2020ம் ஆண்டு ஊரடங்கின்போது, எங்களின் 1.20 ஏக்கர் நிலத்தை சுற்றி எல்லை குறிக்க சிலர் வந்தனர்,” என்கிறார் ஃபகுவா ஒராவோன். முப்பது வயதுகளில் இருக்கும் பழங்குடி விவசாயியான ஃபகுவா, நிலத்தை சுற்றி இருக்கும் சுவரை சுட்டிக் காட்டுகிறார். நாம் இருப்பது குந்தி மாவட்டத்தின் துமாரி கிராமத்தில். ஒராவோன் சமூகத்தினர் அதிகமாக வாழும் பகுதி இது. “அளக்கத் தொடங்கிய அவர்கள், வேறு ஒருவருக்கு இந்த நிலம் சொந்தம்,” என்றார்கள். நாங்கள் அவர்களை எதிர்த்தோம்.

“சம்பவம் நடந்த 15 நாட்களுக்கு பிறகு கிராமத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட்டிடம் சென்றோம். ஒவ்வொரு முறை சென்று வரவும் 200 ரூபாய்க்கு மேல் ஆனது. அங்குள்ள வழக்கறிஞரின் உதவியை கேட்டோம். இதுவரை 2500 ரூபாய்க்கு மேல் அவர் எங்களிடமிருந்து பெற்றிருக்கிறார். ஆனால் எதுவும் நடக்கவில்லை

“அதற்கு முன்பு, எங்களின் ஒன்றியத்தில் உள்ள மண்டல அலுவலகத்துக்கு சென்றிருந்தோம். இதைக் குறித்து புகாரளிக்க காவல் நிலையத்துக்கு கூட சென்றோம். ஆனால் நிலத்தின் மீதான எங்களின் உரிமையை விட்டுக் கொடுக்கும்படி மிரட்டல்கள் வந்தன. ஒரு வலதுசாரி அமைப்பின் மாவட்ட உறுப்பினர் எங்களை மிரட்டினார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு வரவே இல்லை. இப்போது இந்த சுவர் எங்களின் நிலத்தில் நின்று கொண்டிருக்கிறது. நாங்களோ இது போல கடந்த இரண்டு வருடங்களாக அலைந்து கொண்டிருக்கிறோம்.

“என் தாத்தாவான லுசா ஒராவோன் இந்த நிலத்தை 1930ம் ஆண்டில் நிலப்பிரபு பல்சந்த் சாஹுவிடமிருந்து வாங்கினார். அப்போதிருந்து இதில் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். 1930 முதல் 2015 வரை கொடுக்கப்பட்ட வாடகை ரசீதுகளும் எங்களிடம் இருக்கிறது. அதற்குப் பிறகு (2016ல்) இணையவழி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலுள்ள தரவுகளில் எங்களின் நிலம், நிலப்பிரபுவின் வாரிசுகளில் பெயர்களில் இருந்தது. இது எப்படி நடந்ததென எங்களுக்கு தெரியவில்லை.”

ஃபகுவா ஒராவோன் ஒன்றிய அரசின் டிஜிட்டல் இந்தியா ஆவண நவீனமாக்கும் திட்டத்தில் இழந்து விட்டார். தேசிய அளவில் எல்லா ஆவணங்களையும் டிஜிட்டல்மயப்படுத்தி, மையப்படுத்தப்படவென உருவாக்கப்பட்ட முன்னெடுப்பு அது. இத்திட்டத்துக்கென மாநில அரசு ஜனவரி 2016-ல் ஓர் இணையதளத்தை தொடங்கியது. மாவட்டவாரியான நில விவரங்களை அத்தளம் கொண்டிருந்தது. ”நிலம் சார்ந்த பிரச்சினைகளை குறைத்து, நில ஆவணத் தரவுகளின் பராமரிப்பு முறைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதுதான்” அத்தளத்தின் நோக்கம்.

ஆனால் அதற்கு எதிரான வேலையைதான் ஃபகுவா போன்றோருக்கு அது செய்திருக்கிறது.

“நிலத்தின் நிலவரத்தை இணையவழி அறிய பிரக்யா கேந்திராவுக்கு நாங்கள் சென்றோம்.” ஒன்றிய அரசாங்கத்தின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ்,  பொது சேவைகள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் குறிப்பிட்ட கட்டணத்துக்கு செய்து கொடுக்கவென ஊர் பஞ்சாயத்தில் இருக்கும் கடை அது.

