பனிமூட்டமான 2021 ஜூலை காலை நேரத்தில், விவசாயி சிவராம் கவாரி பீமாசங்கர், வனவிலங்கு சரணாலயத்தின் எல்லையில் உள்ள தனது வயலுக்கு வந்தபோது, பாதி உண்ணப்பட்ட நிலையில் தனது ஐந்து குந்தா (சுமார் 0.125 ஏக்கர்) அளவு நெற்பயிரை கண்டார். மீதமுள்ளவை தரையில் நசுக்கப்பட்டிருந்தன.
"இப்படி ஒரு நிலையை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை," என்று அவர் கூறும்போது, அதன் அதிர்ச்சி அவரது மனதில் இருந்து அகன்றிருக்கவில்லை. அந்த விலங்குகளின் கால்தடங்களை பின்தொடர்ந்து அவர் காட்டுக்குள் சென்றார், அப்போது காவா (பாஸ் கவுரஸ் மற்றும் சில நேரங்களில் இந்திய காட்டெருமை என்றும் அழைக்கப்படுகிறது) திடீரென்று அவர் முன் தோன்றியது. மாடுகளில் மிகப்பெரியதான இவை, பார்க்க பயங்கரமாக இருக்கும் - காளைகளின் உயரம் ஆறு அடிக்கு மேல் மற்றும் 500 முதல் 1,000 கிலோகிராம் வரை எடையுள்ளதாக இருக்கும்.
அதிக எடை கொண்ட இக்காட்டெருமைகள், வயல்களை மிதிக்கும்போது, அவை உருவாக்கும் பெரிய பள்ளங்கள், பயிர்கள் மற்றும் மரக்கன்றுகள் இரண்டையும் முற்றிலுமாக அழிக்கின்றன. “ கவா , தொடர்ந்து மூன்று வருடங்களாக, ஒவ்வொரு பருவத்திலும் எனது பயிரை அழித்துவிட்டது. சாகுபடியை கைவிடுவதுதான் எனக்கிருக்கும் என்னுடைய ஒரே வழி,” என்கிறார் சிவராம். 2021 ஆம் ஆண்டு முதல் காவாவின் கூட்டம் முகாமிட்டிருக்கும் டானில் உள்ள அவரது தகரக் கூரை வீட்டின் முன் அவர் அமர்ந்திருக்கிறார்.
இந்த கிராமம், மகாராஷ்டிராவில் உள்ள பீமாசங்கர் வனவிலங்கு சரணாலயத்தைச் சுற்றியுள்ள பல குடியிருப்புகளில் ஒன்றாகும். இந்த சரணாலயத்தில், மான், பன்றி, சம்பார் மான், சிறுத்தை மற்றும் அரியவகை புலிகள் உள்ளன. இப்போது அறுபது வயதுகளில் இருக்கும் சிவராம், தனது வாழ்நாள் முழுவதும் அம்பேகானில் வாழ்ந்துள்ளார். வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் இழப்புகள், இதுவரை இவ்வளவு பேரழிவை ஏற்படுத்தியதில்லை என்கிறார். "விலங்குகளைப் பிடித்துச் செல்ல வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.
தொடர்ந்து மூன்றாவது வருடமும், பயிர்கள் அழிந்து போகும் என்ற கவலையில், ஒரு வருடத்திற்கு முன்பு தனது வயல்களில் சாகுபடி செய்வதை அவர் நிறுத்திவிட்டார். மேலும் பல விவசாயிகளும் தங்கள் நிலத்தை தரிசாக விட்டுவிட்டு, விறகு மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படும் ஒரு பழமான ஹிர்தாவை சேகரித்து விற்பதை, தங்கள் முதன்மை வருமான ஆதாரமாக மாற்றியுள்ளனர். 2023 ஆம் ஆண்டு வெளியான மனித-கௌர் மோதல் தணிப்புக்கான வழிகாட்டுதல்கள் குறித்த ஒன்றிய அரசாங்க அறிக்கை ,, காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக உணவு மற்றும் வாழ்விடத்தை இழக்கும் என்றும் இந்த விலங்குகள், பயிர்களின் அழிவுக்கு காரணம் என்றும் கூறுகிறது.
