கடைகளில் மழை நீர் கலந்து கழிவு நீராக வீட்டிற்குள் வருகின்றன. அதுபோன்ற சமயத்தில் எங்கே தூங்குவீர்கள் என்று நான் அவரிடம் கேட்டபோது, அவர் சிரித்தபடி சொல்கிறார் – "வேறு எங்கே? இங்குதான், வெள்ளத்திற்கு நடுவே.”
தமிழில்: சவிதா