”நிலப்பிரபுவின் வழித்தோன்றல்கள், அந்த நிலத்தை இரண்டு, மூன்று தடவை எங்களுக்கு தெரியாமல் வாங்கி, விற்று பின் வாங்கியும் இருக்கின்றனர். 1930 முதல் 2015 வரையிலான நிலரசீதுகள் எங்களிடம் இருக்கும்போது இது எப்படி சாத்தியம். இதுவரை 20,000 ரூபாய்க்கு மேல் செலவழித்து இன்னும் அலைந்து கொண்டிருக்கிறோம். பணத்துக்காக வீட்டிலிருந்து தானியங்களை நாங்கள் விற்றோம். ஆனால் இப்போது எங்களின் நிலத்தில் சுவர் இருக்கிறது. எங்களுக்கு சொந்தமானதை இழந்து விட்டது போன்ற உணர்வில் இருக்கிறேன். யார் எங்களுக்கு உதவுவார்கள் எனத் தெரியவில்லை.”

PHOTO • Om Prakash Sanvasi
PHOTO • Jacinta Kerketta

கடந்த சில வருடங்களாக நடந்து வரும் நில ஆவணங்களை டிஜிட்டலாக்கும் பணியில் , தங்களின் முன்னோர் வாங்கிய நிலத்தை பறிகொடுத்த ஜார்க்கண்டின் குந்திப் பகுதி பழங்குடிகளில் ஃபகுவா ஒராவோன் ( இடது ) ஒருவர் . தன் நிலத்துக்கென 2015 ம் ஆண்டு வரையிலான வாடகை ரசீதுகள் ( வலது ) கையில் இருந்தும் நிலத்தின் உரிமையைப் பெற பணத்தையும் ஆற்றலையும் செலவழித்துக் கொண்டிருக்கிறார்

*****

ஜார்க்கண்டின் நிலவுரிமைக்கு நெடிய வரலாறு இருக்கிறது. பழங்குடி மக்கள் வசிக்கும் தாது வளம் நிறைந்த அப்பகுதியில் கொள்கைகளும் அரசியல் கட்சிகளும் தெளிவாக இவ்வுரிமைகளை மீறியிருக்கின்றன. இந்தியாவின் தாது வளத்தில் 40 சதவிகிதத்தை இம்மாநிலம் கொண்டிருக்கிறது.

தேசிய கணக்கெடுப்பு 2011-ன்படி, இம்மாநிலத்தின் 29.76 சதவிகிதம் காடுகள் இருக்கின்றன. 23, 721 சதுர கிலோமீட்டருக்கு பரந்திருக்கும் இக்காடுகளில் 32 பட்டியல் பழங்குடி குழுக்கள் வசிக்கின்றன. மாநில மக்கள்தொகையில் 26 சதவிகிதம். ஐந்தாம் சட்டப்பிரிவின் கீழ் 13 மாவட்டங்களும் மூன்று பகுதியாகவும் இடம்பெற்றிருக்கின்றன.

மாநிலத்திலுள்ள பழங்குடி சமூகங்கள் சுதந்திரத்துக்கு முந்தைய காலத்திலிருந்து தங்களின் உரிமைகளுக்காக போராடி வந்திருக்கின்றன. அவர்களின் பாரம்பரிய சமூக பண்பாட்டு வாழ்க்கைமுறையுடன் அந்த உரிமைகள் பின்னி பிணைந்தவை. 50 வருடங்களாக தொடர்ந்த அவர்களின் கூட்டு போராட்டங்களின் விளைவாக நில உரிமைக்கான முதல் ஆவணம் ஹுகுக் நாமா 1833ம் ஆண்டில் உருவானது. கூட்டு விவசாய முறைக்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இது. பழங்குடிகயின் தன்னாட்சி, சுதந்திரத்துக்கும் நூறாண்டுகளுக்கு முந்தையது.

அரசியல் சாசனத்தின் ஐந்தாம் பிரிவின் கீழ் இப்பகுதிகள் கொண்டு வரப்படுவதற்கு பல காலத்துக்கு முன்பு, 1908-ம் ஆண்டின் சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் (CNTA) மற்றும் 1876-ன் சந்தால் பர்கனாஸ் குத்தகை சட்டம் ஆகியவை பழங்குடிகள் மற்றும் மூல்வாசி (பட்டியல் சாதியர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிறர்) ஆகியோரின் நிலவுரிமையை இப்பகுதிகள் அங்கீகரித்திருக்கிறது.