*****
2021 ஆம் ஆண்டில், டான் கிராமத்திற்கு வந்த மந்தை சிறியதாக இருந்தது - மூன்று முதல் நான்கு விலங்குகள் இருந்தன. 2024 -ல், அதன் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. மேலும் அவற்றின் படையெடுப்புகளும் அதிகரித்துள்ளன. பயிரிடாத பண்ணைகள் அவற்றை கிராமங்களுக்குள் உணவு தேட வைக்கிறது. இதனால் உள்ளூர் மக்களிடையே அச்சமான சூழ்நிலை நிலவுகிறது.
கிராமத்தில் பெரும்பாலான விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மட்டுமே விவசாயம் செய்கின்றனர். மலையடிவாரத்தில் கிடைக்கும், சில ஏக்கருக்குக்குள்ளான, சமவெளி நிலத்தில் அவர்கள் விவசாயம் செய்கின்றனர். ஒரு சில விவசாயிகள் சொந்தமாக கிணறுகளை தோண்டியுள்ளனர்; மேலும் இங்கு மானாவாரி விவசாயம் செய்யப்படுவதால், ஒரு சிலரே சொந்தமாக போர்வெல்கள் வைத்துள்ளனர். காட்டெருமை தாக்குதல்கள், அவர்களின் வருடாந்திர அறுவடை மற்றும் உணவுப் பாதுகாப்பை கேள்விகுறியாக்கியுள்ளன.
புத்தா கவாரி தனது வீட்டை ஒட்டிய மூன்று குந்தா நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மற்ற கிராமவாசிகள் போல, மழைக்காலத்தில் ரைபோக் என்கிற உள்ளூர் அரிசி வகைகளையும், குளிர்காலத்தில் மசூர் மற்றும் ஹர்பரா பருப்பு வகைகளையும் பயிரிடுகிறார். “எனது பண்ணையில், புதிதாக பயிரிடப்பட்ட மரக்கன்றுகளை நடவிருந்தேன். அவை [கவா] இந்த மரக்கன்றுகளை அழித்துவிட்டதால், எனது மொத்த அறுவடையும் போய்விட்டது. என் குடும்பம் உணவளிக்கும் முக்கிய பயிரை இழந்து விட்டேன். அரிசி இல்லாமல், இந்த ஆண்டு முழுவதும் எங்களுக்கு கடினமாக இருக்கப்போகிறது, ”என்கிறார் 54 வயதான இந்த விவசாயி.
புட்டா, மாநிலத்தில் பட்டியல் பழங்குடியினர் என பட்டியலிடப்பட்டுள்ள, கோலி மகாதேவ் சமூகத்தைச் சேர்ந்தவர். “எனது அறுவடை எதையும் நான் விற்பதில்லை. விற்கும் அளவுக்கு நான் பயிரிடுவதும் இல்லை,’’ என்கிறார். அவர் தனது பயிரின் ஆண்டு மதிப்பு ரூ. 30,000 - 40,000 எனவும், அதற்காகும் செலவு சுமார் ரூ. 10,000 முதல் 15,000 வரை என்றும் குறிப்பிடுகிறார். கிடைப்பதை வைத்து, ஐந்து பேர் கொண்ட அவரது குடும்பத்திற்கு, ஒரு வருடம் முழுவதும் உணவளிக்க போதாது என்கிறார். அவர் இழந்த நெல், குடும்பத்திற்கு இந்த வருட உணவை உறுதி செய்திருக்கும் என்கிறார்.
ஷிவ்ராம் மற்றும் புட்டா இருவரும் பயிர் இழப்புகளை சந்தித்த பிறகு வனத்துறையை தொடர்பு கொண்டு பஞ்சநாமா (விசாரணை அறிக்கை) பதிவு செய்தனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு, சிவராமுக்கு ரூ. 5,000ம், புட்டாவிற்கும் ரூ.3,000ம் இழப்பீடாக கிடைத்துள்ளது - இது அவர்களின் மொத்த இழப்பில், 10 சதவீதம் மட்டுமே. "எனது நஷ்டத்தை ஈடுகட்ட, ஒரு அரசு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்குச் செல்ல குறைந்தபட்சம் 1,000 - 1,500 ரூபாய் செலவழித்தேன்," என்கிறார் புட்டா. வேளாண்மை அமைச்சகம் வகுத்துள்ள விதிகள் பின்பற்றப்படுவதில்லை என, கிராம உப தலைவர் சீதாராம் கவாரி குறிப்பிடுகிறார்.