*****

ஒரு ஜமீந்தாரிடமிருந்து முன்னோரால் வாங்கப்பட்ட நிலத்தை சார்ந்துதான் ஃபகுவா ஒராவோனும் அவரது குடும்பத்தினரும் இருக்கின்றனர். கூடுதலாக அவர்களிடம் முன்னோரின் 1.50 ஏக்கர் புயினாரி நிலமும் இருக்கிறது.

ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களின் முன்னோர் காடுகளை திருத்தி, நிலத்தை விவசாயத்துக்கு ஏற்ப மாற்றி, வசிப்பிடத்தை உருவாக்கியிருப்பார்கள். அக்குடும்பத்தினருக்கு அந்த நிலத்தின் மீது கூட்டுரிமை இருக்கும். ஒராவோன் பகுதியில் இதை புயினாரி என்கிறார்கள். முண்டா பகுதிகளில் முண்டாரி குந்த்கட்டி என்கிறார்கள்.

”மொத்தம் மூன்று சகோதரர்கள் இருக்கிறோம்,” என்கிறார் ஃபகுவா. “மூன்று பேருக்கும் குடும்பங்கள் இருக்கின்றன. மூத்தவனுக்கும் அடுத்தவனுக்கும் தலா மூன்று குழந்தைகள் இருக்கின்றன. எனக்கு இரண்டு குழந்தைகள். விவசாய நிலங்களிலும் மலை நிலங்களிலும் குடும்ப உறுப்பினர்கள் விளைவிக்கின்றனர். நாங்கள் நெல், தானியம் மற்றும் காய்கறிகளை விளைவிக்கிறோம். அதில் பாதியை நாங்கள் சாப்பிடுவோம். மிச்சத்தை பணத்தேவை இருக்கும்போது விற்று விடுவோம். இப்படித்தான் எங்கள் வாழ்க்கை ஓடுகிறது,” என்கிறார் அவர்.

ஒரு பயிர் விளையும் இப்பகுதியில் விவசாயம், வருடத்துக்கு ஒருமுறைதான் நடக்கும். பிற சமயங்களில் கர்ரா ஒன்றியத்திலுள்ள அவர்களின் ஊரிலும் சுற்றியும் தாண்டியும் தினக்கூலி வேலை செய்ய செல்வார்கள்.

நில ஆவண டிஜிட்டல்மயமாக்கத்தால் ஏற்படும் பிரச்சினைகள் குடும்ப நிலங்களை தாண்டியும் செல்கிறது.

PHOTO • Jacinta Kerketta

குந்தி மாவட்டத்தின் கொசாம்பி கிராமத்தில் ஐக்கிய பர்ஹா கமிட்டி கூட்டத்தில் மக்கள் கூடியிருக்கின்றனர் . 1932 ம் ஆண்டு நில அளவையின்படியான நில உரிமை மற்றும் குத்தகை உரிமை ஆவணத்தை காட்டி பழங்குடிகளுக்கு நில உரிமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கமிட்டி முயற்சிக்கிறது

ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள கொசாம்பி கிராமத்தில், தங்களின் கூட்டு நிலம் பற்றிய கதையை சொல்கிறார் பந்து ஹோரோ. “ஜூன் 2022-ல் சிலர் வந்து எங்களின் நிலத்தில் வேலியடைக்க முயன்றனர். ஜெசிபி இயந்திரத்துடன் அவர்கள் வந்த நிலையில் ஊர் மக்கள் திரண்டு வந்து அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.”

“ஊரிலிருந்து 20-25 பழங்குடியினர் வந்து வயல்களில் அமர்ந்து விட்டனர்.” அதே ஊரை சேர்ந்த 76 வயது ஃப்லோரா ஹோரோவும் சேர்கிறார். “நிலத்தை உழவும் மக்கள் தொடங்கினார்கள். நிலத்தை வாங்கவிருந்த தரப்பு காவலர்களை வரவழைத்தது. ஆனால் ஊர்க்காரர்கள் மாலை வரை தொடர்ந்து அமர்ந்திருந்தனர். பிறகு சுர்குஜா வை (நைஜர் மூலிகையை) வயலில் தூவி விட்டனர்,” என்கிறார் அவர்.

“கொசாம்பி கிராமத்தில் மஞ்சிகா என சொல்லப்பட்டும் 83 ஏக்கர் நிலம் இருக்கிறது,” என்கிறார் 36 வயது ஊர்த்தலைவர் விகாஸ் ஹோரோ. “பழங்குடி மக்களால் நிலப்பிரபுவுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட நிலம் அது. அந்த நிலத்தில் மக்கள் கூட்டாக விவசாயம் பார்த்து, விளைச்சலின் ஒரு பகுதியை நிலப்பிரபுவின் குடும்பத்துக்கு மதிப்பின் படிப்படையில் கொடுப்பார்கள். சலாமி என்பது அதற்கு பெயர்.” அரசால் ஜமீந்தாரி முறை ஒழிக்கப்பட்ட பிறகும் கூட, சேவகம் முடிவுக்கு வரவில்லை. “இன்றும் கூட பல பழங்குடிகளுக்கு தங்களின் உரிமை பற்றி தெரியாது,” என்கிறார் அவர்.

35 வயது விவசாயியான செடெங் ஹோரோவின் குடும்பமும், அவரது மூன்று சகோதரர்களின் குடும்பத்தினரை போல, கூட்டு நிலமான 10 ஏக்கர் நிலத்தை சார்ந்திருக்கிறது. அவர்களும் இதே போன்றவொரு கதையை சொல்கின்றனர். “ஜமீந்தாரி முறை ஒழிந்ததும் மஞ்சிகா நிலங்கள், விவசாயம் பார்த்த மக்களுக்கே சொந்தமாகும் என்கிற உண்மை தொடக்கத்தில் எங்களுக்கு தெரியாது. அதனால் முன்னாள் ஜமீந்தாரின் வழித்தோன்றல்களுக்கு  தானியங்களை நாங்கள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இந்த நிலங்களை சட்டவிரோதமாக அவர்கள் விற்கத் தொடங்கிய பிறகுதான், நாங்கள் ஒருங்கிணைந்து அவற்றை காப்பதற்கான முயற்சிகளை எடுக்க முனைந்தோம்,” என்கிறார் அவர்.

“பிகார் நில சீர்திருத்த சட்டம் 1950 மற்றும் 1955 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்டது,” என்கிறார் ராஞ்சியை சேர்ந்த மூத்த வழக்கறிஞரான ராஷ்மி கத்யாயன். “விவசாயம் செய்யப்படாத நிலத்தை குத்தகைக்கு விடுவதற்கான் உரிமை, வாடகை மற்றும் வரிகளை வசூல் செய்யும் உரிமை, புறம்போக்கு நிலங்களில் புதிய ரையாத்துகளை சரி செய்வது, சந்தை மற்றும் ஊர் கண்காட்சிகளில் வரிகள் வசூலிக்கும் உரிமை என ஜமீந்தார்களிடம் இருந்த அதிகாரம் பிறகு அரசாங்கத்திடம் சென்றுவிட்டது. முன்னாள் ஜமீந்தார்கள் விவசாயம் பார்த்த நிலங்கள் மட்டும் அவர்களிடம் இருந்தது.

“முன்னாள் ஜமீந்தார்கள் அவர்களின் நிலத்துக்கும் மஞ்சிகா நிலங்களுக்கும் கணக்கை கொடுக்க வேண்டும். ஆனால் அவற்றை தங்களுக்கு சொந்தமான நிலம் எனக் கருதி, அவர்கள் எந்தக் கணக்கையும் பதிவு செய்யவில்லை. அது மட்டுமின்றி, ஜமீந்தாரி முறை ஒழிக்கப்பட்ட பிறகும் பல காலமாக ஊர் மக்களிடமிருந்து பாதி பங்கை பெற்றுக் கொண்டிருந்தனர். கடந்த ஐந்து வருடங்களில் டிஜிட்டல்மயமாக்கத்தால் நில மோதல்கள் அதிகமாகி விட்டன,” என்கிறார் 72 வயது காத்யாயன்.