புட்டாவின் மகன், பால்க்ருஷ்ண கவாரி கூறுகையில், “கூடுதல் வருமான ஆதாரமாக MNREGA எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். கிணறுகள் போன்ற நீர் சேமிப்புகளை கட்ட உதவியிருக்கும். குறைவான MNREGA வேலை (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதம்) டான் விவசாயிகளை மஞ்சர் மற்றும் கோடேகானின் அருகிலுள்ள பகுதிகளில் மற்றவர்களின் வயல்களில் தொழிலாளர்களாக வேலை செய்யத் தள்ளியுள்ளது. இங்குள்ள வயல்வெளிகள் வளமானவை, மற்றும் சஹ்யாத்ரி மலைகளிலிருந்து வரும் நீரோட்டத்தில் இருந்து ஏராளமான நீர்வரத்து உள்ளது. குறைந்த கவனம் மட்டுமே தேவைப்படும். பாரம்பரியப் பயிர்களான வரை மற்றும் சவை போன்றவற்றின் விளைச்சல், அவர்களுக்கு ஓரளவு வாழ்வாதாரத்தை உறுதி செய்துள்ளது.
*****
குறையும் காடுகளின் பரப்பு, அதிகரித்து வரும் விலங்குகளின் எண்ணிக்கை, மற்றும் இயற்கைக்கு மாறான காலநிலை நிகழ்வுகள், ஆகியவை பல விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றன என்று உள்ளூர் ஆர்வலரும் அகில இந்திய கிசான் சபாவின் புனே மாவட்டத் தலைவருமான டாக்டர் அமோல் வாக்மரே கூறுகிறார். "இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி காட்டின் பிற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்திருக்கலாம்," என்று அவர் மேலும் கூறுகிறார். தற்செயலாக, 2021 ஆம் ஆண்டின் கோடையின் தொடக்கத்தில் காடுகளில் உணவு பற்றாக்குறை இருக்கும் போது காவா காணப்பட்டது என்று டான் மக்கள் கூறுகின்றனர்.
டாக்டர் வாக்மரே மேலும் கூறுகையில், "டான் அருகே அல்லது அதை ஒட்டிய பகுதிகளில் வனத்துறையின் சௌகிகள் மிகவும் குறைவாகவே உள்ளன. பெரும்பாலான வனத்துறை அதிகாரிகள் 60-70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாலுகாவில் வசிக்கின்றனர்,” என மனித-விலங்கு மோதலை தணிப்பதில் வனத்துறையின் பங்கு பற்றி பேசுகிறார். “சிறுத்தைப்புலிகள் மக்களின் வீடுகளுக்குள் நுழைவது போன்ற அவசரநிலைகளில், அவர்கள் [அதிகாரிகள்] வருவதற்கு கணிசமான நேரம் எடுக்கிறது. அதுமட்டுமின்றி, இரவு நேரங்களில் கிராமங்களுக்கு வரவும் தயங்குகின்றனர்,” என்கிறார்.
இது குறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்துள்ளதாக, காவா தாக்குதலால் பயிர் சேதம் அடைந்த கிராமத்தின் துணை சர்பஞ்ச் சீதாராம் கவாரி கூறுகிறார். காவாவின் இயக்கத்தை கட்டுப்படுத்த கிராமத்திற்கு அருகில் வேலி அமைக்க வனத்துறை முன்மொழிந்தது. "மக்களின் வாழ்வாதாரம் காடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இதை ஏற்றுக்கொள்ள முடியாதது," என்றும் அவர் கூறுகிறார்.
காட்டெருமைகள் பசியுடன், இன்னும் சுற்றித் திரிகின்றன. எனவே சிவராமும் மற்றவர்களும் வரவிருக்கும் பயிர் பருவத்திற்கு, தங்கள் வயல்களை தயார் செய்ய மாட்டார்கள். “நான் கஷ்டப்பட்டதே போதும். ஒவ்வொரு வருடமும் இதே பேரழிவை அனுபவிக்க எனக்கு எந்த தேவையும் இல்லை,” என்கிறார்.
தமிழில் : அஹமத் ஷ்யாம்