முன்னாள் ஜமீந்தார்களின் வழித்தோன்றல்களுக்கும் குந்தி மாவட்ட பழங்குடிகளுக்கும் இடையிலான மோதல்களை பற்றி கூறும் 45 வயது அனுப் மிஞ்ச், “ஜமீந்தார்களின் வழித்தோன்றல்களிடம் வாடகை ரசீதுகளும் இல்லை. நிலவுரிமையும் இல்லை. ஆனால் இணையத்தில் இருக்கும் இந்த நிலங்களை காட்டி, மற்றவர்களுக்கு விற்கிறார்கள். 1908ம் ஆண்டின் சோடா நாக்பூர் குத்தகை சட்டத்தின்படி, 12 வருடங்களாக தொடர்ந்து விவசாயம் பார்த்து வருபவருக்கு நிலத்தின் உரிமை இயல்பாக சென்று விடும். எனவே, அங்கு விவசாயம் பார்த்து வரும் பழங்குடிகளுக்குதான் அவற்றின் மீது உரிமை இருக்கிறது.”

PHOTO • Jacinta Kerketta

கொசாம்பி ஊர்க்காரர்கள் கூட்டாக விவசாயம் செய்யும் நிலத்தை காட்டுகின்றனர் . முன்னாள் ஜமீந்தார்களின் வழித்தோன்றல்களிடமிருந்து இந்த நிலத்தை நெடிய கூட்டுப் போராட்டத்தில் அவர்கள் காத்திருக்கின்றனர்

கடந்த சில வருடங்களாக இயங்கி வரும் ஐக்கிய பர்ஹா கமிட்டி, இந்த நிலங்களில் விவசாயம் பார்க்கும் மக்களை ஒருங்கிணைத்து வருகிறது. பழங்குடிகளின் தன்னாட்சி முறையான பாரம்பரிய ஜனநாயக பர்ஹா முறையின்படி இது நடத்தப்பட்டு வருகிறது. 12-லிருந்து 22 கிராமங்கள் சேர்ந்த குழுக்கள் பர்ஹாக்களில் இருக்கும்.

“இப்போராட்டம் குந்தி மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்து வருகிறது,” என்கிறார் 45 வயது ஆல்ஃப்ரெட் ஹோரோ. கமிட்டியின் சமூகப் பணியாளராக இருக்கிறார் அவர். “நிலப்பிரபுக்களின் வழித்தோன்றல்கள் டோர்பா ஒன்றியத்தின் 300 ஏக்கர் நிலத்தையும் கர்ரா ஒன்றியத்திலுள்ள துயுகுடு கிராமத்தின் 23 ஏக்கர் நிலத்தையும் பர்காவோனின் 40 ஏக்கரையும் கொசாம்பியின் 83 ஏக்கரையும் மதுகமா கிராமத்தின் 45 ஏக்கரையும் மெகானின் 23 ஏக்கரையும் சட்டா கிராமத்தின் 90 ஏக்கரையும் ஆக்கிரமிக்கும் முயற்சியில் இருக்கின்றனர். இதுவரை பர்ஹா கமிட்டி 700 ஏக்கர் விவசாய நிலத்தை காப்பாற்றியிருக்கிறது,” என்கிறார் அவர்.

பழங்குடியினர் மத்தியில் நில உரிமை சார்ந்த விழிப்புணர்வை உருவாக்க ஐக்கிய பர்ஹா கமிட்டி இயங்கி வருகிறது. 1932ம் ஆண்டு நில அளவையை அடிப்படையாகக் கொண்ட தனியார் நிலக் குத்தகை மற்றும் கட்டியான் எனப்படும் கூட்டு நில உரிமை ஆவணத்தை காட்டி விழிப்புணர்வு தருகின்றனர். அந்த ஆவணத்தில் நிலத்தின் உரிமை மற்றும் தன்மை ஆகியவை இடம்பெற்றிருக்கும். கட்டியான் ஆவணத்தை பார்த்துதான், ஊர்க்காரர்கள் தங்களின் முன்னோர் அந்த நிலத்தில் கூட்டு விவசாயம் பார்த்த உண்மையை தெரிந்து கொள்கிறார்கள். ஜமீந்தார்களுக்கு அந்த நிலம் சொந்தமில்லை என்பதையும் ஜமீந்தாரி முறை ஒழிந்து விட்டது என்பதையும் அறிந்து கொள்கிறார்கள்.

“நிலம் குறித்த எல்லா தரவுகளையும் டிஜிட்டல் இந்தியாவின் முன்னெடுப்பால் இணையத்தில் மக்கள் பார்த்துக் கொள்ள முடியும். அதனால்தான் மோதல்கள் அதிகரித்து விட்டன,” என்கிறார் மெர்லே கிராமத்தை சேர்ந்த இப்பீல் ஹோரா. “தொழிலாளர் தினமான மே 1 2024 அன்று, மஞ்சிஹா நிலங்களை சுற்றி எல்லை வகுக்க சிலர் வந்தனர். நிலத்தை வாங்கி விட்டதாக அவர்கள் கூறினார்கள். கிராமத்தை சேர்ந்த 60 ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

”இத்தகைய மஞ்சிகா நிலங்களை இணையத்தில் ஜமீந்தார்களின் வழித் தோன்றல்கள் பார்த்து விடுகின்றனர். இன்னும் இந்த நிலங்கள் தங்களுக்குதான் சொந்தமென கருதி, அவர்கள் அநியாயமாக அவற்றை விற்கின்றனர். எங்களின் கூட்டு வலிமை கொண்டு அவர்களின் நில அபகரிப்பை தடுக்கிறோம்,” என்கிறார் இப்பீல் ஹோரோ. முண்டா கிராமத்தின் 36 ஏக்கர் மஞ்சிகா நிலத்தில் பல தலைமுறைகளாக ஊர்க்காரர்கள் கூட்டு விவசாயம் செய்து வருகிறார்கள்.

“ஊர் மக்கள் பெரிய கல்வி பெறவில்லை,” என்கிறார் 30 வயது பரோசி ஹோரோ. “என்ன விதிகள் உருவாக்கப்பட்டு இந்த நாட்டில் என்ன மாறியிருக்கிறது என்பவை எங்களுக்கு தெரியாது. கல்வி பெற்ற மக்களுக்கு நிறைய தெரியும். ஆனால் அந்த அறிவை கொண்டு அவர்கள் அறியாமையிலுள்ள மக்களுக்கு சொந்தமானவற்றை திருடுகிறார்கள். அவர்களை அச்சுறுத்துகிறார்கள். அதனால்தான் பழங்குடியினர் எதிர்க்கின்றனர்.”

மின்சார இணைப்பு மற்றும் இணைய இணைப்பு ஆகியவற்றில் உள்ள சிக்கல்களால் ‘டிஜிட்டல் புரட்சி’ பலரை சென்றடையவில்லை. ஜார்க்கண்டின் கிராமப்பகுதிகளில் வெறும் 32 சதவிகித பகுதிகளில் மட்டும்தான் இணைய வசதி இருக்கிறது. இந்த டிஜிட்டல் பிரிவினையை தாண்டி, ஏற்கனவே உள்ள வர்க்க, பாலின, சாதிய, பழங்குடி பிரிவினைகளும் இருக்கின்றன.

தேசிய மாதிரி கணக்கெடுப்பின் படி ஜார்க்கண்டின் பழங்குடி பகுதிகளில் வெறும் 11.3 சதவித பகுதியில்தான் இணைய வசதி இருக்கிறது. அதிலும் 12 சதவிகித ஆண்களும் 2 சதவிகித பெண்களும் மட்டும்தான் இணைய பயன்பாடு தெரிந்து வைத்திருக்கின்றனர். சேவைகளுக்காக ஊர்க்காரர்கள் பிரக்யா கேந்திராக்களை சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய போதாமைகள் பத்து மாவட்ட கணக்கெடுப்பிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

PHOTO • Jacinta Kerketta

ஜமீந்தார்களின் வழித்தோன்றல்கள் ஜெசிபி இயந்திரங்களுடன் நிலத்துக்கு வரும்போது கிராமத்தின் பழங்குடி மக்கள் ஒன்றிணைந்து போராடுகின்றனர் . அவர்கள் அமர்ந்து , உழுது கண்காணித்து இறுதியில் சுர்குஜா நடுகின்றனர்

கர்ரா ஒன்றியத்தின் வட்ட அலுவலகத்தை சேர்ந்த அலுவலரான வந்தனா பார்தி பேசுகிறார். “ஜமீந்தார்களின் வழித்தோன்றல்கள் நில ஆவணங்களை வைத்திருக்கலாம். ஆனால் நிலத்துக்கான உரிமை யாரிடத்தில் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்,” என்கிறார் அவர். ”பழங்குடிகளின் வசம்தான் நிலவுரிமை இருக்கிறது. அவர்கள்தான் அதில் விவசாயம் பார்க்கிறார்கள். ஆனாலும் அது ஒரு சிக்கல்தான். இத்தகைய பிரச்சினைகளை நாங்கள் நீதிமன்றத்துக்குதான் வழக்கமாக அனுப்புவோம். சில நேரங்களில் ஜமீந்தார்களின் வழித்தோன்றல்களும் மக்களும் தங்களுக்குள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்கின்றனர்.”

ஜார்க்கண்டின் வசிப்பிடக் கொள்கை பற்றிய ஆய்வறிக்கை ஒன்று Economic and Political Weekly-ல் 2023ம் ஆண்டில் வெளியானது.  “...ஒவ்வொரு நில ஆவணமும் வருவாய் நிலத்தை தனியார் நிலமாக்கிக் கொண்டிருக்கிறது. பாரம்பரிய கட்டியாயினி முறையிலான கூட்டு நிலத்தை பதிவு செய்வது குறித்து அது கண்டுகொள்வதில்லை.”

நில எண்கள் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பதை ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர். ஏக்கர் அளவு, மாறியிருக்கும் பெயர்கள், நில உரிமையாளர்களின் சாதிகளில் இருக்கும் மாற்றங்கள், முறைகேடான விற்பனை போன்றவற்றால் ஊர்க்காரர்கள் கடும் அலைக்கழிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். ஆனால் இப்போதோ நிலம் வேறு ஒருவரின் பெயரில் இருப்பதால் அவர்களால் வரி கட்டவும் முடியவில்லை.

”இந்த பணியில் உண்மையான பயனாளிகள் யார்?” எனக் கேட்கிறார் நில உரிமைக்கான மக்களின் இயக்கமாக ஏக்தா பரிஷதின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஷர்மா. “நில ஆவணங்களை டிஜிட்டலாக்குவது ஜனநாயக முறைதானா? சந்தேகமின்றி, அரசும் அதிகாரம் படைத்த சிலரும்தான் பெரும் பயனாளிகள். இந்த பணியில் பெரும் அறுவடையை நிலப்பிரபுக்களும் நில மாஃபியாக்களும் தரகர்களும்தான் பெறுகின்றனர்.” பாரம்பரிய நில முறைகள் பற்றிய உள்ளூர் நிர்வாகத்தின் அறியாமை திட்டமிடப்பட்டதுதான் என்கிறார் அவர். ஏனெனில் அவர்கள் தெளிவாக ஜனநாயகமற்றவர்களுக்கும் அதிகாரம் மிக்கர்களுக்கும் ஆதரவாக இருக்கிறார்கள்.

பழங்குடி சமூகத்தினரின் அச்சங்கள் இன்னும் பெரிய அளவிலானது என்கிறார் 35 வயது பசந்தி தேவி. “இந்த கிராமத்தை சுற்றி மஞ்சிகா நிலங்கள் இருக்கின்றன,” என்கிறார் அவர். “45 குடும்பங்கள் இந்த ஊரில் இருக்கின்றன. அமைதியாக வாழ்கிறோம். ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்குகிறோம். ஆனால் சுற்றியிருக்கும் நிலங்கள் சட்டவிரோதமாக விற்கப்பட்டாலும் எல்லைகள் வகுக்கப்பட்டாலும் மாடுகளும் ஆடுகளும் மேய்வதற்கு எங்கு செல்லும்? கிராமம் முற்றாக துண்டிக்கப்பட்டு விடும். இங்கிருந்து இன்னொரு இடத்துக்குதான் நாங்கள் புலம்பெயர வேண்டியிருக்கும். இவை எல்லாமும் எங்களும் பெரும் அச்சத்தை தருகிறது.

மூத்த வழக்கறிஞர் ராஷ்மி காத்யாயன் வழங்கிய செறிவான உரையாடல்களுக்கும் கருத்துகளுக்கும் இந்த கட்டுரையாளர் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்

தமிழில் : ராஜசங்கீதன்

Jacinta Kerketta

Jacinta Kerketta of the Oraon Adivasi community is an independent writer and reporter from rural Jharkhand. She is also a poet narrating the struggles of Adivasi communities and drawing attention to the injustices they face.

Other stories by Jacinta Kerketta
Editor : Pratishtha Pandya

Pratishtha Pandya is a Senior Editor at PARI where she leads PARI's creative writing section. She is also a member of the PARIBhasha team and translates and edits stories in Gujarati. Pratishtha is a published poet working in Gujarati and English.

Other stories by Pratishtha Pandya
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan